Saturday, July 26, 2025
முகப்புஉலகம்ஆசியாகுடிநீருக்காக போராடிய சிங்கள மக்கள் மீது இராணுவம் துப்பாக்கி சூடு !

குடிநீருக்காக போராடிய சிங்கள மக்கள் மீது இராணுவம் துப்பாக்கி சூடு !

-

லங்கையில் குடிநீர் மாசுபடுவதை எதிர்த்து போராடிய மக்கள் மீது இராணுவத்தினர் துப்பாக்கியால் சுட்டதில் 3 பேர் கொல்லப்பட்டனர், 50-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

இராணுவம்தென் இலங்கையில் கொழும்பிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடம் கம்பக மாவட்டத்தைச் சேர்ந்த வெலிவெரியா. வெலிவெரியாவிலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் டிப்ட் புராடக்ட்ஸ் என்ற கையுறை தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்தத் தொழிற்சாலை இலங்கையின் மிகப்பெரிய பன்னாட்டு பெருநிறுவனங்களில் ஒன்றான ஹேலீஸ் குழுமத்தைச் சேர்ந்தது.

கையுறை தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் கழிவுநீர் கலப்பதால் 15-க்கும் மேற்பட்ட கிராமங்களின் குடிநீர் மாசுபட்டு வந்திருக்கிறது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு மீதான விசாரணையை உள்ளூர் நீதிமன்றம் ஒன்று ஆகஸ்ட் 22-ம் தேதிக்கு ஒத்தி வைத்து விட்டது.

இதனால் வெறுப்படைந்த 12 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக் கணக்கான மக்கள் கடந்த வியாழக் கிழமை மாலை 5 மணிக்கு சுத்தமான குடிநீர் கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொழும்பு-கண்டி சாலையில் போக்குவரத்தை தடுத்து நிறுத்தினர். ஆம்புலன்ஸ், பள்ளி வாகனங்கள் தவிர மற்ற வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன.

காயமடைந்தவர்.
ஆயுதப் படைகளின் தாக்குதலில் காயமடைந்த ஒருவர்.

நிலைமையை கட்டுப்படுத்த போலீசும் இராணுவமும் அழைக்கப்பட்டன. பெலும்மகர சந்தியில் கூடியிருந்த மக்களை உடனே கலைந்து போகும்படி எச்சரித்த இராணுவ அதிகாரி அதைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டார். இதில் 17 வயதான அகிலா தினேஷ் என்ற மாணவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார்.

தாக்குதலிலிருந்து தப்பித்து அருகில் இருந்த கிருத்துவ தேவாலயத்தில் புகுந்த மக்களைத் துரத்திக் கொண்டு நுழைந்த ஆயுதப் படைகள் அங்கு இருந்த பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பலரை மேலும் தாக்கியதாக போதகர் லக்பிரியா நோனிஸ் தெரிவித்திருக்கிறார்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 19 வயதான ரவிஷான் பெரேரா சனிக்கிழமை மருத்துவமனையில் உயிரிழந்தார். 29 வயதான நிலந்த புஷ்பகுமார ஞாயிற்றுக் கிழமை கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள இன்னும் மூன்று பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

கொல்லப்பட்ட அகிலா தினேஷின் இறுதி ஊர்வலம் வெலிவெரியா மயானத்தில் ஞாயிற்றுக் கிழமை நடத்தப்பட்டது. இதை ஒட்டி கிராமத்தில் பெரும் எண்ணிக்கையிலான பாதுகாப்புப் படைகள் குவிக்கப்பட்டிருந்தன.

சர்ச்
தேவாலயத்திலும் தாக்குதல்.

இலங்கையில் உள்நாட்டுப் போர் நடத்துவதற்காக தமது கைகளில் அதிகாரங்களை குவித்து, அரசு நிர்வாகத்தை இராணுவ மயமாக்கி வைத்திருக்கின்றனர் ஆளும் ராஜபக்சே குடும்பத்தினர். மக்களை பாதிக்கும் தொழில் நிறுவனங்களின் செயல்பாடுகளை எதிர்த்துப் போராடும் மக்கள் மீது ஆயுத அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுகின்றனர். தமது உரிமைகளுக்காக போராடிய சிறுபான்மை தமிழ் மக்களை ஒடுக்குவதற்கான போரில் உதவி செய்த பன்னாட்டு நிறுவனங்கள், அந்த உதவிகளுக்கு விலையாக இப்போது இலங்கை முழுவதும் பொருளாதார சுரண்டலை நடத்திக் கொண்டிருக்கின்றன. அவற்றை பாதுகாத்து நிற்க வேண்டியது இலங்கை அரசின் கடமையாக மாறியிருக்கிறது.

‘போராட்டம் நடந்த தினத்தன்று சர்ச்சைக்குரிய தொழிற்சாலையிலிருந்து மூன்று கொள்கலன் வாகனங்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்காக அரசின் உயர்மட்டத்திலிருந்து வந்த உத்தரவின்படியே இராணுவத்தினர் மோசமாக நடந்துகொண்டனர்’ என்று அப்பிரதேசத்துக்கு சென்றுவந்த இதர கட்சித் தலைவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

இலங்கையை சூழ்ந்திருக்கும் அமெரிக்க, ஐரோப்பிய, சீன, இந்திய பன்னாட்டு நிறுவனங்களின் சுரண்டலை எதிர்த்து அனைத்து இன மக்களும் இணைந்து போராடுவது அவசியம். நேற்று தமிழ் மக்களை கொன்று குவித்த சிங்கள அரசு இன்று வாழ்வுரிமைக்காக போராடும் சிங்கள மக்களையும் கொல்கிறது. பாசிச ராஜபக்சே கும்பலை எதிர்த்து நடத்தும் போராட்டம் தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல, சிங்கள மக்களுக்கும் அவசியம் என்பதை அவர்களே உணர்ந்திருப்பார்கள். ஏனென்றால் சிங்கள இனவெறி பாசிசம் என்பது தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல, சிங்கள உழைக்கும் மக்களுக்கும் எதிரிதான்.

  1. //கொழும்பு-கண்டி சாலையில் போக்குவரத்தை தடுத்து நிறுத்தினர். ஆம்புலன்ஸ், பள்ளி வாகனங்கள் தவிர மற்ற வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன.//

    //எச்சரித்த இராணுவ அதிகாரி அதைத் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டார். இதில் 17 வயதான அகிலா தினேஷ் என்ற மாணவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார்.//

    மக்கள் எவ்வளவு நல்லவர்கள் என்பதும், முதலாளித்துவ சுரண்டலுக்கு அரணாக இருக்கும் அரசு எப்படி மக்கள் விரோத சக்தியாக இருக்கும் எனபதற்கு நல்ல உதாரணம்.

    சிங்கள பேரினவாத அரசு இ. தமிழர்களுக்கு மட்டுமல்ல சிங்கள மக்களுக்கும் எதிரானது தான், ஆனால் ‘தமிழ் மொழிக்காகவே பிறந்த தமிழர்களால்’ இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.

    சரி இந்த பிரச்சனையில் இவர்கள் யார் பக்கம் இருப்பார்கள்? ராஜபக்சே உடனா, இல்லை சிங்கள மக்களுடனா?

    இருவரும் எங்களுக்கு எதிரிதான் என்று சொல்லக்கூடும், ஏன் என்று கேட்டால் ”எங்க தமிழர்கள் கொல்லப்படும்போது சிங்களர்கள், தமிழர்கள் பக்கம் இல்லை ஆதலால் சிங்கள மக்களுடன் இனைய முடியாது” என்று சொல்வார்கள்.

    இதற்கு பெயர்தான் இன வெறி.

    இவர்களின் முட்டாள்தனமான உணர்வால் யாருக்கு நன்மை ஏற்படும்?

    மக்களை ஒடுக்கும் ஒரு அரசுக்கு.

    சரி இவர்களுடைய லட்சியம் தான் என்ன என்று பார்த்தால் வேறொன்றுமில்லை!

    ”எங்கள் இன மக்களை எங்கள் முதலாளிகள் தான் சுரண்டவேண்டும், வேற்று இன முதலாளி சுரண்டக்கூடாது”,

    ”எங்கள் இனத்தை சேர்ந்த மக்களை எங்கள் இனத்தை சேர்ந்தவர்களே ஒடுக்கவேண்டும்” என்பதுதான்.

    இனவாதிகள் போராட்டம் எப்பவும் மக்களுக்கு எதிராக தான் இருக்கும்.

    • // சிங்கள பேரினவாத அரசு இ. தமிழர்களுக்கு மட்டுமல்ல சிங்கள மக்களுக்கும் எதிரானது தான், ஆனால் ‘தமிழ் மொழிக்காகவே பிறந்த தமிழர்களால்’ இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. // அடப்பாவி 🙂 கேள்வியும் நீங்களே பதிலும் நீங்களே என்பதுதான் பாட்டாளிகளின் சர்வாதிகாரம ?

      சிங்கள பேரினவாதத்தில் சிங்களர்களும் ஒரு அங்கமில்லையா ? சிங்கள ஆட்சியாளர்கள் மட்டுமே பேரினவாதிகளாக இருந்தாதாக ஒரு பொய்க்கதையை உருவாக்குவது தவறில்லையா அடப்பாவி ? தாங்கள் விரும்பி மகிழ்ந்த பேரினவாதத்தால் தாங்களும் அழிக்கப்படுகிறார்கள் , சிங்களர்களுக்கு இரங்குவதுதான் கம்மியுனிச அறமா ?

    • அடப்பாவி, காமலை கண்ணோடு பார்த்தால் இப்படி தான் எல்லாமே மஞ்சளாக தெரியும். இப்பொது எந்த தமிழ் இன வாதி ‘ஹையா ‘ என்று சந்தோஷமாக குதித்தான் ?
      இந்த பதிவில் விடு பட்ட இரண்டு விஷயங்கள் , 1. குண்டடி பட்ட மாணவன் துடித்து கொண்டு இருக்கும் போது , அருகே இராணுவம் சிரித்து அரட்டை அடித்து கொண்டு
      இருக்கும் புகை படம் பல்வேறு இலங்கை மீடியா களில் வெளியானது .
      2. காயம் பட்டவர்களை கண்டு ஆறுதல் அளிக்க சென்ற ரணில் விக்கிரம சிங்கே , பிறகு
      மீடியாகலிடம் முள்ளி வாய்காலில் தப்பி ஓடும் தமிழர்களை விரட்டி விரட்டி கொன்ற
      அதே நியாபகத்தில் இங்கேயும் நடந்து கொண்டதாக குறிபிட்டது .
      தமிழ் இனத்தை கேவல படுத்தியே தீருவது என்ற வெறியோடு அலையும் உங்களை போன்றவர்களுக்கு இந்த செய்தி கூட ஒரு வர பிரசாத மாக அமைந்திருப்பதில் ஆச்சர்யம் இல்லை தான் .

  2. இராசபக்சே என்ற மனித மிருகத்துக்கு, தமிழர்களை கொத்து கொத்தாக சாகடிக்க சிங்கள மக்களில் 99 விழுக்காட்டினர் ஆதரவாகவே இருந்தனர். ஒரு சில சிங்கள ஊடகவியலாளர்கள் உயிரைக் கூட இழந்தனர் தமிழர்களுக்காக! ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்! சிங்கள மக்கள் மேல் நமக்கு வெகுவான சினம் உள்ளதுதான் என்றாலும், சிங்கள அரசா, மக்களா என்று வரும்போது நாம் கண்டிப்பாக மக்கள் பக்கமே இருக்க வேண்டும்! ஏனென்றால் சனநாயக அரசுகள் எனக் கூறிக்கொள்ளும் இந்த அரசுகள் எப்போதுமே மக்களுக்கு விரோதமாகவே நடந்து கொள்வார்கள்! முதலாளிகளூக்கு மட்டுமே பாதசேவை செய்வார்கள்! அந்த வகையில் சிங்கள மக்களின் போராட்டத்தை நாம் கண்டிப்பாக ஆதரிக்கத்தான் வேண்டும்! அவர்களுக்காக இங்குள்ள நம்மவர்கள் குரல் கொடுப்பது என்பது ஏற்க முடியாத ஒன்று! இந்தப் பிரச்சினையை அவர்களே தீர்த்துக் கொள்வார்கள்! ஏனென்றால் இது அவர்களுக்குள் ஏற்பட்ட உரசல்! படை அமைப்பினர் எவ்வளவு கோடூரமனவர்கள் என்பதை சிங்கள மக்கள் முழுமையாக உணரும்வரை நாம் காத்திருக்கத்தான் வேண்டும்!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க