privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஈழம்பகத்சிங் பாதை உன்னைத் தேடுது!

பகத்சிங் பாதை உன்னைத் தேடுது!

-

நாடு மீண்டும் அடிமையாகுது பகத்சிங் பாதை உன்னைத் தேடுது!

பகச்சிங்
பிறப்பின் நோக்கம் – பலரும்
பெரிதும் அறிந்திலர்
பகத்சிங் தோழர்கள்
இறப்பின் நோக்கமும்
எடுப்பாய்க் காட்டினர் !

எங்கள் வாழ்வும்
எங்கள் சாவும்
எங்கள் கையில் தான் ! –என
வாழ்வின் மதிப்பும்
சாவின் மதிப்பும்
வழங்கிச் செல்ல யாரால் இயலும் ?

சாவால் பறிக்கவியலா
வாழ்வின் இலட்சியங்கள்
எல்லோர்க்கும் வாய்ப்பதில்லை,
பகத்சிங் , ராஜகுரு , சுகதேவ்
அதன் தொடர்ச்சிகள் …

கொடூரமாக வழங்கப்படும்
வாழ்க்கையிலிருந்து
மென்மையான சமூகத்தை
உருவாக்க விழையும் உணர்ச்சி
கம்யூனிஸ்டுகளுக்கே சாத்தியம் !
தோழர்கள் அதன் துவக்கங்கள் …

மூச்சுள்ளவர்களால்
முடியாததை
செத்தும் செய்தார்கள்.
அகிம்சையின் இம்சையால்
அழிக்கப்பட்ட
தேசத்தின் ஆன்மாவை ,
தங்கள் கழுத்திறுக்கிய
தூக்குக் கயிற்றால்
பிழைக்க வைத்தார்கள் .

வரலாற்றின் தொடர்ச்சியாய் வந்த
விடுதலை மூச்சை
மரணம் இசைத்தது ,
“இன்குலாப் ஜிந்தாபாத் ”
ஏகாதிபத்திய
தடித்தோல் உரித்தது .
மகாத்மாக்களால்
மரத்துப்போன தேசம்
மறுபடி உயிர்த்தது !

தூக்குமேடைக்கு
கம்பீரமாய் நடந்து சென்ற
தன் மரணத்தின் மதிப்புணர்ந்த
கட்டபொம்மனின் தீர்க்கம்
பகத்சிங்கின் பார்வையில் தெறித்தது .

தூக்கில் தொங்கிய நிலையிலும்
விடுதலைப் போரை
விட்டுச்செல்லும் வருத்தத்தில் ,
தாய்மண் தேடி தவித்த
சின்ன மருதுவின்
கால்களின் தேடல் ,
பகத்சிங் தோழர்களின்
பாதங்களில் ஒலித்தது .

சரியாகத்தான் வாழ்ந்திருக்கிறோம் !
என்று சாகும் வரையிலும்
தனது ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வை
சரிபார்த்துக் கொண்ட ,
திப்புவின் பொறுப்புணர்வை
பகத்சிங் விழிகளில் பார்க்க முடிந்தது
எப்பேற்பட்ட காலமது! –

சசீந்தர சன்யால் ,அஷப்பகுல்லாகான்
ரஜேந்திர லகரி … ராம் பிகாரி போஸ் ..
எண்ணிறந்த இளைஞர்களின் ரத்தத்தால்
இந்தியா
வரையப்பட்ட காலமது .

பிரிட்டிஷ் தரகர்களின்
அல்லக்கையாய் உள் நுழைந்து ,
தியாகிகள் நெசவை
வெள்ளைக் கறையால் சீரழித்து
காந்தி ராட்டை சுற்றிய தருணமது !

பிரிட்டிஷ் கோட்டை ,
காந்தி சிலந்தி
இரண்டையும் தகர்க்கும்
“காலத் தேவையின் விளைவுகளாய் ”
பகத்சிங் தன்னை
பொருத்திக் கொண்ட அழகு …
புரட்சியின் பொறுப்புணர்ந்த நகர்வு …
நாம் உணர வேண்டிய காலம் இது !

முணுக்கென்றால்
உண்ணாவிரதம் உட்கார்ந்து
ஒரு முறை கூட உயிரை விடாத
மோகன்தாஸ் கரம்சந்தின்
மோசடிகள் புரிய வேண்டுமெனில் ,
அறுபத்து மூன்று நாள்
உண்ணா நிலையிருந்து ,
கட்டாயமாக குளுக்கோஸ் ஊசி
குத்தவந்த நேரத்திலும்
‘’ நோ … நோ … என மறுத்து
கத்திக் கொண்டே உயிர்நீத்த
யதீன் தாசின்
அரசியல் அறிய வேண்டும் .

காந்தியின் பேரங்களில்
அவமானப்பட்ட அகிம்சை
புரட்சியாளர் மரணங்களில்
மானம் காத்தது !

மாற்றுக் கருத்தாயினும்
லாலா லஜபதிராய் மரணம்
தேசத்தின் கவுரவத்தின் மேல்
விழுந்த அடி ! _என
சாண்டர்சை தண்டித்த
பகத்சிங் பார்வை அழகானது !

சொந்த நாட்டு விடுதலைக்கு அர்ப்ப்பணித்த
பகத்சிங் தோழர்களை
முடிந்தால் ,
முன்னமேயே “முடிக்கச்சொல்லி”
வைசிராய்க்கு குறிப்புக் காட்டிய
காந்தியின் புன்னகை பயங்கரமானது !

தங்கள் சிந்தனைக்குக் குறைவாக
இயங்காத இளைஞர்கள்
பகத்சிங்கின் தோழர்கள் ….
சொந்த வாழ்வில்
அமைப்பு குறுக்கிடின்
இடம் தந்த வீரர்கள்!

பதினைந்தே வயதில்
தாயை விட்டுப் பிரிந்து ,
தாய் நாட்டின் விடுதலை தவிர
வேறெதுவும் மறந்து,
அமைப்பு வேலைக்காய் அலைந்து …. திரிந்து …
தெருவில் பிச்சைக்காரர்களுடன்
படுத்து எழுந்து …
பிரிட்டிசிடம் பிச்சை கேட்பதா
சுதந்திரம் !
போராடி பெறவேண்டிய உரிமையெ கிளர்ந்து!
போலிஸ் அடித்து பெயரைக் கேட்கும் போதெல்லாம்
தன் பெயர்
விடுதலை … விடுதலை {ஆசாத்} என
மிளிர்ந்து …
தாய்மடியின் நினைவு வரும்
வேளையெல்லாம்
தாய் மண்ணில் தலை சாய்ப்பேன்
அம்மா என உருகி உருகி
தேச விடுதலையைக் காதலித்து
தாய் விடுதலையைக் காதலித்து,
இறுதியில் ,
அலகாபாத் ஆல்பிரட் பூங்காவில்
சுட்டுப் பொசுக்கப்பட்டானே
ஆசாத் ,
அவனது ஆவி
இன்னும் அடங்கிவிட்டதா என்ன ?

இந்திய மண்ணை ஆக்கிரமிக்கும்
கார்ப்பரேட் பயங்கரத்திற்க்கெதிராய்
பழங்குடிகளின் போர்க்குணத்தில்
தோழன் ஆசாத் மீண்டும் மீண்டும் துடித்தெழுகிறான் …

கை விரல்கள் சிதறி
கடைசி குருதியும் வழிந்தோட
முகத்தின் ரத்தத்தை
ஒத்தியெடுக்கும் தோழனிடம் ,
முடிவாக _
“நம் லட்சியத்தை காப்பாற்றுங்கள்
புரட்சி வாழ்க “_ என
ராவி ஆறு உணர்ச்சி ஊற
ரத்தமாய் கலந்திட்ட
பகவதி சரணின் உறுதியை
சுட்டுக் கொல்லப்படும்
நக்சல்பாரிகளின் முகத்தைப் பார்த்து
இன்னுமா இவர்கள் ?
என உறைந்து போகுது அதிகார வர்க்கம்!

சமரசமில்லாமல்
முதலாளித்துவத்தை எதிர்க்கும் இடங்களில் …
செத்துப் போனதாய் நினைத்த
பகத்சிங்
இன்னுமிருப்பதைப் பார்த்து
அதிர்ந்து போகிறது ஆளும் வர்க்கம் !

போராளிகள் ரத்தத்தால்
கஞ்சிபோட்டு சலவை செய்த
காங்கிரஸ் பொய்கள் …
இன்னும் ‘ அரசை ’ நம்ப வைத்து
கழுத்தறுக்கும் பல வண்ண காந்திகள் …
இத்தனைக்கும் மத்தியில் ,
ஈழத்திற்காக
உறுதியுடன் போராடும் மாணவர்களிடம்
பகத்சிங்கின் பிடிவாதம்
இலக்கு தேடி நீள்கிறது ….
பகத்சிங் நினைவுகள்
பழசாவதில்லை …..
புரட்சியின் சுவையறிந்தவரிடம்
புதிய உணர்ச்சிகளாய்
பிறக்கின்றன களத்தில் .

அன்னிய மூலதனத்தால்,
பிளக்கப்படும்
நம் மலைகளின் முகத்தைப் பார்த்து
கதறி அழும்
மலை வேம்பின் இலை நாவில்
துடிக்கிறது பகத்சிங் உணர்ச்சி !

வறண்டு போன
விவசாயிகளின் கால் வெடிப்பிற்கும்
விளைநிலத்தின் மேல் வெடிப்பிற்கும்
வேறுபாடு காணவியலாமல்
அரண்டு போன வயல் நண்டுகளின்
இறுதிப் பய மூச்சில்
இருக்கிறது பகத்சிங்கின் கேள்விகள் ..

தாலாட்டுப் பாடினாலும்
தறியோசைக் கேட்காமல்
தூங்கமறுத்து
காலுதைக்கும் பிள்ளையின்
பிடிவாதத்தில்
பகத்சிங் பிறக்கிறான் மீண்டும், மீண்டும் !
பகத்சிங்கின் தோழர்கள் முடிந்தவரில்லை …
வேறு யார் ?
வேடிக்கைப் பார்க்காமல்
களத்தில் இறங்கும்
நீங்கள் தான் !

துரை.சண்முகம்