privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்ஆண்ட பரம்பரையால் அழிக்கப்படும் இந்திய விளையாட்டு !

ஆண்ட பரம்பரையால் அழிக்கப்படும் இந்திய விளையாட்டு !

-

நூற்று முப்பது கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா கடந்த வருட இறுதியில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டு ஆறு பதக்கங்களுடன் திரும்பியது. ஒவ்வொரு நான்காண்டுகளுக்கும் இந்திய அளவிலான ஊடகங்களில் இதற்காக வைக்கப்படும் ‘ஒப்பாரி’ இந்த முறை சிறு முனகல்களோடும் வழக்கமான சடங்குகளோடும் முடிந்து விட்டது. பெண்கள் குத்துச் சண்டைப் போட்டியில் பதக்கம் வென்ற மேரி கோமின் உருக்கமான வாழ்க்கைப் பின்னணி பற்றிய நெகிழ்வூட்டும் விவரிப்புகளோடு ஆங்கில ஊடகங்களின் சம்பிரதாயமான கடமைகள் ஓய்ந்தன.

இருப்பினும் இந்தியாவுக்கு ஆறு பதக்கம் என்பது நிச்சயம் அதிகம்தான். சமீபத்திய ஒலிம்பிக் எதிலும் இத்தகைய ’சாதனை’ இல்லை. எனினும் இந்த சாதனைச் செய்திகள் பேசப்படும் போதே இந்திய விளையாட்டுத் துறையின் அசிங்கமான முகத்தை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அம்பலப்படுத்திக் காட்டியது. இந்திய ஒலிம்பிக் சம்மேளனத்தை, அதன் தேர்தல்களில் நடந்துள்ள முறைகேடுகளுக்காக தடைசெய்திருக்கிறது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி. இந்திய ஒலிம்பிக் சம்மேளனத்தின் தேர்தல்களில் அரசியல் தலையீடு இருப்பதும் ஊடகங்களில் விவாதிக்கப்பட்டது.

இந்திய ஒலிம்பிக் சம்மேளனத்தின் கீழ் 39 விளையாட்டுக்களுக்கான தனிச்சிறப்பான சங்கங்கள் உள்ளன. ஒலிம்பிக் கனவுகளுக்காக அரசு ஒதுக்கீடு செய்யும் நிதியைத் தின்று கொழுக்கும் இவற்றில் சில சங்கங்களின் விளையாட்டுக்கள் ஒலிம்பிக் போட்டிகளிலேயே இடம்பெறாதவை. பல்வேறு சங்கங்களின் வாக்குகளைப் பெற்றுத் தான் இந்திய ஒலிம்பிக் சம்மேளனத்தின் பதவிகளைப் பெற முடியும். இதற்காகவே ஒலிம்பிக்கில் இல்லாத மேட்டுக்குடி துக்கடா விளையாட்டுக்களான ஸ்நூக்கர், பௌலிங் போன்ற விளையாட்டுக்களுக்குக் கூட சங்கங்களை அமைத்து அதை இந்திய ஒலிம்பிக் சம்மேளனத்தின் கீழ் இணைத்துள்ளனர்.

கல்மாடி கார்ட்டூன்
காமன்வெல்த் ஊழல் புகழ் கல்மாடிக்கும் விளையாட்டுக்கும் என்ன சம்பந்தம்?

தற்போது சம்மேளனத்தின் தலைவராக இருக்கும் அபய் சவுதாலா, ஹரியானாவின் முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலாவின் மகன். இவர் இதற்கு முன் இந்திய குத்துச்சண்டை சங்கத்தின் தலைவராக இருந்துள்ளார். பின் அதே பதவியை தனது மைத்துனரும் பி.ஜே.பி எம்.எல்.ஏவுமான அபிஷேக் மல்ஹோத்ராவுக்கு கொடுத்துள்ளார். அபய் சவுதாலாவின் சகோதரர் அஜய் சவுதாலா டேபிள் டென்னிஸ் சங்கத்தின் தலைவர். இவ்விரு சங்கங்களும் இந்திய ஒலிம்பிக் சம்மேளனத்தின் தேர்தல்களில் அபய் போட்டியிட்ட போது அவருக்குச் சாதகமாக ஓட்டளித்துள்ளன.அண்ணன் அபய் சவுதாலாவும், அப்பா ஓம்பிரகாஷ் சவுதாலாவும் ஆசிரியர் நியமன ஊழல் வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு இப்போது உள்ளே இருக்கின்றனர். கல்வியில் விளையாடிய இந்தக் குடும்பம்தான் விளையாட்டிலும் விளையாடுகிறது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த எஸ்.எஸ். தின்ட்ஸா தற்போது பஞ்சாப் ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர்; இவரது மகன் சைக்கிள் சங்கத்தின் தலைவர். படகுப் போட்டிகளுக்கான சங்கத்தின் தலைவராக 2008 வரை இருந்த கே.பி.சிங் தியோ என்கிற முன்னாள் காங்கிரஸ் அமைச்சர், தனது பதவிக் காலத்துக்குப் பின் அந்தப் பதவியை தனது மச்சானிடம் கொடுத்து வைத்தார்; அவரது பதவிக் காலத்துக்குப் பின் தற்போது கே.பி. சிங்கின் மனைவிடம் உள்ளது.

39 சங்கங்கள் – 33 மாநிலங்கள்;  சகலமும் செல்வாக்கான அரசியல்வாதிகள் மற்றும் முன்னாள் ஜமீன்தாரிகளான பழம் பெருச்சாளிகளின் குடும்பத்தினரின் பிடியில். இந்தச் சங்கங்களெல்லாம் தேர்தல் நடத்தி இந்திய ஒலிம்பிக் சம்மேளனத்தின் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுத்தால் எப்படியிருக்கும்? காமென் வெல்த் போட்டிகளில் கொழுத்த தேட்டையடித்து கையும் களவுமாக மாட்டிக் கொண்டிருக்கும் லலித் பென்னாட் இந்தத் தேர்தல்களின் மூலம் சம்மேளனத்தின் பொதுச் செயலாளராக தேர்வாகியிருக்கிறார் என்பதிலிருந்தே அதைப் புரிந்து கொள்ள முடியும்.

இவர்களெல்லாம் இத்தனை முனைப்பாக விளையாட்டுச் சங்கங்களின் பதவிகளைப் பெற முண்டியடிப்பது விளையாட்டை ஊக்குவிப்பதற்கோ வளர்ப்பதற்கோ இல்லை. இவர்களுக்கும் விளையாட்டுக்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. வேறு எதற்காகச் செய்கிறார்கள்?

இந்தியச் சமூகமும் அதன் அரசியல் அரங்கும் இன்னமும் நிலவுடமை மற்றும் தரகு முதலாளித்துவ வர்க்கங்களால்தான் ஆதிக்கம் செய்யப்படுகின்றன. இந்திய அளவிலும் மாநில அளவிலுமான அரசியல் அதிகாரப் போட்டிகளில் தலைவர்களின் வாரிசுகளே கோலோச்சுகின்றனர். பல்வேறு மாநிலங்களில் பழைய மன்னர்கள், ஜமீன்தார்கள் மற்றும் முதலாளிகளின் வாரிசுகளுமே அரசியல் பீடங்களை அலங்கரித்து வருகின்றனர். இவர்களுக்கு விளையாட்டு என்பது ஒரு அந்தஸ்து. கிராமப்புரங்களின் வாழ்ந்து கெட்ட பண்ணையார்கள் இன்றளவும் ரேக்ளா பந்தைய மைதானங்களின் மேடைகளையும் ஜல்லிக்கட்டு மைதான மேடைகளையும் அலங்கரிக்கிறார்கள் என்றால் இவர்களில் இருந்து செல்வாக்குப் பெற்று அரசியல் மையங்களின் அடுக்குகளின் பல்வேறு படிநிலைகளைக் கைபற்றி அமர்ந்திருப்பவர்களோ விளையாட்டுச் சங்கங்களின் பதவிகளை அலங்கரிக்கின்றனர்.

அந்தக்காலத்து ஜமீன்தாரிகளின் வீடுகளில் அவர்களின் ‘வீரத்தைப்’ பறைசாற்ற உரித்துப் பதப்படுத்தப்பட்ட புலித்தோல்களும் கரடித்தலைகளும் அலங்கரித்ததென்றால், அவர்களின் நவீன கால பிரதிநிதிகளின் வாரிசுகளான யுவராஜ் சிங்குகளும் அபிநவ் பிந்தராக்களும் தமது பங்களாக்களை பதக்கங்களால் அலங்கரிக்கின்றனர். அன்றைய மன்னர்களின் அரண்மனை மைதானத்தில் மல்லர்கள் போட்டியிட்டு தங்கச் சங்கிலிகளைப் பிச்சையாகப் பெற்றுச் சென்றனரென்றால், அந்த மன்னர்களின் வழித்தோன்றல்களான இன்றைய அரசியல்வாதிகள் விளையாட்டுச் சங்கங்களின் தலைவர்களாயிருந்து சான்றிதழ்களை வழங்குகின்றனர். திறமை உள்ள எந்த ஒரு விளையாட்டு வீரரும் கூட இந்த சங்கத் தலைவர்களின் ’ஆசி’ பெற்றிருப்பது அவசியம்.

மேற்கத்திய நாடுகளில் விளையாட்டு என்பது மனித உடலின் சாத்தியங்களைக் கடப்பது  பற்றிய அறிவியலாக ஓரளவுக்கு வளர்ந்துள்ளது. இந்தியாவிலோ அது பரிதாபத்திற்குரிய நிலையில் உள்ளது.

மேற்கத்திய விளையாட்டு
விஞ்ஞானத்தோடு வளரும் மேற்கத்திய விளையாட்டு

முதலாளித்துவ நாடுகளில் வர்த்தக நலனுக்கு உட்பட்டு ஒரு விளையாட்டு வீரனின் உருவாக்கத்தில் நவீன விஞ்ஞானத்தின் சகல சாத்தியங்களையும் பயன்படுத்துகிறார்கள். ஒரு ஓட்டப்பந்தய வீரன் என்றால், அவனது உடலின் தன்மை, தசை நார்களின் தன்மை, மரபணுக்களின் தன்மை என்பவற்றை அறிவியல்பூர்வமாக ஆய்ந்தறிந்து அதற்கேற்ற உணவுத் திட்டங்களையும் பயிற்சித் திட்டங்களையும் வகுக்கிறார்கள்.

வீரர்கள் பயிற்சி பெறுவதற்காக அமைக்கப்படும் ஓடுகளங்கள் விஞ்ஞானபூர்வமாக அமைக்கப்படுகின்றன. இவ்வீரர்களின் பாத அமைப்பு, கால் அமைப்பு ஆகியவற்றைக் கணக்கிட்டு இவர்களுக்காகவே பிரத்யேகமாக காலணிகள் மற்றும் காலுறைகள் தயாரிக்கப்படுகின்றன. விளையாட்டின் மேம்பாட்டுக்காக பன்னாட்டு நிறுவனங்கள் தமது விளம்பர நோக்கத்திற்காக ஒதுக்கும் தொகைதான் பயன்படுகிறது என்றாலும் ஏதோ ஒரு வகையில் அங்கே விளையாட்டு வளர்கிறது. மேலும் அரசால் ஒதுக்கப்படும் நிதி இது போன்ற விளையாட்டு அறிவியலின் ஆராய்ச்சிகளுக்காகவும் பிற உள்கட்டமைப்புகளுக்காகவுமே பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ஆளும் கும்பலின் வெட்டிப் பெருமிதங்களால் பீடிக்கப்பட்ட இந்தியாவிலோ நிலைமை தலைகீழாக உள்ளது.

சமீபத்தில் நடந்த காமென்வெல்த் போட்டிகளின் உள் கட்டுமானப் பணிகளுக்காக மத்திய அரசு ஒதுக்கீடு செய்த 2,500 கோடி ரூபாய்களில் சுமார் 1,325 கோடி ரூபாய்கள் தில்லி நகரை அழகுபடுத்தவும் சுவர்களுக்கு வெள்ளையடிக்கவும் துவக்க நிகழ்ச்சியிலும் இறுதி நிகழ்ச்சியிலும் பாலிவுட் நடிகைகளின் கவர்ச்சி நடனங்களுக்காகவுமே செலவிடப்பட்டுள்ளது. இதில் ஒரு சில நிமிடங்களுக்கு மட்டும் நடந்த ஷில்பா ஷெட்டியின் கவர்ச்சி நடனத்திற்காக சுமார் 75 லட்சம் செலவு செய்துள்ளார்கள். கோடிக்கணக்கான மக்கள் நாளுக்கு 20 ரூபாய் வருமானத்தோடும் பட்டினியோடும் பரிதவித்துக் கிடக்கும் போது, காமென்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை முன்வைத்து இந்திய அதிகார வர்க்கத்தினரின் அரசவைக் கோமாளிக் கூத்துகளுக்காக மக்களின் ரத்தப்பணம் அள்ளி இறைக்கப்பட்டது.

ஹாக்கி விளையாட்டுப் பயிற்சிகளில் பந்து வீசுவதற்காகப் பயன்படுத்தப்படும் கருவி பழுதடைந்து விட்டதால் கோல்ப் விளையாட்டில் பயன்படுத்தப்படும் பந்தை வைத்து பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது நடந்த விபத்தில் கோல் கீப்பர் பல்ஜித் சிங்கின் கண்ணில் அடிபட்டது. சுமார் இரண்டாண்டு காலம் போராடியும் அவரது பார்வையை முழுமையாக மீட்க முடியாமல் கொஞ்சம் கொஞ்சமாக ஓரங்கட்டப்பட்டு இன்று அவர் எங்கேயிருக்கிறார் என்னவானார் என்கிற தகவலே இல்லை.

ஒரு பக்கம் கார்ப்பரேட்டுகளின் படியளப்புகளால் கிரிக்கெட் கொழித்துக் கிடக்கும் நிலையில் இந்தியாவுக்காக ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் பெற்றுத் தந்த ஹாக்கியின் நிலை இன்று கோயில் பிச்சைக்காரனை விடக் கீழ்தரமானதாக உள்ளது. உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை என்பதோடு தேசிய அணி வீரர்களுக்கே அடிப்படையான பாதுகாப்பு உபகரணங்கள் கூட போதுமான அளவுக்கு இல்லை. ஹாக்கி உள்ளிட்ட எந்த விளையாட்டுக்களுக்கும் விஞ்ஞானபூர்வமாக பயிற்சியளிக்கத் தகுதியான பயிற்சியாளர்களும் இல்லை.

சீனா டேபிள் டென்னிஸ்
லண்டன் ஒலிம்பிக்சில் டேபிள் டென்னிஸில் வென்ற சீன வீரர்கள்.

சுமார் நூற்றுமுப்பது கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் வெறும் 1577 பயிற்சியாளர்களே உள்ளனர். இவர்களும் பழைய பாணியிலான பயிற்சி முறைகளை மட்டுமே கற்றறிந்தவர்கள். மாறாக சீனாவிலோ சுமார் 3.5 லட்சம் பயிற்சியாளர்களை அந்நாட்டின் அரசு உருவாக்கியுள்ளது. எழுபதுகளின் இறுதியில் இருந்து விளையாட்டை ஒரு அறிவியலாகக் கற்கும் பொருட்டு ஆண்டு தோறும் சுமார் 2000 தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளூர் பயிற்சியாளர்களை ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பி திட்டமிட்ட ரீதியில் அவர்களை தயார்படுத்தியுள்ளனர்.

இன்றைய நிலையில் சுமார் 48 கோடி சீனர்கள் (மக்கள் தொகையில் 37 சதவீதம்) ஏதாவது ஒரு விளையாட்டோடு இணைந்திருக்கின்றனர். இதன் விளைவு 84-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் 32 பதக்கங்கள் பெற்ற சீனா, கடந்த ஆண்டு 88 பதக்கங்களை வென்றுள்ளது.

இந்தியாவின் அரசியல் அதிகார வர்க்கத்தினரின் பிடியில் சிக்குண்டு கிடக்கும் விளையாட்டுத் துறையில் சாமானிய நடுத்தர வர்க்கக் குடும்பப் பின்னணியிலிருந்து வரும் ஒரு வீரர் பங்கேற்று தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்பது என்பது குருட்டு முடவன் இமயமலையில் ஏறுவதற்கு ஒப்பான சாதனை. தலித்துகள் உள்ளிட்ட உழைக்கும் மக்களுக்கோ இந்தக் கனவுகள் கற்பனைக்கெட்டாதவை. அன்றாட பிழைப்பும் வாழ்வும் மூன்று வேளை உணவுமே போராட்டமாக இருக்கும் ஒரு நாட்டில் விளையாட்டுக்களில் பங்கேற்க நேரமோ மனமோ எப்படியிருக்கும்? இவ்வளவோடும் சேர்த்து மொத்த சமூகமும் பார்ப்பனிய ஆணாதிக்க விழுமியங்களில் ஊறிப் போயிருக்கும் நிலையில் சாதாரண உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த பெண்கள் விளையாட்டுக்களில் பங்கேற்பது என்பதே கற்பனைக்கும் எட்டாத விசயம்.

இத்தனை தடைகளையும் தாண்டி விளையாட்டுக்களில் அபூர்வமான நட்சத்திரங்களாய் ஒளிவீசத் துவங்கும் சாதாரண குடும்ப பின்னணி கொண்ட ஒரு சிலர் தமது வாழ்வின் மிக முக்கியமான இளமைப் பருவத்தை மூன்றாம் தர மைதானங்களில் விரயமாக்கி விட்டு மாநில அளவிலோ அதிகபட்சம் தேசிய அளவிலோ சில பதக்கங்களுடனும் ரயில்வேயில் டிக்கெட் பரிசோதகர் வேலையுடனும் திருப்திப் பட்டுக் கொள்ள வேண்டியிருக்கிறது. இவர்களிடம் இயல்பாக இருக்கும் திறமைகளை இந்த அமைப்பு முறையே ஒரு கட்டத்திற்கு மேல் அழித்தொழித்து விடுகிறது.

மானியங்களுக்காகவும் சலுகைகளுக்காகவும் நடையாய் நடந்து சலிப்பும் சோர்வுமுற்று விளையாட்டிலிருந்தே விலகுகிறார்கள். கடந்த ஆண்டு நடந்த தேசிய அளவிலான ஒலிம்பிக் போட்டிகளில் பெண்களுக்கான ஓட்டப்பந்தையத்தில் 11.85 நொடிகளில் நூறு மீட்டர் தூரத்தைக் கடந்த ஆஷா ராய் இன்றைய தேதியில் இந்தியாவிலேயே மிக வேகமான பெண். ஆஷா ராய் தற்போது மேற்கு வங்க மாநிலத்தின் சிங்கூர் மாவட்டத்தில் உள்ள ஞான்ஷாம்பூர் கிராமத்தில் சாதாரண குடிசை வீட்டில் வசிக்கிறார். இவரது தந்தை போலாநாத் ராய் வீடு வீடாக காய்கறிகள் விற்று மாத வருமானமாக ஈட்டும் 3,000 ரூபாயில் தான் ஆறு பேர் கொண்ட அவர்கள் குடும்பம் பிழைத்துக் கொண்டிருக்கிறது.

ஒரு தரமான டென்னிஸ் மட்டையின் விலை 12,000 ரூபாய்கள். விளையாட்டு வீரர்கள் பயன்படுத்தும் காலணியின் விலை சுமார் 3,000. இவை போக, சரிவிகித ஊட்டச்சத்து உணவு, சிறப்பு உணவுகள், பயிற்சிக் கட்டணம், சர்வதேச வசதிகள் கொண்ட மைதானங்களுக்கு நுழைவு கட்டணம் என்று அத்தியாவசியமாகச் செய்யப்படும் செலவுகளே விளையாட்டின் தரத்தைப் பொறுத்து மாதம் ஒன்றுக்கு பல ஆயிரங்களில் இருந்து சில லட்சங்கள் வரை ஆகலாம். இது போக, ஒரு மாவட்ட அளவிலான அணியிலோ மாநில அணியிலோ இடம் பிடிப்பதற்கு தேவைப்படும் சிபாரிசுகளும் அளிக்கப்படும் லஞ்சங்களும் தனி.

ஆக, இந்த வாய்ப்புகளும் சாத்தியங்களும் மேட்டுக்குடியினருக்கும் நகர்ப்புற மேல் நடுத்தர வர்க்கத்தினருக்குமே சாத்தியம். இத்தனை முதலீடுகள் செய்து தேசிய அளவிலான போட்டிகளுக்கான அணிகளில் தமது பிள்ளைகளைத் திணித்து விடும் பெற்றோர் போட்ட காசை எடுக்க வேண்டுமென்றால் அது இந்தியாவைப் பொருத்தவரையில் கிரிக்கெட்டில் மாத்திரமே சாத்தியம்.

தன்ராஜ் பிள்ளை
தன்ராஜ் பிள்ளை

இந்தியாவில் வேறு விளையாட்டுக்களே இல்லையெனும் வகையில் ஆளும் வர்க்கமும் அதன் ஊடகங்களும் கிரிக்கெட்டை ஒரு போதையைப் போல் பரப்பியுள்ளனர். இதற்குக் கிடைக்கும் அங்கீகாரமும் வருமானமும் இந்தியாவில் வேறு எந்த விளையாட்டுக்கும் கிடைப்பதில்லை. கிரிக்கெட்டிலும் சச்சின், தோனி போன்ற ஒருசில விதிவிலக்குகள் தவிர்த்து பெரும்பாலானோர் வசதியான குடும்ப பின்னணியில் இருந்தே வருகின்றார். இதற்கு விதிவிலக்கானவர்களும், அவர்களின் தோற்றப் பொலிவின் தன்மைக்காக முதலாளிகளது விளம்பரங்களை வைத்து முன்னேறுகிறார்கள். பலர் காணாமல் போகிறார்கள்.

சர்வதேச போட்டிகளில் குறிப்பிடத்தக்க சாதனைகள் ஏதும் புரிந்திராத சானியா மிர்ஸாவுக்குக் கிடைக்கும் அங்கீகாரமும் புகழும் அவரை ஒரு  கவர்ச்சியான பெண்ணாக விளம்பரங்களில் காட்டமுடியும் என்பதற்க்காகத்தான். ஹாக்கி மைதானங்களில் சூறாவளியாய்ச் சுழன்றடித்து இந்திய ஹாக்கியின் மதிப்பை சர்வதேச அளவில் நிலைநாட்டிய தன்ராஜ் பிள்ளை இன்று காணாமல் போனது ஏன்? ஏனெனில், கார்ப்பரேட்டுகளுக்குத் தேவைப்படும் விற்பனைப் பிரதிநிதிகளாக இருக்கத் தேவையான முகவெட்டுடைய வீரர்கள் தவிர்த்து பிறருக்கு அங்கீகாரமோ புகழோ கிடைப்பதில்லை.

கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை விளம்பர ஒப்பந்தங்களால் ஒளியூட்டப்பட்டுப் பிரகாசிக்கிறது. பிற விளையாட்டுக்களோ கார்ப்பரேட்டுகளின் வியாபார நோக்கிற்குப் பயன்படாத குப்பைகளாக கருதப்பட்டு அரசினாலும் புறக்கணிக்கப்படுகின்றன; திறமையான வீரர்கள் அடிப்படை வசதிகள் கூட செய்து தரப்படாமல் தீண்டத்தகாதவர்கள் போல் நடத்தப்படுகின்றனர். இந்த வீரர்கள் தங்கள் சாதனை வாழ்வின் உச்சத்திலிருந்த போதும் சரி ஓய்வு பெற்ற பின்னும் சரி, புறக்கணிப்பு எனும் துயரத்தை மட்டுமே ருசித்துள்ளனர். மேற்குலகில் தொழில் முறை விளையாட்டுக்களில் கார்ப்பரேட்டுகளின் வியாபார நலன் இருந்தாலும் கீழ் மட்டத்தில் விளையாட்டு வீரர்கள் உருவாவதற்கான கட்டுமான வசதிகளை அந்நாட்டு அரசாங்கங்கள் உத்திரவாதப்படுத்தியுள்ளன; விளையாட்டு என்பது அடிப்படை ஆரோக்கியம் என்பதோடு இணைத்துப் பார்க்கப்படுகிறது.

இவையனைத்தோடும் சேர்ந்து இந்தியாவுக்கே உரித்தான பிரத்யேகமான பார்ப்பனிய சாதி சமூகமும் சேர்ந்து கொள்கிறது. ஒருபுறம் பார்ப்பன சாதியவாதத்தின் வேர் அகமண முறைகளால் தன்னை உறுதிப்படுத்திக் கொண்டு மக்களை நோஞ்சான்களாகப் பெற்றுத் தள்ளுகிறது; இன்னொருபுறம் ஆகப் பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் சாதியின் பெயரால் கல்வி, மருத்துவம், சுகாதாரம், தொழில் என்று வாழ்வின் சகல அம்சங்களில் இருந்தும் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர். விளையாட்டின் அடிப்படையே குழு உணர்வையும் அதன்வழி சமூக உணர்வையும் உண்டாக்குவதே. இங்கே சமூகமே பெட்டி பெட்டியாகப் பிளவுண்டு கிடக்கும் போது விளையாட்டு உணர்வு மட்டும் அந்தரத்திலிருந்து உருவாக முடியாது.

இந்திய விளையாட்டுத் துறையைப் பீடித்து ஆட்டும் பக்கவாதம் என்பதை வெறும் அரசியல் லஞ்ச ஊழல் என்பதோடு மட்டும் சுருக்கிப் பார்க்க கூடாது. விளையாட்டுத்துறை மேட்டுக்குடியினரின் பெருமிதமான பொழுது போக்காகவும், அதில் பதவிகள் பெறுவது நிலபிரபுத்துவ கால அந்தஸ்தின் நவீன அடையாளமாகவும் நீடிக்கும் நிலையில், உள்கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்காமல் இருப்பது வெறும் நிர்வாக ரீதியிலான சில்லறைப் பிரச்சினையல்ல. மொத்த சமூகமும் வர்க்கம் மற்றும் சாதியின் அடிப்படையில் பிரிந்து அதன் கீழடுக்குகளில் உள்ளோர் பிழைக்க வழியின்றித் தவித்து வரும் நிலையில் நூற்று முப்பது கோடி மக்களுக்கும் ஆறு பதக்கங்கள் என்பதே இமாலய சாதனை.

இந்திய சமூகம் கீழிருந்து மேல் வரை முற்றிலுமாக மாற்றியமைக்கப்பட்டு எளிய மக்களுக்கும் ஜனநாயகம் சென்றடைந்து அவர்களின் அடிப்படையான வாழ்க்கைக்கு ஒரு உத்திரவாதம் கிடைக்கும் போது தான் கல்வி, விளையாட்டு, விஞ்ஞானம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நம்மால் சாதனைகளைப் படைக்க முடியும். சாதனையாளர்களை அடையாளம் காண முடியும். அதுவரையில் ஆஷா ராய் பி.டி உஷா பல்ஜித் சிங் தன்ராஜ் பிள்ளை போன்ற அடையாளமற்ற எண்ணற்றோரின் உழைப்பும் அவர்கள் சிந்தும் வியர்வையும் விழலுக்கு இறைத்த நீர் தான்.
________________________________________________________________________________
புதிய கலாச்சாரம் – மார்ச் 2013
________________________________________________________________________________

  1. அருமையான கட்டுரை. இந்திய ஆதிக்க சக்திகளின் உண்மை முகத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

    \\இத்தனை தடைகளையும் தாண்டி விளையாட்டுக்களில் அபூர்வமான நட்சத்திரங்களாய் ஒளிவீசத் துவங்கும் சாதாரண குடும்ப பின்னணி கொண்ட ஒரு சிலர் தமது வாழ்வின் மிக முக்கியமான இளமைப் பருவத்தை மூன்றாம் தர மைதானங்களில் விரயமாக்கி விட்டு மாநில அளவிலோ அதிகபட்சம் தேசிய அளவிலோ சில பதக்கங்களுடனும் ரயில்வேயில் டிக்கெட் பரிசோதகர் வேலையுடனும் திருப்திப் பட்டுக் கொள்ள வேண்டியிருக்கிறது. இவர்களிடம் இயல்பாக இருக்கும் திறமைகளை இந்த அமைப்பு முறையே ஒரு கட்டத்திற்கு மேல் அழித்தொழித்து விடுகிறது\\

  2. “இன்றைய நிலையில் சுமார் 48 கோடி சீனர்கள் (மக்கள் தொகையில் 37 சதவீதம்) ஏதாவது ஒரு விளையாட்டோடு இணைந்திருக்கின்றனர். ”

    “விளையாட்டின் அடிப்படையே குழு உணர்வையும் அதன்வழி சமூக உணர்வையும் உண்டாக்குவதே.”

    நல்ல பதிவு. வாழ்த்துகள்!

    ஒவ்வொருவரும் ஏதாவதொரு விளையாட்டை தெரிவு செய்து கொண்டு அதில் ஈடுபடுவதன் மூலம் அவரவர் உடல் நலத்தைப் பாதுகாத்துக் கொள்ள விளையாட்டு பெரிதும் உதவும். அதே வேளையில் குழு உணயர்வையும் சமூக உணர்வையும் விளையாட்டு வளர்க்கும். அதற்காகத்தான் விளையாட்டை ஊக்குவிக்க வேண்டும். இரசனைக்காகவோ சாதனைகளுக்காகவோ அல்ல.

    ஆயிரம் நாட்கள் தியானப்பயிற்சி செய்தாலும் கிடைக்காத மனதை-சிந்தனையை ஒரு நிலைப்படுத்தும் ஆற்றலைக் கொடுக்கிறது விளையாட்டு.
    விளையாட்டு இரசனைக்கானதா?
    http://hooraan.blogspot.in/2010/10/blog-post.html

  3. ஒரு பெண்ணை, நீ பெண்ணல்ல, ஆணுமல்ல என்று பகிரங்கமாகச் சொன்னால் அந்த பெண்ணின் மனம் உள்ளாகும் நிலை என்ன? இந்த நாடே, சாந்தி என்ற தமிழ்நாட்டு வீராங்கனையை பாலின சோதனை என்று அவமானப் படுத்தியது. மிக வருத்தம், தாங்க முடியாத சோகம். திருமணத்திற்கு முன் அந்த பாலின சோதனையை செய்து கொள்ள நீங்கள் தயாரா ? முடிவு சாந்திக்கு ஏற்பட்டது போல் தான் இருக்கும். தமிழ்நாட்டு விளையாட்டு ஆணையம் என்ன செய்தது? ஒலிம்பிக்கிற்கு தமிழ்நாட்டிலிருந்து ஒரு வீரரைக் கூட அனுப்ப முடியாத ஆணையம்.

    http://vaidheeswaran-rightclick.blogspot.in/2012/08/blog-post.html

  4. //சமீபத்தில் நடந்த காமென்வெல்த் போட்டிகளின் உள் கட்டுமானப் பணிகளுக்காக மத்திய அரசு ஒதுக்கீடு செய்த 2,500 கோடி ரூபாய்களில் சுமார் 1,325 கோடி ரூபாய்கள் தில்லி நகரை அழகுபடுத்தவும் சுவர்களுக்கு வெள்ளையடிக்கவும் துவக்க நிகழ்ச்சியிலும் இறுதி நிகழ்ச்சியிலும் பாலிவுட் நடிகைகளின் கவர்ச்சி நடனங்களுக்காகவுமே செலவிடப்பட்டுள்ளது//.தலித் மக்களுக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த ரூபாய் 780 கோடி களும் கூட காமன் வெல்த் விளையாட்டுப்போட்டிக்காக மடை திருப்பி விடப்பட்டது என்ற முக்கிய விஷயத்தை பதிவு செய்ய வேண்டியது நமது கடமையாக இருக்கிறது…

  5. we are teaching our children not to play, but instead we encourage them to “watch” it.. then what will happen? we dont expect them to participate in olympic but atleast to maintain their health we’ve to allow them to play.automatically they’ll find out their specialty and decide whether to master their talents is necessary. am i right sir

  6. Superb Article, Glad to see such stuff in Puthiya Kalacharam. The example of Sania & the great Dhanraj is fantastic.

    …Not very old, just few years back it was very difficult to even talk about sports to people associated with Puthiya Kalacharam & Puthiya Jananayagam because they always saw it a Capitalist platform but failed see that as a puppet in Capitalist hands with a fudel flow. Now they write about problems in Indian sports that too in an accurate comparison with European sports.

    A welcome change. Happy & Thanks.

Leave a Reply to Arjunan Narayanan பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க