privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்நீதிமன்றம்சட்ட மாணவர்களுக்கான பயிலரங்கம்!

சட்ட மாணவர்களுக்கான பயிலரங்கம்!

-

னித உரிமை பாதுகாப்பு மையம் – மதுரை மாவட்டக் கிளையின் சார்பாக சட்ட மாணவர்களுக்கான பயிலரங்கம் 16.3.13 சனிக்கிழமையன்று காலை மதுரை காந்தி அருங்காட்சியகம், காந்திய சிந்தனை, கல்வி மற்றும் ஆய்வரங்கத்தில் நடைபெற்றது. கிளைச் செயலாளர் திரு.ம.லயனல் அந்தோணிராஜ் தலைமையில் நடைபெற்ற பயிலரங்கம் சுமார் 3 மணி நேரம் நடைபெற்றது,

“வழக்கறிஞர் தொழில் சமூகப் பொறுப்புள்ள தொழில், சட்டத்தின் பெயரால் இன்றைக்கு மக்களுக்கு எதிரான பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன. கல்வி அறிவு குறைந்த நமது நாட்டு மக்களுக்கு சட்டம் பற்றிய விழிப்புணர்வு இல்லை. சட்டம் பயின்றவர்கள் அதனைச் செய்ய வேண்டும். மாணவர் சமுதாயம் என்றும் இளமையோடு சமூகத்தின் மையப்பகுதியில் நிலைத்திருப்பது. அதுவே சமூகத்தின் வளர்ச்சியிலும் எதிர்காலத்திலும் முக்கியபங்கு வகிப்பது, அதிலும் குறிப்பாக சட்டம் பயிலும் மாணவர்கள் தனிச் சிறப்பு பெறுகின்றனர். தமிழ்நாட்டில் பல்வேறு போராட்டங் களின் முன்னோடியாக வழக்கறிஞர்கள் திகழுகின்றனர். அவர்களுடன் சட்ட மாணவர் களும் இணைந்து போராடுகின்றனர். அது பாராட்டுதற்குரியது. ஆனாலும் இன்றைக்கு கல்லூரி மாணவர்கள். ஓட்டுச் சீட்டு அரசியல், சாதி, மதம் ஆகியவற்றால் பிளவுபடுத்தப்பட்டுள்ளனர். அந்தத் தளைகளிலிருந்து மாணவர்கள் தங்களை விடுவித்துக் கொண்டு சமூகமாற்றத்துக்கான புரட்சிகர இயக்கங்களில் இணைத்துக் கொண்டு தங்களது எதிர்காலத்தை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். அந்த நோக்கத்தில் தான் இந்தப் பயிற்சிப் பட்டறையை மனித உரிமை பாதுகாப்பு மையம்-மதுரைக்கிளை ஏற்பாடு செய்துள்ளது.

இதுபோல் அனைத்து மாவட்டங்களிலும் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் திட்டம் உள்ளது. மாணவர்கள் தொடர்ந்து பங்கேற்று பயன் பெற வேண்டும்”

என்று தலைமையுரையில் கேட்டுக் கொண்டார்.

உயர்நீதிமன்ற வழக்கறிஞர் தொழில் என்ற தலைப்பில் அடுத்து பேசிய உயர்நீதி மன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் திருநாவுக்கரசு,

தான் மாணவப் பருவத்தில் ஒரு சராசரி மாணவனாக இருந்ததையும், சட்டக் கல்லூரியில் கூட முழு நேரக் கல்லூ ரியில் படிக்க முடியாமல் பகுதி நேரக் கல்லூரியில் படித்ததையும் ஆனால் கடுமை யான உழைப்பு, விடா முயற்சி, பயிற்சி ஆகியவற்றின் மூலமாக இன்றைக்கு குறிப் பிடத் தகுந்த வளர்ச்சியை அடைந்திருப்பதையும் விளக்கிப் பேசினார்.

நீங்கள் தேர்ந்தெடுக்கும் மூத்த வழக்கறிஞர் கற்றுத் தரும் நோக்கமுடையவராக இருக்க வேண்டும், அவர் கற்றுத் தருவதை கவனமுடன் பயில வேண்டும். வழக்கு விவரங்களை எழுதிப் பார்க்க வேண்டும். மூத்த வழக்கறிஞர் சொல்லுகின்ற வேலையைச் செய்ய எப்போதும் தயாராக இருக்க வேண்டும். பயிற்சிதான் இதில் முக்கியமானது. வழக்கறிஞர் தொழிலில் எத்தனையோ துறைகள் உள்ளன. சிவில், கிரிமினல், வருமானவரி, விற்பனை வரி, அரசியல் சட்டம், குடும்ப விவகாரங்கள், அரசு வழக்கறிஞர், தொழில் தாவா, கம்பெனி சட்டங்கள், நீதிபதி போன்று பல துறைகள் உள்ளன. எல்லாவற்றிலும் நாம் நிபுணராக இருக்க முடியாது. நமக்குப் பொருத்தமான துறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். எந்தத் துறையைத் தேர்ந்தெடுத்தாலும் அதில் நேர்மையையையும், ஒழுங்கையும் கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் கீழமை நீதிமன்றங்களிலும், உயர்நீதிமன்றங்களிலும் எந்தெந்த வகைகளில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட வேண்டும் அதற்கான சட்டப் பிரிவுகள், நடைமுறைகள் பற்றி விளக்கினார்.

மாணவர்கள் குறிப்புகள் எடுத்துக் கொண்டதோடு கேள்விகளும் கேட்டு விளக்கம் பெற்றுக் கொண்டனர்.

மக்களின் அன்றாடப் பிரச்சனைகளை சட்டத்தின் மூலம் எதிர் கொள்ளுதல் என்ற தலைப்பில் ம.உ.பா மைய துணைச் செயலர், வழக்கறிஞர் வாஞ்சிநாதன் பேசினார்.

சட்டத்தைப் பற்றிப் பேச வரவில்லை. நடைமுறையைப் பற்றி சொல்ல வந்திருக் கிறேன் என்று தொடங்கினார். காவல்நிலையத்தில் ஒரு புகாரை எப்படிப் பதிவு செய்ய வேண்டும் என்பதிலிருந்து தொடங்கி நீதிமன்றங்களில் அதற்குத் தீர்வு பெறுகிறவரை என்னென்ன நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதை ஒவ்வொரு கட்டமாக ஒரு ஆசிரியரைப் போல விளக்கினார். அறிவு எனப்படுவது ஒரு நடைமுறையைப் பற்றிய அறிவுடன் தான் முழுமை பெறுகிறது. தவறான நடைமுறையினால் நாம் எதிர்பார்க்கிற விளைவு கிட்டுவதில்லை என்பதை சிறப்பாக எடுத்துரைத்தார். பிணை, முன் பிணை, குடும்ப நல வழக்குகள், ஒருவர் கைது செய்யப்படும் போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் டி.கே.பாசு VS மேற்குவங்க அரசு வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகள் ஆகியவை பற்றி விளக்கினார்.

அடுத்து, சமூகப் பொறுப்புள்ள வழக்கறிஞர் தொழிலில் சட்ட மாணவர்கள் பயில வேண்டிய அரசியல், குற்றவியல் சட்ட அடிப்படைகள் என்பது பற்றி உயர்நீதிமன்ற முன்னணி வழக்கறிஞர் திரு.தி.லஜபதிராய் பேசினார்.

தமிழ்நாட்டிலுள்ள சட்டக் கல்லூரியில் சேரும் மாணவர்கள் பெரும்பாலும் கிராமப்புறப் பின்னணியைச் சார்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால் தேசிய சட்டக் கல்லூரி, சட்டப் பல்கலைக் கழகங்களில் பயிலும் மாணவர்கள் பெரும்பாலும் நடைமுறை சாராத சட்டப் புழுக்களாகவே இருக்கிறார்கள். அவர்கள் எல்லாவற்றையும் சட்டப்படியே பார்க்கிறார்கள். சட்டத்துக்குப் புறம்பாக எதையும் செய்ய முடியாது என்றே சொல்கிறார்கள். அவர்களுக்கு மக்களிடம் தொடர்பே இல்லை.

மதுரை அருகே உள்ள தெற்குத் தெரு என்ற ஊரில் கோவில் திருவிழாவில் நடைபெறும் தீமிதியில் பட்டியல் சாதியினர் கலந்து கொள்ளக் கூடாது என்று வழக்கம் இருக்கிறது. ஆனால் சட்டப்படி அது தவறு. ஆனால் வழக்கம், வழக்காறு என்ற அடிப் படையில் தொன்று தொட்டு இருந்து வருவதை மாற்ற முடியாது என்று கூறுகின்றனர். ஆனால் அரசியல் சட்டம் உறுப்பு 13 மிக மிக முக்கியமானது. அது நமக்கு எல்லா உரிமைகளையும் வழங்குகிறது. அரசியல் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளதற்கு எதிராக இருக்கிற எந்தச் சட்டமும் செல்லாது. எந்த நடைமுறையும் செல்லாது. ஆனால் கோவில் நடைமுறைகளில் ஆகம விதிகளைக் காரணம் காட்டி அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகின்றன. ஆகமங்கள் சொல்லுகின்ற எத்தனையோ விதிகள் கடைபிடிக்கப் படுவதில்லை. ஆனால் தங்களுக்குச் சாதகமானதை மட்டும் எடுத்துக் கொண்டு நீதி மன்றத்தில் தடையுத்தரவு பெறுகின்றனர். அதற்கு நீதிமன்றங்களும் ஒத்துழைக்கின்றன. ஆனால் அரசியல் சட்டத்திற்கு முரணான எத்தனையோ நடைமுறைகளை போராட்டத் தின் மூலம் மக்கள் மாற்றியிருக்கின்றனர். குறிப்பாக ஆலய நுழைவு, தோள் சீலை போராட்டம், கல்வி உரிமை போன்றவை.

1978ம் ஆண்டு வரை சட்டம் என்று ஒன்று இருந்து அது எதைச் சொல்கிறதோ அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இருந்தது. 1978க்குப் பிறகு இந்திரா காந்தி-மோனா காந்தி கடவுச் சீட்டு (Passport) வழக்குக்குப் பிறகு ஒரு சட்டம் என்பது அரசியல் சட்டத்திற்கு முரணாக இருக்கிறதா என்று பார்க்கப்பட்டது. ஒரு சட்டம் இயற் றப்பட்டால் அந்தச் சட்டம் சரியா? செல்லுமா என்று பார்க்கும் போது பெரும்பாலும் மக்கள் விரோத சட்டங்கள் அனைத்தும் செல்லும் என்றே நீதிமன்றங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக மிசா, தடா, பொடா, தேசிய பாதுகாப்புச் சட்டம், சிறப்பு ஆயுதப்படைச் சட்டம், குண்டர் சட்டம் இவை போன்றவை. ஒருவரிடம் காவல்துறை பெறும் ஒப்புதல் வாக்கு மூலம் செல்லாது என்பது சட்டம். ஆனால் நடைமுறையில் அதை வைத்தே தண்டனை வழங்கப்படுகிறது (அப்சல்குரு தூக்கு.)

அரசியல் சட்டம் 14, 19 மிகவும் முக்கியமானவை. அது நமது கருத்துச்சுதந்திரத்தை வழங்குகிறது. தொழில், வர்த்தகம், பணி தொடர்பான சட்டத்தின் கீழ் Magic Remedy என்று சொல்லப்படுகின்ற ஆண்மையைப் பெருக்குகிற, முடி வளர்க்கிற விளம்பரங்கள் சட்ட விரோதமானவை. ஆனால் அவற்றையெல்லாம் துக்ளக், தினமணி, தினமலர், தினத்தந்தி போன்ற பத்திரிக்கைகள் வெளியிடுகின்றன. ‘பேண்டிட் குயின்’ என்ற திரைப்படத்தில் பூலான் தேவி நிர்வாணமாக்கப்படுகிற காட்சி வருகிறது. அதை தணிக்கை குழு அனுமதிக்கவில்லை. உச்சநீதிமன்றம் போய் தீர்வு தேட வேண்டி வந் தது. ஆனால் கோவில் விழாக்களில் ஆபாச வக்கிரம் நிறைந்த குத்தாட்டங்கள் அனும திக்கப்படுகின்றன. கூடங்குளத்தில் அணு உலைக்கு எதிராக மக்கள் போராடுகிறார்கள். அங்கே 144 தடை உத்தரவு பல மாதங்களாக அமலில் உள்ளது. 2 மாதங்களுக்கு மேல் 144 தடை உத்தரவை மாவட்ட ஆட்சியர் அமல்படுத்த முடியாது. அரசுதான் ஆணை பிறப்பிக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யப்படவில்லை. தடையுத்தரவு சரி என்று நீதிபதி சந்துரு தீர்ப்பு வழங்கினார். பேச்சுரிமை, எழுத்துரிமை, வாழ்வுரிமை மறுக்கப்பட் டால் அது பாசிச அரசு – அதை ஏற்றுக் கொண்டால் அது பாசிச நீதிமன்றம்.

குற்றவியல் வழக்கிலே, பாதிக்கப்பட்டவருக்கு உள்ள உரிமைகள் குற்றம் சாட்டப் பட்டவருக்கும் இருக்கிறது என்பது முக்கியமானது. ஒரு வழக்கில் வெற்றி பெறுவ தோடு, இழப்பீடு பெற்றுத் தருவதும் முக்கியமானது. அதுபோல குற்றத்தைத் தொடர்ந்து தடயங்களையும் ஆதாரங்களையும் கண்டுபிடிப்பது முக்கியமானது. திருட்டு வழக்கில் திருடப்பட்ட பொருள், கொலை, தாக்குதல் வழக்கில் ஆயுதங்கள் முக்கியமானவை.

இது போன்ற மேலும் பல எடுத்துக்காட்டுகளுடன் லஜபதிராய் விளக்கினார். வழக்கறிஞர் வெங்கடேசன் நன்றி கூறினார்.

மாணவர்களுக்கு குறிப்பேடுகளும். பேனாவும் வழங்கப்பட்டது. அனைத்து மாண வர்களும் குறிப்பெடுத்துக் கொண்டதுடன் தங்களது சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்டும் தெளிவு பெற்றுக் கொண்டனர். 40 மாணவர்களில் 8 பேர் பெண்கள். பயிலரங்கத்தின் இறுதியில் அமைப்புக்குழு உருவாக்கப்பட்டது. 8 பேர் கொண்ட குழுவில் 2 பேர் பெண்கள். இது போன்ற பயிற்சிப் பட்டறைகள் தொடர்ந்து நடத்தவும் மேலும் பல மாணவர்களைத் தொடர்பு படுத்தவும் ம.உ.பா மையத்துடன் பரஸ்பரம் ஒத்துழைக்கவும் குழு பணியாற்றும் என்று மாணவர்கள் தெரிவித்தனர். ம.உ.பா மைய வழக்குரைஞர்கள், நடராஜன், ராஜசேகர், மன்மதன் மற்றும் செயற்குழு உறுப்பினர் எம்.டி.ராஜசேகர் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்புடன் செய்திருந்தனர். ம.உ.பா மையவெளியீடுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.

தகவல்: ம.உ.பா.மையம்-மதுரைக்கிளை