Saturday, May 10, 2025
முகப்புசெய்திஅம்பானிக்கு இசட்+ ! தமிழக மீனவருக்கு பாதுகாப்பு- !!

அம்பானிக்கு இசட்+ ! தமிழக மீனவருக்கு பாதுகாப்பு- !!

-

ரசியல்வாதிகள் முதலாளிகள் ஆகி விட்டார்கள். தயாநிதி மாறனும், சசிகலா குடும்பத்தினரும், ஸ்டாலின்/அழகிரி மகன்களும், பவார் குடும்பத்தினரும் சவுதாலா குடும்பத்தினரும் ராஜசேகர ரெட்டி குடும்பத்தினரும் அரசியலில் பதவியும் வகிக்கிறார்கள், தொழிலில் ஆயிரக் கணக்கான கோடிகள் சம்பாதிக்கவும் செய்கிறார்கள். அமைச்சர், சட்ட மன்ற உறுப்பினர், ஏன் சாதாரண வார்டு மெம்பர் கூட பந்தாவுடன் ஊர்வலமாக செல்கிறார்கள். எந்த அடுக்கில் இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்து, ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குப் போகும் போது,

  • தள்ளு தள்ளு தள்ளு என்று சத்தம் போட்டுக் கொண்டே வரும் படை புடை சூழ நடப்பது
  • சுழலும் விளக்கு வைத்த காரில் போவது,
  • காருக்கு முன்னும் பின்னும் பாதுகாப்பு வண்டிகள் போவது,
  • பாதுகாப்பு வண்டி வரிசைகளில் ஆயுதம் ஏந்திய காவலர்கள் போவது

என்று அவர்களது முக்கியத்துவம் பறைசாற்றப்படுகிறது.

ஆன்டிலா மாளிகை
ஆன்டிலா மாளிகை

இந்தியாவின் மிகப்பெரும் பணக்காரரான (சொத்து மதிப்பு சுமார் ரூ 1.1 லட்சம் கோடி) ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானிக்கு எல்லாம் இருந்தும் என்ன, இந்த அற்ப ஆசை இதுவரை நிறைவேறவில்லை.

ரூ 5,000 கோடி செலவில் கட்டப்பட்ட ஆன்டிலியா மாளிகையில் குறட்டை விடப் போகலாம், 6 லட்சம் லிட்டர் தண்ணீர் குடிக்கும் அதே மாளிகையில் பல் தேய்த்து, காலைக் கடன்கள் முடித்து, குளித்து கொள்ளலாம், ஐந்து/ஏழு நட்சத்திர ஹோட்டல்களில் தங்கலாம், பல கோடி ரூபாய் செலவில் கார்கள் வாங்கிக் கொள்ளலாம். தனி விமானத்தில் பறக்கலாம். தங்கத் தட்டில் சாப்பிடலாம், ஏன் தங்க நாற்காலியில் கூட அமர்ந்து கொள்ளலாம். சொந்தக் கப்பலில் உல்லாச பயணம் போகலாம்.

கிருஷ்ணா கோதாவரி பேசினில் இயற்கை வாயு எடுக்க தன் விருப்பப்படி அமைச்சர்களை ஆட்டிப் படைக்கும் வல்லமை அவருக்கு இருக்கலாம். ஆனால், அவர் முன்பு கை கட்டி வாய் பொத்தி நிற்கும் ஒரு சாதாரண அமைச்சருக்குக் கூட அரசாங்கம் சிறப்பு பாதுகாப்பு வழங்குகிறது. ரிலையன்ஸ் சில்லறை விற்பனைக் கடை, செல் நிறுவனம் என்று நாடெங்கும் சம்பாதித்தாலும், அப்படி குவியும் பணத்தில் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் புடைசூழ போக முடியாமல் என்ன இருந்து என்ன?

மகாராஷ்டிராவில் மட்டும் தொழில் செய்யும் சுண்டைக்காய் முதலாளி அஜித் பவாருக்கு மும்பை துணை முதல்வர் என்ற ஹோதாவில் சுழல் விளக்கு கொண்ட காரில் துப்பாக்கி பிடித்த அதிரடிப் படையினர் ஏறிய எஸ்கார்ட் வண்டிகளும் புடைசூழ போகும் பெருமை கிடைக்கிறது. பிச்சைக் காரர்களும், பராரிகளும் நடந்து செல்லும், சைக்கிளில் போகும், இரு சக்கர வண்டியில் விரையும் மும்பை தெருக்களில் காருக்கு முன்னும் பின்னும் துப்பாக்கி பிடித்த அதிரடிப் படையினர் ஏறிய வண்டிகளோடு பவனி வர வேண்டும் என்ற ஆசை அஜித் பவாரை விட பல நூறு மடங்கு பணக்காரரான, பல நாடுகளில் தொழில் செய்யும் முகேஷ் அம்பானியின் மனதுக்குள் உதிக்கக் கூடாதா என்ன?

இந்தியன் முஜாகிதீன் இயக்கத்தினர் அம்பானியைப் பார்த்து, ‘குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை ஆதரித்தால் உன்னை கொன்று போடுவேன்’ என்று கடிதம் மூலம் மிரட்டினார்களாம் (இந்தியன் முஜாகிதீன் என்ற அமைப்பை உருவாக்கினவர்கள் நல்லா இருக்கணும். எவ்வளவு பேருக்கு என்னென்ன வகையில அவங்க பயன்படுறாங்க). அதைத் தொடர்ந்து ஆன்டிலியா மாளிகையில் ஒரு சிறப்பு போலீஸ் ஸ்டேஷன் அமைக்கலாம் என்று மும்பை காவல் துறை பரிசீலித்திருக்கிறது.

அம்பானிமுகேஷ் அம்பானிக்கு இருக்கும் ஆபத்தின் அளவை அளந்து பார்த்த மத்திய உள்துறை அமைச்சகம் அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு அளிப்பதாக முடிவு செய்ததாம். ஆன்டிலியா மாளிகையில் மட்டும் பாதுகாப்பு கொடுத்தா போதுமா? அம்பானி எங்கெல்லாம் போகிறாரோ அங்கெல்லாம் அவருக்கு பாதுகாப்பு இருக்க வேண்டும். நாட்டின் முதல் குடிமகனை பாதுகாக்க முடியவில்லை என்று நாளைக்கு ஒரு அவப்பெயர் வந்து விடக் கூடாது. அப்புறம் அன்னிய முதலீட்டாளர்களை எல்லாம் இந்தியாவுக்கு வரும்படி எப்படி அழைக்க முடியும்?

மத்திய ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்த 20 அதிரடிப் படையினர் இன்ஸ்பெக்டர் தலைமையில் முகேஷின் பாதுகாப்புக்காக அனுப்பப்படுவார்கள்.

இந்த பாதுகாப்புக்கு ஆகும் செலவை (மாதம் ரூ 15 லட்சம்) முகேஷ் அம்பானியே ஏற்றுக் கொள்வதாக சொல்லிட்டாராம். தன் குடும்பத்துடன் அவர் தங்கியிருக்கும் ஆன்டிலா மாளிகைக்கு ஒரு மாதத்தில் சுமார் 6 லட்சம் யூனிட் மின்சாரம் பயன்படுத்தி ரூ 70 லட்சம் கட்டணம் கட்டுகிறாராம் முகேஷ். பிச்சைக் காசு ரூ 15 லட்சம் கூடுதல் செலவு என்பது அவரை அசர வைத்து விடப் போவதில்லைதான்.

மேலும் ரிலையன்ஸ் கணக்கிலிருந்து வந்தால் என்ன, மத்திய அரசின் கணக்கிலிருந்து வந்தால் என்ன எல்லாம் ஒன்றுதான் என்று முகேஷூக்கும் தெரியும் உள்துறை அமைச்சகத்துக்கும் தெரியும். ஒரு சட்டத்தின் ஒரு துணை விதியை மாற்றிப் போட்டு விட்டால் இந்த பாதுகாப்புக்கு செலவழிக்கும் தொகையில் பல ஆயிரம் மடங்கு ரிலையன்சுக்கு சம்பாதித்துக் கொடுத்து விட முடியாதா மத்திய அரசாங்கத்தால்!

இது ஜனநாயக அரசு இல்லை, இது மக்களுக்கான அரசு இல்லை, தரகு முதலாளிகளுக்கும் நிலப்பிரபுக்களுக்கும் அவர்களது சொத்துக்களை பாதுகாத்துக் கொள்ள பாரா போடும் கூலிப்படைதான் இந்த அரசமைப்பு என்பது இப்படி வெளிப்படையாக தெரிய ஆரம்பித்திருக்கிறது. இனி அம்பானி வழியில் பல்வேறு தரகு முதலாளிகளுக்கும் இத்தகைய அரசு பாதுகாப்பு விரிவுபடுத்தப்படும்.

இதற்கிடையில், கடலில் மீன் பிடிக்கப் போகும் தமிழக மீனவர்களுக்கு அடியும் உதையும் துப்பாக்கிச் சூடும் தீவைப்பும் கிடைக்கும் என்று இலங்கை இராணுவம் தினம் தினம் மிரட்டல் விடுத்தாலும் அவர்களுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வேண்டாம், சாதாரண 302 ரைபிள் பிடித்த கான்ஸ்டபிள் கூட பாதுகாப்பாக உடன் அனுப்பப்படுவதில்லை.

மீனவர்கள் தாக்கப்படும் போது முதல்வர் கடிதம் எழுத, வைகோ தொலைபேச, பிரதமர் அதில் கவனம் செலுத்துகிறார் என்ற பதிலே தாக்குதலுக்கு பரிகாரமாய் கிடைத்து விடுகிறது. முகேஷ் அம்பானியை இந்தியன் முஜாகிதீன் தாக்குவதாக கடிதம் எழுதினால் மகாராஷ்டிரா முதல்வர் கடிதம் எழுத, ராஜ் தாக்கரே தொலைபேச, மன்மோகன் சிங் அதை கவனித்து பரிகாரம் செய்து விடுவார்தான். ஆனால் முகேஷ் அம்பானி திறமையான தொழிலதிபர் என்பதால் முன் முயற்சியோடு செயல்பட்டு அரசின் பாதுகாப்பை விலைக்கு வாங்கியிருக்கிறார்.

சரி, நாமும் மீனவர்களிடம் சொல்லி மாதம் 15 இலட்சம் செலுத்தி அம்பானிக்கு உள்ளது போல இசட் பிரிவு பாதுகாப்பை மத்திய அரசிடம் வாங்கிவிடலாம் என்று சொன்னால் என்ன நடக்கும்?

மேலும் படிக்க
Mukesh Ambani to pay Rs 15 lakh a month for security cover