கேரள மீனவர்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் இத்தாலிய கடற்படை வீரர்கள் இருவரும் வழக்கை எதிர் கொள்ள இந்தியாவுக்கு திரும்பி வர மாட்டார்கள் என்று இத்தாலி அரசு தெரிவித்திருக்கிறது. பிப்ரவரி 24, 25 தேதிகளில் இத்தாலியில் நடந்த பொதுத்தேர்தலில் ‘ஜனநாயக கடைமையை’ அதாவது வாக்களிப்பதற்காக 4 வார பரோலில் ஊருக்குப் போன குற்றவாளிகள் திரும்ப மாட்டார்களாம். கொலைகாரர்களுக்கு எதுக்கு ஜனநாயக கடமை என்று தெரியவில்லை.
2012-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ம் தேதி கேரளாவைச் சேர்ந்த மீனவர்கள் இரண்டு பேரை இத்தாலிய எண்ணெய்க் கப்பல் என்ரிகா லெக்சியைச் சேர்ந்த கடற்படை காவலர்கள் கொல்லம் மாவட்டத்தின் நீண்டகரை பகுதி கடலில் சுட்டுக் கொன்றனர். அந்த மீனவர்கள் கடல் கொள்ளையர்களாக இருக்கக் கூடும் என்ற சந்தேகத்தில் சுட்டதாக அவர்கள் சொன்னார்கள்.
‘மீன் பிடித்து விட்டு திரும்பி வந்து கொண்டிருந்த போது, எண்ணெய் கப்பல் கடந்து போவதற்காக காத்திருந்த போது, எந்த காரணமும் இன்றி கப்பலிலிருந்து துப்பாக்கிச் சூடு நடந்தது’ என்றும் மீன்பிடிக் கப்பல் செயின்ட் ஆன்டனியின் தலைவர் பிரெடி லூயிஸ் தெரிவித்திருந்தார். இந்தத் தாக்குதலில் படகு ஓட்டுனர் ஜெலஸ்டின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த அஜேஷ் பிங்கி என்ற மீனவர் சிறிது நேரத்தில் இறந்து விட்டார்.
துப்பாக்கிச் சூடு நடத்திய பிறகு என்ரிகா லெக்சி கப்பல் சம்பவத்தைப் பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்காமல் எகிப்தை நோக்கி தனது பயணத்தை தொடர்ந்திருக்கிறது. கேரள மாநில கடலோர காவல்படையின் நீண்டகரை காவல் நிலையத்திற்கு தகவல் வர இந்திய கடற்படை கப்பல்களும் விமானங்களும் இத்தாலிய கப்பலை தேடும் பணியில் ஈடுபட்டன. இந்திய கடலோர காவல்படையால் தடுத்து நிறுத்தப்பட்ட பிறகுதான் கப்பல் உரிமையாளருக்கு இது தொடர்பாக ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருக்கின்றனர். கடற் கொள்ளையரை சுட்டதாக சொல்லும் கப்பல் ஊழியர்கள், அது வரை கப்பல் நிறுவனத்திற்கோ, கடற்கொள்ளை தடுப்பு மையத்துக்கோ எந்தத் தகவலும் அனுப்பியிருக்கவில்லை.
கேரள கடல் எல்லையிலிருந்து 20.5 கடல் மைல் தூரத்தில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த கேரள போலீஸ் மசிமிலியானோ லதோர், சல்வடோர் கிரோனே என்ற இரண்டு இத்தாலிய கடற்படை வீரர்களை கப்பலிலிருந்து கைது செய்தனர். கப்பலின் கேப்டன் விட்டெல்லிக்கு இதில் நேரடி பொறுப்பு இல்லை என்று தீர்மானிக்கப்பட்டது.
‘முதல் தகவல் அறிக்கையை நிராகரிக்க வேண்டும்’ என்று குற்றம் சாட்டப்பட்ட இத்தாலிய படை வீரர்கள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், “குற்றம் சாட்டப்பட்ட மரைன்கள் மீனவர்களை சுட்டுக் கொல்வதற்கு முன்பு கடற்கொள்ளையர்கள் அச்சுறுத்தல் இருப்பதாக கப்பலின் கேப்டனுக்கு தகவல் சொன்னதாகவோ, கேப்டன் அதை பதிவு செய்ததாகவோ எந்த ஆதாரங்களும் இல்லை. கப்பலின் தலைவர் கப்பல் பாதுகாப்பு அமைப்பை செயல்படுத்தியதற்கோ, கடற்பயண மீட்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான மையத்துக்கும் வேறு எந்த கடற்படைக்கும் தகவல் அனுப்பியதற்கோ எந்த தடயங்களும் இல்லை” என்று சொன்னது.
2012 மே மாதம் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஜூன் மாதம் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு வீரர்களும் ரூ 1 கோடி பிணையத் தொகை கட்ட வேண்டும், கொச்சி காவல் துறை ஆணையர் அலுவலகத்துக்கு 10 கிலோமீட்டர் தூரத்துக்குள் தங்கியிருக்க வேண்டும், தினமும் காலை 10 மணி முதல் 11 மணிக்குள் ஆணையர் அலுவலகத்தில் வர வேண்டும் என்ற சுதந்திரமான நிபந்தனைகளின் கீழ் பெயிலில் விடப்பட்டனர். இந்தியாவில் வேறு எந்த கொலைகாரர்களுக்கும் இத்தனை தனிச்சிறப்பான சலுகைகள் கிடையாது. என்ன இருந்தாலும் மேற்குலகின் மனிதர்கள் என்றால் நீதியும் பணிந்து கொடுக்கும் போல.
‘கேரள மீனவர்கள் கொல்லப்பட்டனர்’ என்பதை கேரளாவின் பிரச்சனையாக முன் வைத்து கேரள ஆளும், எதிர்க்கட்சிகளும், ஊடகங்களும் இந்த வழக்கை விவாதித்தனர். குற்றம் சாட்டப்பட்ட இத்தாலிய படை வீரர்களை விடுவித்து இத்தாலிக்கு அழைத்து போக இத்தாலிய அரசும் மத்திய அரசும் செய்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. இந்த வழக்கை கேரளாவிலிருந்து மாற்றி கொண்டு போய் விட வேண்டும் என்ற முயற்சிகள் ஆரம்பித்தன.
டிசம்பர் மாதம் தமது குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் கொண்டாடுவதற்கு இத்தாலி போய் வர அனுமதிக்க கோரி குற்றம் சாட்டப்பட்ட படை வீரர்கள் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
‘இத்தாலிய மரைன்கள் கொச்சிக்கு திரும்பி வருவதற்கான பொறுப்பை இத்தாலிய தூதரக அதிகாரிகள் ஏற்றுக் கொள்ள வேண்டும்’, ‘ரூ 6 கோடிக்கான பிணைத் தொகையை கோர்ட்டில் கட்ட வேண்டும்’, ‘இத்தாலிய அதிகாரிகள் இரண்டு குற்றவாளிகளின் நடமாட்டங்களை தொடர்ந்து கேரள போலீசுக்கு தெரிவிக்க வேண்டும்’, ‘இந்த நிபந்தனைகள் அனைத்தையும் இத்தாலிய அரசு கடைப்பிடிக்கும் என்று மத்திய அரசு உறுதி அளித்தால் அவர்கள் போய் வரலாம்’ என்ற கடும் கட்டுப்பாடுகளோடு கேரள உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது. ‘ஜனவரி 10-ம் தேதிக்கு முன் கொச்சி காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ஆஜராக வேண்டும்’ என்றும் உத்தரவிட்டது
இத்தாலிய தூதரக அதிகாரிகள், இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள், மத்திய அரசு என்று பலர் மீதும் பொறுப்பு சுமத்தப்பட்டிருந்ததால் குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் கொண்டாடி விட்டு ஜனவரி முதல் வாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட கப்பல் படை வீரர்கள் கேரளா திரும்பினார்கள்.
“இந்தியக் கடல் எல்லைக்கு வெளியில் நடந்த சம்பவத்தை விசாரிக்க கேரள போலீசுக்கு அதிகாரம் இல்லை” என்றும், “இந்திய நீதிமன்றங்களின் விசாரணை வரம்புக்குள் அது வராது” என்றும் இத்தாலிய அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
ஜனவரி 18-ம் தேதி உச்சநீதி மன்றம், இத்தாலிய அரசின் மனு மீதான தீர்ப்பில் “சம்பவம் 12 கடல் மைல்களுக்கு வெளியில் நடந்ததால் அதைப் பற்றி விசாரித்து வழக்கு போட கேரள அரசுக்கு உரிமை இல்லை” என்று தீர்ப்பளித்து வழக்கை கேரளாவிலிருந்து டெல்லிக்கு மாற்றியது. வழக்கை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டதோடு, இத்தாலிய மரைன் வீரர்களின் பிணை நிபந்தனைகளையும் மாற்றியது. அவர்கள் ‘டெல்லியிலுள்ள இத்தாலிய தூதரகத்தின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள இடத்தில் தங்க வேண்டும்’ என்றும், ‘வாரம் ஒரு முறை டெல்லியில் சாணக்கியபுரி காவல் நிலையத்துக்கு வர வேண்டும்’ என்றும், ‘கொச்சி போலீஸ் கைவசம் இருந்த பாஸ்போர்ட்டுகளை இந்திய உள்துறை அமைச்சகத்திடம் ஒப்படைக்க வேண்டும்’ என்றும் உத்தரவிட்டது.
இப்போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் இத்தாலிய அரசின் கட்டுப்பாட்டிலும், அவர்களை இந்தியாவை விட்டு வெளியில் அனுமதிக்கும் ஆவணங்களும் வழக்கை நடத்தும் பொறுப்பும் மத்திய அரசின் கைக்கும் வந்து விட்டது. ஒரு மாதமாகியும் மத்திய அரசு தனி நீதிமன்றம் அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்தச் சூழலில் உச்சநீதி மன்றம், பிப்ரவரி 24, 25ம் தேதிகளில் இத்தாலியில் நடந்த தேர்தலில் வாக்களிப்பதற்காக நான்கு வாரங்களுக்கு இத்தாலி போய் வர அவர்களுக்கு அனுமதி வழங்கியது. ‘இத்தாலிய சட்டப்படி தபால் மூலம் வாக்களிக்க இந்த படைவீரர்களுக்கு உரிமை இல்லை என்பதால் நேரில் போய் வாக்களிக்க வேண்டியிருக்கிறது. எனவே அவர்கள் ஊருக்குப் போய் வர அனுமதி வழங்கப்படுகிறது’ என்று ஒரு தீர்ப்பைச் சொன்னது உச்சநீதிமன்றம். 2 நாட்கள் நடக்கவிருக்கும் தேர்தலில் வாக்களிப்பதற்கு 4 வாரங்கள் விடுமுறையும் வழங்கியது. அப்படி இந்த கொலைகாரர்களது இரண்டு ஓட்டுக்கள் விழவில்லை என்பதால் இத்தாலியின் ஜனநாயகக் கப்பல் ஒன்றும் கவிழ்ந்து விடாது. எனினும் ஒரு சதித்திட்டம் போல இந்த அனுமதி கொடுக்கப்படுகிறது.
இப்போது இத்தாலி அரசு ‘இரண்டு மரைன் வீரர்களும் இந்தியாவுக்குத் திரும்பி வரப் போவதில்லை’ என்று அறிவித்து விட்டது. ‘நாங்க என்ன செய்ய முடியும்’ என்று அலுத்துக் கொண்டு மத்திய அரசும், உச்ச நீதிமன்றமும் இந்த வழக்கை இழுத்து மூடி விடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
நம்மால் ஒண்ணுமே முடியா விட்டாலும், வாயால் வடை சுட்டு கேரளாவில் ஓட்டுகளை தக்க வைத்துக் கொள்ளலாம் என்ற தைரியத்துடன் ‘இத்தாலியின் இந்த முடிவை ஏற்க முடியாது’ என்று கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டி சொல்லியிருக்கிறார். “கேரள நீதிமன்றங்களிலும் உச்ச நீதிமன்றத்திலும் நாங்க எவ்வளவு தீவிரமா இந்த வழக்கை நடத்தினோம் என்று எல்லோரும் பார்த்தீங்க. இப்போதும் இந்திய சட்டப்படி இந்தியாவில் அவர்கள் விசாரிக்கப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு” என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

ஒட்டு மொத்தமாக பார்த்தால் இந்த நிலை ஒரு மர்மக் கதை போல திட்டமிட்டு அமல்படுத்தப் பட்டிருக்கிறது. கேரள மக்களையும் பகைத்துக் கொள்ளக்கூடாது, இத்தாலிய அரசையும் மிரட்டமுடியாது என்று இந்திய அரசு சாணக்கிய தந்திரத்துடன் இத்தாலி வீரர்கள் வெளியேற வழியேற்படுத்திக் கொடுத்திருக்கிறது. அதன்படி வழக்கை கேரளாவிலிருந்து டெல்லிக்கு மாற்றி வீரர்களையும் இத்தாலி தூதரகத்தில் வாழ வைத்து பின்னர் ஓட்டுப் போட நான்குவார விடுமுறை என்று வெளியேற்றி இப்போது திரும்ப மாட்டார்கள் என்று ஒரே போடாக போட்டு விட்டார்கள்.
இதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும் என்று இந்திய அரசு பிலாக்கணம் வைக்கலாம். அல்லது இத்தாலி அரசின் முடிவை ஏற்கவில்லை என்று சொல்லலாம். அல்லது இத்தாலி வீரர்கள் வெளியேறுவது என்பது முற்றிலும் நீதிமன்றம் செய்த முடிவு, நாங்கள் தலையிட முடியாது என்று சொல்லலாம். ஆனால் இத்தாலி அரசுக்கு இப்படி ஒரு ஆலோசனை கொடுத்து அதற்கேற்ப இந்திய நீதிமன்றங்களை உபயோகித்திருப்பது எல்லாம் கொட்டை போட்ட ரா மற்றும் வெளியுறவுத் துறை அதிகாரிகள் என்பதில் சந்தேகமில்லை. இப்போது கேரள மக்களும் மத்திய, மாநில அரசுகள், நீதிமன்றங்களை குற்றம் சொல்ல முடியாதில்லையா?
இந்த நேரத்தில் வரலாற்றையும் கொஞ்சம் நினைவுபடுத்திக் கொள்வோம். தமது செல்வாக்கை பயன்படுத்தி போபர்ஸ் பீரங்கி ஊழல் திருடன் குவாட்டரோச்சி, போபால் விஷவாயு கொலையாளி ஆண்டர்சன் போன்ற குற்றவாளிகளை திட்டமிட்டு தப்பவைத்தவர்கள் யார்? அப்படி அவர்களை தப்பவிட்ட 21ம் நூற்றாண்டின் வல்லரசான இந்தியாவின் இறையாண்மை ‘புனிதமானது’ என்பதில் யாருக்காவது ஐயம் இருக்கிறதா? அப்பேற்பட்ட புனிதம்தான் நமது இரண்டு மீனவர்களை அநியாயமாக கொன்ற இரண்டு இத்தாலி கொலைகாரர்களை காப்பாற்றியிருக்கிறது என்பதில் யாருக்கு ஐயம் இருக்க முடியும்?
மேலும் படிக்க
Marines won’t return to India for trial – says Italy