privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கவேதாரண்யம் டாஸ்மாக் கடையை மூடு ! முற்றுகை ! !

வேதாரண்யம் டாஸ்மாக் கடையை மூடு ! முற்றுகை ! !

-

வேதாரண்யம் – கீழ ஆறுமுகக் கட்டளை குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுபானக் கடையை இழுத்து மூடக் கோரி விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பில் முற்றுகை – சாலை மறியல்

வேதாரண்யம் – கீழ ஆறுமுகக் கட்டளை குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றக் கோரி மனு கொடுத்துப் பார்த்து வெறுப்படைந்த மக்கள் திரண்டெழுந்து விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தலைமையில் ஏறத்தாழ 200 பேர் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு, வேதாரண்யம்-திருத்துறைப்பூண்டி சாலையில் மறியல் செய்தனர்.

இதனை ஒட்டி 150 போஸ்டர்கள் நகர் முழுவதும் ஒட்டியும், 1000 துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்தும் பிரச்சாரம் செய்யப்பட்டது. பெண்களும், இளைஞர்களும், மாணவ-மாணவியரும் பெருமளவில் பங்கேற்ற இந்த போராட்டத்தை, “பேச்சுவார்த்தை” என்ற நாடகத்தின் மூலம் கலைத்து விடலாம் என்ற நோக்கத்தோடு வந்த வட்டாட்சியரிடம்

மக்கள், “மதுக்கடையை உடனடியாக அகற்றும் வரை சாலை மறியலைக் கைவிட மாட்டோம்” என்ற உறுதியாகக் கூற,

மேலதிகாரிகளிடம் பேசிய வட்டாட்சியர், “ஒரு மாதத்தில் கடையை இடம் மாற்றம் செய்கிறோம், இல்லையேல் மூடி விடுகிறோம்” என கூறினார்.

“ஒரு மாதம் என்பது அதிகம், இப்போதே மதுக்கடையை எடு, இல்லையேல் போராட்டம் தொடரும்” என்று கூற,

பின்னர் “20 நாட்களில் கடையை இடம் மாற்றம் செய்கிறோம்” என்று வட்டாட்சியர் வாய் மொழியாக உறுதியளித்ததை ஏற்காமல்,

“எழுத்து பூர்வமாக எழுதிக் கொடு” என்ற மக்கள் உறுதியின் முன் வட்டாட்சியரின் அதிகாரம் பணிந்தது.

அதே இடத்திலேயே “20 நாட்களில் கடை இடமாற்றம் செய்யப்படும் – இல்லையேல் மூடப்படும்” என்று எழுதி கையெழுத்திட்டுக் கொடுத்தார்.

அப்போது அவ்வழியே வந்த அதிமுக எம்எல்ஏ-வின் வாகனத்திற்கு வழி விடாமல் மறித்த மக்கள், எம்எல்ஏ-விடம் கேள்வி எழுப்ப, காரில் இருந்து இறங்கிய அவர் மக்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் தாசில்தாருடன் போய் நின்று கொண்டார்.

ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்த முற்றுகை, சாலை மறியல் போராட்டத்தில் வேதாரண்யம் பகுதி விவசாயிகள் விடுதலை முன்னணி வட்டார அமைப்பாளர் தனியரசு, பட்டுக்கோட்டை விவசாயிகள் விடுதலை முன்னணி வட்டார செயலாளர் மாரிமுத்து, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியைச் சேர்ந்த மாணவர்களும், இளைஞர்களும், மனித உரிமைப் பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் ஜெயபாண்டியன், அருள் ஆகியோரும் பங்கேற்றனர்.

மதுக்கடையை 20 நாட்களுக்குள் அகற்றாவிடில் அடுத்தக் கட்ட போராட்டத்திற்கு அப்பகுதி மக்கள் தயாராகி வருகின்றனர்.

“எத்தனையோ முறை தாசில்தாரிடம் மனு கொடுக்க போன போது கண்டுக்காத அவர், ஒற்றுமையாக அமைப்பாக திரண்டு போராடுகின்ற போது, நம்மைத் தேடி வந்து எழுதி கொடுத்துச் சென்றது” நம்பிக்கை ஏற்படுத்துவதாகவும், போராட்டங்களில் பங்கேற்பதன் தேவையை உணர்த்துவதாகவும் பெண்கள் கூறினர்.

[படங்களை பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

செய்தி
விவசாயிகள் விடுதலை முன்னணி,
வேதாரண்யம்