privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்சாதி – மதம்தப்பு கொட்ற பயலுக்கு தாளத்த பத்தி என்னா தெரியும் ?

தப்பு கொட்ற பயலுக்கு தாளத்த பத்தி என்னா தெரியும் ?

-

நான் சின்ன வயசா இருக்கும் போது, ஒரு நாள், தாளம் தட்டிப் பாட்டு பாடிக்கிட்டே ஒருவர் வீடு வீடா பிச்சை எடுத்துகிட்டு வந்தார். அவர் பின்னாலேயே பாட்டை கேட்டுக்கிட்டே நெறையா பசங்க போனாங்க. நானும் போனேன். ஒரு வீட்டில் அவர் பாடிக்கிட்டு இருக்கும் போது, பக்கத்து வீட்டுக்காரர் வந்து தென்னை அடி மட்டையை எடுத்துக்கிட்டு அடி அடின்னு அடிச்சாரு, அடி தாங்காமல் ஓடி ஒரு மரத்தடியில் உக்கார்ந்து அழுதுகிட்டே இருந்தாரு. பிறகு பக்கத்துத் தெருவுல போய் பாட ஆரம்பித்தார்.

விவசாயக் கூலிகள்
வேலைக்கு வாடான்னா வேற வேல இருக்குதுங்குறானுவ, தெருவுக்குள்ள வந்தா துண்ட தோள்ள போட்டுகிட்டே வர்றானுவ,

அடித்தவர் காங்கிரசுகாரர், மூப்பனாருக்கு கூட்டாளி. தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரு ஊரைச் சேர்ந்தவர். முக்குலத்தோர் என வகைபிரிக்கப்பட்டுள்ள கள்ளர் சாதியைச் சேர்ந்தவர். சாதி வெறிபிடித்தவர்.

அந்த அப்பாவியை அடித்துவிட்டு, திண்ணையில் ஒக்காந்து கொண்டு, வெத்தல பாக்கு போட்டுகிட்டே, அக்கம் பக்கம் கேக்குறமாதிரி பேச ஆரம்பித்தார்.

”அம்மா, தாயேன்னு பிச்சையெடுத்தவனுவ இப்ப பாட்டு பாடிகிட்டு வாரான். வீட்டுல உள்ள பொம்பளைங்க இளிச்சுகிட்டு வந்து கேக்குறாளுங்க, இவன சொல்லி குத்தமில்ல, இசையமைக்கிறேன்னு சொல்லிக்கிட்டு, இளையராஜான்னு வந்துருக்கானே அவன ஒதைக்கனும் மொதல்ல. பிச்சையெடுக்கப் பாட்டுப் பாட்றாப்போல ”ஆத்தா ஆத்தோரமா வர்ரியா”ன்னு பொம்பளைய கூப்புட்றான்.

ஊருக்குள்ள டீக்கடைக்குப் போனா அவம்பாட்டுதான் போட்றாய்ங்க, பஸ்லப் போனா அவம்பாட்டத்தான் போட்றாய்ங்க, கல்யாண வீடு, கோயிலு திருவிழா, எங்க பாத்தாலும் அவம்பாட்டத்தான் கேக்குறாய்ங்க. பறப்பய பாட்டு போட்றானாம், இவங்க ரசிக்கிறாய்ங்கலாம். தப்புகொட்ற பயலுக்கு தாளத்த பத்தி என்னா தெரியும், செத்த மாட்ட உரிச்சு தப்புக் கட்டி எடுத்துட்டு வந்துட்டான் தாளம் போட்றதுக்கு.

பறப்பயலப் பெரியாளா ஆக்குறோமேன்னு, நம்ம ஆளுங்களுக்கு வெக்கமே கெடையாது. எப்புடியோ இளையராஜாவ வளத்துட்டாய்ங்க, இன்னம் பறப்பயல தப்படிக்க கூப்புட்டா தாளத்தப்பத்தி பேசப்போறானுவ, நம்ம ஆளு பெரிய இடத்துல இருக்கான், இவனுவளயெல்லாம் நாம மதிக்க வேண்டியது இல்ல, நம்ம லெவலே மாறப்போவுதுன்னு தலக்கனம் புடிச்சு திரிய போறானுவ. இதுதான் நடக்கப் போவுது.

ஏற்கனவே நம்ம பறப்பயலுவ சொல்ற பேச்ச கேக்க மாட்டேங்குறானுவ. வேலைக்கு வாடான்னா வேற வேல இருக்குதுங்குறானுவ, தெருவுக்குள்ள வந்தா துண்ட தோள்ள போட்டுகிட்டே வர்றானுவ, ஆளு நடமாட்டம் இல்லாத நேரமா பாத்து கோயிலு கொளத்துல குளிக்குறானுவ, நம்ம ஆளுவள பாத்து சைக்கிள்ள வர்றீங்களாய்யான்னு ஏத்திக்கிட்டு வர்றானுவ, இவனுவளும் வெக்கமே இல்லாம ஏறிகிட்டு வர்றானுவ, இப்படியே போனா பொண்ணு கொடுங்க நீங்களும் நாங்களும் ஒன்னுன்னு சொன்னாலும் சொல்லப் போறானுவ, ஆச்சர்யப்பட்றதுக்கு ஒன்னுமில்ல” என்றார்.

கிராமத்துல வாழ்ந்த எனக்கு அந்த வயசுல இளையராஜான்னா யாருன்னே தெரியல. ஆனா இளையராஜாவ பறப்பயன்னு சொன்னது மட்டும் ஞாபகம் இருந்தது. அந்த சாதி குறித்து அவர் திட்டியது எனக்கு ஞாபகம் இருந்தது. அந்த வயசுலயும் தாழ்த்தப்பட்டவங்கன்னா எப்படியெல்லாம் நடத்துவாங்கன்னு தெளிவா தெரிஞ்சுருந்துச்சு. அந்த அளவுக்கு ஆதிக்க சாதி வெறியரான அந்த ஆளு, பச்சபுள்ளை மனசுலயும் பதியிற மாதிரி சாதி வெறியோட நடந்து கிட்டான் என்பதுதான் உண்மை.

இது நடந்து இருவத்தஞ்சு வருசத்துக்கு மேல ஆச்சு. ஆனால் இன்னைக்கும் கிராமங்களில் ஆதிக்க சாதி வெறியர்களிடம் இருந்து, தலித்துக்கள் நிலை அப்படி ஒன்னும் மாறிடல. வெளிப்படையா சாதி வெறியை காட்ட முடியலன்னாலும் சம்பிரதாயத்தை விட்டுட கூடாது என்ற அடிப்படையில் சாதி வெறி இருந்துகிட்டுதான் இருக்கு. சாதி தீண்டாமை கொடுமையை உருவாக்கி அவற்றை நியாயப்படுத்தும் ஆதிக்க சாதி வெறியர்கள் கூறும் வார்த்தைதான் சம்பிரதாயம்.

சாதிக் கொடுமைக்கு எதிராக பேசுபவர்கள், தீண்டாமை, தனிக் குடியிருப்பு, தனிச் சுடுகாடு தனிக் குவளை, என்ற அடிமை நிலையைப் பற்றி நிறைய பேசுகிறார்கள். அதைத் தாண்டி அன்றாட வாழ்க்கையில் அவர்கள் எவ்வாறு ஒடுக்கப்படுகிறார்கள், சுய மரியாதை இல்லாமல் நடத்தப்படுகிறார்கள் என்பது பலருக்கும் தெரியாது.

ஒரு ஆதிக்க சாதி குடும்பத்துக்கு தலித்து அடிமையாய் என்னென்ன வேலை செய்ய வேண்டும் என்பதை வகை வாரியாக பிரித்து வைச்சிருக்காங்க. அப்படி பிரிக்கப்பட்ட குடும்பத்துக்கு கல்யாணம் முதல் கருமாதி வரைக்கும் அடிமை வேலை செய்யணும்.

இருவது முப்பது குடும்பம் கொண்ட வகையறாவுக்கு நாலு அஞ்சு தலித் குடும்பம் அடிமையா இருக்கணும். இப்படி வகை பிரிக்கப்பட்ட ஆதிக்க சாதியின் முப்பது குடும்பங்களில் நாலு அல்லது அஞ்சு பணக்காரங்க இருப்பாங்க. மீதமுள்ள அனைவரும் சாதாரண விவசாயி அல்லது கூலி விவசாயியாகத்தான் இருப்பாங்க. தலித் குடும்பத்தை வருச பண்ணையாளா பணக்காரன்தான் வச்சுக்குவான். உழைப்பின் தேவையும் அவனுக்குதான் இருக்கும். ஆதிக்க சாதியில் சாதாரண விவசாயிக்கு ஆள் வச்சு செய்ற அளவுக்கு வேலை இருக்காது. ஆனால் இவர்களுக்கும் மேல் சாதிக்கு உரிய அடிமை சம்பிரதாய வேலையை செய்ய வேண்டும்.

ஆதிக்க சாதியின் வீட்டு பண்ணையாளா இருக்குறவங்க, விவசாய வேலைக்கி கூலி வாங்கக் கூடாது. வருசத்துக்கும் வேலை பாத்துட்டு கடைசியா கொஞ்சம் நெல்லு கொடுப்பாங்க. அதுதான் வருசக் கூலி. அது அவங்க உழைப்புக்கு ஏத்த ஊதியமா இருக்காது. பண்ணைக்கு இருக்குறவங்க, முதலாளி வீட்டு வேலை இல்லாத அன்னைக்கு வேற யாருக்காவது கூலிக்கு வேலைக்குப் போகலாம்.

வகை பிரிக்கப்பட்ட அத்தனை தலித்துக் குடும்பமும், பணக்கார ஆதிக்க சாதி வயல் வேலைக்கு வருசம் பூராவும் வந்தாகணும். அதுக்கும் கூலி கிடையாது, கலம் பொடைக்கிறது மட்டும் தான். கதிரறுத்து அடிக்குற நெல்ல அள்ளுனது போக கீழ சிந்திக் கொடக்குற நெல்லையும், கருக்காவுல ஒதுங்குன நெல்லையும் சுத்தம் செஞ்சு பங்கு போட்டு எடுத்துக்கணும். கூலி இல்லாம வேல செஞ்சுட்டு, சிந்துனது செதறுனத எடுத்துக்கறதுக்கு பேருதான் கலம் பொடைக்குறது.

அப்படிப் பண்ணைக்கு இருக்கும் போது அவங்களுக்கு சாப்பாடு மாட்டுக் கொட்டைகையிலதான் போடுவாங்க. இல்லன்னா திண்ணையில ஒரு மூலையில ஓரமா ஒக்கார வச்சு போடுவாங்க. சாப்பிடும் பாத்திரம் அவங்களே வச்சுக்கணும். அதையும் மாட்டுக் கொட்டகையில ஒரு ஓரமா சொருகி வைக்கணும். தொட்டுக்க வாங்க பாத்திரம் வச்சுக்கலன்னா பூவரச இலையில கொடுப்பாங்க, இல்லன்னா கொட்டாங்குச்சியில (தேங்கா சிரட்டை) கொடுப்பாங்க. மீறி ஏதாவது தண்ணி கொடுக்குற மாதிரி வந்தா, தலித்துக்குன்னு ஒரு பாத்திரம் இருக்கும் அதுல தண்ணி குடுப்பாங்க குடிச்சுட்டு பாத்திரத்த குப்பற கவுத்து வைக்கனும். பாத்திரத்து மேல தண்ணிய ஊத்தி தீட்டு கழிச்சுட்டு எடுத்துப்பாங்க. ஊருக்குள்ள வரும் போது தண்ணி தாகம் வந்து யாரிடமாவது தண்ணி கேட்டா பாத்திரத்துல கொடுக்க மாட்டாங்க, கைய குவிக்கச் சொல்லி கையில ஊத்துவாங்க குடிச்சுக்கணும்.

வயல்களில் வேலை செய்யும் போது தலித்துகளுக்கு சாப்பாடு, பாத்திரத்துல போட மாட்டாங்க. வயல்ல இருக்கும் பணங்குட்டி மட்டைய வெட்டி ஓலையில் தொண்ணை செஞ்சு அதுல ஊத்துவாங்க. கொழம்பு வச்ச சாப்பாடே கிடையாது. கஞ்சி சாப்பாடு மட்டும் தான். தொட்டுக்க உப்பு போட்ட மாங்காகீத்து அத கடிச்சுக்கணும். இதுதான் அவங்களுக்கு ஒதுக்குன சாப்பாடு.

ஆதிக்க சாதி கல்யாணம், காதுகுத்து, வளைகாப்பு, பூப்பு நீராட்டு, நிச்சயதார்த்தம்னு எல்லா நல்லது கெட்டதுக்கும் வெறகு ஒடைக்கணும், பந்தல் போடணும், வாழைமரம் கட்டணும். பொம்பளைங்க வீட்டுக்கு வெளிய உள்ள தட்டு முட்டு வேலை பாக்கணும், எச்சி இலை எடுக்கணும், அண்டா குண்டா கழுவணும். விசேசம் முடிச்சதும் இதுக்கு எல்லாம் கூலியா கூட சோறு வாங்கிக்கணும்.

விசேசம் நடக்கும் பந்தல்லயே தலித்துகள் தப்பு மேளத்தோடு, தட்டு வருசை, சாமானோடு ஆடு புடிச்சு கட்டணும். இது எதுக்குன்னா ஊருக்குள்ள பள்ளன், பறையன வச்சு வேலவாங்கற பரம்பர சாதிக்காரன்தான் நானு, ஆளா சங்கதியா இருக்கென்னு கெத்து காண்பிக்க. வந்தார் குடின்னு சொல்ற ஆட்களுக்கு வகை பிரிச்சு ஒதுக்குற தலித் முறை இருக்காது. தலித்து ஒதுக்கப்படலன்னா அவங்கள அந்த ஊர் ஆதிக்க சாதியில் சமமா பாக்க மாட்டாங்க. பொண்ணு கொடுக்குறவனும் எடுக்குறவனும் சம்பந்தம் பண்ண தயங்குவாங்க.

கூலிக்கு நெல்
கீழ சிந்திக் கொடக்குற நெல்லையும், கருக்காவுல ஒதுங்குன நெல்லையும் சுத்தம் செஞ்சு பங்கு போட்டு எடுத்துக்கணும்.

ஆதிக்க சாதிக்காரன் வீட்டுல மனுசன் செத்தாலும், மாடு செத்தாலும் மொதல்ல தலித்துக்குதான் சொல்லுவாங்க. அவங்க வந்துதான் பந்தல் போடணும், தப்பு கொட்டணும், கொம்பூதணும், பாட கட்டணும், பொணத்த எரிக்க மரம் வெட்டணும், ஊரு ஊரா சொந்தக்காரனுக்கெல்லாம் எழவு சொல்லி போகணும், பொணத்த தூக்கிட்டு சுடுகாடு போறதுக்குள்ள பந்தல் பிரிக்கணும், பொணத்த எரிக்கணும் இதுக்கெல்லாம் எந்த கூலியும் கெடையாது.

துக்கத்துக்கு வர்ர ஒரமரக்காரன் (சம்மந்தி) மொறையுள்ள எல்லாரும் எளவு பணம்னு அஞ்சு பத்து மொய் போடுவாங்க. சம்பந்தி கொட்டுன்னு நெல்லு கொஞ்சம் கொண்டுட்டு வருவாங்க. இந்த நெல்ல வித்துட்டு அதுல வர்ர பணத்தையும், எளவு பணத்தையும் சேத்து, தப்பு அடிச்சவங்க மொதக்கொண்டு, பொணம் எரிச்சவங்க, பந்தப் போட்டவங்க வரைக்கும் சாவுக்கு வேலபாத்த எல்லா தலித்தும் பிரிச்சு எடுத்துக்கணும். அந்த பணம் அவங்களுக்கு ஒரு நாள் சாப்பாட்டுச் செலவுக்கே வராது.

வெளியூருக்கு துக்கம் சொல்லி போறவங்களுக்கு சைக்கிள் மட்டும்தான் கொடுப்பாங்க, துக்கம் சொல்லப்போன வீட்டுல ஒருபடி நெல்லு கொடுப்பாங்க ஒரு ஊருபூராச் சொன்னாலும் ரெண்டு – மூணு கிலோ நெல்லு தேறாது. அத வித்துத்தான் அவர் வழிச்செலவு, சாப்பாடு, டீ, எல்லாத்துக்கும் வச்சுக்கணும். அஞ்சாறு ஊருக்கு ஒரு ஆளுன்னு கணக்கு வச்சு, பத்து பேருக்கு மேல துக்கம் சொல்லி போவணும்.

இது தவிர பொங்கல், தீபாவளின்னா ஆதிக்க சாதிக்காரங்க வீட்டுக்கு சாப்பாடு வாங்க தலித்துகள் வரணும். பொங்கல்னா கரும்பு, வாழப்பழம், பச்சரிசி, கொடுப்பாங்க. வாழப்பழன்னா இருக்குறதுலயே சின்னதான காயா இருக்கும் அது பழுக்கவே பழுக்காது. தலித்துக்களுக்கு கொடுக்றதுக்குன்னே மார்க்கெட்டுல மலிவா விப்பாங்க. கரும்பும் அப்படிதான் வெளையாததா பாத்து கொடுப்பாங்க, வீட்டுல உள்ளவங்களுக்கு எல்லா காயும் போட்ட கூட்டு, தலித்துக்கு மட்டும் பரங்கிக்காவுல பண்ணுன கூட்டு.

தீபாவளின்னா பலகாரம் வாங்க வரணும். அதுவும் இதுபோலதான் முறுக்கு, அதிரசம், லட்டு, பாதுசா, நெய்யுருண்டைன்னு, வகவகயா செஞ்சு வச்சுகிட்டு, இவங்களுக்கு மட்டும் இட்லியும், அரிசில நாலு உளுந்தப் போட்டு வடையின்னு பேருவச்சு சுட்டுப்போடுவாங்க, வருசத்துக்கு ஒரு நாள் வர்ரதுக்கே இப்படி பாகுபாடு பாத்து, இழிவு படுத்தி சாப்பாடு போடுவாங்க. முன்னமாதிரி எல்லாம் இப்ப யாரும் சாப்பாடு வாங்க வர்றதே இல்ல பறப்பயலுவொ கொழுத்து போயி திரியரானுவன்னு அதிகாரம் வேற தூள் பறக்கும்.

இப்படி வகைப்படுத்தப்பட்ட தலித்துக்கள் வீட்டு திருமணம் என்றால் அவர்களை அடிமைகளாக கொண்ட ஆதிக்க சாதியினர் அனைவரும் ஒன்று சேர்ந்து தாலியும், பொண்ணு – மாப்பிள்ளைக்கு புதுத்துணியும் எடுத்துக்கொடுக்கனும். ஆதிக்க சாதி மனிதர்கள் தலித்து திருமணத்துக்கு போக மாட்டாங்க. திருமணம் முடிந்ததும் தம்பதிகள் மணக்கோலத்திலேயே ஆதிக்க சாதி வீட்டுக்கு வந்து ஆசிர்வாதம் வாங்கணும். மணக்கோலத்திலயே தம்பதிகள் ஊர் பார்க்க நடந்து வந்து ஆசீர்வாதம் வாங்க வேண்டும் என்றால் அவர்களுக்கு எந்த அளவு கூசிப்போவார்கள் என்பதை ஒரு முறை யோசித்து பாருங்கள்.

எப்படி எல்லாம் தலித்துக்களை தன்மான உணர்வு இல்லாமல் தன் அடிமையாக வைத்துக்கொள்ள முடியுமோ அப்படியெல்லாம் சாதகமாக சம்பர்தாயத்தை உருவாக்கி வைத்துள்ளார்கள் ஆதிக்க சாதி வெறியர்கள். இப்படியெல்லாம் தலித்துக்களை அடிமைபடுத்தும் நிலை மாறிவிட்டது. இப்பல்லாம் யாருங்க சாதிப்பாக்குறா என்ற பேச்சுப் பரவலாக இருந்துகிட்டு இருக்கு.

காரணம் தாழ்த்தப்பட்டவர்களில் படித்தவர்கள், இளைஞர்கள், இதுபோல கீழ்த்தரமான சம்பர்தாய வேலைகளுக்கு வர மறுக்கிறார்கள். பெற்றொர்களையும் தடுக்கிறார்கள். உள்ளூரில் வேலை செய்வதை தவிர்த்து வெளியில் நகரத்துக்கு வேலைக்கு போகிறார்கள். இவர்களிடம் கூனி குறுகி வேலை செய்வதைவிட வெளி வேலைக்கு செல்வதை கௌரவமாக நினைக்கிறார்கள்.

ஆனால் பெற்றோரோ, வெளியில் வேலைக்கு செல்லும் நீங்க வேண்டுமென்றால் போகாமல் இருக்கலாம் நாங்க இவங்க்கிட்டதானே வேலைக்கு போகணும் அவர்களை எதிர்க்க முடியாது அனுசரித்துதான் போக வேண்டும் என்கிறார்கள். என்ன நல்லது கெட்டதுன்னா போயி சாப்பாடு வாங்கணும். செத்தா சாவுல நிக்கணும். பேருக்கு நாலு வீடு எளவு சொல்லி போவணும். முன்ன மாதிரி இப்பெல்லாம் ரொம்ப கொடுமப்படுத்துறது இல்ல. சம்பர்தாயத்துக்கு செஞ்சாகணுன்னு சொல்றாங்க. அத செஞ்சுட்டா ஒன்னும் பிரச்சினை இல்லை என்கிறார்கள்.

முன்பு ஒருவர் இறந்துவிட்டால் எல்லா ஊருக்கும் தலித்துத்தான் சாவு சொல்லி போகவேண்டும். ஆனால் இப்போது செல்போன் இருக்கு முக்கியமானவங்களுக்கு உடனே தகவல் போயிடுது மத்தவங்களுக்கு காருல ஆரண் கட்டி அனௌன்ஸ் பண்றாங்க துக்கத்துக்கு எல்லாரும் வந்து சேர்ந்தர்றாங்க. ஆனாலும் சம்பர்தாயத்துக்கு துக்கம் சொல்லி அனுப்புறாங்க. இதுபோலத்தான் ஒவ்வொரு ஒடுக்குமுறை நிகழ்வுகளையும், சாதிய சடங்குகளிலிருந்து தாழ்த்தப்பட்டவர்களை சம்பர்தாயம் என்ற நிலையில் கட்டுமானத்தில் வைத்துள்ளனர்.

சம்பிரதாயத்துக்கு அடிமை வேலை
சம்பர்தாயத்துக்கு செஞ்சாகணுன்னு சொல்றாங்க. அத செஞ்சுட்டா ஒன்னும் பிரச்சினை இல்லை

ஒருவர் சாதி சம்பர்தாய சடங்குமுறையை தவிர்த்து திருமணம் செய்து கொண்டார். அனைவருக்கும் மேலான சாதியாக கருதப்படும் பார்ப்பனர் வீட்டுக்கு வந்தார். ”ஒரு வார்த்த வாங்கன்னு கல்யானத்துக்கு கூப்பிடல, கல்யாணம் நடந்த முறையை கேள்விப் பட்டேன். எப்படியெல்லாம் நடக்க வேண்டிய கல்யாணம். புதுசு புதுசா பழக்கம் இல்லாத்தையெல்லாம் பசங்க செய்றாங்க, பெரியவங்க நீங்களும் கேக்க மாட்டேங்குறிங்க. இதெல்லாம் நல்லதுக்கில்ல. எப்படியோ நல்ல காரியம் நடந்துருச்சு, நல்லாருக்கட்டும். சரி, சம்பர்தாயன்னு ஒன்னு இருக்குல்ல கொடுக்க வேண்டிய தட்சணைய கொடுங்க நான் கிளம்பணும்” என்றார்.அந்த வீட்டம்மாவும் பயபக்தியுடன் 500 ரூபா பணம், தேங்கா – பழம், வெத்தல – பாக்கு என்று மரியாதையுடன் எடுத்து வந்து கொடுத்தார்.

சம்பர்தாயம் என்று சொல்லிக்கொண்டு ஒருவரை ஒருவர் இன்னமும் சாதிய கட்டுமானங்களைக் கடைபிடித்துக் கொண்டுள்ளார்கள் என்பதை நாம் நடைமுறையில் இருந்தே பார்க்கலாம். காலப்போக்கில் சில பழக்க வழக்கங்கள் மேலோட்டமாக விட்டுக்கொடுக்கப்பட்டு சம்பர்தாயத்தைச் சொல்லி ஆதிக்க சாதி வெறி வேரூன்றி இருப்பது தான் உண்மை. உழைக்காமல், அதிகாரத்துடன் ஒரு பாப்பான் வந்து கேட்டா பயபக்தியுடன் கொடுப்பவர்கள். உடல் நோக உழைத்தாலும் தலித்துக்களை தரக்குறைவாக நடத்துகிறார்கள் என்பதே இதற்கு சாட்சி.

அதே தஞ்சாவூரில் மாவட்டத்திலேதான் இந்த ஆண்டு நடந்த நிகழ்வு. பெண் பார்த்து பிடித்துவிட்டது. ஜாதகமும் பொருத்தமாக உள்ளது. மற்ற சீர்வரிசை, நகை, திருமண செலவு போன்ற விசயங்களுக்கு பெண்வீட்டார்கள் சம்மதித்து விட்டார்கள். ஆனால் மாப்பிள்ளை வீட்டார் என்ன சொல்கிறார்கள் என்றால், ஊருக்குள் நுழையும் இரண்டு வழியிலேயும் தாழ்த்தப்பட்டவர்கள் குடியிருப்பு உள்ளது. தாழ்த்தப்பட்டவர்களை முதலில் வைத்து ஊர் அமைவது நல்லதுக்கல்ல என்று கூறி பெண்ணை வேண்டாம் என்று சொல்லி திருமணத்தை நிறுத்தி விட்டார்கள். இன்றளவும் நடைமுறையில் சாதி வெறி உள்ளதற்கு இந்த நிகழ்வே சாட்சி.

இப்படியெல்லாம் காலங்காலமாக ஆதிக்க சாதியினருக்கு அல்லும் பகலும் உழைக்கும் தலித் மக்களது துன்பங்களை உணராம அவங்களையும் ஆதிக்க சாதிக்கு இணையா பாத்து பேசுற மவரசாங்கள என்ன செய்யலாம்? ஒண்ணு செய்யலாம், பேசாம இவங்களை தலித் மக்களுக்கு ஒதுக்கி விட்டு ஒரு நூறு வருசம் மேல பாத்த வேலைங்களை செய்யச் சொன்னா என்ன?

– சரசம்மா