Thursday, May 1, 2025
முகப்புஉலகம்அமெரிக்காஇலங்கை இசுலாமியர்களை குறிவைக்கும் பௌத்த மதவெறி !

இலங்கை இசுலாமியர்களை குறிவைக்கும் பௌத்த மதவெறி !

-

லங்கை தலைநகர் கொழும்புவின் கிராண்ட் பாஸ் பகுதியில் உள்ள மஸ்ஜித் தீன்-உல் இஸ்லாம் என்ற மசூதியை புத்த மத வெறியர்கள் தாக்கி சேதப்படுத்தினர். கடந்த சனிக் கிழமை மாலை தொழுகை நடந்து கொண்டிருந்த போது, அருகில் இருந்த புத்த விகாரையில் மணி அடித்து ஆட்களை திரட்டி, மசூதியின் மீது தாக்குதலை நடத்தியிருக்கின்றனர்.

மசூதி
இஸ்லாமிய, கிருத்தவ இலக்குகள் மீது கடுங்கோட்பாட்டு வாத புத்த மத அமைப்புகள் தாக்குதல் நடத்துகின்றன. (படம் : நன்றி பிபிசி)

அதைத் தொடர்ந்து தாக்குதல்களை தடுத்து நிறுத்துவதற்கு நூற்றுக் கணக்கான இசுலாமியர்கள் கையில் கம்புகளுடன் தெருக்களில் இறங்கியிருக்கின்றனர். அதற்குப் பிறகு  அரசு படைகளை அனுப்பி ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது.

இந்தத் தாக்குதல்களில் 12 பேர் காயமடைந்தனர். 3 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால், இது வரை தாக்குதல்களுக்கு காரணமான ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை.

மாறாக, இசுலாமிய பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்திய அரசு, தாக்கப்பட்ட மசூதியை கைவிட்டு ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வந்த பழைய மசூதிக்கு வழிபாட்டை மாற்றிக் கொள்ளும்படி ஒப்பந்தம் போட்டுக் கொண்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டு விட்டாலும் நூற்றுக் கணக்கான போலீஸ் படையினரும், ஆயுதப் படையினரும் காவலுக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான மசூதி சென்ற மாதம்தான் கட்டப்பட்டது. முந்தைய மசூதியின் பின்புறம் ஒரு கால்வாய் அமைக்கப்பட உள்ளதால், புதிய மசூதிக்கு மாறும்படி அரசு ஏற்பாடு செய்திருந்தது. பழைய மசூதியை அகற்றுவதற்கான புத்த மத வெறியர்களின் கோரிக்கையைத் தொடர்ந்துதான் அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

இதைத் தொடர்ந்து சிங்கள புத்த மத வெறியர்கள், புதிய மசூதி மீதும் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தனர். கடந்த மாதம் புத்த பிக்குகள் கும்பல் ஒன்று மசூதியை இடம் மாற்றும் படி அதற்கு அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதைத் தொடர்ந்து மசூதிக்கு பாதுகாப்பு போடப்பட்டது.

ஹலால் எதிர்ப்பு
ஹலால் உத்தரவாதத்தை எதிர்க்க்கும் ஆர்ப்பாட்டம். (படம் : நன்றி பிபிசி)

புத்த பல சேனா என்ற அமைப்பு சிறுபான்மை இனத்தவரான தமிழர்கள், கிருத்துவ, இசுலாமிய சிறுபான்மை மதத்தினர் ஆகியோர் மீது தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகிறது. கடந்த ஒரு ஆண்டில் 20-க்கும் மேற்பட்ட மசூதிகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன என்று இலங்கை முஸ்லீம் கவுன்சிலின் தலைவர் என் எம் அமீன் தெரிவிக்கிறார். செப்டம்பர் 2011-லிருந்து இஸ்லாமிய வணிக நிறுவனங்கள் மீது 30-க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடந்திருக்கின்றன.

உலகின் அனைத்து இடங்களிலும் அமைதியையும், ஜனநாயகத்தையும் பராமரிக்க ‘ஆவல்’ காட்டும் அமெரிக்காவின் இலங்கை தூதரகம் இந்த தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறது. சிங்கள இனவெறி அரசால் ஆயிரக் கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டதை முன் நின்று நடத்தி வைத்த அமெரிக்காவின் ‘அக்கறை’ இப்போது தாக்குதலுக்கு உள்ளாகும் இஸ்லாமிய மக்கள் பக்கம் திரும்பியிருக்கிறது. இதே அமெரிக்காதான் ஈராக்கிலும், ஆப்கானிலும் பல்லாயிரம் இசுலாமிய மக்களை கொன்று குவித்தது. இசுலாமிய மக்களை ஆதரிப்பதும், எதிர்ப்பதும் அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கு உட்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும்.

செந்தில்வேல்
“வெலிவேரியாவில் சிங்கள மக்கள் மீது நடத்தப்பட்ட ராணுவத் தாக்குதலின் எதிர்ப்பு அலையை திசை திருப்புவதற்கு கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் மீதான தாக்குதல் நடைபெற்றுள்ளதா என்ற சந்தேகம்” – சி கா செந்தில்வேல், புதிய ஜனநாயகக் கட்சி

சுமார் 2 கோடி மக்கள் தொகை கொண்ட இலங்கையில் 70 சதவீதம் மக்கள் புத்த மதத்தை பின்பற்றும் சிங்கள இனத்தவர், சுமார் 9% பேர் இசுலாமியர்கள். 30 ஆண்டுகளாக நடந்த உள்நாட்டுப் போரின் போது சிறுபான்மை தமிழ் மக்களை கொடூரமாக ஒடுக்கிய சிங்கள பெரும்பான்மை வாத அரசும் புத்த மத வெறி அமைப்புகளும், இப்போது இசுலாமியர்கள் மீது கவனத்தை திருப்பியிருக்கின்றன. இலங்கையில் பல்வேறு தரப்பு மக்கள் வாழ்வதை எதிர்க்கும் சிங்கள இனவெறி அமைப்புகள், ‘முஸ்லீம்கள் வணிகத் துறையில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். தங்கள் எண்ணிக்கையை குழந்தை பெற்றுக் கொள்வதன் மூலமும், மத மாற்றம் மூலமும் அதிகரித்து சிங்களவர்களை ஒடுக்கப் பார்க்கிறார்கள். சிங்களவர்களை ரகசியமாக கருத்தடை செய்து விடுகிறார்கள்.’ என்று அவதூறு பிரச்சாரங்களை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். இந்தியாவில் இதே கருத்துக்களைத்தான் ஆர்.எஸ்.எஸ் கும்பல் இசுலாமிய மக்களைப் பற்றி அவதூறாக பரப்பி வருகிறது. பெரும்பான்மை மதத்தின் பெயரால் எழுப்பப்படும் மதவெறியின் கருப்பொருள் உலகமெங்கும் ஒரே மாதிரிதான் இருக்கும் போலும்.

மின் கட்டண உயர்வு, தொழிற்சாலை கழிவுகளால் குடிநீர் மாசுபடுதல் இவற்றை எதிர்த்து போராடும் மக்களை திசை திருப்புவதற்கு அரசு இத்தகைய பிரிவினைகளை தூண்டி விடுவதாக புதிய ஜனநாயகக் கட்சியின் சி கா செந்தில்வேல் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது. இனவெறியின் பெயரால் சிங்கள மக்களை ஏமாற்றி பாசிச அரசு நடத்தும் ராஜபக்சே கும்பலுக்கு ஈழத்தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை முறியடித்த பின்னர் புதிய எதிரிகள் தேவைப்படுகிறார்கள். அதனாலேயே இந்த இசுலாமிய வெறுப்பு கலவரங்கள். இலங்கையை பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டைக் காடாக மாற்றி வரும் ராஜபக்சே கும்பலின் இந்த இனவெறி, மற்றும் சதிகளை சிங்கள மக்கள் உணராத வரை அவர்களுக்கும் விடுதலையோ அமைதியோ இல்லை.

மேலும் படிக்க