நடிகர்கள் மட்டும்தான் மாறுகிறார்கள். மேடையும் மாறுவதில்லை, பாத்திரங்களும் மாறுவதில்லை. 1990களில் ஹவாலா ஊழல் வெளிவந்த சமயத்தில் இயற்றி வெளியிடப்பட்ட பாடல் இது. இந்த பாடல் வரிகளில் ‘ஹவாலா ஊழல்’ என்பதற்கு பதில் ‘2G ஊழல்’ என்றும் ‘நரசிம்ம ராவு’ என்பதற்கு பதில் ‘மன்மோகன் சிங்கு’ என்றும் ‘ஜெயின்’ என்பதற்கு பதில் ‘நீரா ராடியா’ என்றும் மாற்றிக் கொண்டால் இன்றைய சூழலுக்கு அப்படியே பொருந்துகிறது.
ராஜீவ் காந்தி – வி.பி. சிங், நரசிம்ம ராவ் – அத்வானி, மன்மோகன் சிங் – சுப்ரமணிசாமி என்று இவர்கள் மேடையில் ஒருவரை ஒருவர் அடித்து மக்களுக்கு சிரிப்பு மூட்டிக் கொண்டிருக்க, திரைக்குப் பின்னால் கார்ப்பரேட்டுகளின் கொள்ளைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. ஒரு ஆ. ராசா சிறைக்குப் போவதோ அல்லது ஒரு ப. சிதம்பரம் மீது வழக்கு தொடரப்படுவதோ கோமாளிகள் செய்து காட்டும் குட்டிகரணங்கள் போன்றவைதான். அதனால் எதுவும் மாறி விடப்போவதில்லை.
இனி பாடலைக் கேளுங்கள்!
==============
ஹவாலா! ‘இது வரலாறு காணாத ஊழல்’ என்று எழுதுகிறார்கள் பத்திரிகைகள். இதில் ஆச்சரியம் இல்லை. முந்திரா ஊழல் முதல் போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் வரை ஒவ்வொரு முறை புதிய ஊழல் அம்பலமாகும் போதும் இவர்கள் இப்படித்தான் எழுதுகிறார்கள்.
ஹவாலா ஊழலில் சிக்கிய மத்திய அமைச்சர் ராஜேஷ் பைலட் ஒரு உண்மையைச் சொன்னார். ‘தேசத் தந்தை மகாத்மா காந்தியே பஜாஜ் என்னும் தரகு முதலாளியிடம் காசு வாங்கியவர்தான். அப்படியிருக்க எங்களை மட்டும் ஏன் ஏசுகிறீர்கள்’ என்று கேள்வி எழுப்பினார். இந்தக் கேள்விக்கு இதுவரை யாரும் பதில் சொல்லவில்லை, சொல்லவும் முடியாது. ஏனென்றால் ஊழலில்தான் உயிர் வாழ்கிறது இந்த நாடாளுமன்றம்.
இங்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் முதலாளித்துவம் ஆட்சி செய்யும் நாடுகளில் இதுதான் உண்மை. தங்களுக்குள், தீவிரமான கொள்கை வேறுபாடுகள் இருப்பது போல நடிக்கின்ற ஓட்டுக் கட்சிகளிடையே ஒரு ஒருமைப்பாடு இருக்கிறது. அதுதான் ஊழல்!
நரசிம்ம ராவு தில்லி வாலா…அத்வானிஜி சிந்தி வாலா…
நரசிம்ம ராவு தில்லி வாலா…அத்வானிஜி சிந்தி வாலா…
புரட்சித் தலைவி மத்ராஸ் வாலா… போடு வந்தேமாதரம் எல்லாம் ஹவாலா…
கோரஸ் :
நரசிம்ம ராவு தில்லி வாலா…அத்வானிஜி சிந்தி வாலா…
புரட்சித் தலைவி மதராஸ் வாலா… போடு வந்தேமாதரம் எல்லாம் ஹவாலா…
அர்ஜூன்சிங்கும், என்.டி.திவாரியும் வந்தான் ராவுக்கு சவாலா …
கோரஸ் : வந்தான் ராவுக்கு சவாலா
அத அடக்க வேற வழியில்லேன்னு அவுத்து விட்டான் ஹவாலா…
கோரஸ் : அவுத்து விட்டான் ஹவாலா
இப்ப நீயும் திருடன்… நானும் திருடன்னு ராவு பாடுறான் லல்லாலா…
கோரஸ் :
நரசிம்ம ராவு தில்லி வாலா…அத்வானிஜி சிந்தி வாலா…
புரட்சித் தலைவி மதராஸ் வாலா… போடு வந்தேமாதரம் எல்லாம் ஹவாலா…
அஞ்சு காசு கூட வாங்கலண்ணு அடிச்சி பேசுனான் ரொம்ப தில்லா…
கோரஸ் : அடிச்சி பேசுனான் ரொம்ப தில்லா…
அந்த அத்வானி வாங்குன காசுக்கு ஜெயினு எடுத்து வுட்டான் பில்லு பில்லா…
கோரஸ் : எடுத்து வுட்டான் பில்லு பில்லா…
அட ராமா…இவன் ராமராஜ்ஜிய கனவு எல்லாம் நொறுங்கிப் போச்சு சில்லு சில்லா…
கோரஸ் :
நரசிம்ம ராவு தில்லி வாலா…அத்வானிஜி சிந்தி வாலா…
புரட்சித் தலைவி மதராஸ் வாலா… போடு வந்தேமாதரம் எல்லாம் ஹவாலா…
வசனம் : வாங்கினவன் 115 பேர் அதில் சிக்குனவன் 67 பேர்
பொம்பள ஒரு பொம்பள – நம்பர் ஒம்பது மட்டும் சிக்கல…
சி.பி.ஐ. இவள சுத்தல – கேசு செத்தவன் கையில வெத்தல…
கோரஸ் :
நரசிம்ம ராவு தில்லி வாலா…அத்வானிஜி சிந்தி வாலா…
புரட்சித் தலைவி மதராஸ் வாலா… போடு வந்தேமாதரம் எல்லாம் ஹவாலா…
அந்துலே, முந்திரா, தர்மதேஜா…ஆவியா சுத்துறான் நகர்வாலா…
கோரஸ் : ஆவியா சுத்துறான் நகர்வாலா…
அந்த இந்திரா மவனும் ஹவாலா – காச திங்கிறா சோனியா குசாலா…
கோரஸ் : திங்கிறா சோனியா குசாலா…
நேரு மாமா… இந்த மாமன் பரம்பர வறண்டி வறண்டி தேசம் போச்சு திவாலா
கோரஸ் :
நரசிம்ம ராவு தில்லி வாலா…அத்வானிஜி சிந்தி வாலா…
புரட்சித் தலைவி மதராஸ் வாலா… போடு வந்தேமாதரம் எல்லாம் ஹவாலா…
வசனம் : ஹவாலா.. ஊழல் 60 ஆயிரம் கோடி, அதில் அகப்பட்டது 65 கோடி…
சிக்கல மிச்சம் சிக்கல – அந்த பட்டியல் ஏண்டா சிக்கல
அமெரிக்க கம்பெனி யாரு அம்பானி டாடா பிர்லா யாரு
அவன்தாண்டா ஆணிவேரு ஜெயினு வெறும் புரோக்கரு…
நொங்கத் தின்னவனை வுட்டுட்டான் – அத
நோண்டி தின்னவன் சிக்கிட்டான்
கோரஸ் :
நரசிம்ம ராவு தில்லி வாலா…அத்வானிஜி சிந்தி வாலா…
புரட்சித் தலைவி மதராஸ் வாலா… போடு வந்தேமாதரம் எல்லாம் ஹவாலா…
____________________
மக்கள் கலை இலக்கிய கழகத்தின் “ஓட்டு போடாதே, புரட்சி செய்” எனும் பாடல் ஒலிக்குறுந்தகடில் இந்தப் பாடல் இடம்பெற்றிருக்கிறது. ஒலிக்குறுந்தகடு தேவைப்படுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
புதிய கலாச்சாரம்,
16, முல்லை நகர் வணிக வளாகம்,
2வது நிழற்சாலை, அசோக் நகர்,
சென்னை – 600 083.
தொலைபேசி: 044-23718706
செல்பேசி: அலுவலக நிர்வாகி தோழர் பாண்டியன் – 99411 75876
___________
கீழைக்காற்று வெளியீட்டகம்,
10, அவுலியா தெரு, எல்லீசு சாலை, சென்னை – 600 002.
தொலைபேசி: 044-2841 2367
_____________________________________
சரியான மொக்கவாலா
2 ஜி பற்றி பாட்டில் ஒன்றும் காணோம்… சம்பந்தமில்லாமல் செத்துப்போன நரசிம்மராவையும் சுனா சாமியும் எழுதிவிட்டு திமுக பங்கை விட்டது ஏனோ?