Tuesday, May 6, 2025
முகப்புசெய்திஉயர்நீதிமன்றத்தில் தமிழ் ! புதுச்சேரி புஜதொமு-வின் ஆர்ப்பாட்டம் !!

உயர்நீதிமன்றத்தில் தமிழ் ! புதுச்சேரி புஜதொமு-வின் ஆர்ப்பாட்டம் !!

-

உயர்நீதிமன்றத்தில் தமிழ் ! தமிழகம்- புதுச்சேரி வழக்குரைஞர்களின் போராட்டம் வெல்லட்டும் !!

மிழக உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக ஆக்க வேண்டும் என்றும், தமிழகம்-புதுச்சேரி நீதிமன்றங்களில் தீர்ப்பாணைகளை தமிழில் கொடுக்க வேண்டும் என்றும் 11.09.2013 அன்று காலை புதுச்சேரி நீதிமன்றம் அருகில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே புதுச்சேரி புஜதொமு மாநில அலுவலக செயலாளர் தோழர் லோகநாதன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுவை ஆர்ப்பாட்டம்புதுச்சேரி புஜதொமு மாநில பொதுச்செயலாளர் தோழர் கலை கண்டன உரை நிகழ்த்தினார். “ஒவ்வொரு தேசிய இன மொழியையும் மத்திய அரசு அங்கீகரிக்க வேண்டும். தாய்மொழியில் கல்வி கற்பதும், நீதிமன்றங்களில் தாய்மொழியில் வழக்கை நடத்துவதும் ஜனநாயக உரிமை. இதை மறுப்பது  ஜனநாயக விரோதம்” என்றும், “மக்கள் தங்களது மொழி உரிமையை பாதுக்காத்துக் கொள்ள இந்து, இந்தி, இங்கிலிஷ், இந்தியா என்று தேசிய இனங்களை ஒடுக்குகிற அரச கட்டமைப்பில் இருந்துக் கொண்டு தமிழை பாதுகாப்போம் என்று சொல்லுகிற இந்த ஓட்டு கட்சிகளை நம்பி முடியாது. எனவே மக்கள் இந்த ஜனநாயக போராட்டத்தை புரட்சிகர அமைப்புகளில் இணைந்து போராடுவதன் மூலம்தான் பாதுகாக்க முடியும்” என்றும் விளக்கி பேசினார்.

இம்முழகத்தையொட்டி புதுச்சேரி அம்பேத்கர் சட்ட கல்லூரி மாணவர்களிடமும், புதுச்சேரி நீதிமன்ற வழக்குரைஞர்களிடமும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

சட்ட கல்லூரி மாணவர்களின் கருத்து

சட்டக்கல்லூரி மாணவர்கள் வழக்காடுவது மட்டுமல்ல கல்லூரியில் படிக்கும் புத்தகங்களும் தமிழில் வரவேண்டும்! தமது தாய்மொழியில் படிக்கும்போதுதான் சட்ட நுணுக்கங்களை புரிந்து படிக்க முடியும். மேலும் நாம் தமிழில் வாதிடும் வார்த்தைகளின் சாரம் மற்றும் அதன் வீரியம் ஆங்கிலத்தில் படிக்கும் போதும், தீர்ப்பாணைகள் வரும் போதும் வருவதில்லை. என்று தங்களுடைய அனுபவத்தையும், ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினார்கள்.

வழக்குரைஞர்களிடம் பிரச்சார அனுபவம்

puthucheri-hc-tamil-2முதிர்ந்த 11 வழக்குரைஞர்களை தனியாக அலுவலகம் மற்றும் வீட்டில் சந்தித்து ஆர்ப்பாட்டத்தை பற்றி விளக்கி பேசி அதில் தாங்கள் கொஞ்சம் உரை நிகழ்த்த வேண்டும்மென்று கோரப்பட்டது. ஆனால் அவர்கள், “உங்களது போராட்டத்திற்கு எங்களது வாழ்த்துக்கள்! இப்படி திடிரென்று சொல்லுகிறீர்கள், நிறைய வழக்கு வேலைகள் உள்ளது. முன்கூட்டியே சொல்லியிருந்தால் தயாரிப்போடு இருந்திருப்போம், எனவே இப்போது இயலாது என்றும், இனி இப்போராட்டம் மட்டுமல்ல, வேறு எந்த பொது விஷயமானாலும் எங்களை அழையுங்கள். நிச்சயம் வருவோம்” என்று ஆதரவு தெரிவித்தார்கள்.

நீதிமன்றத்தில் பிரசுரம் கொடுத்து பிரச்சாரம் செய்தபோது பலர் ஆதரவு தெரிவித்தார்கள். ஆனால் சில வழக்குரைஞர்கள், “வேற வேலையில்லையா உங்களுக்கு?” என்று நமது பிரசுரத்தை கசக்கிப் போட்டார்கள். மேலும், “நீதிமன்ற வளாகத்துக்குள் வந்து பிரசுரம் கொடுப்பது சட்டவிரோதம் தெரியுமா?” என்று மிரட்டினார்கள். அதற்கு நாம் “நீதிமன்றம் என்பது மக்களின் பிரச்சினையை தீர்க்கும் இடம் அதனால் மக்களின் மொழியில் வாதிடுவதும், தீர்ப்பாணைகள் வழங்குவதும் மக்களின் அடிப்படை உரிமை, அதற்காக போராடுவதற்கும் சட்டத்தில் இடமுண்டு” என்று பதில் கொடுத்தவுடன் நம்மிடம் பேசாமல் காக்கிச் சட்டையை வைத்து நம்மை வெளியேற்றினார்கள். அதற்குள் நீதிமன்றம் முழுவதும் பிரசுரத்தை கொடுத்துவிட்டு வந்துவிட்டோம்.

நீதிமன்ற டவாலி ஒருவர் நம்மிடம் வந்து ”நீங்கள் செய்வது சரியானது, இவனுங்க சரியில்லை, நீதிபதி தமிழில் பேச சொன்னாலும் இவனுங்க பேசுவதில்லை. தனியார் பள்ளியில் படித்த பசங்க அப்படித்தான் இருப்பாங்க” என்று தனது அனுபவத்தை பகிர்ந்துக்கொண்டார்.

தகவல்:-
புஜதொமு, புதுச்சேரி.