Wednesday, May 12, 2021
முகப்பு அரசியல் ஊடகம் டெல்லி பாலியல் வன்முறை குற்றவாளி ராம்சிங் தற்கொலை!

டெல்லி பாலியல் வன்முறை குற்றவாளி ராம்சிங் தற்கொலை!

-

டெல்லி மாணவி பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் முதல் குற்றவாளியான ராம் சிங் திகார் சிறை எண் 3-ல் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவரது உடல் இன்று காலை 5 மணிக்கு அவர் அடைக்கப்பட்டிருந்த அறையில் கண்டு பிடிக்கப்பட்டது. தீன் தயாள் உபாத்யாயா மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பிணமாக கொண்டு வரப்பட்டதாக பதிவு செய்யப்பட்டது.

ராம்சிங்‘ராம்சிங் அந்த அறையில் தனியாக இல்லை, அவருடன் மற்ற கைதிகளும் இருந்தனர். யாரும் அதை கவனிக்கவில்லை. சுமார் 5 மணியளவில் அறையின் கிரில் கதவில் தனது உடைகளை மாட்டி தூக்கில் தொங்கியது தெரிய வந்தது’ என்று ஒரு சிறை அதிகாரி சொன்னார். ‘ராம்சிங் தன்னுடைய உடைகளையே பயன்படுத்தி தற்கொலை செய்து கொண்டார்’ என்று சிறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ராம் சிங்கும் மற்ற பாலியல் வன்முறை குற்றவாளிகளும் மற்ற சிறைக் கைதிகளால் அச்சுறுத்தப்பட்டதால் தனிப் பிரிவில் அடைத்து வைக்கப்பட்டார்கள் என்று தகவல்கள் வெளியாகின. ராம் சிங் மன அழுத்தத்துக்கு ஆளானதால் அவர் திகார் சிறையின் ‘தற்கொலை கண்காணிப்பில்’ வைக்கப்பட்டிருந்தார். அதன்படி அவர் மீது நாளின் 24 மணி நேரமும் நேரடி காவலர் கண்காணிப்பு இருக்க வேண்டும். கடந்த 2 நாட்களாக அவர் சோர்வாக இருந்ததாகவும், நேற்று இரவு சாப்பிடவில்லை என்றும் தெரிய வருகிறது.

இந்தச் சூழலில் அவர் எப்படி தற்கொலை செய்து கொண்டார் என்று கேள்வி எழுகிறது. இது குறித்து மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கொலை செய்யப்பட்ட மாணவியின் 20 வயதான சகோதரர், “எப்படியானாலும் சாக வேண்டியவன்தான். அவனுக்கு எதிரான வழக்கு மிகவும் உறுதியானது. ஆனால் இப்போது அவன் விரும்பிய நேரத்தில் விரும்பிய விதத்தில் செத்துப் போனது கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது. இருப்பினும், ஒன்று அவுட். மற்றவங்க, மரண தண்டனை கிடைப்பது வரை காத்திருப்பார்கள் என்று நம்புவோம்” என்று ராய்ட்டர் செய்தி நிறுவனத்திடம் கருத்து தெரிவித்திருக்கிறார்.

ராம்சிங் பாலியல் வன்முறை குற்றம் நிகழ்த்தப்பட்ட பேருந்தின் ஓட்டுனர். கடந்த டிசம்பர் 16ம் தேதி பேருந்தை எடுத்துக் கொண்டு ஒரு ரவுண்ட் போகலாம் என்று அவர்தான் மற்றவர்களை அழைத்துக் கொண்டு போயிருக்கிறார். அவரது தம்பி முகேஷ் பேருந்தை ஓட்டியிருக்கிறார்.

ராம்சிங்கும் மற்ற 5 பேரும் 23 வயதான மருத்துவ மாணவியை கொடூரமாக அடித்து, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி, அவரது நண்பரையும் படுகாயங்களுடன் பேருந்திலிருந்து வெளியில் வீசி எறிந்திருக்கின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அந்த மாணவி 13 நாட்களுக்குப் பிறகு பலனில்லாமல் உயிரிழந்தார்.

பாலியல் வன்முறை குற்றவாளிகள் 6 பேரில் 33 வயதான ராம் சிங்தான் மூத்தவர். அவர், அவரது தம்பி முகேஷ் மீதும் இன்னும் 3 பேர் மீதும் கொலை, கற்பழிப்பு, வழக்கு விரைவு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. குற்றம் சாட்டப்பட்ட ஆறாவது நபர் 16வயதுக்கு உட்பட்டவர் என்பதால் சிறுவர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறார்.

உண்மையில் இது தற்கொலைதானா இல்லை போலிசாரின் வேலையா என்பதை கண்டறிவது கடினம். முற்றிலும் கண்காணிப்பு உள்ள அதுவும் முக்கியமான ஒரு வழக்கின் குற்றவாளி இருக்கும் அறையில் ஒருவர் தற்கொலை செய்திருக்கிறார் என்பதை நம்பமுடியவில்லை. ஒருவேளை உண்மையிலேயே ராம் சிங் தற்கொலை செய்து கொண்டார் என்று வைத்துக் கொள்வோம். அவ்வளவு கொடூரமான கொலை செய்த குற்றவாளி இத்தனை சீக்கிரத்தில் குற்ற உணர்வு அடைந்து தற்கொலை செய்திருப்பது எதைக் காட்டுகிறது?

பாலியல் வன்முறை எதிர்ப்பு
பாலியல் வன்முறை எதிர்ப்பு போராட்டம். படம் : நன்றி தி ஹிந்து.

நாடு தழுவிய போராட்டங்கள், ஊடக பிரச்சாரம், இறுதியில் அந்த மாணவி சிங்கப்பூர் மருத்துவமனையில் இறந்து போனது எல்லாம் சேர்ந்து ராம் சிங்கை கரைய வைத்திருக்கும். சிலர் சொல்வது போல எப்படியும் நமக்கு மரண தண்டனைதான் என்று தெரிந்துதான் ராம் சிங் தற்கொலை செய்து கொண்டார் என்று நடந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் குற்றவாளிகள் தமது தண்டனையிலிருந்து எப்படியாவது விடுதலை பெற, இல்லையெனில் உயிரையாவது காப்பாற்றிக் கொள்ளத்தான் எத்தனிப்பார்கள். தமது குற்றம் குறித்து அவர்கள் குற்ற உணர்வு அடைவது பொதுவில் அரிதான ஒன்று.

பொதுவில் ஆதிக்கம் மற்றும் அதிகாரத்தில் இருப்போர் எந்த சந்தர்ப்பத்திலும் குற்ற உணர்வு அடைவதில்லை. இந்திய பொதுத்துறை வங்கிகளிடம் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி திருப்பித் தராமலும் அப்படி ஏமாற்றுவதில் குற்ற உணர்வு இல்லாமலும் இருக்கும் முதலாளிகளின் நாட்டில்தான் சில ஆயிரம் கடனுக்காக தற்கொலை செய்யும் விவசாயிகளைப் பார்க்கிறோம். ராம் சிங் எனும் இந்தக் குற்றவாளி ஒரு லும்பன் ரவுடி என்பதைத் தாண்டி அதிகாரம் கொண்ட எந்த பதவியிலும் இல்லை. ஆகவே அவர் குற்ற உணர்வு அடைந்து தனது உயிரை துறப்பதற்கான அடிப்படை இருப்பதாகவே தோன்றுகிறது.

ஆனால் பெண்களை போகப்பொருளாக்கி, கவர்ச்சி, ஆபாசத்தை விற்பனை செய்து பாலியல் வன்முறையைத் தூண்டிவிடும் ஊடக, சினிமாத் துறையைச் சேர்ந்தவர்கள் தமது தொழில்தான் வன்புணர்ச்சிக்கு அடிப்படை என்பதை ஏற்பதோ அப்படி ஏற்றுவிட்டு குற்ற உணர்வு அடைவதோ சாத்தியமே இல்லை. பாலியல் வன்முறைக்கான ஆணாதிக்க சமூக அமைப்பை காப்பாற்றும் அரசு, போலீசு, நீதிமன்றம் இப்படி ஒரு குற்ற உணர்வு அடையவே அடையாது என்பதோடு பெண்களுக்கு எதிரான குற்றத்தை தொடர்ந்து செய்தும் வருகின்றது.

நாட்டு மக்களின் போராட்டம் ஒரு ராம்சிங்கை தற்கொலை செய்ய வைத்திருப்பது போன்று, அரசு மற்றும் ஊடகங்களை திருத்துவது, தண்டிப்பது எப்படி என்பதே இந்த தற்கொலை நமக்கு தெரிவிக்கும் செய்தி.

மேலும் படிக்க
Delhi gang rape case main accused Ram Singh commits suicide in Tihar jail
Delhi gangrape case accused commits suicide

 1. அப்படியே ராம்சிங் அவர்கள் பெயரிலும் ஒரு தியாகத்தை போற்றும் விருது ஒன்று இந்திய அரசால் உருவாக்கப்பட்டு அளிக்கப்படும் என்று நம்புவோமாக!!! அன்னாரின் ஆத்துமா சாந்தியும் சமாதானமும் அடைவதாக!!!

 2. ##நாட்டு மக்களின் போராட்டம் ஒரு ராம்சிங்கை தற்கொலை செய்ய வைத்திருப்பது போன்று, அரசு மற்றும் ஊடகங்களை திருத்துவது, தண்டிப்பது எப்படி என்பதே இந்த தற்கொலை நமக்கு தெரிவிக்கும் செய்தி.##

  எப்படி திருத்துவது தண்டிப்பது என்பது கடினமாக இருந்தாலும் கூட தடுப்பது என்பது சாத்தியமானதொன்று. அதன் வழிகளை கருத்துக்களாக பதிவு செய்யுங்களேன்

 3. //இந்திய பொதுத்துறை வங்கிகளிடம் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி திருப்பித் தராமலும் அப்படி ஏமாற்றுவதில் குற்ற உணர்வு இல்லாமலும் இருக்கும் முதலாளிகளின் நாட்டில்தான் சில ஆயிரம் கடனுக்காக தற்கொலை செய்யும் விவசாயிகளைப் பார்க்கிறோம்.//

  நிதர்சனமான உண்மை…
  இது போலவே மக்கள் சொத்தை கொள்ளையடித்த, கொள்ளையடிக்க உதவி செய்த அரசியல்வாதிகள், போலீசுகாரர்கள் அது குறித்த அச்சமின்றி வழக்கினை இழுத்தடிப்பதும், டாஸ்மாக் பாரில் ‘ஆம்லெட் போட்டது’ போன்ற பெரிய குற்றம் செய்தவர்களால் சிறைகள் நிரப்பப்படுவதையும் இங்கே கூற வேண்டும்.

 4. 16-12-2012 ஒரு கல்லூரி மாணவி தனது ஆண் நண்பருடன் இரவில் சினிமா பார்த்துவிட்டு வருகிறாள். இருவரும் ஒரு பேருந்தில் ஏறுகிறார்கள்.ராத்திரி நேரத்துல இப்படி ஒரு ஆம்பளகூட வர்றியே…பேச.பெண்ணும்,தோழரும் அவர்களது குடியை விமர்சித்து கடும் விவாதத்தில் ஈடுபடுகின்றனர். இது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்காக இது தேசம் முழுமைக்கும் காட்டு தீ போல பரவியது இதர்கு பெண் ஆதிக்கஅமைபு ,இதுதான் சமயம் என்று “பெண்ணுரிமை” சங்கங்கள் புற்றீசல்போல் கிளம்பி புதிதாக வேறுகோணத்திற்கு திருப்பி பிரச்சனையை ஊதி பெரிதாக்கியாதில் ஆண்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. விலைவு;;;;;;;;ஆண்கள் பழிவாக பெண்ணாதிக்க சட்டம் இந்தியாவில் முலுவதும் இயாற்ற படூகிரது .திட்டமிட்ட சதி ….ஆண்களின் அடிப்படை உரிமை மீறபடூகிறது .

 5. இது தற்கொலை என்று, போலிசு தரப்பில் சொல்லப்பட்டாலும், அவர் கொலை செய்திருக்கப்பட வாய்ப்புள்ளது! இதே போல இரவுநேரஙளில் தனியாக அல்லது நண்பருடன் வரும் பெண்களை, அச்சுறுத்த நவீன கலாச்சார காவலர்கள், பல மானிலஙகளில் உலவ ஆரம்பித்து விட்டார்கள்! இதில் பொதுவான விடயம் எல்லொரும் மத அடிப்படை வாதிகளாக இருப்பது தான்! ஒரு கும்பலே இதில் சம்பந்தப்பட்டிருப்பதால், இதைப்போல இன்னும் பல கும்பல்கள், நாட்டின் பிற இடஙகளிலும் இயஙகி வர வாய்ப்பு உள்ளது! பின்னனி பற்றிய தகவல் தொடர்பை துண்டிக்கவே இந்த கொலை நடந்திருக்கலாம்! பிரமோத் மகஜன் உதவியாளர் கொலை மறைக்கபட்டு , மறக்கப்பட்டுவிட்டதல்லவா!

Leave a Reply to நந்தன் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க