privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கஈழம்: மாணவர் எழுச்சியில் ஒளிந்துகொள்ளும் துரோகிகள், பிழைப்புவாதிகள்!

ஈழம்: மாணவர் எழுச்சியில் ஒளிந்துகொள்ளும் துரோகிகள், பிழைப்புவாதிகள்!

-

“ஈழத் தமிழருக்கெதிராக இனப் படுகொலை நடத்திய ராஜபக்சே கும்பலின் போர்க் குற்றங்கள் மீதான சர்வதேச விசாரணை, தண்டனை வேண்டும்; பொது வாக்கெடுப்பு வேண்டும்;” இவ்விரண்டு சரியான, அவசியமான கோரிக்கைகளை முன்வைத்துத் தமிழக மாணவர்கள் நடத்தி வரும் போராட்டங்கள், 1983 ஜூலைக்குப் பிறகு நாம் கண்டதொரு தமிழகம் தழுவிய எழுச்சியை நினைவுபடுத்துகின்றன.

1983 ஜூலையில் தங்கதுரை, குட்டிமணி, ஜெகன்  உட்பட 53 ஈழத் தமிழர்கள் வெளிக்கடை சிறையில் வைத்துச் சிங்களக் காடையர்களால் கொடூரமாகக் கொல்லப்பட்டனர்; அதைத் தொடர்ந்து சிங்கள இனவெறி இராணுவம் கட்டவிழ்த்துவிட்ட வெறியாட்டத்தில் பலநூறு ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். தமிழ்ப் பெண்கள் பலர் சிங்களக் காடையர்களின் வல்லுறவுக்குப் பலியாகினர். பல்லாயிரக்கணக்கான அகதிகள் தமிழகத்தில் வந்து குவிந்தனர். ஆத்திரமும் கோபமும் அடைந்த தமிழக மக்கள், தன்னெழுச்சியாக, இப்போது நடப்பதைவிட மிகப்பெரிய அளவில் ஈழத் தமிழர் ஆதரவுப் போராட்டங்களில் குதித்தார்கள். தமிழகம் முழுவதும் பல  நகரங்கள், கிராமங்களில் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் – என அனைத்துத் தரப்பும் தெருவில் இறங்கி, பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள், முற்றுகைகள், அன்றைய சிங்கள இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே கொடும்பாவி எரிப்பு எனப் போராட்டங்கள் நடத்தினர்.  அதன் பிறகு, அவ்வாறான மிகப் பெரிய எழுச்சியைத்  தமிழகம் கண்டதில்லை.

எனினும், புலிகளின் துப்பாக்கிக் கலாச்சாரம், பிரிவினைவாதம் என்று பீதி கிளப்பிப் பார்ப்பன ஆதிக்கச் செய்தி ஊடகங்கள் நடத்திய அவதூறுப் பிரச்சாரம், குறிப்பாக, ராஜீவ் கொலைக்குப் பிறகு ஜெயலலிதா அரசு கட்டவிழ்த்துவிட்ட ஈழ எதிர்ப்புப் பிரச்சாரம், ஈழத் தமிழர் வேட்டை – இவை காரணமாக முன்பு நிலவிய ஈழ ஆதரவு எழுச்சி மங்கி, மறைந்து போனது. கடைசியில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகப் பேசுவதற்கே மக்கள் அஞ்சும் சூழல் நிலவியது. அந்த நிலையிலும் அரசு துரோக வழக்கு, “தடா” கைதுகளை எதிர் கொண்டும், புதிய ஜனநாயகப் புரட்சி அமைப்புகள் மட்டுமே ஈழ ஆதரவு இயக்கங்களை நடத்தின. அப்போது  நெடுமாறன், வைகோ, ராமதாசு, வீரமணி, மணியரசன் போன்ற புலி ஆதரவாளர்கள்கூட முடங்கிப் போனார்கள்.

அடுத்த இரண்டு பத்தாண்டுகளின்போது, விடுதலைப் புலிகளின் படை வெற்றி முகத்தில் உள்ளதென்றும், ஈழத்தின் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் கிட்டத்தட்ட புலிகளின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டனவென்றும், விரைவில் தனி ஈழம் பிரகடனப்படுத்தப் போகிறார்கள் என்றும், அதனைப் பிற நாடுகள் அங்கீகரிப்பது மட்டுமே தேவை என்றும் ஒருபுறம் புலி ஆதரவாளர்கள் பிரச்சாரம் செய்து வந்தார்கள்.  இன்னொருபுறம் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகள், அரசின் அச்சுறுத்தல்கள் அதிகரித்தன. புலிகளையும் அதன் ஆதரவாளர்களையும் ஒழித்துக் கட்டுவதென்பது ஜெயலலிதா அரசின் நடவடிக்கை என்பதைத் தாண்டி, அவரது சொந்த முறையிலான வெறி பிடித்த நடவடிக்கையாகவே இருந்தது. இருப்பினும், ஈழ விடுதலைக்கு ஆதரவான எழுச்சி எதுவும் தமிழகத்தில் நடைபெறவில்லை.

2006-இல் மகிந்த ராஜபக்சே அரசு புலிகளுக்கு எதிரான இறுதிப் போரைத் துவங்கியது. மாவிலாறில் தொடங்கி முள்ளிவாய்க்கால் வரை இரண்டரை ஆண்டு காலம் நீடித்த இந்தப் போர் அதிகரித்த அளவில் ஈழத் தமிழின அழிப்புப் போராகவே இருந்தது. 2008-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சிங்கள இனவெறி இராணுவத்தின் கிளிநொச்சி முற்றுகையும் தாக்குதலுமாகத் தீவிரமடையத் தொடங்கின. புலிகளுக்கு எதிரான போர் என்று சொல்லிக் கொண்டு, போர் விமானங்களும், பீரங்கிகளும், ஹெலிகாப்டர்களும் ஈழத் தமிழர் மீது கொத்துக்குண்டு மழை பொழிந்தன. நூற்றுக்கணக்கில் தமிழ் மக்கள் கொல்லப்பட, எஞ்சியவர்கள் வீடிழந்து உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காகக் காடுகளில் தஞ்சம் புகுந்தார்கள். உணவும் மருத்துவமும் கிடைக்காமல் சொந்த மண்ணில் அகதிகளாகவும் நாடோடிகளாகவும் அலைந்தனர்.

அப்போதும்கூட தமிழ்நாட்டில் குறிப்பிடத்தக்க அளவு ஈழ ஆதரவு எழுச்சி எதுவும் நடந்துவிடவில்லை. கிளிநொச்சியைக் கைப்பற்றி, வன்னியைத் திறந்தவெளி வதை முகாமாக சிங்கள இராணுவம் மாற்றிவிட்ட நிலையில், புலிகள் முல்லைத் தீவுக்கு விரட்டப்பட்ட நிலையில், “எப்படியாவது போரை நிறுத்துங்கள்; இங்கே நாங்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்படுகிறோம்” என்று ஈழத் தமிழர்கள்  துயரக்குரல் எழுப்பினர்.  முத்துக்குமார் தீக்குளிப்பும், வழக்குரைஞர்கள் போராட்டங்களும் தமிழகத்தில் ஈழ ஆதரவு உணர்வலைகளை ஏற்படுத்தின. இவற்றில் புதிய ஜனநாயகப் புரட்சி அமைப்புகளின் பங்கு குறிப்பிடத்தக்கதாக அமைந்தது. தமிழகமோ மக்களவைத் தேர்தல் திருவிழாக் கொண்டாட்டத்தில் மூழ்கடிக்கப்பட்டிருந்தது. ஈழப் போரோ, முல்லைத் தீவு, முள்ளிவாய்க்கால், இறுதியாக நந்திக் கடற்கரையில் வரலாறு காணாத தமிழின அழிப்புப் படுகொலையை நோக்கி நகர்ந்தது.

காங்கிரசு – கருணாநிதி தலைமையில் ராமதாசு, திருமா திரண்டு மன்மோகன் – சோனியா கும்பலுக்குக் கடிதம் – மனுப் போட்டு மன்றாடுவது, அரை நாள் உண்ணாவிரதம், மனித  சங்கிலி, மேனன் – நாராயணன், பிரணவ முகர்ஜியின் போர் நிறுத்த வாக்குறுதிகள் -இலங்கை விஜயங்கள் எனப் பித்தலாட்ட நாடகங்களை அடுத்தடுத்து அரங்கேற்றிக் கொண்டிருந்தார்கள். மறுபுறம், ஜெயலலிதா தலைமையில் பா.ஜ.க. முதல் தா.பா.வரை புலி ஆதரவாளர்கள் உட்பட ஓரணியில் திரண்டார்கள். “இந்திய இராணுவத்தை அனுப்பி தமிழீழத்தைப் பெற்றுத் தருவேன்” என்ற வாக்குறுதியோடு ஜெயலலிதா “ஈழத் தாய்” அவதாரம் எடுத்தார். “இலை மலர்ந்தால் ஈழம் மலரும்” என்று நம்பச் சொன்னார்கள், புலி ஆதரவாளர்கள்.

ஈழம் மாணவர் எழுச்சி2009 மே மாதம் இரண்டாவது வாரத்தில் ஈழத்தில் இனப் படுகொலை உச்சத்தில் நடந்தபோதுகூட,  தமிழகத்தில் அதற்கெதிரான குறிப்பிடத்தக்க பெரும் எழுச்சி எதுவும் நடந்துவிடவில்லை. “நாங்கள் தாய்த் தமிழகத்தை நம்பினோம்; அவர்களும் எங்களைக் கைவிட்டுவிட்டார்கள்”  என்று ஈழத் தமிழர்கள் மனம் உடைந்து கூறினர். இத்தகைய நிலைக்குப் பொறுப்பானவர்கள் யார்? ஈழப் போரை வழிநடத்திய விடுதலைப் புலிகள் மற்றும் அவர்களின் தலைவர் பிரபாகரன் மீது “உலகிலேயே சிறந்த அரசியல், இராணுவ வல்லுநர்; போரில் வெல்வதற்கு ஏதோ தந்திரங்கள் வைத்திருக்கிறார்; புலிகளை வெல்லவே முடியாது” என்ற மாயையை  இறுதிக் கட்டத்திலும் பேணியவர்கள் யார்? சோனியா – அத்வானி, கருணாநிதி – ஜெயலலிதா, அமெரிக்கா, சர்வதேச சமூகம் எனப்படும் அதன் எடுபிடி நாடுகள் ஆகிய மேலாதிக்க பாசிச சச்திகள், பிழைப்புவாதிகள் – துரோகிகள், ஏகாதிபத்திய வல்லரசுகள் மீது அடுத்தடுத்து நம்பிக்கை வைக்கும்படி வாதாடியவர்கள் யார்? ஈழத்தின் “தலைவிதி” முள்ளிவாய்க்கால் இறுதிப் போருக்கு சில நாட்களுக்கு முன்பு நடக்கும் இந்திய நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளைப் பொறுத்துத்தான் அமையவிருக்கிறது என்ற பிரமையை உருவாக்கியது யார்? அவர்கள்தான் அத்தகைய செயலற்ற நிலைக்குப் பொறுப்பானவர்கள்!

இந்தியா, இலங்கை அரசுக்கு நவீன ஆயுதங்களையும் விண்வெளி வேவுச் செய்திகளையும் வழங்குவது மட்டுமல்ல; நேரடியாக போர்க்களத்தில் இந்திய இராணுவ அதிகாரிகள் பங்கேற்கிறார்கள் என்பது 2008 அக்டோபரிலேயே அம்பலமானது. புலிகளின் எதிர்த்தாக்குதலில் இந்திய இராணுவ அதிகாரிகள்  போர்க்களத்தில் நிற்பதையும், அவர்களில் சிலர் காயமடைந்ததையும் இலங்கை ஏடுகளே உறுதி செய்தன. இந்தியா ஈழத்தின் எதிரி நாடாகச் செயல்படுவதையும் ராஜபக்சேவுடன் ஈழப் போரை வழிநடத்துவதையும் அறிந்திருந்தபோதும், அப்போதே கருணாநிதியின் துரோகங்களை அறிந்திருந்த போதும், புலி ஆதரவாளர்கள் இந்த உண்மைகளை முன்வைத்து மன்மோகன் – சோனியா மற்றும் கருணாநிதி அரசுக்கு எதிராக எந்தப் போராட்டங்களையும் முன்னெடுக்கவில்லை. மாறாக, மன்மோகன் – சோனியா கும்பல் மீதும் இந்தியா மீதும் நம்பிக்கையைப் பேணினார்கள்; பார்ப்பன, மலையாள அதிகாரிகளின் தூண்டுதல், தவறான ஆலோசனைகள் காரணமாகத்தான் இந்திய அரசு போர் நிறுத்தம், ஈழ ஆதரவு நிலையெடுக்க மறுக்கிறது என்றும் இலங்கையிடம் இந்திய அரசு ஏமாந்து விட்டது என்றும், சீனா, பாகிஸ்தான் சதிகளை முறியடிக்க ஈழத் தமிழர் மீது நம்பிக்கை வைத்து ஆதரவளிக்க வேண்டும் என்றும், சோனியாவின் தாய்மையுணர்ச்சிக்கும் மன்மோகனின் மனிதாபிமானத்துக்கும் மன்றாடினார்கள்.

பிழைப்புவாதிகள்
பாலச்சந்திரன் படுகொலையைக் கண்டித்து வை.கோ., நெடுமாறன் தலைமையில் சென்னை – உயர்நீதிமன்றம் அருகே நடந்த ஆர்ப்பாட்டம்; பிழைப்புவாதக் கும்பலின் பெருங்கூச்சல்.

“ஈழம் மலர்வதற்கு உத்திரவாதம் இருந்தால் நான் பதவி விலகுகிறேன்” என்ற கருணாநிதியை விட்டு விலகி,  “40 தொகுதிகளையும் உத்தரவாதப்படுத்தினால் ஈழம் தருகிறேன்” என்ற ஜெயலலிதாவின் வாக்குறுதிக்குப் பின்னால் அணி அமைத்தார்கள், புலி ஆதரவாளர்கள். “தனி ஈழம் கூடாது; ஒன்றுபட்ட இலங்கையே சரியானது; புலிகள் பயங்கரவாதிகள்” என்பதுதான் பா.ஜ.க. மற்றும் இ.க.க. கட்சிகளின் அதிகாரபூர்வ நிலை என்றபோதும், அவற்றின் தமிழ்நாட்டுத் தலைவர்களான இல.கணேசன், தா.பாண்டியனை இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் இணைத்துக் கொண்டார்கள்.

ஈழப்பிரச்சினையில் மட்டுமின்றி, வேறு பல பிரச்சினைகளிலும் இவர்களது அரசியல் சந்தர்ப்பவாதத்தையும் பிழைப்புவாதத்தையும் தம் சொந்த அனுபவத்தில் பார்த்திருக்கும் தமிழக மக்கள், ஈழத் தமிழ் மக்களின் துயரம் குறித்து தமிழக மக்களுக்கு அனுதாபம் இருப்பினும், காங்கிரசு- தி.மு.க. கூட்டணியின் மீது அதிருப்தியும் வெறுப்பும் இருப்பினும், ஈழ மக்களின் துயரத்தை ஜெ. அணியினர்  துடைத்து விடுவார்கள் என்று நம்பிவிடவில்லை.

பிழைப்புவாதிகள், பாசிஸ்டுகள் மீது நம்பிக்கை வைத்து வாக்களிக்குமாறு மக்களிடமும் பிரச்சாரம் செய்தார்கள் புலி ஆதரவாளர்கள். உள்ளூர் பிரச்சினைகள், சாதி உள்ளிட்ட  பல்வேறு காரணங்களால் ஆளும் கட்சி மீது மக்களுக்குத் தோன்றியிருக்கக் கூடிய அதிருப்தியை, ஈழ ஆதரவாக அப்படியே மடைமாற்றிவிட முடியும் என்று கணக்குப் போட்டார்கள். அந்தக் கணக்கு பொய்த்து விட்டது. காங்கிசு-தி.மு.க., கூட்டணியே நாடாளுமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்றது.

அதேசமயம், ஈவிரக்கமற்ற முறையில் நடந்துகொண்டிருந்த ஈழப்போரின் கடைசி நாட்கள் இந்திய மேலாதிக்கத்தின் கோரமுகத்தை நமக்குக் காட்டுகின்றன. மே 13 அன்று தமிழகத்தில் தேர்தல் முடிந்தபின் இறுதித் தாக்குதலை வைத்துக் கொள்ளுமாறு இலங்கை அரசுக்கு வழிகாட்டி இயக்கியது, இந்திய அரசு. புலி ஆதரவாளர்களோ, மே 16 அன்று தேர்தல் முடிவுகள் வரும்வரை ‘இறுதி முடிவு’ எதுவும் எடுக்கவேண்டாமென புலிகளுக்கு ஆலோசனை கூறினார்கள்.

தோல்வியின் விளிம்புக்குத் தள்ளப்பட்ட நிலையிலும், “துப்பாக்கிகளை மவுனிக்கச் செய்வது” என்ற தங்களது இறுதி முடிவை அறிவிப்பதற்கு இந்தியத் தேர்தல் முடிவுகள் தெரியும் வரை (மே 16) புலிகள் காத்திருந்தார்கள். தோல்வியை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறோம் என்பதும், ஒபாமா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் கோரிக்கைகளை ராஜபக்சே அரசு நிராகரித்து விட்டது என்பதும் புலிகள் அறியாததல்ல. புலிகளுக்கு நம்பிக்கையூட்டும் எந்த நிகழ்வும் இந்தக் கடைசி நாட்களில் நடந்துவிடவில்லை. இருப்பினும், அன்றாடம் பல்லாயிரம் மக்களும் புலிகளும் கொத்துக்கொத்தாகக் கொல்லப்பட்டபோதும், கடைசியாக புலிகள் இயக்கத் தலைவர்களே கொல்லப்படும் நிலைமை நெருங்கிய போதும், “டில்லியில் ஆட்சி மாறினால் போர்நிறுத்தம் வந்துவிடும்” என்று அவர்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள்.  கடைசி நாட்களின் நிகழ்வுகள் இதனைத் தெளிவாக நமக்குக் காட்டுகின்றன. இந்த மூடநம்பிக்கை மிகவும் பாரதூரமான இழப்பை ஈழத்தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தியது.

ஒருவேளை, ஈழ ஆதரவாளர்கள் எதிர்பார்த்த வெற்றியை ஜெயலலிதாவும் பாரதிய ஜனதாவும் பெற்றிருந்தால், மறுகணமே போர்நிறுத்தம் வந்திருக்குமா? அப்படி ஒரு பிரமை ஒருவேளை புலிகளுக்கு இருந்திருந்தாலும், இங்கிருக்கும் புலிகளின் ஆதரவாளர்கள் அந்தப் பிரமையை நீக்கி, அவர்களுக்குத் தெளிவை ஏற்படுத்தி இருக்கவேண்டும். மாறாக, அத்தகைய பிரமையை உருவாக்கும் திருப்பணியையே இவர்கள்தான் செய்து கொண்டிருந்தார்கள். இந்தப் பிரமைக்கு, தங்கள் உயிரையும் சொந்தங்களையும் காவு கொடுத்தார்கள், ஈழத் தமிழ் மக்கள்.

இவ்வாறு குற்றம் சாட்டுவதன் காரணமாக புலி ஆதரவாளர்கள் நம்மீது ஆத்திரப்படலாம். அது குறி தவறிய ஆத்திரம். மாறாக, இத்தகைய பிரமையை இன்னும் தொடர்வதற்காக அவர்கள் மீதுதான் தமிழ் மக்கள்  ஆத்திரம் கொள்ள வேண்டும்.

மே 21-ஆம் தேதியன்று நெடுமாறன், வைகோ, ராமதாசு முதலானோர் நடத்திய பேரணிக்கு ஜெயலலிதாவை அழைத்தார்கள். அவர் வரவில்லை. அதுமட்டுமல்ல; ஜெயலலிதா விடுத்த அறிக்கையிலும் ‘தனிஈழம்’ என்பதோ, ‘இனப்படுகொலை’ என்பதோ ‘ராஜபக்சே ஒரு போர்க்குற்றவாளி’ என்பதோ வார்த்தை அளவில்கூட இடம்பெறவில்லை. இந்த அம்மையாரின் வெற்றிதான் போர்நிறுத்தத்தைக் கொண்டுவரும் என்று ஈழத் தமிழ் மக்களையும் புலிகளையும் நம்ப வைத்து அவர்களைப் படுகுழியில் தள்ளியிருக்கிறார்கள் புலி ஆதரவாளர்கள். எந்தப் புலிகளை இவர்கள் ஆதரித்தார்களோ, அந்தப் புலிகளையே காவு வாங்கிவிட்டது இவர்களுடைய பிழைப்புவாதத் தேர்தல் அரசியல்.

இவ்வளவுக்கும் பிறகு பார்ப்பன பாசிச ஜெயலலிதா தமிழக சட்டமன்றத்தில் ஈழப் பிரச்சினையில் மத்திய அரசிடம் வைக்கும் “தனி ஈழம், போர்க்குற்றவாளி, சர்வதேச நீதி விசாரணை, பொருளாதாரத் தடை” என்றெல்லாம் அடிக்கும் சவடால்கள், தீர்மானங்களை நம்பும்படி உலகத் தமிழர்களிடம் புலி ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.

“ஈழத் தமிழருக்கு மிகப் பெரிய அளவு துரோகம் புரிந்தது யார்? கருணாநிதியா, ஜெயலலிதாவா?” என்ற தலைப்பிலான இலாவணிதான் தமிழக அரசியலில் அடுத்த சில ஆண்டுகளுக்கு முதன்மை இடத்தைப் பெறப் போகிறது. ஈழத் தமிழினப் படுகொலை, பாசிச ராஜபக்சே கும்பலின் போர்க் குற்றங்களுக்கான விசாரணை, தண்டனை மற்றும் ஈழத் தமிழினத் தன்னுரிமை ஆகிய பிரச்சினைகள் மீதான கோரிக்கைகள், விவாதங்கள், போராட்டங்கள் எழும்போதெல்லாம் இந்தக் கேள்வி வருகின்றது.

2009 மே-யில் ஈழத் தமிழர் இன அழிப்புப் படுகொலைகள் நடந்தபோது ஆட்சியிலிருந்த கருணாநிதி என்ன செய்தார்? அப்படுகொலையை தி.மு.க., பங்கேற்கும் இந்திய அரசு வழிநடத்திய போதும் அதைக் கண்டு கொள்ளாமல், பதவியில் ஒட்டிக் கொண்டிருந்தவர்தானே கருணாநிதி. அந்தப் ’பாவச் செயல்’ இந்த இலாவணியினூடே நம் கண் முன்பு வந்து நிற்கும். ராஜபக்சேவைப் போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும்; இலங்கைக்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்; இந்திய இராணுவத்தை அனுப்பி ஈழத்தைத் தனிநாடாகப் பெற்றுத் தருவேன் என்றெல்லாம்  ஜெயலலிதா என்னதான் நீலிக் கண்ணீர் வடித்தாலும், புலிகளின் துப்பாக்கிக் கலாச்சாரம், பயங்கரவாதம், பிரிவினைவாதம் என்ற பீதி கிளப்பியதும், ஈழத் தமிழ் அகதிகளை வேட்டையாடியதும், ராஜீவ் கொலைக் குற்றவாளி பிரபாகரனைப் பிடித்து வந்து தண்டிக்க வேண்டும் என்றும், போர் நடந்தால் மக்கள் கொல்லப்படுவது இயல்புதான் என்றும் ஈழத்தமிழர் மீது வெறுப்பை உமிழ்ந்த ஜெயலலிதாவின் குரூர – வக்கிர முகம் இந்த இலாவணியினூடே நம் கண் முன்பு தோன்றும்.

இந்த இலாவணியில் கருணாநிதி, ஜெயலலிதா தலைமையிலான இரு அணிகளில் அரசியல் ஆதாயம் அடிப்படையில் ஏதாவது ஒன்றில் அணி சேர்ந்து பக்கவாத்தியங்களை வாசிக்கவுள்ளவர்கள்தாம் நெடுமா, திருமா, சீமா, வைகோ, சுப.வீ., வீரமணி, இராமதாசு, பிற உதிரி இனவாத மற்றும் பெரியாரிய அமைப்பினர், பெ.ம., தியாகு போன்ற சிலர் ‘கூச்சப்பட்டுக்கொண்டு‘ இந்த குரூப் போட்டோவில் (அல்லது அணி சேர்க்கைகளிலிருந்து) இரண்டடி விலகி நின்றாலும், இவர்களுக்கிடையிலான வித்தியாசம் வெறும் இரண்டடி மட்டும்தான்.

கருணாநிதியும் ஜெயலலிதாவும் ஈழத் தமிழினத்தின் எதிரிகளுடன் கைகோர்த்துக் கொண்டு நேரடியான துரோகம் செய்தார்கள்; ஆனால், இவர்கள் செய்தது, துரோகிகளுடன் கைகோர்த்துக் கொண்ட மறைமுகத் துரோகம். புலிகளின் தலைவர் பிரபாகரனிடம் இவர்கள் காட்டும் மாளாத விசுவாசம், தமிழீழத்துக்கான தணியாத தாகம், இவ்விரண்டுக்கான பெருங்கூச்சல் – இவை எதுவும் இவர்களின் மறைமுகத் துரோகத்தை மறைத்துவிட முடியாது.

பாசிச காங்கிரசின் பிராந்திய மேலாதிக்க ஈழ எதிர்ப்பு, ராஜபக்சே கும்பலுடனான போர்க் குற்றங்களில் கூட்டு எல்லாம் தமிழக மக்களிடையே அம்பலப்பட்டு, அக்கட்சி தமிழ்நாட்டிலிருந்து துடைத்தெறியப்படும் நேரம் வந்துவிட்டது. மீண்டும் அக்கட்சி ஆட்சிக்கு வரவும் முடியாது. இனி அதனுடன் கூட்டுச் சேர்ந்தால், இங்கு ஒரு ஓட்டுக்கூடப் பெறவும் முடியாது. கருணாநிதி கட்சி ஆட்சியிழப்பதற்குக் காரணமாக அமைந்த 2-ஜி வழக்கில்கூட காங்கிரசின்  முதன்மையான பங்கு அம்பலமாகி வருகின்றது. இந்த நிலையில் மூழ்கும் கப்பலில் இருந்து தப்பிக்கும் எலியைப் போல எகிறிக் குதித்து விட்டார், கருணாநிதி. 2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலம் இருப்பதால், காங்கிரசுடன் கூட்டுச் சேர்ந்து தான் செய்த குற்றங்களையும், முந்தைய ஆட்சிக் காலத்தின் ஊழல்களையும்விட தற்போதைய ஜெயலலிதா ஆட்சியின் தவறுகள்தாம் தமிழக மக்கள் முன்நிற்கும் என்பதால், எப்படியும் தனது குடும்ப ஆட்சியை மீட்டு விடலாம்  என்பது கருணாநிதியின் கணக்கு.

ஜெயலலிதாவின் கணக்கு வேறாக இருந்தாலும் நோக்கம் ஒன்றுதான். இனிமேலும் காங்கிரசு, பா.ஜ.க., எதனுடனும் தமிழ்நாட்டில் கூட்டுச் சேர்ந்து பயனில்லை; 40-உம் தனக்குதான்; கண்ணுக்கெட்டிய தூரத்தில் பிரதமர் பதவி என்ற கனவு நிறைவேறாவிட்டாலும், கணிசமான சீட்டுக்களைப் பெற்றுவிடலாம்; சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து தப்பிவிடவும், குவித்த  சொத்துக்களைக் காத்துக் கொள்ளவும் தேர்தலுக்குப் பிறகு மத்தியில் யாருடனும் கூட்டுச் சேரலாம். ஈழச் சிக்கல் குறித்து சில தீர்மானங்களும், வாக்குறுதிகளும், சவடால்களும் அடித்தால் போதும்; தனது  ஈழ எதிர்ப்பு நிலைப்பாடுகளால் தமிழ் மக்களிடையே ஏற்பட்டுள்ள வெறுப்பை ஈழ ஆதரவாளர்கள் என்ற பெயரிலுள்ள தனது விசுவாசிகளே  சரிக்கட்டிவிடுவார்கள்; நோட்டுகளையும், சீட்டுக்களையும் விட்டெறிந்தால் போதும்,  பழைய கசப்புகளை மறந்துவிட்டு தான் எட்டி உதைத்த இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும்கூடத்  தன் காலில் வந்து விழுவார்கள் என்பது ஜெயாவின் கணக்கு.

தமிழகத்திலுள்ள புலி ஆதரவாளர்களும் தமது ஆதாயத்துக்காக இந்த இரு இலாவணிக்காரர்களில்  ஏதாவது ஒருவரைத் தெரிவு செய்து அணிசேர்வார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஏனென்றால், அவர்கள் இந்திய ஆளும் வர்க்கங்களைச் சார்ந்து, இந்திய அரசு மற்றும் அதன் தேர்தல் அரசியல் கட்டமைப்புக்குள் மட்டுமே இயங்கக்கூடியவர்கள்; அதற்கு அப்பாற்பட்டுச் சிந்தித்து செயல்படக் கூடியவர்கள் அல்ல.

பின்வரும் உண்மையே இதை நிரூபிக்கிறது: ஈழப் பிரச்சினைக்காக இந்திய அரசை எதிர்த்துப் போராடுவதும் அதன் பொருட்டு பிற விடுதலை இயக்கங்கள் மற்றும் மக்களின் ஆதரவைத் திரட்டுவதும் ஈழ விடுதலைப் போர் வெற்றி பெற அவசியமானது என்பதை எப்போதும் புலி ஆதரவாளர்கள் ஏற்றதில்லை. ஈழம் பிரிவதையோ, தெற்காசியப் பகுதியில் ஒரு தேசிய இன விடுதலைப் போராட்டம் வெற்றி பெறுவதையோ இந்திய அரசும் இந்திய தேசியக் கட்சிகளும் ஒரு போதும் ஏற்கவில்லை; அது ஆளும் வர்க்கங்களின் நலன்களுக்கு எதிரானது; இதுதான் சிங்கள இனவெறி அரசுடன் இந்திய அரசு கூட்டுச் சேர்ந்து ஈழப்போரை நடத்தியதற்கு முதன்மைக் காரணம் என்பதை பலமுறை எடுத்துச் சொல்லியும் ஏற்றதில்லை.

இந்திரா-ராஜீவ், எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா, வாஜ்பாய் – அத்வானியையும் இந்திய அரசையும் இராணுவத்தையும் புலி ஆதரவாளர்கள் நம்பினார்கள். புலி பிரபாகரனே இம்மாதிரியான அணுகுமுறையைத்தான் கொண்டிருந்தார். முள்ளிவாய்க்காலில் முற்றான தோல்வியைச் சந்திக்கும் வரை தெற்கு ஆசியாவில் இந்தியாவின் பிராந்திய நலன்களுக்கு சிங்கள அரசைவிடப் புலிகள் உறுதியான ஆதரவளிப்போம் என்று நட்புக்கரம் நீட்டினார். நீட்டிய அந்தக் கரத்தை மடக்காமல் இருந்ததுதான் பிரபாகரனின் அரசுதந்திர ஆளுமை என்று இங்குள்ள புலி ஆதரவாளர்கள் புகழ்ந்தார்கள். அப்போதும், இப்போதும் இந்திய மேலாதிக்க எதிர்ப்பு, இந்திய தேசிய இனங்களின் தன்னுரிமை என்ற அரசியல் முழக்கங்களின் கீழ் தமிழ் மக்களை அணிதிரட்ட முயற்சிக்காமல், ஈழத் தமிழினப் படுகொலை தமிழக மக்களிடம் தோற்றுவித்த அனுதாப உணர்வை, அப்படியே குறுக்கு வழியில் இனவுணர்வாக உருமாற்றிவிடலாமென ஈழ ஆதரவாளர்கள் முயல்கிறார்கள். இன்னமும் ஈழத்தின் எதிரிகளையும், துரோகிகளையும் வைத்துத்தான் காரியங்களைச் சாதிக்கமுடியும் என்று நம்புகிறார்கள்.

ஈழத் துரோகிகளும் பிழைப்புவாதிகளும் கூட இப்போது தமிழத்தில் ஏற்பட்டுள்ள மாணவர் எழுச்சிக்குள் முகம் புதைத்துக் கொண்டு எல்லாமும் புதிதாக நடப்பதைப் போல மீண்டும் அதே நாடகத்தை நடத்துகிறார்கள்.

ஆனால் சில மாணவர் குழுக்களின் தலைமை, புலிகளும் புலி ஆதரவாளர்களும் செய்த அதே வகையிலான தவறுகளைச் செய்கின்றனர். இப்போது முன்வைக்கப்படும் இரண்டு கோரிக்கைகளை எவ்வாறு, எந்த வழிகளில்  நிறைவேற்றமுடியும் என்பதை ஆழமாகப் பார்க்க மறுக்கின்றனர். இரண்டு கோரிக்கைகளில் ஒன்றான “பொது வாக்கெடுப்பு” என்பதைத் தமது குறுங்குழுவாத அகநிலைப் பார்வையைத் திணித்தும் திரித்தும் வியாக்கியானம் செய்து மாற்றி அமைத்துக் கொண்டு ஈழ ஆதரவு சக்திகளைப் பிளவுபடுத்தும் முயற்சிகளைச் செய்கிறார்கள். அவர்களும் புலி விசுவாசிகளைப் போலவே  “பொது வாக்கெடுப்பு” என்ற முழக்கத்தை “தனித் தமிழீழத்துக்கான வாக்கெடுப்பு” என்பதாக மாற்றி அமைத்து ஈழ ஆதரவாளர்களைப் பிளவுபடுத்தவும்  செய்கிறார்கள்.

“பொது வாக்கெடுப்பு” என்பது ஒடுக்கப்படும் இனம் தனது சுயநிர்ணய உரிமையை (தன்னுரிமையை) நிறைவேற்றிக்கொள்ளும் செய்முறை. ஒடுக்கப்படும் இனம் (இங்கே ஈழத்தமிழினம்) தனது அரசியல் வாழ்வுரிமையைத்தானே  முடிவுசெய்துகொள்ளும் உரிமைதான் தன்னுரிமை. அதாவது ஒடுக்கப்படும் இனம், ஒடுக்கும் இனத்தோடு (இங்கே சிங்கள இனத்தோடு) சேர்ந்து ஒரே அரசின்  கீழ் வாழ விரும்புகிறதா அல்லது தனித்ததொரு அரசு (தனித் தமிழீழ அரசு) அமைத்துக்கொள்ள விரும்புகிறதா என்பதை முடிவு செய்வதற்காக ஒடுக்கப்படும் இன மக்களின் கருத்தறியும் பொது வாக்கெடுப்பு. மேலும் சொல்வதானால், ஒடுக்கப்படும் இன மக்களுக்குள்ளும் (ஈழத் தமிழ் மக்களுக்குள்ளும்) மாறுபட்ட கருத்துக்கள் இருப்பின், பெரும்பான்மையினர் எதை ஆதரிக்கின்றனர் என்பதைத் தீர்மானிப்பதற்கான வாக்கெடுப்பு.

ஆகவே, தன்னுரிமை என்பது   ஒடுக்கப்படும் இனத்துக்கு தனியரசு அமைத்துக்கொள்ளும் உரிமையை உறுதி செய்வதாகும். அது  ஒரு ஜனநாயக உரிமை என்பதால், ஒடுக்கப்படும் இனத்துக்குள்ளாகவே தனியரசு அரசு அமைப்பதற்கு மாற்றுக் கருத்து இருப்பின், அதாவது தனியரசு அரசு அமைப்பதற்கு உடன்படாதவர்கள் அதைத் சொல்லவும், அதுவே பெரும்பான்மைக் கருத்தாக இருத்தால்  தனியரசு அமைப்பதைத் தடுப்பதற்கும் உரிமையுண்டு.  இவ்வாறு எந்வொரு முடிவையும் ஒடுக்கப்படும் மக்கள் மீது வலுக்கட்டாயமாகத் திணிக்கவில்லை.  ஒடுக்கப்படும் மக்கள் தாமேவந்து முழு ஜனநாயக உரிமையுடன் தீர்மானித்துக் கொள்வதற்குத்தான் பொது வாக்கெடுப்பு. ஈழத் தமிழ் இனத்துக்குள்ள இந்த உரிமையைத்தான் “ஈழத் தமிழர்க்கு  தன்னுரிமை” என்று சொல்கிறோம்.

ஆனால், “ஈழத் தமிழர்க்கு  தன்னுரிமை” என்பது “மழுப்புவது, தனித் தமிழீழத்தை மறுப்பது, எதிர்ப்பது; அதை மூடிமறைக்கும் தந்திரம்” என்று சொல்லிக்கொண்டு  சில மாணவர் குழுக்கள், “பொது வாக்கெடுப்பு” என்ற முழக்கத்தை “தனித் தமிழீழத்துக்கான வாக்கெடுப்பு” என்பதாக மாற்றியும், குறுக்கியும் வியாக்கியானம் செய்கின்றனர். “பொது வாக்கெடுப்பு” என்ற முழக்கத்தை இவ்வாறு திரிப்பது,  “பொது வாக்கெடுப்பு’’க்கான உரிமையைப் பெறுவதற்கு முன்பே மாற்றுக் கருத்துக்கான உரிமையை மறுக்கும் சர்வாதிகாரமாகும். இம்மாதிரியான போக்குதான்  துரோகம் ஏதும் செய்யாமலேயே தமிழீழத்துக்காக உறுதியுடன் போராடிய ஈழத்தமிழர்கள் பலரையும், இசுலாமியர்களையும் புலிகள் படுகொலை செய்வதற்கு அடிப்படையாக அமைந்தது.  புலிகள் எத்தனை ஈழத் தமிழர்களை கொன்று போட்டார்கள், இசுலாமியர்களைக் கொன்று போட்டார்கள், எத்தனை ஈழத் தமிழர்களையும் இசுலாமியர்களையும் அகதிகளாக்கினர்கள்? இவர்களும்தானே புலிகளுடன் தமிழீழத்தில் சேர்ந்து வாழமுடியாத நிலை உருவாக்கப்பட்டது. இவர்களும் தமது கருத்துக்களைச் சொல்லவும்தானே “பொது வாக்கெடுப்பு’’? சிங்களப் பேரினவாத ஒடுக்குமுறை மற்றும் இனப்படுகொலை மட்டுமல்ல, மேற்கூறியவை உள்ளிட்ட அனைத்தையும் சீர்தூக்கிப் பார்த்து ஈழத்தமிழ் மக்கள் தமது கருத்தினை சொல்வதற்குத்தானே பொதுவாக்கெடுப்பு?

ஆனால் தனித் தமிழீழத்தை ஏற்கிறீர்களா, இல்லையா? இப்போதே சொல்லுங்கள், சொல்லாவிட்டால் ஈழத் துரோகிகளாவீர்கள் என்று கையை முறுக்கிக் கருத்துத் திணிப்பு செய்வதன் பொருள் என்ன?  தனித் தமிழீழம்தான் ஒரே முடிவு  என்றால் அப்புறம் எதற்குப் “பொது வாக்கெடுப்பு”?

“பொது வாக்கெடுப்பு” உரிமையைப் பெற்ற பிறகு நடைமுறைக்கு வரக்கூடியதே தன்னுரிமை. வாக்கெடுப்புக்கு முன்னரே முடிவைச் சொல்லவேண்டுமென்றால் அப்புறம் எதற்கு அக்கோரிக்கை, போராட்டம் எல்லாம்?  அதுவும் இந்த உரிமை உலகத் தமிழர் அனைவருக்குமான உரிமை அல்ல. ஒடுக்கப்படும் ஈழத் தமிழ் இனத்துக்குள்ள இந்த உரிமையை, புலம்பெயர்ந்து பல்வேறு நாடுகளிலும் அகதிகளாகவோ, குடியுரிமை பெற்றவர்களாகவோ வாழ்கின்ற மக்கள், தம் எதிர்காலம் குறித்து முடிவு செய்வதற்கான உரிமையை இங்குள்ள தமிழர்கள் எப்படித் தம் கையில் எடுத்துக் கொள்ள முடியும்? அந்த உரிமையை யார் கொடுத்தது? இதற்கும் இந்திய பெரியண்ணன்தனத்துக்கும் என்ன வேறுபாடு?

இராஜபக்சே மீது போர்க் குற்ற விசாரணை, ஈழத்தில் பொது வாக்கெடுப்பு ஆகிய இரண்டையும் நிறைவேற்றுவதில் பாரிய அக்கறை கொண்டவர்கள் பின்வரும் உண்மைகளில் கவனம் செலுத்தவேண்டும்: இவ்விரண்டு கோரிக்கைகளும் நிறைவேற வேண்டுமானால்,

ஒன்று,  சர்வதேச சமூகம் எனப்படும் உலக நாடுகள் இலங்கைக்கு வெளியிலிருந்து சிங்கள இனவெறி, கொலைவெறி பாசிச  ராஜபக்சே கும்பலின் அதிகாரக் கோரப்பிடியிலிருத்து இலங்கையையும் ஈழத் தமிழர்களையும் மீட்கவேண்டும்; ஈழத்தில் ஒரு பொது வாக்கெடுப்பை ஏற்கும் ஜனநாயக அரசை இலங்கையில் நிறுவி இதைச் செய்ய வேண்டும்.

அல்லது,

உள்நாட்டிலேயே சிங்கள இனவெறி, கொலைவெறி பாசிச  ராஜபக்சே கும்பலைக் கொன்றொழிக்க வேண்டும்; அக்கும்பலைச் சிறைப் பிடிக்கவேண்டும். ஒருவேளை இது நிறைவேறினாலும், ஈழத் தமிழினத்தின் தன்னுரிமையையும் அதன் அடிப்படையிலான ஒரு பொது வாக்கெடுப்பையும் ஏற்கும் ஜனநாயக அரசு இலங்கையில் அமைய வேண்டும். இல்லையென்றால், அவ்வாறான அரசு அமைவதற்கான புரட்சி இலங்கையில் நடைபெறவேண்டும்.

ஆனால்,போர்க் குற்றங்களில் பங்காளியான இந்தியா எத்தகைய நிலைமையிலும் இவ்விரண்டு கோரிக்கைகளையும் ஏற்கப்போவதில்லை. புலிகளை ஒழித்துக்கட்டுவதென்று 2006-இல் கூடிப்பேசி, முடிவெடுத்து, ஈழப்போரில் ராஜபக்சேவுக்குத் துணை நின்ற அமெரிக்கா  தலைமையிலான 20 உலக நாடுகளும் இவற்றை ஏற்கப்போவதில்லை.

ஆக, இராஜபக்சே மீது போர்க் குற்றவாளி, ஈழத்தில் பொது வாக்கெடுப்பு – ஆகிய இரண்டையும் நிறைவேண்டுமானால், இலங்கையில் ஒரு மாபெரும் அரசியல் மாற்றம் ஏற்படவேண்டும் என்பது தவிர்க்கவியலாத அவசியம்.

அதை எப்படிச் சாதிப்பது என்பது ஈழத் தமிழர்களின் உடனடி, நீண்டகாலக் கடமையாக இருக்கவேண்டும். சிங்கள இனவெறி, பௌத்த மதவெறி பாசிச ராஜபக்சே கும்பலுக்கு எதிரான ஒரு  ஜனநாயக ஐக்கிய முன்னணியைக் கட்டுவது முதன்மையான பணியாகும். பாசிச ராஜபக்சே கும்பல் ஈழத் தமிழர்கள் மீது நடத்திய இனப்படுகொலை மிகக்கெடூரமான போர்க் குற்றம். அதோடு ஒப்பிட முடியாதெனினும், சிங்கள ஜனநாயக சக்திகளுக்கெதிரான பாசிச வெள்ளைவேன் ஆள்கடத்தல்களும், படுகொலைகளும், அவசரநிலை-தடுப்புக் காவல் கைதுகளும் ஒடுக்கு முறைகளும் பெருமளவு நடந்து கொண்டுதானிருக்கின்றன.  ஈழத் தமிழர்கள் மீது மட்டுமல்ல, சிங்கள  ஜனநாயக சக்திகள் மீதுமான மனித உரிமை மீறல்களுக்காகவும் பாசிச ராஜபக்சே கும்பல் ஐ.நா. அவையில் குற்றஞ்சாட்டப்படுகிறது. சிங்கள  ஜனநாயக சக்திகளில் கணிசமான பேர் ராஜபக்சே அரசின் கும்பலாட்சி, இசுலாமிய எதிர்ப்பு பவுத்த வெறி, ஈழத்தமிழர் மீதான இராணுவக் கொடுங்கோன்மை ஆகியவற்றை வெறுக்கிறார்கள், எதிர்க்கிறார்கள், அத்தகைய சக்திகளுடன் ஒரு ஐக்கிய முன்னணி சாத்தியமே இல்லை என்று கதவடைத்துக் கொள்வது சரியான அரசியல் அணுகுமுறையே கிடையாது.

இன ஒற்றுமை
யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் சிங்கள இராணுவத்தால் தாக்கப்பட்டதைக் கண்டித்து, கண்டி பேராதனைப் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் (இடது); மற்றும் இன ஒற்றுமையை வலியுறுத்தி கிழக்கு இலங்கைப் பகுதியில் நடந்த ஊர்வலம்.

இலங்கைத் தீவில் தற்போது காட்டப்படும் ஈழத்தின் வரைபடத்தைப் பார்த்தாலே பாமரனுக்கும் புரியும்! இவ்வளவு நீண்ட எல்லையைக் கொண்ட ஈழம் தனித்திருந்தால்கூட, போரும் பகையும் இனப் படுகொலைகளும் இல்லாமல் ஈழத் தமிழர்கள் நிரந்தரமான நிம்மதியோடு வாழவேண்டுமானால் பின்வரும் ஒரு நிபந்தனை நிறைவேற்றப்பட வேண்டும்.  ஈழத் தமிழினத்தின் தன்னுரிமையை ஏற்கக்கூடிய ஜனநாயக அரசு அமைப்பு இலங்கையில் ஏற்படுத்தப்பட வேண்டும். சிங்கள இனவெறி, கொலைவெறி பாசிச  ராஜபக்சே கும்பலின் அதிகாரப்பிடியிலிருந்து சிங்களமும் விடுபடவேண்டும். ஈழத் தமிழினத்துக்கெதிராக அது இழைத்த  குற்றங்களுக்காக “பாவமன்னிப்பும் பரிகாரமும்” தேடும் நிலைக்குத் தள்ளப்பட வேண்டும்.

இது சாத்தியமா? யூத மக்கள் மீது தீராத பகைகொண்டு குரூரமான வதைகளும் இனப் படுகொலைகளும் புரிந்தான், நாஜி இட்லர்.  அவனது போர்வெறி, அதிகாரப்பிடியிலிருந்து விடுபட்டு யூத இனத்துக்கெதிராகத் தாம் இழைத்த  குற்றங்களுக்காக “பாவ மன்னிப்பும் பரிகாரமும்” தேடும் நிலைக்கு ஜெர்மானியர்கள் தள்ளப்பட்டனர். பாசிசம் போரில் தோற்கடிக்கப்பட்டதும், நூரம்பர்க் விசாரணையும், தண்டனைகளும்,  சர்வதேசப் பொதுக் கருத்தின் மீது சோசலிசமும், கம்யூனிச சித்தாந்தமும் செலுத்திய செல்வாக்கும் இத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தியது. அம்மாதிரியான சர்வதேச நிலைமை இப்போது இல்லையாதலால், ராஜபக்சே கும்பலைத் தூக்கியெறியும் உள்நாட்டுப் புரட்சிதான் இலங்கையில் அரசியல் மாற்றங்களை ஏற்படுத்த வல்லது. இதுதான் சாத்தியமானது.

இனப் படுகொலை நிகழ்ந்துள்ள நிலையில், சிங்கள இனவெறி தலைவிரித்தாடும் நிலையில் இத்தகையதொரு தீர்வே கோமாளித்தனமானது என்று புலி ஆதரவாளர்கள் கேலி பேசலாம். முள்ளிவாய்க்கால் படுகொலை முடிந்து தடயங்களை அழித்து முடிக்கும்வரை ராஜபக்சேவுக்கு வழிகாட்டி இயக்கிய இந்தியா மற்றும் சர்வதேசம் என்றழைக்கப்படும் அமெரிக்க – ஐரோப்பிய ஏகாதிபத்திய நாட்டாமைகளிடம் கெஞ்சுவதும், அவர்களிடம் மனமாற்றத்தை ஏற்படுத்தி விடலாம் என்று கனவு காண்பதும்தான் கோமாளித்தனமானது. புலி ஆதரவாளர்கள் இந்திய ஆளும் வர்க்கங்களுக்கும், கட்சிகளுக்கும் சலாம் போட்டும், மனுக்கொடுத்தும், தேர்தல் வேலை பார்த்தும், இவர்கள் மீது நம்பிக்கை வைக்குமாறு ஈழத்தமிழ் மக்களை இழுத்து விட்டும் 30 ஆண்டுகளை அழித்தார்கள். கடைசியாக முள்ளிவாய்க்காலில் பரிதாபத்துக்குரிய அந்த மக்கள் படுகொலை செய்யப்பட்ட பின்னரும், கொலையுண்ட அந்த உடல்களை வைத்துக் கொலையாளிகளே அரசியல் ஆதாயம் தேடுவதற்கு வழிவகை செய்கிறார்கள். இது கோமாளித்தனமானதல்ல, வக்கிரமானது.

சிங்களப் பேரினவாதமும் இனவெறியும்தான் ஈழத் தமிழ் மக்களின் துயரத்துக்கு அடிப்படைக் காரணமென்றாலும், சிங்களருக்கும் தமிழருக்கும் இடையிலான இன்றைய பகை நிலை நிரந்தரமானதென்றும், 200-க்கும் மேற்பட்ட அரச உயர்பதவிகளை ராஜபக்சே குடும்பமே கைப்பற்றிக்கொண்டு சிங்கள மக்களுக்கே எதிராக அது இழைத்துவரும்  பாசிச பயங்கரவாதக் குற்றங்களும், இலங்கையில் அதிகரித்து வரும் அரசியல், பொருளாதார நெருக்கடிகளும் இந்தப் பகை நிலையை மாற்றாது என்றும் கருதிக் கொண்டு ஈழச் சிக்கலுக்குத் தீர்வைத் தேடக்கூடாது. அவ்வாறான தீர்வு, எளிமையானதாகவும் உடனடியானதாகவும் தோன்றினாலும் கற்பனையானது. இத்தீர்வும் வழிமுறையும் புலிகளையும் ஈழத்தமிழர்களையும் முள்ளிவாய்க்காலுக்குக் கொண்டுபோய் முடித்தது.

இந்தப் பார்வை தனித் தமிழீழத்தை மறுப்பது என்றும் தமிழீழத்துக்கு எதிரானதென்றும் புலி ஆதரவாளர்களால் அவதூறுக்குள்ளாக்கப்படும் என்பது எமக்கு நன்கு தெரியும். எமது இந்தத் தீர்வு ஈழத் தமிழர் தன்னுரிமையை நிபந்தனையாகக் கொண்டதென்பதை மறந்துவிடக்கூடாது. ஈழத்தின் மூன்றில் இரண்டு பகுதியை விடுதலைப் புலிகள் கைப்பற்றிக் கொண்டு, 40,000 சிங்கள இராணுவத்தினரை யாழ்க் கோட்டையில் சூழ்ந்து கொண்டநிலையிலும் பிரபாகரன் தனித் தமிழீழத்தைப் பிரகடனம் செய்யவில்லை! பிரபாகரனின் அரசியல் குரு ஆண்டன் பாலசிங்கம் தனித் தமிழீழம்  அல்ல, சுயாட்சிதான் எமது நோக்கம் என்று சொன்ன காலமும் உண்டு! “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” என்று சொன்னவர்கள், துப்பாக்கிகளை மௌனித்து இனி அரசியல் போராட்டம்தான் என்று அறிவிக்கும் நிலையும் வந்தது. ஆகவே, எல்லாக் காலத்திலும் எல்லா நிலையிலும் ஒரே தீர்வு என்பது பகுத்தறிவுக்குப் பொருந்தாதது!

___________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2013
___________________________________________________________________________________