privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்இராணுவம்பா.ஜ.க-காங் கூட்டணி அரசுக்காக அப்சல் குரு கொலை - அருந்ததி ராய்

பா.ஜ.க-காங் கூட்டணி அரசுக்காக அப்சல் குரு கொலை – அருந்ததி ராய்

-

“உங்கள் குண்டு துளைக்காத பதுங்கு தளத்தில் அட்டாச்ட் டாய்லெட் உள்ளதா?” – அருந்ததி ராய்

2001 பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் முக்கிய குற்றம் சாட்டப்பட்ட அப்சல் குரு ரகசியமாக, திடீரென தூக்கிலிடப்பட்டதன் அரசியல் விளைவுகள் என்னவென்று உங்களுக்கு தெரியுமா?

மத்திய சிறை எண் 3-இன் கண்காணிப்பாளரால், அதிகார வர்க்கத்தின் இரக்கமற்ற மொழியில், ஒவ்வொரு பெயரிலும் புண்படுத்தும் பிழைகளுடன் எழுதப்பட்ட அந்தக் கடிதம் ”திருமதி. தபசும் க/பெ சிறீ அப்ஜல் குரு” வுக்கு எழுதப்பட்டுள்ளது.

அப்சல் குரு குடும்பம்
அப்சல் குருவின் குடும்பம் (படம் : அவுட்லுக் இந்தியா)

“சிறீ முகமது அப்ஜல் குரு த/பெ ஹபிபுல்லாவின் கருணை மனு கனம் பொருந்திய ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டது. எனவே முகமது அப்ஜல் குரு த/பெ ஹபிபுல்லாவின் தூக்கு தண்டனை 09/02/2013-ல் நிறைவேற்றப்படவுள்ளது. இது உங்கள் தகவலுக்கும், தேவையான மேல் நடவடிக்கைக்காகவும் அனுப்பப்படுகிறது.”

இக்கடிதம் தபசுமிற்கு தாமதமாக சென்று சேரும்படி கவனமான காலக்கணிப்புடன் அனுப்பப்பட்டுள்ளது. இதன் மூலம், கருணை மனு நிராகரிப்பை எதிர்க்கும் இறுதி சட்ட வாய்ப்பு தபசுமிற்கு மறுக்கப்பட்டுள்ளது. அப்சலுக்கும், அவர் குடும்பத்துக்கும் தனித்தனியே இந்த உரிமை உள்ளது. ஆனால், நிராகரிக்கப்பட்டது. அது போல, சட்டத்தில் உறுதி செய்யப்பட்டிருந்தும் கருணை மனு நிராகரிப்பிற்கான காரணமும் தரப்படவில்லை. எந்த காரணமும் தரப்படவில்லை என்றால், எதன் அடிப்படையில் மேல் முறையீடு செய்ய முடியும்? மரண தண்டனை வரிசையில் நிற்கும் இதர இந்திய சிறைவாசிகளுக்கு இந்த கடைசி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தூக்கிலிடப்படுவதற்கு முன்னர் தபசுமின் தன் கணவனை பார்க்க அனுமதிக்கப்படவில்லை; அவர் குழந்தை, தந்தையிடமிருந்து சில அன்பான அறிவுரைகள் பெற அனுமதிக்கப்படவில்லை; தபசுமிற்கு, தன கணவனின் உடலை புதைக்கும் உரிமையில்லை; மரண சடங்குகள் எதற்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. பிறகு என்ன ‘தேவையான மேல் நடவடிக்கை’ பற்றி அந்த கடிதம் பேசுகிறது? கோபம்? ஆற்றமுடியாத வருத்தம்? கேள்விக்கிடமற்ற பணிவு? முழு சரணாகதி?

தூக்கு நிறைவேற்றப்பட்ட பிறகு நியாயமற்ற கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பாராளுமன்ற தாக்குதலில் கணவனை இழந்த பெண்கள் தொலைக்காட்சிகளில் காட்டப்படுகிறார்கள். ‘அகில இந்திய பயங்கரவாத எதிர்ப்பு முன்னணி’யின் தலைவர் எம்.எஸ். பிட்டாவின் அச்சுறுத்தும் மீசை அப்பெண்கள் சோகத்திற்கு சற்று துணையாக காட்டப்படுகிறது. ‘அவர்கள் கணவன்மார்களை கொன்ற நபர்கள் அதே இடத்தில் அப்போதே கொல்லப்பட்டுவிட்டார்கள்’ என்ற உண்மையை யாரேனும் போய் சொல்வீர்களா? அந்த தாக்குதலை திட்டமிட்டவர்கள், நீதிக்கு முன்னால் எப்போதும் கொண்டுவரப்படமாட்டார்கள், ஏனெனில் இப்போது வரை அவர்கள் யாரென்று யாருக்கும் தெரியாது.

அதே நேரம், காஷ்மீரில் மீண்டும் ஒருமுறை ஊரடங்கு நிலை. அதன் மக்கள் மீண்டும் ஒருமுறை கொட்டகையில் அடைக்கப்பட்ட மாடுகள் போல ஆக்கப்பட்டுள்ளார்கள். மக்கள், மீண்டும் ஒருமுறை ஊரடங்கு உத்தரவை எதிர்த்துப் போராடுகிறார்கள். மூன்று பேர் மூன்று நாட்களில் கொல்லப்பட்டுள்ளதோடு, பதினைந்து பேர் கொடூரமாக காயப்படுத்தப்பட்டுள்ளனர். பத்திரிகைகள் தமது அலுவலகத்தை மூடியுள்ளன. இணையத்தை பார்ப்பவர்களுக்கு ஒரு உண்மை தெரியும். காஷ்மீர் இளைஞர்கள் இப்போது வெளிப்படுத்தும் கோபம் சற்று வித்தியாசமானது.

இதற்கு முன்னால் 2008, 2009 மற்றும் 2010-ல் 180 பேரை பலி வாங்கிய மக்கள் எழுச்சியின் எதிர்ப்பு நிலையையும், உணர்ச்சி வேகத்தையும் போன்ற ஒன்றல்ல. இந்த முறை அந்த கோபம் கிளர்ச்சியற்றதும், கரைத்து சிதைப்பதும் ஆகும். அது ஆழப்பதிந்த ஓன்று. அது என்ன, நியாயமற்ற கோபமா?

இருபது வருடத்திற்கும் மேலாக காஷ்மீர் மக்கள் ஒரு ராணுவ ஆக்கிரமிப்பை பொறுத்து வந்துள்ளார்கள். சிறையிலும், அடக்குமுறை கொட்டடியிலும், போலி மற்றும் நிஜ என்கவுண்டர்களிலும் ஆயிரக் கணக்கில் மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அப்சல் தூக்கு எந்த வகையில் மற்ற கொலைகளிலிருந்து வித்தியாசப்படுகிறது என்றால், (இதற்கு முன் ஜனநாயகத்தின் பரிச்சயமற்ற) காஷ்மீரின் இளைய தலைமுறைக்கு  மாட்சிமை தாங்கிய இந்திய ஜனநாயகம் செயல்படும் விதத்தை மிக அணுக்கமாக கண்டுணர வாய்ப்பளித்துள்ளது. அதன் சக்கரங்கள் சுழல்வதையும், அதன் நரைத்து வெளுத்த நிறுவனங்கள், அரசு, போலீஸ், நீதிமன்றம், அரசியல் கட்சிகள் யாவும் ஒரு மனிதனின் — ஒரு காஷ்மீரியின் கொலைக்கு உடந்தையாக இருந்ததை அவர்கள் கண்ணுற்றார்கள். ஆம், ஊடகங்களையும் அவர்கள் கண்டார்கள், நன்றாக கவனித்தார்கள்.அப்சல் குரு

விசாரணையின் முக்கிய பகுதி முழுக்க கீழ்நீதிமன்றத்தில் ஏறக்குறைய அவருக்காக வாதிட யாருமில்லாமல் போனது. நீதிமன்றம் நியமித்த வக்கீல் அவரை சிறையில் சென்று ஒருமுறை கூட சந்திக்கவில்லை. தனது கட்சிக்காரருக்கு எதிராக முக்கியமான ஆதாரம் இருப்பதை எதிர்க்காமல் ஏற்றுக் கொண்டார். (இதனை ஆய்வுக்கு உட்படுத்திய உச்சநீதிமன்றம் அதை பரவாயில்லை என்று முடிவு செய்தது). சுருங்கக் கூறினால், அவர் குற்றம் முரணில்லாமல் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்படவில்லை. அவர் முறை வரும் முன்னரே மரண தண்டனை வரிசையிலிருந்து இழுத்து தண்டனை நிறைவேற்றப்பட்டதை அவர்கள் பார்த்தார்கள். எத்திசையில், எந்த வடிவத்தில் அவர்களின் இந்த புதிய கிளர்ச்சியற்ற, கரைத்து சிதைக்கும் கோபம் பயணப்படும்? ஒரு முழு தலைமுறையையே தியாகம் செய்து காத்திருக்கும், அருளப்பெற்ற மகிழ்ச்சியான விடுதலையை அது பிரசவிக்குமா? அல்லது, இன்னொரு சுற்று பிரளய வன்முறை நிகழ்த்தப்பட்டு அவர்கள் நசுக்கப்படுவரா? பிறகு ‘இயல்பு நிலைமை’ ராணுவத்தின் பூட்ஸ் காலின் கீழ் கொண்டு வரப்படுமா?

2014, ஒரு புதிய காலகட்டத்தின் தொடக்க ஆண்டு என்று இந்த பகுதியில் வாழும் ஒவ்வொருவருக்கும் தெரியும். பாகிஸ்தான், இந்தியா மற்றும் ஜம்மு — காஷ்மீரில் தேர்தல் நடைபெறுகிறது. அமெரிக்கா, அதன் படைகளை ஆப்கானிஸ்தானிலிருந்து திரும்பப்பெறும் போது ஏற்கனவே உறுதி குலைந்திருக்கும் பாகிஸ்தானின் குழப்பங்கள் காஷ்மீரையும் பாதிக்கும் ஆபத்து உள்ளது. ஏற்கனவே இது நடந்துள்ளது. அப்சல் குருவுக்கு மரண தண்டனை வழங்கிய முறையினூடாக இந்திய அரசு அந்த உறுதிக் குலைப்பை ஊக்குவித்திருப்பதோடு, காஷ்மீருக்கும் அது பரவ தூண்டுதல் அளித்துள்ளது. (1987-ல் காஷ்மீர் தேர்தலில் தில்லுமுல்லு செய்து ஏற்பட்ட விளைவை போல).

இதற்கு முன், அடுத்தடுத்த மக்கள் போராட்டங்களிலான மூன்று வருட காலம்  2010-ல் முடிவுக்கு வந்தது. இந்த அரசு, பெரும் அளவுக்கு முதலீடு செய்து, ‘இயல்பு நிலையை’ மீட்டது. (அதாவது, மகிழ்ச்சியான சுற்றுலாவாசிகள், ஓட்டுப்போடும் காஷ்மீரிகள் என்ற வகையிலானது) இங்கு தொக்கி நிற்கும் கேள்வி என்னவென்றால், தன்னுடைய சொந்த பிரயத்தனங்களுக்கு மாறாகவே இந்த அரசு நடந்து கொள்ள விரும்புவது ஏன்? சட்டமுறைமை, நீதிமுறைமை, தகுதிக்கேடான ஒரு நடவடிக்கை போன்ற பிரச்சினைகளுக்கு அப்பால், இந்த கொலை நிறைவேற்றிய செயற்பாங்கில் ஒரு அறிவீனம் தெரிகிறது. அரசியல் ரீதியாகவும், செயல்திறம் சார்ந்தும் இந்த மரண தண்டனை ஆபத்தானதும், பொறுப்பற்றதும் ஆகும். ஆனால், அது நிகழ்த்தப்பட்டு விட்டது; ஐயத்துக்கிடமில்லாமல், மனப்பூர்வமாக செய்யப்பட்டது; ஏன்?

நான் ‘பொறுப்பற்ற தன்மை’ என்ற பதத்தை திட்டமிட்ட ரீதியிலே உபயோகிக்கிறேன். கடந்தமுறை என்ன நடந்தது என்று பார்ப்போம்.

2001–ல், பாராளுமன்றம் தாக்கப்பட்ட ஒரு வாரத்திற்குள் (அப்சல் குரு கைது செய்யப்பட்ட சில நாட்களில்) அரசு பாகிஸ்தானுக்கான தூதரை திரும்ப அழைத்ததோடு, 5 லட்சம் ராணுவ வீரர்களை எல்லைக்கு அனுப்பியது. எதன் அடிப்படையில் அது செய்யப்பட்டது? அப்சல் குரு, தில்லி சிறப்பு காவல் பிரிவின் கட்டுப்பாட்டில் இருந்த போது, பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ‘ஜெயஷ்-இ-முகமது’ எனும் பயங்கரவாத அமைப்பில் உறுப்பினராக இருந்ததை ஒத்துக்கொண்டார் என்றொரு தகவல் மக்களுக்கு சொல்லப்பட்டது. உச்சநீதிமன்றம் அந்த ‘ஒப்புதல் வாக்குமூலத்தை’ சட்டத்திற்கு புறம்பான ஓன்று என பிற்பாடு நிராகரித்தது. சட்டத்திற்கு புறம்பான ஒன்று, யுத்தத்திற்கு பொருந்தக்கூடியது ஆகுமா?

இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பில், ‘கூட்டு மனசாட்சியை திருப்திபடுத்துதல்’ தொடர்பாக எழுதப்பட்ட புகழ்வாய்ந்த வாக்கியங்கள் மற்றும் குற்றத்திற்கு நேரடி ஆதாரம் எதுவுமில்லை என்று சொன்னவற்றோடு உச்சநீதிமன்றம் சொன்ன இன்னொரு முக்கிய கூற்று ”முகமது அப்சல் குரு எந்தவொரு பயங்கரவாதக் குழு அல்லது அமைப்புடனும் தொடர்பில் இருந்ததற்கான ஆதாரம் இல்லை” என்பதாகும். எனில், அன்றைய போர்வெறியையும், இராணுவத்தினரின் உயிரிழப்பையும், பெரிய அளவிற்கு மக்கள் பணம் வீணடிக்கப்பட்டதையும், அணுஆயுதப் போர் ஆயத்தத்தையும் நியாயப்படுத்துவது என்ன? (வெளிநாட்டு  தூதரகங்கள் பயண எச்சரிக்கை விடுத்ததோடு, ஊழியர்களை வெளியேற்றியது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்). பாராளுமன்ற தாக்குதல் நடைபெறுவதற்கு முன்பாக, அப்சல் குரு கைது செய்யப்படுவதற்கு முன்பாக, நமக்கு சொல்லப்படாத உளவுத் தகவல்கள் ஏதும் கிடைத்தனவா? அப்படியெனில் இந்த தாக்குதல் எவ்வாறு அனுமதிக்கப்பட்டது? இந்த உளவுத் தகவல் சரியானதாகவும், ராணுவ பலத்தைக் குவிக்குமளவுக்குப் பிசகின்றியும் இருப்பதாகக் கொள்ளும் பட்சத்தில், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் காஷ்மீர் மக்கள் அறிய வேண்டாமா? அந்த ஆதாரம், ஏன் நீதிமன்றத்தில் அப்சல் குருவின் குற்றத்தை நிரூபிக்கும் பொருட்டு சமர்க்கப்படவில்லை?

பாராளுமன்ற தாக்குதல் வழக்கை சுற்றிய முடிவற்ற விவாதங்களில், முக்கிய பிரச்சினையாக கருதப்படுகிற இதில் மட்டும் அனைத்து தரப்புகளிலிருந்தும் — இடதுசாரிகள், வலதுசாரிகள், இந்துத்துவவாதிகள், மதச்சார்பற்றவாதிகள், தேசியவாதிகள், பிரிவினைவாதிகள், அவநம்பிக்கைவாதிகள், விமர்சகர்கள் மத்தியில் ஓர் பேரமைதி நிலவுகிறது. ஏன்?

இந்த தாக்குதல் ஜெய்ஷ்-இ-முகமது வால் நடத்தப்பட்டு இருக்கலாம். இந்திய போலீஸ் மற்றும் உளவுத் துறைகள் குறித்து பொறாமை கொள்ளத்தக்க வகையில் சிறப்பறிவு படைத்தவரும், ‘பயங்கரவாதம்’ பற்றி நன்கறிந்த அறிவாளியாகவும் இந்திய ஊடகங்கள் ஏற்றி போற்றும் ஓர் அறிஞர் பிரவீன் சுவாமி. இவர், சமீபத்தில் முன்னாள் ஐ.எஸ்.ஐ தலைவர் ஜாவேத் அஸ்ரப் காஸி 2003–ல் வழங்கிய சாட்சியத்தையும், பாகிஸ்தான் அறிஞர் முகமது அமீர் ராணா 2004–ல் எழுதிய ஒரு புத்தகத்தையும், பாராளுமன்ற தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமதுவின் பங்கிற்கு ஆதாரமாக வழங்குகிறார். (தனது நோக்கம் இந்தியாவை சிதைப்பது என்ற நோக்கத்துடன் இயங்கும் ஒரு அமைப்பின் தலைவரின் சாட்சி மேல் வைத்துள்ள இந்த நம்பிக்கை புல்லரிக்க வைக்கிறது). எனினும், 2001–ல் பெருமளவு ராணுவ குவிப்புக்கு காரணமான ஆதாரம் எங்கிருந்து பெறப்பட்டது என்பது பெரும் புதிராகவே உள்ளது.

ஒரு வாதத்துக்காக, இந்த தாக்குதலை ஜெய்ஷ்-இ-முகமது நடத்தியதாக ஒப்புக்கொள்வோம். ஐ.எஸ்.ஐ.யின் பங்கு இருப்பதாகவும் கருதுவோம். காஷ்மீரை முன்னிட்டு இதுபோன்ற ரகசிய சதி நடவடிக்கைகளை பாகிஸ்தான் அரசு செய்ய நினைக்காத ஒன்று என்று நாம் பாவனை செய்து கொள்ளத் தேவையில்லை. (இந்திய அரசு பலுசிஸ்தானிலும், பாகிஸ்தானின் இதர பகுதிகளிலும் செய்வதைப் போல. இந்திய ராணுவம் 1970களில், கிழக்கு பாகிஸ்தானில் முக்தி பாகினி அமைப்புக்கு பயிற்சி அளித்ததையும் விடுதலைப் புலிகள் உட்பட ஆறு வெவ்வேறு இலங்கை தமிழ்ப் போராளிக் குழுக்களுக்கு 1980–களில் பயிற்சி அளித்ததையும் நினைவில் கொள்க.)

ஓர் அருவருக்கத்தக்க சூழல் நம்மைச் சுற்றி சூழ்கிறது. பாகிஸ்தானுடனான போர் ஒன்று அப்போது என்ன சாதித்திருக்கும்; இப்போது என்ன சாதிக்கும்? (பெரும் எண்ணிக்கையில் மக்கள் உயிரிழப்பை சந்தித்திருப்பார். ஆயுத வியாபாரிகள் சிலரின் வங்கிக் கணக்கு பெருத்திருக்கும்.) இந்திய போர்விரும்பி பருந்துகள் ஓயாமல் பரிந்து முழங்கும் ‘தீர்வு’, ‘தீவிரமான தேடுதல் வேட்டை’ ஒன்றின் மூலம் பாகிஸ்தானின் ‘பயங்கரவாத முகாம்’களை ‘அழித்தொழிக்க’ வேண்டும் என்பது. நிஜமாகவா?

நமது தொலைக்கட்சிகளில், போர்த்திறம் சார்ந்த சிறப்பறிவுடன் ஆக்ரோஷமாக விவாதிக்கும் அறிஞர்கள் மற்றும் பாதுகாப்பு ஆய்வாளர்களில் எத்தனை பேருக்கு பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் ஆயுத உற்பத்தி ஆலைகளோடு ஆதாயத் தொடர்பு இருக்கிறது என்பதை அறிந்து கொள்வது சுவாரஸ்யமாக இருக்கும். அவர்களுக்கு போர் கூட தேவையில்லை. ராணுவத்துக்கு அரசாங்கம் கோடிகோடியாக செலவு செய்வதற்கு ஒரு போர் மேகம் போதும். இந்த ‘தீவிர தேடுதல் வேட்டை’ கருத்து அது அர்த்தப்படுவதை விடவும் மோசமானதும், முட்டாள்தனமானதும் ஆகும். யார் மீது குண்டு பொழிவர்? சில தனிப்பட்ட நபர்கள்? அவர்கள் வசிப்பிடங்கள் மற்றும் உணவுப் பொருள்கள்? அமெரிக்காவின் ‘தீவிர தேடுதல் வேட்டை’ ஆப்கானிஸ்தானில் எப்படி முடிவுற்றது என்பதை பாருங்கள். 5 லட்சம் இந்திய படைவீரர்களைக் கொண்ட பாதுகாப்பு அடுக்குகள் நிராயுதபாணிகளான காஷ்மீரின் மக்களை அடக்கிவிட முடியவில்லை என்பதையும் கவனியுங்கள். சிறிது சிறிதாக சிதறிக் கொண்டிருக்கும் ஒரு நாட்டை, இந்தியா சர்வதேச எல்லைகளைக் கடந்து அணுஆயுதப் போர் ஒன்றை நடத்தப் போகிறதா? இந்தியாவின் தொழில்முறை போர்–விரும்பிகள் பாகிஸ்தானின் குழப்பம் என்று தாங்கள் கருதுபவற்றை பார்த்து கேலிநகை புரிந்து உள்அமைதி பெறுகிறார்கள். வரலாறு மற்றும் புவியியல் குறித்து ஒரு தொடக்கநிலை அறிவு கொண்ட ஒருவருக்கு கூட, ஒரு மட, சூனியவாத, மதவெறி கும்பலின் தேசமாக பாகிஸ்தானின் சிதைவு நிச்சயமாக கொண்டாடப்பட வேண்டிய ஒன்றல்ல என்பது தெரியும் .

ஆப்கனிலும், ஈராக்கிலும் அமெரிக்கப் படைகளின் நிலை கொள்ளலும், அமெரிக்காவின் பயங்கரவாதத்துக்கு எதிரான போரில், பாகிஸ்தானின் இளம்பங்காளர் அணுகுமுறையும் அந்த நிலப்பரப்பை குற்றநடவடிக்கைகளின் பகுதியாக மாற்றியிருக்கிறது. உலகின் பிற நாடுகள் ஆபத்து நிறைந்த பகுதியாக அது இருப்பதை குறைந்தபட்சம் உணர்ந்து இருக்கின்றன. ஆனால், உலகம் நன்கறிந்த புதிய வல்லரசில் வேகமெடுக்கும் துன்பநெருக்கடி அறிந்துகொள்ள இயலாததாகவும், புரிந்துகொள்ள கடினமானதாகவும் இருக்கிறது. இந்தியப் பொருளாதாரம் மிகவும் சிக்கலான நிலையில் உள்ளது. பொருளாதார தாராளமயமாக்கம், புதிதாக உருவான மத்தியதர வர்க்கத்திடம் வெறிபிடித்த, அனைத்தையும் அடையும் வேகத்தை ஏற்படுத்தியது. இந்த புதிய நிலைமை , வெகுவேகமாக சமஅளவில் வெறிபிடிக்கும் விரக்தியையும் ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் உட்கார்ந்திருந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே தள்ளாட ஆரம்பித்திருக்கிறது. கிளர்ச்சியடைந்த மனம் பீதியில் உறைந்து கிடக்கிறது.

பொதுத் தேர்தல் 2014–ல் நடைபெற இருக்கிறது. ஒரு கருத்து கணிப்பு இல்லாமலே அதன் முடிவுகளை என்னால் சொல்ல இயலும். இது மேம்போக்கான கண்களுக்கு தெரியாத ஓன்று. திரும்ப ஒருமுறை காங்கிரஸ்–பா.ஜ.க கூட்டணியின் ஆட்சி அமையப்பெறும். (தமது பெரும்பேறாக, ஆயிரக்ககணக்கான சிறுபான்மையின மக்களை கொன்றழித்தவை இருகட்சிகளும்.) யாரும் ஆதரவை கோரும் தேவை இல்லாமலே சி.பி.எம் அதன் ஆதரவை வெளியிலிருந்து அளிக்கும். நிச்சயமாக, அது வலுவான அரசாக இருக்கும். (தூக்கு வரிசை முறையில், கையுறைகள் ஏற்கனவே உருவப்பட்டுவிட்டன.) அடுத்து யார்? பஞ்சாபின் முதலமைச்சர் பியாந்த் சிங் கொலைவழக்கில், தூக்கு உறுதி செய்யப்பட்ட பல்வந்த்சிங் ரஜவோனவா? அவரின் தூக்கு தண்டனை, காலிஸ்தானி உணர்ச்சிகளை உசுப்பிவிட்டு அகாலிதளத்தை தாக்குதலுக்கு உள்ளாக்கும் என்பதில் சந்தேகமில்லை. காங்கிரஸின் பழமையான அரசியல் பாணி இது.

எனினும் அந்த பழமையான அரசியல் பணி சற்று சிக்கலில் உள்ளது. கொந்தளிப்பான கடந்த சில மாதங்கள் தொடங்கி முக்கிய அரசியல் கட்சிகளின் பிம்பம் மட்டுமல்ல; அரசியலே கூட, மக்களுக்கு பழக்கமான அரசியல் எனும் கருத்துநிலை கடுமையான தாக்குதலுக்குள்ளகியிருக்கிறது. ஊழல் முறைகேடு என்றாலும் சரி, விலை உயர்வு பிரச்சினை என்றாலும் சரி, பாலியல் வன்புணர்ச்சி, பெண்களுக்கு எதிரான வன்முறை என்றாலும் சரி — இந்த புதிய மத்தியதர வர்க்கம் திரும்பத்திரும்ப தெருக்களுக்கு வருகிறது. இவர்கள் மீது தண்ணீர்–பீய்ச்சி அடிக்கலாம்; தடியடி நடத்தலாம்; ஆனால்,  ஏழைகளை, தலித் மக்களை, ஆதிவாசிகளை, முஸ்லிம்களை, காஷ்மீரிகளை, நாகாக்களை, மணிப்பூரிகளை செய்ய முடிவதைப் போல ஆயிரக்கணக்கில் அவர்களை கைது செய்யவோ, சுட்டுத்தள்ளவோ முடியாது. இந்த ஆவேசத்தை உறைந்து போக செய்யாவிட்டால் அது மேலெழுந்து தம்மை திருப்பித் தாக்கும் என்று இந்த கிழட்டு கட்சிகளுக்கு நன்றாகத் தெரியும். எனவே தமக்கு பழக்கப்பட்ட அரசியலை மீண்டும் கொண்டுவர தமக்குள் ஓர் ஒத்திசைவு அவசியம் என்பதும் அவர்களுக்கு தெரியும். அதற்கு வகுப்புவாதத் தீயை மூட்டுவதை விட கை மேல் பலன் கொடுக்கக் கூடியது எது? ( அதெப்படி மதச்சார்பற்ற கட்சிகள் மதச்சார்பின்மையையும், வகுப்புவாதிகள் மட்டுமே வகுப்புவாதத்தையும் பேசிக்கொண்டிருக்க முடியும்.) ஒரு சிறு போரின் உதவி கூட தேவைப்படலாம். எனவே போர்வெறி வல்லூறு மற்றும் அமைதிப்புறா விளையாட்டை கொஞ்சம் ஆடுவது பொருத்தமாக இருக்கும்.

பலமுறை பரீட்சித்துப் பார்த்த, நம்பகமான காஷ்மீர்–கால்பந்தை குறி பார்த்து உதைப்பதை விட வேறென்ன சிறந்த தீர்வு இருக்க முடியும்? அப்சல் குரு தூக்கிலேற்றப்பட்டதன் காலநிலை மிகவும் கவனத்திற்குரியது. அது, அரசியலையும், கோபத்தையும் மீண்டும் காஷ்மீரின் வீதிகளுக்கு  இழுத்து வந்திருக்கிறது.

இந்தியா விஷமத்தனமும், கொடூர அடக்குமுறையும் இணைந்த மாக்கியவில்லிய சாமர்த்தியத்துடன், ஒரு பிரிவு மக்களை இன்னொரு பிரிவுடன் மோதவிட்டு இப்பிரச்சினையை கடந்து செல்ல நினைக்கிறது. காஷ்மீரில் நடைபெறும் போர் ஓர் அனைத்தும் தழுவிய மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசுக்கும் தீவிர இசுலாமியவாதிகளுக்கும் இடையேயான யுத்தம் என உலகிற்கு காட்டப்படுகிறது. இங்கு கவனிக்கத்தக்க ஒரு சம்பவம் இருக்கிறது. வெறுக்கத்தக்க பல வெறுப்பு உரைகளை நிகழ்த்தியவரும், பத்வாக்கள் பல மொழிந்தவரும், காஷ்மீரை பேய் உருவான, மாறாநிலை வகாபி சமூகமாக அமைக்க எண்ணம் கொண்டவர், முப்தி பஷிருதீன். இவர், படோடபமான இமாம் ( இது முழுக்க முழுக்க பொய்த்தோற்றம் கொண்ட பதவி ) பொறுப்புக்கு அரசாங்கத்தால் நியமன ஆசி பெற்றதை எப்படி புரிந்து கொள்வது? முகநூலில் கணக்கு வைத்திருக்கும் சிறுவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். ஆனால், இந்த நபர் கைது செய்யப்படவில்லை. காஷ்மீர் மதராசாக்களில் கொட்டும் சவுதி அரேபிய (சவுதி அரேபியா, அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடு ) பணத்தை இந்த அரசாங்கம் கண்டும்காணாமல் இருக்கும் மர்மத்தை எப்படி புரிந்து கொள்வது? இத்தகைய மோசமான செயல்பாடுகள் அல்லவா ஒசாமா பின்லேடனையும், அல்கொய்தாவையும், தாலிபானையும் உருவாக்கின. ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் தரைமட்டமானதற்கும் காரணம் இந்த அரசியல் அல்லவா? என்னவகையான தீய ஆவியை இப்போது இது கட்டவிழ்த்து விடப்போகிறது?

பிரச்சினை என்னவெனில், அந்த பழமையான அரசியல் கால்பந்தை இனிமேலும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது எளிதாகத் தோன்றவில்லை. அது ஒரு கதிர்வீச்சின் வடிவம் பெற்றிருக்கிறது. “மேலெழும் புதிய நிலைமைகளின்” ஆபத்திலிருந்து தற்காத்துக் கொள்ள பாகிஸ்தான் சில தினங்களுக்கு முன்பு நிகழ்த்திய அணு ஏவுகணை சோதனையை தற்செயலான ஒன்றாக நினைக்க முடியவில்லை. இருவாரங்களுக்கு முன்னர் அணு ஆயுதப் போரிலிருந்து ‘தப்பிக்கும் குறிப்புகளை’ காஷ்மீர் போலீஸ் வெளியிட்டது. மக்கள் வெடிகுண்டால் பாதிப்புக்கு உள்ளாகாத மேம்படுத்தப்பட்ட கழிவறைகள் பொருத்தப்பட்ட தரைத்தளங்களை கட்டும்படி கேடகப்பட்டுள்ளனர். அதில், மொத்த குடும்ப உறுப்பினர்களும் இரு வாரங்கள் வரை தங்கும் வசதி செய்து கொள்ள ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. மேலும், “அணு ஆயுத தாக்குதலின் போது வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களிலிருந்து வெடிப்பின் திசையில் குதித்து வெளியேறுவதன் மூலம் சீக்கிரமே கவிழ்ந்து நசுக்கி விடப் போகும் கார்களிலிருந்து தம்மை காப்பாற்றிக் கொள்ளலாம்”  என்கிறது அது. கூடுதலாக, “வெடி அலை பல முக்கியமான, பழக்கமான சூழல்களை தகர்த்து வாரிச் சென்று விடுவதால் ஆரம்பத்தில் சிறிதளவு மயக்க உணர்வை எதிர்பாருங்கள்.”

முக்கியமான பழக்கமான சூழல்கள் ஏற்கனவே வெடித்து தகர்க்கப்பட்டிருக்கலாம். சீக்கிரமே கவிழ இருக்கும் நமது வண்டிகளில் இருந்து நாம் அனைவருமே குதித்து தப்பித்து விட வேண்டியதுதான் போலிருக்கிறது.

— அருந்ததி ராய்

நன்றி : அவுட்லுக் இந்தியா
—-தமிழில், சம்புகன்

  1. அருந்ததி ராய் அம்மையார் தொடர்ந்து சந்து சாரி அந்த சீன பத்திரிகை தி ஹிந்துவில் அவ்வப்போது பொங்கி வருகிறார்..அவரிடம் ஒரு கேள்வி நீங்கள் எழுதும் அதே சந்து பத்திரிக்கையின் ஆசிரியர் என் ராம் சிங்கள ரத்னா விருது வாங்கியவரே என்பதும் அந்த விசுவாசத்துக்காக அவ்வப்போது போர் குற்றவாளி நவீன ஹிட்லர் ராஜபக்சேவின் பேட்டிகளையும் அந்த இன வெறியனின் துதி பாடுதலையும் செய்து வரும் ஹிந்து நாளிதழை நீங்கள் எப்போதாவது கண்டித்ததுண்டா?கண்டிக்க மாட்டீர்கள் உங்களுக்கு எப்போதும் காஸ்மீர் பாகிஸ்தான் தவிர ஒன்னும் தெரியாது..சீனா திபெத்தில் செய்யும் லீலைகள் பற்றியும் நீங்கள் வாயை தொறக்க மாட்டீங்க..சூப்பர் முர்போக்குதனனம்

  2. சரி அம்மணியே ஞானேஸ்வரி ரயில் கவிழ்ந்து நூறு உயிர் போனதே?அது யார் செய்த கொலை?கொஞ்சம் விளக்க முடியுமா?

  3. அப்சல் குரு என்ற தனி மனிதனை, அவர்தான் குர்ரமிழைத்தவர் என்று சந்தெகமற நிரூபிக்கபடாமல், அரசியல் காரணஙகளுக்காக பலியிட்டு இருக்கிரார்கள்! பி ஜெ பி யின் இந்துத்வா ஆயுதத்தை தானே எடுத்து கொண்டு பம்மாத்து செய்கிற்து காஙகிரசு! பி ஜெ பி, காஙகிரசு என்ற இரு ஊழல் பெருச்சாளிகளையும் (கட்சிகளையும்), பின்புலத்தில் பார்ப்பன சக்திகள் இயக்குகின்றன! இரண்டு கட்சிகளிலும் உள்ள பார்ப்பனர்கள் விமர்சிக்கபடுவதில்லை! பார்பனர் அல்லாதோரெல்லாம் ஊழல் வாதிகள் என்று மக்களை மூளைச்சலவை செய்கிரார்கள்! ராகுல் காந்தி அடுத்த பிரதமராகவேண்டுமென்றால் இந்துத்துவா சக்திகளுடன் சமரசம் செய்து கொள்ள வேண்டும், செய்தாயிற்று எனத்தெரிகிறது! சிதம்பரம், ஷிண்டே , திக்விஜய் அவ்வப்பொது உபயோகிக்கபடுவர்! அவ்வளவே! காம்ரேடுகளும் இதே சிந்தனை உள்ள அவர்களது தலைமையினால் கட்டுப்படுத்தப்படுவார்கள்!

  4. அருந்ததிராய் எப்படின்னு தெரியும், வினவு யாருன்னு புரியும், இரண்டும் சேர்ந்தா பயங்கரவாதத்துக்கு வாழ்த்துப்பா தான். தேசத்துக்கு தூத்துப்பா தான், வேறென்ன எதிர்பார்க்க முடியும்,

  5. அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதைக் கண்டித்து எதற்கு ஆர்ப்பாட்டம்!

    அந்தத்தீவிரவாதிக்கு தூக்குநிறைவேற்றி ரொம்பநாள் ஆயிற்று…இன்னும் நீங்கள் ஊரூருக்கு ஆர்ப்பாட்டம் செய்து கொண்டுதான் இருக்கிறீர்கள், இது போன்ற வெட்டிக்கட்டுரைகளையும் வெள்யிட்டுக்கொண்டுதான் இருக்கிறீர்…இதனால் யாருக்கென்ன பயன்…போய் வேலவிட்டியப்பாருங்கய்யா..

    • அடுத்து யாரையாவது தூக்குல போடுறவரை, அப்சல்குருவை வைச்சு காலத்தை ஓட்டுவாங்களே ஒழிய வேல விட்டிக்கெல்லாம் போக மாட்டாங்க.

  6. ‘இந்திய அரசு பலுசிஸ்தானிலும், பாகிஸ்தானின் இதர பகுதிகளிலும் செய்வதைப் போல. இந்திய ராணுவம் 1970களில், கிழக்கு பாகிஸ்தானில் முக்தி பாகினி அமைப்புக்கு பயிற்சி அளித்ததையும் விடுதலைப் புலிகள் உட்பட ஆறு வெவ்வேறு இலங்கை தமிழ்ப் போராளிக் குழுக்களுக்கு 1980–களில் பயிற்சி அளித்ததையும் நினைவில் கொள்க.’

    பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது.அம்மையாரின் வாதம் என்னவெனில் பாகிஸ்தானுக்கு இந்தியாவில் தாக்குதல் நடத்த உரிமை உண்டு என்பதே.அதை சுற்றிவளைத்து சொல்கிறார். இதைத்தான் நீங்கள் மொழிபெயர்த்து பரப்புகிறீர்கள்.

  7. @வினவு
    நீங்கள் தூக்கு தண்டனைக்கு எதிரானவரா?அப்படி எனில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தில் மரண தண்டனை இருக்கிறதே?அது எந்த கணக்கில் வரும் என்று சொன்னால் நன்று

  8. அருந்ததி ராய் கட்டுரையை முழுமையாக படிக்காமல், அல்லது படிக்க விருப்பமில்லாமல், நுனிப்புல் மேய்ந்து விட்டு இங்கே பதிவிட்டுள்ளார்கள், மேலே உள்ள தமிழ்த்தேசிய மற்றும் இந்து தேசியத்தின் அரைவேக்காட்டு அரசியல் குஞ்சுகள். ஒரு நபர், இந்த கட்டுரை, ராய் ‘இந்து’வில் எழுதியதாக கற்பனை செய்து அவரை விமர்சிக்கிறார். இவர்கள் அரசியல் கடப்பாடு மலைக்க வைக்கிறது!

Leave a Reply to Paiya பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க