privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காகுவான்டனாமோ கைதிகள் போராட்டம்!

குவான்டனாமோ கைதிகள் போராட்டம்!

-

மெரிக்காவின் கொடும் சிறைச்சாலையான குவான்டனாமோவில் கடந்த 53 நாட்களாக நூற்றுக்கும் அதிகமான கைதிகள் உண்ணாவிரதப் போரட்டத்தை மேற்கொண்டுள்ளனர். சந்தேகத்தின் பெயரில் கைது செய்ய்பட்ட அப்பாவி முஸ்லீம்கள், குவான்டனாமோ சிறைச்சாலையில் இருந்து வெளியேற மரணம் ஒன்று தான் ஒரே வழி என்று நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

லண்டன் ஆர்ப்பாட்டம்
லண்டன் ஆர்ப்பாட்டம்

2001 இரட்டை கோபுர தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க ஆரம்பித்த ‘பயங்கரவாதிகளுக்கு’ எதிரான போரின் ஒரு பகுதியாக ஆப்கானிஸ்தான் மீதும், ஈராக் மீதும் ஆக்கிரமிப்பு போர் தொடுத்தது. ‘பயங்கரவாதி’களுக்கு உதவும், ‘பயங்கரவாத’ பயிற்சி பெறும், அல்லது கைது செய்யப்படும் ‘பயங்கரவாதிகள்’ என பலரை விசாரிக்க கியூபா கடற்கரை எல்லையோரம் அமெரிக்காவிற்கு சொந்தமான குவான்டனாமோ எனும் இடத்தில் ரகசிய சிறைச்சாலை ஒன்றை கட்டியது புஷ் அரசாங்கம். இது அமெரிக்க சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட இடம்; சுமார் 1.6 பில்லியன் டாலர் செலவு செய்து கட்டப்பட்டது; சிஐஏ மற்றும் ராணுவத்தின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் சித்திரவதைக் கூடம்.

சந்தேகத்தின் பெயரில்- இசுலாமிய பெயர் வைத்திருப்பதால் கூட- ஏன் எதற்கு என்று கேள்விகளுக்கு பதில் கூட தராமல் பல அப்பாவிகளை விசாரணை என்ற பெயரில் அழைத்து வந்து சித்திரவதை செய்ய தொடங்கினார்கள் அமெரிக்க ராணுவத்தினர். இங்குள்ள பலருக்கும் தீவிரவாத குழுக்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது ஊடகங்களில், பெயர்கள் குறிப்பிட்டே ஆதாரங்களுடன் நிறுவப்பட்டுள்ளது. ஆனால் அமெரிக்க ராணுவத்தினர் முடிவு செய்துவிட்டால் அப்பாவியும் தீவிரவாதிதான்.

2004ல் குவான்டனாமோ சிறைச்சாலையில் நடக்கும் அநீதிகளை பல பத்திரிகைகள் ஆதரங்களுடன் வெளிச்சம் போட்டு காட்டின. சிறைச்சாலையில் உள்ள கைதிகளை நிர்வாணப்படுத்தி துன்புறுத்துவதும், மனிதத் தன்மையற்ற விதமாக அவர்களை அவமானப்படுத்துவதும், பாலியல் பலாத்காரம் செய்வதும், மிக மோசமான உணவு கொடுப்பதும் இயல்பாக நடப்பதை சுட்டிக் காட்டின. அதனால் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

அமெரிக்க சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு இயங்குவதாக சொல்லப்படும் இந்த சிறைக்கூடத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு அடிப்படை உரிமைகள் கூட வழங்கப்படுவதில்லை. விசாரணைக்கு அழைத்து வரப்படுபவர்கள் வழக்கறிஞரை சந்திக்கும் உரிமை தரப்படுவதில்லை. (பல போராட்டங்களுக்கு பிறகு குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் வழக்கறிஞர்களை சந்திக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது). இந்த சிறைச்சாலைக்கு வெளி நாட்டு குடிமக்கள் கைதிகளாக கொண்டு வரப்படுகிறார்கள். பாதிக்கும் மேற்பட்ட கைதிகள் ஏமன் நாட்டை சேர்ந்தவர்கள், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், சூடான், சவுதி அரேபியாவை சேர்ந்தவர்களும் உண்டு. ஆனால் வெளிநாட்டு கைதிகளை சிறையில் அடைக்கும் போது பின்பற்ற வேண்டிய ஜெனீவா மனித உரிமை பரிந்துரைகளும் பின்பற்றப்படுவதில்லை. இதே அமெரிக்காதான் இலங்கைக்கு ‘எதிராக’ ‘மனித உரிமை மீறல்கள்’ குறித்து  ஜெனிவாவில் தீர்மானம் கொண்டுவந்தது குறிப்பிடத்தக்கது.

குவான்டனாமோ கைதி
குவான்டனாமோ கைதி

ஜார்ஜ் புஷ் போய் ஒபாமா வந்துவுடன், இந்த சிறைக் கூடம் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டது. ‘ஒபாமா இசுலாமியர்கள் மீது மதிப்பு கொண்டவர், தங்களை விடுவித்து விடுவார்’ என அப்பாவியாக நம்பியிருந்தவர்களின் எதிர்பார்ப்பு மங்கத் தொடங்கியது. கடந்த வாரம் இந்த சிறைச்சாலையின் விரிவாக்கப் பணிகளுக்காக சுமார் 1 பில்லியன் டாலர் ஒதுக்கப்ட்டுள்ளது. சிறை மூடப்படும் என்ற நம்பிக்கை இத்துடன் துடைத்தெறியப்பட்டுள்ளது.

கைதிகளை வசைபாடுவது, அவர்களை மிரட்டுவது, அவர்களது பொருட்களை அழுக்காக்குவது, சேதப்படுத்துவது, மத நம்பிக்கைகளை இழிவுபடுத்துவது, குரான் புத்தங்களை கிழிப்பது, இசுலாமியர்களை பயங்கரவாதிகள் என பட்டம் சூட்டுவது என்று அமெரிக்க இராணுவ, உளவுத் துறை அதிகாரிகளின் அட்டூழியங்கள் தொடர்கின்றன.

கடந்த சில நாட்களாகவே அவர்கள் மேலும் மேலும் பரிசோதிக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டனர். வழக்கறிஞர்கள் சந்திப்புகள் ஆரம்பத்தில் அனுமதிக்கப்பட்டு, மெல்ல அவை தாமதப்படுத்தப்படுகின்றன. கடிதப் போக்குவரத்து மிக மோசமான நிலையில் உள்ளது.

இத்தனை கொடுமைகளையும் பொறுத்து வந்த சிறைச்சாலையில் இருக்கும் அப்பாவிகள் பிப்ரவரி 6 அன்று உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினார்கள். முதலில் 2 பேர் என்று தொடங்கிய உண்ணா விரதம் மெல்ல பரவி 10, 20 என உயர்ந்து இன்று நூற்றுக்கும் அதிகமான கைதிகள் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். ‘எந்தவித குற்றமும் செய்யாமல் இங்கு வந்து சிக்கிவிட்டோம், இனி சட்டப்படி வெளியேறும் நம்பிக்கைகள் எங்களுக்கு இல்லை, இறந்து தான் இங்கிருந்து வெளியேற முடியும்’ என உண்ணாவிரதத்தை தொடர்கிறார்கள்.

இதைப் பற்றி அமெரிக்க வெள்ளை மாளிகை மூச்சுவிடவில்லை. முதலில் ‘இங்கு எந்தவித உண்ணாவிரத போராட்டமும் நடக்கவில்லை’ என்று மறுத்துவந்த குவான்டனாமோ சிறை நிர்வாகம் இத்தனை நாட்கள் கழித்து, உலகின் பல பத்திரிகை செய்திகளின் நிர்ப்பந்தத்தை தொடர்ந்து சில கைதிகள் மாத்திரம் உண்ணாவிரதம் செய்கிறார்கள் என தெரிவித்துள்ளது.

எத்தனையோ முறை முறையிட்டும் ஒரு தீர்வும் கிடைக்கவில்லை. உண்ணாவிரதமாவது உலக மக்களின் கவனத்தை தங்கள் பக்கம் திருப்பும் என்ற நம்பிக்கையுடன் சிறைக்கைதிகள் போராடுகிறார்கள். ஏமனிலும், சவுதி அரேபியாவிலும், உலகெங்கிலும் உள்ள மனித உரிமை ஆர்வலர்களால் இந்த பிரச்சனை விவாதத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

அடாவடியான அமெரிக்க ரவுடிக்கு உலகின் உழைக்கும் மக்கள்தான்  பாடம் புகட்ட வேண்டும். அழுகிக் கிடக்கும் அமெரிக்க மனித உரிமையும், அதன் அதிகார பாசிசமும் நம் முன் அம்பலப்பட்டு நிற்கிறது, அமெரிக்க மக்களும், உலக மக்களும் இதை பலமாக எதிர்ப்பதற்கேற்ப அந்த அப்பாவிகளை நாம் காப்பாற்ற முடியும்.

மேலும் படிக்க
Guantanamo bay hunger strike
Guantanamo bay detention camp