privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஅரசியல்ஊடகம்தேர்தல்: இனி ஃபேஸ்புக்கிற்கும் செலவழிக்க வேண்டியிருக்கும்!

தேர்தல்: இனி ஃபேஸ்புக்கிற்கும் செலவழிக்க வேண்டியிருக்கும்!

-

பேஸ்புக்2014 நாடாளுமன்ற தேர்தலின் போது 160 தொகுதிகளில் பேஸ்புக் பயனர்கள் முடிவை தீர்மானிப்பவர்களாக இருப்பார்கள் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. ஐரிஸ் அறிவு அறக்கட்டளை என்ற அமைப்பும், இந்திய இணையம் மற்றும் மொபைல் கூட்டமைப்பும் சேர்ந்து இந்த ஆய்வை நடத்தியுள்ளன. கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளரின் வாக்கு வித்தியாசத்தையும் பேஸ்புக் பயனர்களின் எண்ணிக்கையையும் ஒப்பிட்டு தொகுதிகளை வகைப்படுத்தியிருக்கிறார்கள். வாக்கு வித்தியாசத்தின் அளவு பேஸ்புக் பயனரின் செல்வாக்கோடு இணையும் புள்ளி ஏது? இதை வைத்து எப்படி இவ்வளவு பெரிய ஆய்வு நடந்தது என்பது அவர்கள் விளக்க வேண்டிய கேள்வி.

உதாரணமாக தானே நாடாளுமன்ற தொகுதியில் 18 லட்சம் பதிவு செய்த வாக்காளர்கள் உள்ளனர். 2009 தேர்தலில் 7.5 லட்சம் பேர் வாக்களித்தார்கள். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் சஞ்சீவ் கணேஷ் நாயிக் 49,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இப்போது தானே தொகுதியில் 4.19 லட்சம் பேஸ்புக் பயனாளர்கள் இருக்கின்றனர். இது வெற்றி வாக்கு வித்தியாசத்தை விட சுமார் 10 மடங்கு அதிகம்.

இது போல 160 தொகுதிகளில் பேஸ்புக் பயனர்கள் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக இருப்பார்கள் என்று இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.

இந்தியாவில் 10 கோடி வாக்காளர்கள் பேஸ்புக்கில் இயங்குகிறார்கள். மகாராஷ்டிராவில் 21 தொகுதிகளிலும் குஜராத்தில் 17 தொகுதிகளிலும், உத்தரப் பிரதேசத்தில் 14 தொகுதிகளிலும் பேஸ்புக் பயனர்கள் தீர்மானமான சக்தியாக இருப்பார்கள் என்கிறது ஆய்வு. தமிழ்நாட்டில் கோவை, சேலம், நெல்லை, ஈரோடு, மதுரை, விழுப்புரம், விருதுநகர், சிவகங்கை, வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை, காஞ்சிபுரம் ஆகிய தொகுதிகளை இந்த வகையில் பட்டியலிடுகிறது ஆய்வறிக்கை. பின் தங்கிய மாவட்டமான விழுப்புரம் போன்றவற்றில் ‘பேஸ்புக்’தான் வெற்றியை தீர்மானம் செய்கிறது என்றால் அழுவதா சிரிப்பதா தெரியவில்லை.

செயல்படாமல் இருக்கும் பேஸ்புக் பயனர்களை இந்த ஆய்வு கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. ஆனாலும், அரசியல்வாதிகள் ‘சமூக வலைத்தளங்களை புறக்கணிக்க முடியாது என்பது உறுதியாகிறது’ என்கிறது ஆய்வறிக்கை.

பணம்இந்தியாவின் தேர்தல் திருவிழாவில் பங்கேற்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நோக்கம் இருக்கிறது. முன்னணி ஓட்டுக் கட்சிகளின் வேட்பாளர்கள், போட்ட பணத்தை பிடிக்க 5 ஆண்டுகள் பதவியில் உட்கார்ந்து விட கடுமையாக முயற்சிக்கிறார்கள். பேருக்கு வேட்புமனு போட்டு யாராவது ஒரு தரப்பிடம் அமவுண்ட் வாங்கி செட்டில் ஆகலாம் என்று போட்டி போடும் நான்கைந்து உள்ளூர் அரசியல் தலைகள் இருப்பார்கள்.

நோட்டீஸ், போஸ்டர் அடிப்பவர்கள், ஆட்டோ, வேன், கார் வாடகைக்கு விடுபவர்கள், பிரச்சாரம் செய்யப் போகிறவர்கள், நோட்டடீஸ் ஒட்டுபவர்கள், கொடி கட்டுபவர்கள், மைக் செட் வாடகைக்கு விடுபவர்கள் என்று உள்ளூரில் பல தரப்பினருக்கு பணம் பாயும்.

சமீப காலமாக, பத்திரிகைகளுக்கு பணம் கொடுத்து, சாதகமாக செய்தி போடுவதை உறுதி செய்யவும் செலவு பிடிக்கிறது.

தொழில்நுட்பமும், பொருளாதாரமும் முன்னேறி வரும் போது ஜனநாயகத்தின் பிரச்சார உத்திகளும் மாறிக் கொண்டு வர வேண்டியதுதானே. அந்த வகையில் இனிமேல் பேஸ்புக்கில் தமது பிரச்சாரத்தை நடத்தவும் கட்சிகள் ஒரு தொகையை இறக்க வேண்டியிருக்கும்.

அதற்கான ஒரு திட்டம் பேஸ்புக்கின் சேவைகளில் கிடைக்கிறது.

1. பேஸ்புக் விளம்பரங்கள் என்ற ஒரு சேவையை பேஸ்புக் வழங்குகிறது.

2. இந்த சேவையில் குறிப்பிட்ட வகை பயனர்களை இலக்காக வைக்கும் பிரச்சாரங்களை கட்சிகள் உருவாக்கலாம். உதாரணமாக, 18-25 வயதுடையவர்கள், 25-40 வயதுடையவர்கள் அல்லது சென்னையில் வசிப்பவர்கள், மதுரையில் வசிப்பவர்கள் என்று இலக்கை வரையறுக்கலாம்.

3. ஒவ்வொரு பிரச்சாரத்துக்கும் எந்தப் பிரிவை இலக்காக வைக்க வேண்டும் என்றும் எத்தனை நாட்கள் பிரச்சாரம் நடக்க வேண்டும் என்றும் தேர்வு செய்து கொள்ளலாம்.

4. பயனர்கள் பேஸ்புக்கில் பதிவு செய்த போது கொடுத்த தகவல்களின் அடிப்படையில் (வயது, இடம்) அவர்களுக்கு இந்த விளம்பரங்கள் காட்டப்படும்.

5. கிடைத்த லைக்குகளின் எண்ணிக்கைக்கேற்ப பேஸ்புக்கிற்கு பணம் கட்ட வேண்டும்.

6. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான லைக்குகளுக்கு முன்பணம் கட்டியவுடன் பிரச்சார பக்கத்தில் போடும் நிலைத்தகவல்கள் ஒவ்வொன்றும் இலக்கில் உள்ள பயனாளர்களின் டைம்லைனில் காட்டப்படும்

7. ஒவ்வொரு லைக்குக்கும் ரூ 0.20லிருந்து ரூ 5 வரை பேஸ்புக் வசூலிக்கும்.

இந்த கணக்கின்படி வேட்பாளர்கள் செலவழிப்பதற்கும் போட்ட முதலை திருப்பி எடுப்பதற்கும் இன்னும் பல லட்சம் அல்லது கோடிகளில் பட்ஜெட்டை விரிவுபடுத்த வேண்டியிருக்கும்.

போலி ஜனநாயக தேர்தலில் ஓட்டுப் பொறுக்குவதற்கு புதிய புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி அளிக்கும் முதலாளித்துவ அமைப்பிற்கு நிகர் அதுவேதான்.

மேலும் படிக்க
Facebook users could swing the results in 160 Loksabha constituencies