privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்இராணுவம்காசி ஆனந்தன்: இந்தியக் கொலையாளிக்கு இன்னுமொரு கூட்டாளி!

காசி ஆனந்தன்: இந்தியக் கொலையாளிக்கு இன்னுமொரு கூட்டாளி!

-

காஷ்மீரில் இன ஒடுக்குமுறை இல்லையாம்! காசி ஆனந்தனின் புதிய கவிதை!

ந்திய அரசை ஈழ விடுதலையின் நட்பு சக்தியாக சித்தரித்தவர்களின் மோசடிகள் பித்தலாட்டங்கள் எல்லாம் அம்பலமாகிவிட்டன. “ஈழவிடுதலைக்கு இந்தியா பகை சக்தி” என்ற உண்மையை போராடும் மாணவர்களும் இன்று புரிந்து கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள். இந்திய அரசை தாஜா செய்து ஈழத்துக்கு ஆதரவாக மாற்றி விட முடியும் என்று புலி ஆதரவாளர்களும் புலிகளும் கண்ட கனவை, கந்தக வெறியுடன் பொசுக்கியிருக்கிறது இந்திய அரசு.

காசி ஆனந்தன்இந்த சூழலில் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் “அக்னிப் பரீட்சை” என்ற நேர்காணல் நிகழ்ச்சியில், ஈழத்து “உணர்ச்சிக் கவிஞர்” காசி ஆனந்தன் பேசியிருக்கும் பேச்சு, அவரது அடிமை உணர்ச்சியை அடையாளம் காட்டியது. “நேற்றும் இன்றும் நாளையும் இந்தியாதான் எங்கள் அண்டைநாடு, ஈழமக்களின் உரிமைகளுக்கு இந்தியாதான் உதவ வேண்டும், இந்தியாவை விட்டு வேற எந்த நாட்டிடம் நாங்கள் ஆதரவு கேட்போம்?” என்று பச்சைப் படுகொலைப் பகைவனை மூடிமறைக்கும் காசி ஆனந்தனின் கொச்சை அரசியலை கேட்க சகிக்கவில்லை!

“இவன்தான் எம் இனத்தைக் கொன்றவன்” எனும் உண்மையைக் கூட உரைக்க வக்கில்லாத இந்தப் சூரப்புலி, கடந்த காலத்தில் ஜனநாயக சக்திகள் பலரை புலிகள் கொன்றது நியாயம் என்றும், கொல்லப்ப பட்டவர்கள் அனைவருமே “இரண்டகர்கள்” (துரோகிகள்) என்றும் தீர்ப்பளிக்கிறார்.

இந்திய மேலாதிக்கத்துக்கு பத்மநாபா கூஜா தூக்கினால் அது இரண்டகம். அதற்கு புலிகள் விதிக்கும் தண்டனை மரணம். அதே கூஜாவை புலிக்கவிஞர் தூக்கினால் அது புரட்சி, எழுச்சி, உணர்ச்சி, கிளர்ச்சி… ! எத்தனை “சி” வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம். இது கண்டு “ச்சீ” என யாரேனும் உமிழ்ந்தால் உமிழ்பவன் இனத்துரோகி!

மன்னர்களின் புளித்த ஏப்பத்தையெல்லாம், புலியின் சீற்றம் என்று புகழ்ந்தெழுதி பரிசில் பெற்ற புலவர் மரபில் வந்தவரல்லவா காசி ஆனந்தன்! திருப்பதிக்கே லட்டு விற்கிறார். ஐ.நா மன்றத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரித்தால், நாளை காஷ்மீர் பிரச்சினையில் அது தமக்கு எதிராகத் திரும்பிவிடுமோ என்று இந்தியா அஞ்சத் தேவையில்லையாம்.

“இந்திய இராணுவம் காஷ்மீர் மக்கள் மீது குண்டு போட்டதில்லை, காஷ்மீர் பெண்களை வல்லுறவுக்கு ஆளாக்கியதில்லை.” என்று காசி ஆனந்தனின் வாயிலிருந்து வெடித்தன இந்தியக் குண்டுகள். பேட்டி எடுத்த ஜென்ராமால் அடுத்த கேள்வியைக் கூட கேட்க முடியவில்லை. இதே கேள்வியை ப.சிதம்பரத்திடம் கேட்டிருந்தால் கூட இவ்வளவு நெஞ்சுரத்துடன் புளுகியிருக்க மாட்டார். கவிஞரல்லவா, கவிதைக்கு பொய்தானே அழகு!

காஷ்மீர் மக்களிடம் சுயநிர்ணய உரிமைக்கான வாக்கெடுப்பு நடத்துவதாக சொல்லி, 1947 முதல் ஏமாற்றி வருகிறது இந்திய அரசு. 1990 முதல் இந்தக் கணம் வரை சுமார் 24 ஆண்டுகளாக அங்கே இராணுவம் நிற்கிறது. இன்று அங்கு நிற்கும் இராணுவ, துணை இராணுவப் படையினரின் எண்ணிக்கை 7 இலட்சம் பேர்.

68,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 10,000 பேரைக் காணவில்லை. ஒரு இலட்சம் பேர் சித்திரவதையால் ஊனமாகியிருக்கிறார்கள். வல்லுறவுக்கு அளவே இல்லை. இப்போது கூட, “வல்லுறவு குற்றமிழைக்கும் இராணுவத்தினரை எல்லா கிரிமினல்களையும் போல விசாரிக்க வேண்டும்.. இந்த குற்றத்துக்கு ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தின் பாதுகாப்பை வழங்கக் கூடாது” என்று வர்மா கமிசன் கூறியதை இராணுவம் நிராகரித்து விட்டது. இதுதான் உண்மை நிலை.

மணிப்பூர் பெண்கள்
இராணுவ அதிகாரியை எதிர் கொள்ளும் மணிப்பூர் பெண்கள்

வடகிழக்கிந்திய மாநிலங்களில் இந்திய இராணுவம் என்ன செய்கிறது என்பதற்கு மணிப்பூர் தாய்மார்கள் நடத்திய நிர்வாணப் போராட்டம் ஒரு சான்று. ஐரோம் சர்மிளாவின் உண்ணாநிலைப் போராட்டம் இன்னொரு சான்று.

இந்திய இராணுவம் ஈழத்தில் இரண்டு ஆண்டுகள் இருந்தபோது, ஈழத்தமிழர்களை கொன்றிருக்கிறது. வல்லுறவு செய்திருக்கிறது. அதையெல்லாம் கேட்டால் விளக்கமாக சொல்லுவார் கவிஞர். இருப்பினும் அப்பேர்ப்பட்ட இந்திய இராணுவம், கடந்த 24 ஆண்டுகளாக காஷ்மீரில் ஒரு ஈ எறும்பைக் கூட மிதிக்காமல், வாயில் வெள்ளைத் துணியும், கையில் மயிற்பீலியுமாக வலம் வருகிறது என்று நம்மை நம்பச் சொல்கிறார் கவிஞர்.

புதிய தலைமுறை பேட்டியில் மட்டுமின்றி, சென்னையில் நடந்த கவிஞர் தீபச்செல்வனின் நூல் வெளியீட்டு நிகழ்ச்சியிலும் இதையே பேசினார் காசியானந்தன். அவருடன் அளவளாவிக் கொண்டிருந்த புலி ஆதரவு அறிஞர் பெருமக்கள் யாரும் இதற்காக அவரை விமரிசிக்கவில்லை. இன உணர்வு காரணமாக கவிஞரின் பொய் அவர்களைச் சுடவில்லை போலும்.

“காஷ்மீர் பற்றி நீங்கள் பேசியது ஆபாசமாக இருந்தது” என்று காசி ஆனந்தனிடம் அங்கேயே விமரிசித்தார் ஒரு ம.க.இ.க தோழர். “உங்களுக்கு வரலாறு தெரியாது” என்று கூறியபடியே வெளியேறினார் கவிஞர்.

இது மட்டுமல்ல, புதிய தலைமுறை பேட்டியில், சிங்கள மக்கள் மத்தியிலான ஜனநாயக சக்திகளையும் இராஜபக்சே அரசு கொல்வது பற்றி ஜென்ராம் கேட்டபோது, “தமிழனுக்கு குரல் கொடுத்த காரணத்தினால்தான் அவர்கள் கொல்லப்பட்டார்கள்” என்றார் கவிஞர். ஜேவிபி கிளர்ச்சியின்போதும் பல்லாயிரக்கணக்கில் சிங்கள இளைஞர்களே கொல்லப்பட்டார்களே என்று அவர் கேட்டார். “அது அவர்களுக்குள் கட்சித்தகராறு” என்று அலட்சியமாக பதிலளித்தார். அப்போது கூட சிங்களப் பேரினவாத பாசிஸ்டுகளிடமிருந்து ஜனநாயகத்துக்குப் போராடும் மக்களையும் பிரித்துப் பார்க்க வேண்டுமென்று கவிஞருக்கு கடுகளவும் உரைக்கவில்லை. அவ்வளவு சூப்பர் ஸ்டிராங் இன உணர்வு!

ராஜபக்சே அரசின் ஒடுக்குமுறையை எதிர்ப்பவனாக இருந்தாலும், சிங்களனை நம்ப முடியாதாம்! முள்ளிவாய்க்காலுக்கு மூல காரணமான இந்திய அரசை இன்னமும் இவர் நம்புவாராம். காசி ஆனந்தனின் இந்த அணுகுமுறை அவருடைய தனிப்பட்ட குணாதிசயமல்ல. தம்மை ஜனநாயகவாதிகளாக காட்டிக் கொள்ளும் புலி ஆதரவாளர்கள் பலரிடமும் நிலவும் பண்பு இதுதான். உணர்ச்சிக் கவிஞர் என்பதால் உணர்ச்சியை மறைக்க இயலாமல் கொட்டி விட்டார் அவ்வளவுதான்.

1980 களின் துவக்கம் முதலே புலிகளும் பிற இயக்கங்களும் இந்தியாவின் விடுதலை இயக்கங்களையோ ஜனநாயக சக்திகளையோ தம் நண்பர்களாக கருதவில்லை. இந்திய அரசையும், ஓட்டுக்கட்சிகளையும் நம்பிக் கெட்டார்கள். நம்பிக்கெடுவது அவர்களின் “ஜனநாயக” உரிமை. அதற்கு நாம் எதுவும் செய்ய இயலாது.

ஆனால் காஷ்மீரிலும் வட கிழக்கிந்திய மாநிலங்களிலும் இன ஒடுக்குமுறை இல்லை என்று நம்பச் சொல்கிறாரே, அது ஜனநாயக உரிமையாகாது. அது இந்திய மக்களுக்கு இழைக்கும் இரண்டகம். கவிஞரைக் கேட்டால் அதுதான் இன உணர்வு என்று சொல்லக்கூடும்.