privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபுதிய ஜனநாயகம்முன்னோடிகள்கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே - மாவோ !

கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே – மாவோ !

மக்களிடம் ரசனை ஊட்டுவதில் வளர்ப்பதில், கற்றுக் கொடுப்பதில் கலை – இலக்கியத்துக்குப் பங்குண்டு. இந்தப் பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் தந்தக் கோபுரக் கலைஞர்களே "மக்களைப் பற்றி எனக்குக் கவலையில்லை; மக்களுக்கு ஒரு முகமே கிடையாது; நான் எழுதுவதை எங்கோ ஒரு மூலையில் இருக்கும் ஒற்றை ஆள் என்றோ ஒருநாள் புரிந்து கொண்டால் போதும்" என்று பிதற்றுகிறார்கள்;

-

(1994-ம் ஆண்டு புதிய கலாச்சாரத்தில் வெளியான கட்டுரை)

மாவோ நூற்றாண்டு விழா !

மாமேதை மா சே துங் கிழக்கில் உதித்த இன்னொரு செங்கதிர். கீழைக்காற்று மேலைக்காற்றை வெல்ல முடியும் என்று நிரூபித்தவர். இவ்வாண்டில் சர்வதேச பாட்டாளி வர்க்கம் அவரது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகிறது.

எளிய சீன விவசாயக் குடும்பத்தில் பிறந்த மாவோ பத்திரிகையாளனாய், கவிஞனாய், பொதுவுடைமை ஊழியனாய், இராணுவ வீரனாய் – தளபதியாய், அரசுத் தலைவனாய், தத்துவ ஆசிரியனாய், தேசிய – சர்வதேசிய தலைவனாய் உயர்ந்தவர். தத்துவம், அரசியல், பொருளாதாரம், பண்பாடு ஆகிய அனைத்திலும் ஆழமான தடயங்களைப் பதித்த அவரது அசலான படைப்புகள் எதிரிகளாலும் போற்றப்படுபவை.

மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் ஆகிய உலகப் பொதுவுடைமைப் பேராசான்களின் வரிசையில் சிறப்பான இடத்தைப் பெற்றவர், மாவோ. அவர் வழங்கிய மாவோ சிந்தனை காலத்தால் அழியாத சித்தாந்தமாக வைத்துப் போற்றப்படும். அதன் ஒளியில் பொதுவுடைமை லட்சியத்தை நோக்கி உறுதியோடு பயணத்தைத் தொடருவோமென இந்த நூற்றாண்டு விழாப்பொழுதில் சபதமேற்போம்.

மாவோ யேனான் உரை
படைப்புக் கலை: சில பிரச்சனைகள்

புரட்சிகர இலக்கியமும் கலையும் உண்மை வாழ்வினின்று வகை வகையான பாத்திரங்களைப் படைக்கின்றன; வரலாற்றை முன்னோக்கி உந்தித்தள்ள மக்களுக்கு உதவுகின்றன. கார்க்கியின் ‘தாய்’ நாவலின் பாவெல், அவனது தாய் ஆகிய இரு பாத்திரங்கள், லூசுன்னின் ஆ கியூ நாவலில் வரும் ஆ கியூ என்ற பாத்திரம் ஆகியவை இத்தகைய பாத்திரப் படைப்புகள்.

மா சே துங்
“கீழே இறங்கிப் போய் மக்களிடம் கேளுங்கள் ; அவர்கள் கலை இலக்கியம் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று பாருங்கள்!”

பசி, குளிர், பட்டினி, வறட்சி, சுரண்டல், அடக்குமுறைக் கொடுமை, தீண்டாமை, சாதிக்கொடுமை, மதவெறி – இந்த வடிவங்கள் இந்தியாவெங்கும் இருக்கின்றன; மக்கள் இதற்குள்ளேயே சிக்கி, போராடி, அன்றாட விஷயங்களாக அவற்றைப் பார்க்கிறார்கள்; ஆனால் எழுத்தாளர்களோ, கலைஞர்களோ அவ்வாறு மட்டும் பார்ப்பதில்லை; அவற்றைச் செறிவாக்கி, அவற்றுக்குள்ளே முரண்பாடுகளை, போராட்டங்களை எடுத்துக் காட்டி பொது மக்களை விழிப்புறச் செய்கிறார்கள்; சூழலை மாற்றியமைக்க ஒன்றுபட்டுப் போராடத் தூண்டும் படைப்புகளைச் செய்கிறார்கள்; இத்தகைய கலை இலக்கியப் பணி இல்லாவிடில் சமூகத்தை மாற்றும் பணி முழுமை அடையாது; குறைந்தபட்சம், அது விரைவாக முழுமையாகச் செயல்பட முடியாது.

சீன நிலைமைகளில் இதுபற்றிச் சிந்தித்த மாவோ கலாச்சாரப்படையின் அவசியத்தை வலியுறுத்தினார். யேனானின் செந்தளம் அமைந்ததும் இப்பிரச்சனைகளை விவாதிப்பதற்காக கலாச்சார முன்னணியாளர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள் கூட்டப்பட்டார்கள்.

ஒருபுறம் ஜப்பானிய, ஏகாதிபத்தியம் சரமாரியாகக் குண்டுகளால் தாக்கி யேனானை அழித்துக் கொண்டிருந்தது; இன்னொருபுறம், சீன விடுதலைக்கான செந்தளமான யேனானில் கம்யூனிசப் போராளிகள் தங்கள் திட்டங்களைச் செயல் படுத்தினார்கள்; அந்த சூட்டுக்கிடையே தான் கலைஞர்கள் மத்தியில் தனது கருத்துக்களை மாவோ வைத்தார்; விவாதிக்கச் சொன்னார்.

புரட்சி, கலை இரண்டுக்கும் உள்ள உறவுகள் பற்றி பல பிரச்சினைகளை அவர் முன் வைத்தார். வர்க்க நிலைப்பாடு; குறிப்பான நிலைப்பாட்டிலிருந்து, குறிப்பான விஷயங்கள் பற்றி குறிப்பான கண்ணோட்டம்; யாருக்காக, எப்படிப் படைப்பது?; மார்க்சிய – லெனினிய சித்தாந்தக் கல்வி; சமுதாயக்கல்வி; சித்தாந்தப் போர் ஆயுதமாக விமர்சனத்துறை – என்று பல பகுதிகளாக ஆய்ந்து தன் விவாத உரையை நிகழ்த்தினார் மாவோ.

இருபத்திரண்டு நாட்களுக்கு விவாதம் நடந்தது; புரட்சிக் கலைஞர்கள், கோமிந்தாங் ஆட்சி மீது நம்பிக்கை இழந்து யேனானை நம்பிக்கை நட்சத்திரமாகக் கருதி அங்குவந்த கலைஞர்கள் ஆகியோர் தத்தம் கருத்துக்களை முன் வைத்து விவாதித்தார்கள். அதில் ஒருவர் வெல்ஸின் உலக அகராதியிலிருந்து கூட கலை இலக்கியம் என்பதற்குச் சொற்பொருள் கூறி விவாதித்தார்; விவாதங்களில் உடன் இருந்து குறிப்பெடுத்த மாவோ அவர்களிடம் புன்சிரிப்போடு சொன்னாரம்; ”கீழே இறங்கிப் போய் மக்களிடம் கேளுங்கள் ; அவர்கள் கலை இலக்கியம் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று பாருங்கள்!

இந்த விவாதத்தில் குறிப்பான ஒரு விஷயத்தை மட்டும் நாம் எடுத்துக் கொண்டு தமிழ்ச் சூழலுக்குப் பொருத்திப் பார்க்கலாம். கலைஞன் படைக்கிறான்; அவ்வாறு படைக்கும் போது தன் விருப்பத்துக்கு ஏற்ப உயர்ந்த வடிவத்தில் படைப்பதா? அல்லது அதிகமாக மக்களிடம் போய்ச் சேர வேண்டும் என்ற நோக்கத்தோடு ஜனரஞ்சகமாகப் படைத்துப் பரவலாக்குவதா?

தமிழகத்தில் இந்தக் கேள்விகளை அடித்துப் புரட்டிப் போட்டு பிழிந்தெடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். புரட்சிக் கலைஞர்களைத் தவிர மற்ற பலர் மிக விரிவான விவாதங்களை (ஒரு முடிவுக்கு வரக் கூடாதென்பதற்காகவே) நடத்தி வருகிறார்கள். சுருக்கமாக, அவர்களின் கருத்து; “கலை மிக உயர்ந்த வடிவத்தைப் பெறும் போதுதான் காலத்தால் அழியாத நிரந்தரத்துவத்தைப் பெறும்; மக்களுக்காக என்று சொல்லிப் பரவலாக்கினால், ஜனரஞ்சகப் படுத்தினால் படைப்பு கொச்சையாகி விடும்; நீர்த்துப் போய் விடும்”. இது சரியா? சரியல்ல, தவறு. மாவோவின் குறிப்புக்களின் ஒளியில் நமது தரப்பு வாதங்களை இனி பார்ப்போம்.

***

மாவோ சொல்கிறார்: ”எம்முடைய இலக்கியமும் கலையும் அடிப்படையாகத் தொழிலாளர்கள், விவசாயிகள், படைவீரர்களுக்கானவை. பரவலாக்குதல் என்பதன் பொருள் அவர்களிடம் பரவலாக்குதல்; தராதரங்களை உயர்த்துதல் என்பதன் பொருள் அவர்களுடைய தற்போதைய நிலையிலிருந்து, அந்த மட்டத்திலிருந்து முன்னேற்றுவது என்பதாகும். அவர்களுக்குச் சாதகமானதும், அவர்களால் உடனே ஏற்றுக் கொள்ளக் கூடியதும் எதுவோ அதையே நாம் பரவலாக்க வேண்டும். எனவே, அவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்கு முன், அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளும் பணி இருக்கிறது. தராதரங்களை உயர்த்துவதற்கு இது இன்னும் அதிகமாகப் பொருந்தும்.

உயர்த்தத் தொடங்குவதற்கே அடித்தளம் தேவை. ஒரு வாளித் தண்ணீரை எடுத்துக் கொள்வோம். அதைத் தரையிலிருந்து தானே மேலே இழுக்கிறோம்? அந்தரத்திலிருந்தா இழுக்கிறோம்? அப்படியானால், இலக்கியமும் கலையும் எந்த அடித்தளத்திலிருந்து உயர்த்தப்படுவது? நிலப் புரபுத்துவ வர்க்கங்களின் அடித்தளத்திலிருந்தா? முதலாளி வர்க்கங்களின் அடித்தளத்திலிருந்தா? சிறுமுதலாளி வர்க்க அறிவுஜீவிகளின் அடித்தளத்திலிருந்தா? இல்லை, இவை எதிலிருந்தும் அல்ல, பரந்துபட்ட தொழிலாளர், விவசாயிகள், படை வீரர்களின் அடித்தளத்திலிருந்தே… …”

அப்படியானால், தராதரம் – பரவலாக்குதல் இரண்டுக்கும் என்ன உறவு? பிரச்சனையை மக்களின் தேவையிலிருந்து பார்க்கலாம். மக்களுக்கு எளிய, தெளிவான படைப்புகள் வேண்டும். எதிரியுடன் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு, எதிரிகளால் எழுத்தறிவற்ற கல்வியற்ற மூடர்களாக, அடிமைகளாக நசுக்கப்பட்டுக் கிடக்கும் மக்களுக்கு போராட உற்சாகம் வேண்டும்; வெற்றி மீது நம்பிக்கை வளர வேண்டும்; எதிரிக்கு எதிராக ஒரே மனத்தோடு, ஒரே சிந்தனையோடு போராடுவதற்காக பரந்த பொது அறிவு அவர்களுக்கு வேண்டும்; பரந்த கலாச்சார அறிவு வேண்டும்; நிறையக் கலை இலக்கியப் படைப்புகள் வேண்டும்.

மாவோவின் சொற்களில் அவர்களுக்கு உடனே தேவை ‘பட்டாடைகளில் அதிக பூ வேலைப்பாடு’ அல்ல; ‘குளிர்காய விறகு’. ஆனால் மக்களுக்கு ஒரே தரத்தில் படைப்புகள் கொடுப்பது சரியா? சரியல்ல; அவர்கள் அடுத்தடுத்த உயர்ந்த தரங்களைக் கோருகிறார்கள்; அவர்களின் மட்டம் உயர்த்தப்பட வேண்டும். தரம் உயர்த்துவதைத் தீர்மானிப்பது பரவலாக்குதலே; அதேசமயம், பரவலாக்குகின்ற வேலைக்கு தரம் வழிகாட்டுகிறது.

சீனப் புரட்சி அனுபவத்திலிருந்து பார்த்தால், நேரடியாகவும் தரமான படைப்புகள் அளிக்கப்பட்டன; மறைமுகமாகவும் அத்தேவைகள் நிறைவேற்றப்பட்டன. அதாவது, மக்களுக்கு உதவி செய்யும், கற்றுக் கொடுக்கும் முன்னணியாளர்களுக்கு தரமான கலை, இலக்கியம் கொடுக்கப்பட்டது; அவர்கள் தங்களின் ஊக்கமான முன்முயற்சியோடு மக்களுக்கு தரத்தை ஊட்டினார்கள்.

கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே
“உண்மையான கலைப்படைப்பு மக்களிடம் உள்ள கலைஞனைத் தட்டி எழுப்புகிறது; அவர்களது உலகக் கண்ணோட்டத்தை மட்டுமல்லாமல், அழகியல் – கலையியல் ரசனைகளையும் அவர்கள் உருவாக்கிக் கொள்ள வழி செய்கிறது.”

ந்த அனுபவத்திலிருந்து கற்றுக் கொண்டு தமிழக நிலைமைக்கேற்ப இப்பிரச்சனையை நாம் அணுகுகிறோம். இதற்கான பிரச்சாரக் கருவியாக, ‘புதிய கலாச்சாரம்’ ஏடு வெகு ஜனக் கலாசார ஏடாக நடத்தப்படுகிறது; இது கலை இலக்கிய பண்டிதர்களுக்காக, கலை இலக்கிய ஆய்வுகள் நடத்தும் பத்திரிகை அல்ல; ஒரு குறுகிய வட்டத்துக்குள் நின்று விடும் நோக்கமுடையதும் அல்ல. இதனாலேயே ‘புதிய கலாச்சாரம்’ ஒரு இலக்கிய ஏடு அல்ல என்று விமர்சிப்பவர்கள் உண்டு; இலக்கிய ஏடு என்றால் ஆழமான விஷயங்களைப் போடவேண்டும் என்கிறார்கள்.

‘புதிய கலாச்சாரம்’ ஏட்டின் வரம்பை அவ்வாறு குறுக்க முடியாது; ஒரு ‘கணையாழி’ பத்திரிகை போல குறைந்த பட்ச வாசகர்களுக்காக நடத்த முடியாது; லட்சக்கணக்கான வாசகர்களைச் சென்றடைவது எப்படி என்றுதான் சிந்திக்க வேண்டுமே தவிர, அவர்களையெல்லாம் தவிர்த்துவிட்டு குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்ட முடியாது; இப்படிப்பட்ட ‘இலக்கியத் தவம்’ ‘இலக்கியச் சேவை’ தேவைதானா, அவசியம்தானா என்பதை சமூக அக்கறை கொண்ட கலைஞர்கள் சிந்திக்க வேண்டும்.

”அதிகமான மக்கள் மந்தைகள்; அது மலிவான கலாச்சாரத்தையே விரும்புகிறது; குறைந்த அளவு மக்கள் மட்டுமே புத்திசாலிகள், அவர்கள் மட்டுமே தரத்தை விரும்புகிறார்கள்” என்ற வாதத்தை அந்தப் புனித, சுத்த இலக்கியவாதிகள் வைக்கிறார்கள்.

மக்கள் மந்தைகள் அல்லர்; முட்டாள்கள் அல்லர்; தரமில்லாத மூடர்கள் அல்லர்; அனைவருக்கும் விளங்கும்படியான எடுத்துக்காட்டாக சந்தைச் சினிமாக்களின் வெற்றி, தோல்வியை அலசிப் பார்க்கலாம்.

மிக மோசமான மசாலா நெடியடிக்கும் சகலகலா வல்லவன், சின்ன தம்பி, சின்ன ஜமீன், அண்ணாமலை போன்ற படங்கள் வெற்றி அடைகின்றன; ஆபாச ஜோக்குகள், ஆபாச காட்சிகள், மசாலாக்கள் இல்லாத ஆனால் இடைத் தரப்படம் (Off-beat) என்று சொல்லப்படும் வீடு, நிர்மால்யம், மாபூமி, அங்குர், நிஷாந்த், அர்த் – சத்யா போன்ற படங்களையும் (இதில் எல்லாப் படங்களின் கருத்துக்களோடு நாம் ஒத்துப் போகாவிட்டாலும்) கனமான கருத்து, வடிவச் சிறப்பு, சொல்லப்படும் முறை போன்ற தரத்துக்காக மக்கள் வரவேற்றுப் பார்க்கிறார்கள்.

மசாலாப்படம் வெற்றிகரமாக ஓடும் போதெல்லாம் “மக்களின் தரம் மோசம், ‘இதுகளை’ மாற்றவோ, திருத்தவோ முடியாது” என்று பலர் சொல்கிறார்கள்; அதே மக்கள் வேறு வகைப் படங்களை வெற்றி பெறச் செய்தால் மக்களிடம் நல்ல கலையைப் புரிந்து கொள்ளும் குணம் இருப்பதாக அதே நபர்கள் சொல்கிறார்கள். இப்படி ஒரு கோடியிலிருந்து இன்னொரு கோடிக்குத் தாவுகின்ற இவர்களின் விமர்சனப் பார்வையில்தான் கோளாறு இருக்கிறது.

மோசமான படம் வெற்றி அடையும்போது கீழ்த்தரமான கலை வடிவம், கருத்து இரண்டின் ரசனைக்கும், தீனிபோடுவதை நாம் மறுக்கவில்லை; ஆனால் வேறு வகைப் படங்களை அவர்கள் வெற்றி பெற வைக்கும் அதே மக்களிடம் தரத்துக்கான வாய்ப்புகள் உள்ளன; அவர்கள் தங்கள் தரம் வளர வேண்டும், உயர வேண்டும் என்ற தாகத்தோடு, பசியோடுதான் இருக்கிறார்கள். லெனின் மொழியில் சொல்வதானால், “உண்மையான கலைப்படைப்பு மக்களிடம் உள்ள கலைஞனைத் தட்டி எழுப்புகிறது; அவர்களது உலகக் கண்ணோட்டத்தை மட்டுமல்லாமல், அழகியல் – கலையியல் ரசனைகளையும் அவர்கள் உருவாக்கிக் கொள்ள வழி செய்கிறது“.

mai இவர்கள் கலை மக்களுக்காக அல்ல, கலை கலைக்காகவே என்ற கூட்டத்தைச் சேர்ந்தவர்கள். மனிதன் வீட்டைக் கட்டுகிறான்; அது வீட்டுக்காகவே, குடியிருப்பதற்காக அல்ல என்று சொல்லி ஒருவர் மனம் போன போக்கில் கட்டினால் எப்படிப் பயனற்றதாகப் போகுமோ அதுபோலவேதான் கலையும். இதே கூட்டத்தைச் சேர்ந்த ஒரு நபர் “2000 பிரதிகளுக்குமேல் ஒரு பத்திரிகை நடத்தப்படுமானால் அது இலக்கியப் பத்திரிகையே அல்ல” என்று ஒரு வரம்பையே அறிவித்தார். வரம்புதான் போட்டாரே, எதற்காக 2000 என்றுதான் புரியவில்லை!

இந்த தந்தக் கோபுரவாதிகள் எப்போதுமே கீழே இறங்குவதில்லை; அதனாலேயே அவர்களுக்கு மக்களைப்பற்றித் தெரியாது; மக்களின் சமூக, கலாச்சாரப் பிரச்சனைகள் பற்றித் தெரியாது; மக்கள் என்ன தரத்தை விரும்புகிறார்கள் – அதன் பிரச்சனை என்ன என்றும் அவர்களுக்குப் புரியாது. (சரியாகச் சொல்வதானால், ஆபாச – மசாலாப் படங்களை உயர்ந்த தரத்தில் கொண்டு வருவதையே இவர்கள் விரும்புகிறார்கள்; எதிர்பார்க்கிறார்கள்; அதையே கலைப்படம் என்று போற்றவும் செய்கிறார்கள்.) மக்களைப் பற்றி விமர்சிப்பதற்கு இவர்களுக்கு என்ன அருகதை இருக்கிறது?.

இதற்கு என்ன காரணம்? இவர்கள் தங்கள் தகுதி, மதிப்பு பற்றி எல்லாக் காலத்துக்கும், கேள்விக்கிடமற்ற, நிலையான உறுதியான இடம் என்று ஒன்றை தாங்களே நினைத்துக் கொள்கிறார்கள்; மக்களின் தரம் சிறுமையுடையது என்ற கண்ணோட்டம் நம் நாட்டைப் பொறுத்த அளவில் மேல் வர்க்க, மேட்டுக்குடி, மேல்சாதிக் கண்ணோட்டமே. மற்ற மக்களைத் தரம் தாழ்ந்தவர்கள் என்று கருதுவதால்தான் அவர்களுக்குக் கலைத் தரம் தேவையில்லை, அவர்கள் வெந்ததைத் தின்று வந்ததை வாழ்ந்தால் போதும் என்று இவர்களே தீர்மானித்துக் கொள்கிறார்கள்.

எனவே, கலைக்கு ஒரு தரம் வேண்டும் என்று மேட்டுக்குடிக் கலைஞர்கள் சொல்வது வேறு; மாவோ சொல்வது வேறு. இரண்டும் எதிர் எதிர்ப் பாதைகள். மக்களின் உணர்வை, ரசனையை உயர்த்த வேண்டும் என்ற அக்கறை சமூக லட்சியம் உள்ளவர்களுக்குத்தான்; இவர்கள் மாவோ சொல்லும் முறையில் சமூகத்தை அறியும் வடிவமாக, யதார்த்தத்தை அளவிடும் கருவியாகக் கலை இலக்கியத்தைக் கருதுகிறார்கள்; இவர்களுக்குத் திட்டவட்டமான லட்சியம் உண்டு; அதனால், யதார்த்தத்தின் துணுக்குகளை, துகள்களை வைத்திருக்கும் எதிர்மறையான சந்தை இலக்கியத்திலிருந்து ஆய்வு செய்து கற்றுக் கொள்கிறார்கள்; அதேபோல, யதார்த்தத்திலிருந்து முற்றிலும் அறுத்துக் கொள்கிற மேட்டுக்குடிக் காரர்களிடமிருந்து இவர்களும் விலகியே நிற்கிறார்கள். இது நியாயம்தானே?

***

சந்தைச் சினிமா இயக்குனர் ஒருவரை எடுத்துக் கொள்வோம். அவர் காமிராவில் கண்ணைப் பொருந்தும் போதே அவரெதிரே பணம் போட்டவரின் கடுகடுவென்ற முகம் தெரிகிறது; படம் கிராமம் அல்லது நகரத்தில் உள்ள குறிப்பிட்ட பிரிவினரை என்ன வேண்டும் என்ற சிந்தனையோடு அவர் இயங்குவதால் எதிரே அவர்கள் முகம் நிழலாகத் தெரிகிறது; இவற்றுக்கு ஏற்பவும், தன் வர்க்க வாழ்க்கையிலிருந்து உருவாக்கிக் கொண்ட கருத்து அல்லது மழுங்கிப்போன முட்டாள்தனம் ஆகியவற்றைக் கலந்தும் அவர் படம் பண்ணுகிறார்; கொஞ்சமாகவோ, கொசுறாகவோ கிராமப்புறத்து அப்பாவிக் கூலியாள், பண்ணையடிமை, ஒடுக்கப்படும் கிராமத்து உழைப்பாளிப் பெண் / குடும்பம், நாட்டுப்புறச் சொலவடைகள், கிராமப் புற விடலைகள், ரவுடிகள், கோமாளிகள், நாடோடிப் பாத்திரங்கள் என்று யதார்த்தத் துணுக்குகள் தலை நீட்டி விடுகின்றன. இது மசாலா சினிமா இயக்குநரின் தொழில்முறை. யாருக்காக என்பதில் அவர்களுக்கு ஒரு கண்ணோட்டம் உள்ளது – இது எதிர்மறை எடுத்துக்காட்டு.

லூசுன்
பேனாவைக் கையில் எடுக்கும்போதெல்லாம் அந்த வேலையில்லா இளைஞனின் முகம் நினைவில் வந்து தனக்குச் சமூகப் பொறுப்பை நினைவூட்டியது என்றார் லூசுன்.

சீனப்புரட்சி எழுத்தாளர் லூசுன் தனது அனுபவமாகச் சொன்னதை உதாரணம் கொடுக்கலாம். கடுமையான அடக்குமுறை நிலவிய காலகட்டத்தில் தன் வீடு தேடி வந்து கதைப் புத்தகம் கேட்டு வாங்க வந்த இளைஞன் தன் இதயத்தின் அருகில் இருந்த உள் பாக்கெட்டில் வியர்வை ஈரத்தில் நனைந்த பணத் தாளை எடுத்துக் கொடுத்ததை நினைவு கூறும் லூசுன், அந்தச் சம்பவத்துக்குப் பிறகு பேனாவைக் கையில் எடுக்கும்போதெல்லாம் அந்த வேலையில்லா இளைஞனின் முகம் நினைவில் வந்து தனக்குச் சமூகப் பொறுப்பை நினைவூட்டியது என்றார் – இது நேர்மறை எடுத்துக்காட்டு.

யதார்த்தத் துணுக்கு சிதறியிருக்கும் சந்தைக் கலையிலிருந்து நாம் கற்றுக் கொள்ள முனையலாம்; யதார்த்தத்தை முழுமையாகக் கொடுக்கும் லூசுன் போன்ற வரை முன்னோடிகளாகவே கொள்ளலாம். அவர்களிடம் யாருக்குப் படைக்கிறோம் என்ற கண்ணோட்டம் இருக்கிறது. முதலாமவருக்கு எதிர்மறைத் தேவை; லூசுனுக்கோ நேர்மறைத் தேவை இருந்தது. இவை தேவையாக இராத மேட்டுக்குடிக் கலைஞர்களிடமிருந்து நாம் என்ன கற்றுக் கொள்ள முடியும்?

மேட்டுக்குடிக் கலைஞர்கள், பல சமூக இயக்கங்களின் கலை, கலாச்சாரப் பங்களிப்பைக் கூட தரம் தாழ்ந்ததென்றே எள்ளி நகையாடுகிறார்கள். அண்மையில் சாகித்திய அகாடமியினர் “அண்ணா எழுதியது இலக்கியமே அல்ல” என்ற முடிவு எடுத்திருக்கிறார்கள்.

தி.மு.க. கலைஞர்கள் மத்தியில் வர்க்க உள்ளடக்கம் காரணமாக, நிலப்பிரபுத்துவ, குட்டி முதலாளித்துவ பிழைப்புவாதக் கண்ணோட்டம் காரணமாக வக்கிர மனோபவம் இருந்தது. இது மறுக்க முடியாத விஷயம். ஆனால் அன்று அவர்கள் பெருவாரியான மக்களைச் சென்றடையும் இலக்கியத்தைப் பற்றிச் சிந்திக்காமல் உயர்ந்த தரம் பற்றி மட்டுமே சிந்திதிருந்தால் பெரும் மக்கள் இயக்கமாக உருவெடுத்திருக்க முடியாது.

அவர்களின் சீர்திருத்த இயக்கத்தின் பலனை அனுபவித்து கல்வி, அறிவு, கலை நுணுக்கம் பெற்றவர்கள் இன்று பார்ப்பனர்களின் கண்ணோட்டத்துக்குத் தாவிவிட்டார்கள். அவ்வாறு ‘தரமில்லாத’ அந்த இயக்கம் நடந்திராவிடில் இவர்கள் இன்னும் ஆடு மாடு மேய்த்துக் கொண்டிருக்க வேண்டியதுதான்!

எனவே, தொகுப்பாக, மக்களைச் சென்றடையும் எந்த ஒரு சரியான கலை இலக்கியமும் தரம் பற்றிய பிரச்சனையில் மாவோ சொல்வதுபோல இயங்கியல் கண்ணோட்டத்தையே வைக்க முடியும். மக்களின் தேவையை ஒட்டியே தரம் வளர்க்கப் பட வேண்டும். ”புரட்சிகரமான உள்ளடக்கம், சாத்தியமான அதி உயர்ந்த அளவு நிறைவடைந்த கலையியல் வடிவம் – இரண்டினது ஒற்றுமையை நாம் கோருகின்றோம்” என்றார், மாவோ தனது உரையில்.

***

யாருக்காக, எப்படி எழுத வேண்டும் என்ற நிலைப்பாடு – கண்ணோட்டம் ஆகிய தெளிவுகள் மக்கள் கலைஞனுக்கு அவசியம் தேவை. அதைப்பற்றி அக்கறை கொள்வதற்கே மார்க்சிய – லெனினியக் கல்வியும், சமுதாயக் கல்வியும் தேவை. இந்த அறிவுத் தேட்டம் இருந்தால்தான் கடந்து போன காலத்திலிருந்து எவற்றைக் கற்பது, எப்படிக் கற்பது என்ற தெளிவு கிடைக்கும்; அதே போல நிகழ் கால கலாச்சாரப் பிரச்சனைகள் மீது சரியான விமர்சனமும் தெளிவாக வைக்க முடியும்.

மேலே பார்த்த விவாதம் சுட்டிக் காட்டும் இன்னொரு சுவாரசியமான விஷயம் சந்தை இலக்கியம், கலை கலைக்காக எனும் உயர்குடி இலக்கியம் இரண்டும் ஆளும் வர்க்க கலையின் இரு தோற்றங்களே; இரண்டு முகங்களே. 99 சதம் மக்களை சந்தை இலக்கியம் என்ற கொக்கியைப் போட்டு இழுத்து மாட்டிவிட்டு, 1 சதம் மக்களுக்கு மட்டும் போலித்தனமான கலைரசனை வித்தை காட்டுகிறார்கள். இந்த சகாப்தத்தின் முத்திரைச் சொல்: “சந்தையே கடவுள்!” இந்தக் கடவுளுக்கே 100 சதம் மக்களும் அடிமை என்று சந்தை விளம்பரம் கதறுகிறது.

இந்த சந்தைக் கலாச்சாரத்திலிருந்து உடனே மக்களைக் காப்பாற்றியாக வேண்டும். அரூபமான, காலங்கடந்த, ‘காலத்தால் வெல்ல முடியாத’, அழிவற்ற, நிரந்தரமான அரசியல் மதிப்பீடுகளை வைத்து அவற்றை நாம் முறியடிக்க முடியுமா? முடியாது. அதை வீழ்த்தாமல் நல்ல புதிய அழகியல் ரசனையை உருவாக்கி வளர்ப்பது சாத்தியமில்லை; அதை வீழ்த்தவில்லை எனில், கலைக்கே வழியில்லை; கலை அழிந்து போகும். கலை இருந்தால்தானே தரத்தைப் பற்றியும், தரத்தை உயர்த்துவதைப்பற்றியும் பேச முடியும். புரட்சிக் கலாச்சார இயக்கம் அதற்கு என்ன வேலைகள் செய்ய வேண்டும்?

இந்திய, தமிழ்ச் சூழலில் இன்று மேல் வர்க்க, மேல்சாதி மனோபாவமே சந்தைக் கலாச்சாரத்தின் உள்ளடக்கமாக இருக்கிறது. இந்த மனோபாவத்தை வெட்டி வீழ்த்த என்ன வேலைகள் செய்ய வேண்டும்?

– இராசவேல்
_____________________________
புதிய கலாச்சாரம் ஜனவரி 1994
_____________________________