Thursday, May 13, 2021
முகப்பு செய்தி உயர்நீதிமன்றத்தில் தமிழ் : சென்னை பல்லாவரத்தில் ஆர்ப்பாட்டம் !

உயர்நீதிமன்றத்தில் தமிழ் : சென்னை பல்லாவரத்தில் ஆர்ப்பாட்டம் !

-

உயர் நீதி மன்றத்தில் தமிழ் ! தமிழக வழக்குரைஞர்களின் போராட்டம் வெல்லட்டும் !

மிழ்நாடு என்று பெயர் வைத்துக்கொண்டு தமிழை ஆட்சி மொழியாக்கு, தமிழை உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக்கு என்று வழக்குரைஞர்கள், மக்கள், ஜனநாயக சக்திகள் இன்னமும் போராடிக்கொண்டு இருக்கிறார்கள் என்பதை பெருமையாக எண்ண முடியுமா? கண்டிப்பாக இல்லை.எவ்வளவு பெரிய அவமானம்! இது ஒரு தன்மானப்பிரச்சினை என்பதை பதியவைக்கும் விதமாக “உயர் நீதி மன்றத்தில் தமிழ் ! தமிழக வழக்குரைஞர்களின் போராட்டம் வெல்லட்டும்” என்ற தலைப்பின் கீழ் மக்கள் கலை இலக்கியக்கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, புதிய ஜன நாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புக்கள் சார்பில் பல்லாவரம்,, அம்பேத்கர் சிலை அருகில் 12.09.2013 அன்று மாலை 4 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வெல்லட்டும் ! வெல்லட்டும் !
உயர் நீதிமன்றத்தில்
தமிழை வழக்கு மொழியாக்க
வழக்குரைஞர்களின் போராட்டம்
வெல்லட்டும் ! வெல்லட்டும் !

உலக நாடுகள் அனைத்திலும்
அவரவர் தாய் மொழியில்
நீதி மன்றம் நடைபெறுவதே
ஜனநாயகம் ஜனநாயகம் !,

நீதி மன்றங்கள் மக்களுக்கானது,
அது மக்களுக்கு நீதி வழங்கவே !
நீதிபதிக்கும் வழக்குரைஞருக்கும்
வேலையளிக்கும் நிறுவனமல்ல !

அரசியலில் ஆதாயமடைய
மாநில சுயாட்சி கோருகின்ற
ஓட்டுப்பொறுக்கி கட்சிகள் அனைவரும்
மாநில மொழியில் கல்வியைக் கொண்டு வர
மாநில மொழியில் நீதியைக் கொண்டுவர
சுயாட்சி கோராதாது எதனாலே? எதனாலே?

உரிமை வேண்டும் உரிமை வேண்டும்
அனைத்து தேசிய இனங்களும்
அவரவர் தாய்மொழியில்
வழக்கு தொடுக்க, வாதாட
உரிமை வேண்டும் !

என்ற முழக்கங்களுடன் ஆர்ப்பாட்டம் தொடங்கியது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய புஜதொமுவின் மாநில இணைச் செயலர் தோழர். ஜெயராமன் தனது உரையில், தமிழ் நாட்டில் தமிழை வழக்காடு மொழியாக்க போராடும் நிலையில் இருப்பதையும், அதற்கு இந்தியா தேசிய இனங்களின் சிறைக்கூடமாக இருப்பதையும் சுட்டிக்காட்டி உலக நாடுகள் அனைத்திலும் அவரவர் தாய் மொழியில் நீதிமன்றங்கள் நடைபெறும் போது தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் மட்டும் அவ்வுரிமை மறுக்கப்படுவது பற்றி ஓட்டுப்பொறுக்கிகள் வாய்திறக்காமல் மவுனம் சாதிக்கும் அயோக்கியத்தனத்தையும் அம்பலப்படுத்தினார்.

சிறப்புரையாற்றிய புமாஇமுவின் மாநில அமைப்புக்குழு உறுப்பினர், தோழர். சரவணன் தனது உரையில் “வழிபாட்டு உரிமை முதல் கல்வி, வழக்காடும் உரிமை வரை தாய் மொழி திட்டமிட்டு மறுக்கப்படுவதை சுட்டிக்காட்டி தாய்மண், தாய் மொழி சார்ந்த உணர்ச்சிகளை அறுத்தெறிந்து விட்டு பொம்மைகளைப் போல வாழ்கின்ற மனிதர்களை உருவாக்கி சொரணையற்ற சமூகத்தை படைக்கும் சதியினை அம்பலப்படுத்திப் பேசினார்.

இதற்காகவே திட்டமிட்டு தாய் மொழிக்கல்வி லாயக்கற்றது என்ற கருத்தினையும் உழைப்பினை கேவலமாகக் கருதும் மனப்பான்மையையும் தனியார்மயம் தன் சுரண்டலுக்காக ஏற்படுத்தி வருவதையும் அதன் விளைவாகவே வெளி நாட்டு பல்கலைகழகத்திற்கு அனுமதியளிப்பதையும் வெளிநாட்டுக் கம்பெனிகள் வரைமுறையின்றி கொள்ளையடித்தும் தன்னைக் காப்பாற்ற அவை வெளி நாட்டு வழக்குரைஞர்களை இங்கு வாதாடவைக்க முயலும் இந்த நிலையில் தமிழக வழக்குரைஞர்களின் இந்தப் போராட்டம் உரிமைக்கான போராட்டம், தன்மானத்திற்கான போராட்டம், அதற்கு புரட்சிகர அமைப்புக்கள் தொடர்ந்து போராடும்  என்பதையும் பதிவு செய்தார்.

பெண்கள் தொழிலாளர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டம் காலம் காலமாய் மறுக்கப்பட்ட தாய்மொழி உரிமைக்கான போராட்டத்தை உலகமய – தனியார்மயத்திற்கு எதிரான போராட்டத்துடன் இணைத்து தன்மானத்திற்கான போராட்டமாக மாற்றப்பட வேண்டிய அவசியத்தை உணர்த்தியது.

 

 

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு

  1. வெட்கக்கேடு! உயர்நீதிமன்றத்தில் தமிழில் ஏன் வாதாடக்கூடாது எனப் புரியவில்லை. அதற்கு என்ன காரணம் எனத் தெரியவில்லை.

    • உச்சநீதிமன்றத்தில் பல மாநில வழக்குகள் வரும். ஆகவே பொதுவாய் ஒரு மொழியினை எடுத்து வாதாடுவதற்கு ஆங்கிலம் பயன்படுத்தலாம். உயர்நீதிமன்றத்தில் பிற மாநில வழக்குகள் வருமா? தமிழக வழக்குகளின் சதவீதமே அதிகமென எண்ணுகிறேன்.

      பிற மாநிலங்களைப் பற்றித் தெரியவில்லை. தமிழ்நாட்டில் இது வெற்றி பெற்றால் ஏன் மற்ற மாநிலங்களுக்கு நாம் ஒரு முன்னுதாரணமாக விளங்கக்கூடாது? பக்கத்து இலைக்காரன் பாயசம் சாப்பிட்டால்தான் நாமும் சாப்பிட வேண்டுமா என்ன?

Leave a Reply to kmv பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க