Monday, September 20, 2021
முகப்பு உலகம் அமெரிக்கா சிரியா : அடுத்த இராக் ?

சிரியா : அடுத்த இராக் ?

-

சிரியா மீது ஒரு அநீதியான, ஆக்கிரமிப்புப் போரைத் தொடுப்பதற்கான தயாரிப்புகளை அமெரிக்காவும் மேற்குலக ஏகாதிபத்திய நாடுகளும் முடுக்கி விட்டுள்ளன.  “இராக் மீது நடத்தப்பட்டதைப் போன்று இல்லாமல், இது ஒரு சிறிய தாக்குதலாக இருக்கும்” என அமெரிக்க அதிபர் ஒபாமா பத்திரிகையாளர்களிடம் தெரிவிக்கிறார்.  இங்கிலாந்தும், பிரான்சும் தங்கள் நாடுகளின் இராணுவ கவுன்சில்களைக் கூட்டி ஆலோசனை நடத்துகின்றன.  இன்னொரு புறமோ, சிரியாவிலிருந்து 160 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள சைப்ரஸ் நாட்டின் அக்ரோதிரி இராணுவ விமான தளத்தில் இங்கிலாந்து நாட்டு இராணுவ விமானங்கள் தரையிறக்கப்பட்டுள்ளன.  மத்திய தரைக் கடல் பகுதியில் அமெரிக்கா தனது நான்கு போர்க் கப்பல்களைக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.

சிறுவர்கள் பிணங்களாக
ஆகஸ்டு 21 அன்று சிரிய அரசு நடத்திய ரசாயன ஆயுத தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறப்படும் சிறுவர்களின் சடலங்கள்

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடுகளான ரசியாவும் சீனாவும் இந்தப் போர் முஸ்தீபுகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. ” நாங்கள் எதிர்த்துப் போரிடுவோமே தவிர, சரணடைய மாட்டோம்” என அறிவித்திருக்கிறது, சிரியாவின் அல்-அஸாத் அரசு.  சிரியா மீது போர் தொடுப்பதில் அமெரிக்காவை விஞ்சும் அளவிற்கு வெறியோடு திரியும் இங்கிலாந்து அரசுக்கு எதிராகவும், போருக்கு எதிராகவும் இலண்டனில் ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன.

இராக் மீது போர் தொடுப்பதற்கு, “சதாம் உசேன் பேரழிவு ஏற்படுத்தும் ஆயுதங்களைத் தமது நாட்டில் பதுக்கி வைத்திருப்பதாக” ஒரு பொய்யான குற்றச்சாட்டை அமெரிக்காவும் இங்கிலாந்தும் திட்டமிட்டு உருவாக்கி பரப்பின. சிரியா மீதான ஆக்கிரமிப்புப் போரை நியாயப்படுத்துவதற்கு,  ‘அஸாத் அரசு கடந்த ஆகஸ்டு 21 அன்று சிரிய நாட்டின் தலைநகரான டமாஸ்கஸிலுள்ள அல்-கௌதா என்ற பகுதி மீது இரசாயன ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியதாகவும், அதில் சிக்கி குழந்தைகள் – சிறுவர்கள் உள்ளிட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மாண்டுவிட்டதாகவும்” குற்றஞ்சுமத்துகின்றன.

அஸாத் அரசிற்கு எதிராக ஆயுதத் தாக்குதல்களைத் தொடுத்துவரும் அல்-நுஸ்ரா என்ற முசுலீம் அடிப்படைவாத அமைப்புதான் இக்குற்றச்சாட்டை முதலில் தெரிவித்தது.  இத்தாக்குதலில் 200-க்கும் மேற்பட்டோர் இறந்து போனதாக முதலில் கூறப்பட்டு, பின்னர் சாவு எண்ணிக்கை படிப்படியாக உயர்த்தப்பட்டது.  இப்படியொரு  தாக்குதல் நடந்திருப்பதும் சாவு எண்ணிக்கையும் உண்மைதானா?  உண்மையென்றால், இத்தாக்குதலை நடத்தியது அஸாத் அரசா அல்லது ஆயுதந் தாங்கிய எதிர்த் தரப்பா என்ற கேள்விகளுக்கெல்லாம் இதுவரை நம்பத்தகுந்த பதில் எதுவும் கிடைக்கவில்லை.

பஷார் அல் அசாத்
சிரிய அதிபர் பஷார் அல்-அஸாத்

அஸாத் அரசின் அனுமதியுடன் சிரிய நாட்டிற்குச் சென்றுள்ள ஐ.நா. குழுவொன்று இத்தாக்குதல் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.  அந்த ஆய்வு முடிவுகள் வெளிவருவதற்கு முன்பே, அமெரிக்க உள்ளிட்ட மேற்குலக ஏகாதிபத்திய நாடுகள், ‘அந்தத் தாக்குதலை அஸாத் அரசுதான் நடத்தியது; அதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன’’ என்று பிரச்சாரம் செய்யத் தொடங்கி விட்டன.

இத்தாக்குதலில் பலியானதாகக் கூறப்படும் குழந்தைகளின் புகைப்படம் உலகெங்கும் பரவலான அனுதாபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.  அந்த அனுதாபத்தைச் சூட்டோடு சூடாகத் தமது தீயநோக்கத்திற்குப் பயன்படுத்திக் கொள்ள முனைந்துள்ளன, மேற்குலக ஏகாதிபத்தியங்கள். ‘இந்தத் தாக்குதலுக்காக சிரிய அதிபரைக் கண்டிக்க வேண்டும்; சிரிய மக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை எடுக்கத் தங்களை அனுமதிக்க வேண்டும்” எனக் கோரும் தீர்மானமொன்றை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அளித்திருக்கிறது, அமெரிக்காவின் கைத்தடியான இங்கிலாந்து.

மனிதப் பேரழிவைத் தடுப்பதற்கு சிரியா மீது போர் தொடுப்பது அவசியமானது என நியாயவான்களைப் போலப் பேசுகின்றன மேற்குலக ஏகாதிபத்தியங்கள்.  ஜனநாயகம், மனித உரிமைகள், தீவிரவாத எதிர்ப்பு – எனக் கூச்சல் போட்டுக்கொண்டு இக்கும்பல் நுழைந்த ஆப்கான், இராக், லிபியா ஆகிய நாடுகளின் நிலைமை இன்று எப்படி உள்ளது தெரியுமா?  ஆப்கான் பல்வேறு யுத்தப் பிரபுக்களின் போர்க்களமாக இன்று மாறி நிற்கிறது.  அங்கு அமைதியை ஏற்படுத்த, தாலிபான் தீவிரவாதிகளோடு பேச்சுவார்த்தை நடத்துவதற்கான ஏற்பாடுகள் அமெரிக்காவின் சம்மதத்தோடு நடந்து வருகின்றன.  சதாம் உசேன் ஆட்சியின் கீழ் ஓரளவு மத நல்லிணக்கம் நிலவிய இராக், இன்று மத, இன மோதல்களில் சிக்கி சின்னாபின்னாமாகிக் கிடக்கிறது. அமெரிக்க ஆக்கிரமிப்பின் காரணமாகவும், மத-இன மோதல்களின் காரணமாகவும் இராக்கில் கடந்த பத்தாண்டுகளில் 1,25,000-க்கும் மேற்பட்டோர் இறந்து போது நாடே சுடுகாடாகி விட்டது.  அன்று இராக்கில் இல்லாதிருந்த அல்-காய்தா,  அமெரிக்க திணித்த ‘ஜனநாயகம்’ காரணமாக இன்று இராக்கில் உருவாகியிருப்பதோடு, அங்கிருந்து ஜிஹாதிகளை சிரியாவுக்குள் அனுப்பி வைக்கும் அளவிற்கு வலுவாக உள்ளது.  லிபியாவோ பல்வேறு ஜிஹாதி குழுக்களின் பதவி வேட்டைக்கான பூமியாகி விட்டது.

சிரியாவில் அஸாத்தின் ஆட்சிக்கு எதிராக ஆயுதத் தாக்குதல்களை  நடத்திவரும் குழுக்களுள் பெரும்பாலானவை கூலிப்படை போன்றவைதான்.  இக்குழுக்களிலேயே மிகப்பெரிய அமைப்பான அல்-நுஸ்ரா, இராக்கிலுள்ள அல்-காய்தாவின் கைத்தடி அமைப்பாகும்.  இக்குழுவிற்குத் தேவையான பணம் மற்றும் ஆயுதப் பயிற்சியை கத்தார் நாட்டின் மன்னர் பரம்பரை அளித்து வருகிறது.  அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக ஏகாதிபத்தியங்களால் ஆதரிக்கப்படும் ‘சுதந்திர’ சிரிய இராணுவத்திற்கு சிரியாவில் வேரோ விழுதோ கிடையாது.  ஆப்கான், செசன்யா, லிபியா, சூடான் ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செயப்பட்டுள்ள அல்-காய்தா ஜிஹாதிகளைக் கொண்டு இந்த இராணுவம் கட்டியமைக்கப்பட்டுள்ளது.  சன்னி மத அடிப்படைவாதக் கட்சியான முசுலீம் சகோதரத்துவக் கட்சியை சவூதி அரேபியாவின் மன்னர் குடும்பம் ஆதரித்து வருகிறது.

அல்-காய்தா உள்ளிட்ட சன்னி மத அடிப்படைவாத அமைப்புகள் தங்களை அமெரிக்க எதிர்ப்பாளர்களைப் போலக் காட்டிக் கொள்வதெல்லாம் பம்மாத்து; உண்மையில் அம்மதவெறி அமைப்புகள் அமெரிக்காவின் கைக்கூலிகள் என்பதைத்தான் சிரியாவிலும் லிபியாவிலும் நடந்துள்ள, நடந்து வரும் நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன.

அதனால்தான் பெரும்பாலான சிரிய மக்கள், குறிப்பாக அந்நாட்டைச் சேர்ந்த சிறுபான்மையினரான ஷியா பிரிவு முசுலீம்களும், கிறித்தவர்களும், குர்து இன மக்களும் அமெரிக்காவின் தொங்குசதையான இந்த எதிர்த்தரப்பை, அஸாத்தின் ஒரு கட்சி சர்வாதிகார ஆட்சிக்கு மாற்றாகக் கருத மறுக்கிறார்கள். எதிர்த்தரப்பு ஆட்சி அதிகாரத்தைப் பிடித்து விட்டால், அஸாத் ஆட்சியின் கீழ் காணப்படும் மத நல்லிணக்கமும் சமூக இணக்கமும் ஒழிந்துபோய், சவூதி அரேபியா வகைப்பட்ட சலாபிகளின் மதவெறி சர்வாதிகாரம் சிரியாவிலும் கோலோச்சும் என அவர்கள் அஞ்சுகிறார்கள்.

அகதிக் குடும்பம்
லெபனான் தலைநகர் பெய்ரூட்டிற்கு அகதிகளாக ஓடிவந்த சிரிய குடும்பம், நடைபாதையோரத்தில் தங்கியிருக்கும் அவலக் காட்சி

அஸாத் அரசிற்கும் எதிர்த்தரப்புக்கும் இடையிலான ஆயுத மோதல்கள் கடந்த மூன்றாண்டுகளாக நடந்துவந்த போதும், எதிர்த்தரப்பு பெரிய வெற்றி எதையும் சாதிக்கவில்லை.  குறிப்பாக, அக்கும்பலின் பிடியில் இருந்த சில பகுதிகளைக் கூட அரசுப் படைகள் மீண்டும் கைப்பற்றி விட்டன.  இந்த நிலையில் சிரியாவில் நேரடியாகத் தலையிட்டால் அன்றி ஆட்டத்தில் மாற்றத்தைக் கொண்டுவர முடியாது என முடிவெடுத்த மேற்குலக ஏகாதிபத்திய அரசுகள், அதற்கு ஏற்றபடி சிரிய அரசு வசமுள்ள இரசாயன ஆயுதங்கள் குறித்துப் பீதியூட்டத் தொடங்கின.  இதன் தொடர்ச்சியாக, அலெப்போ நகரை இரசாயன ஆயுதங்களைக் கொண்டு சிரிய அரசு தாக்கியதாக அல்-நுஸ்ரா குற்றஞ்சாட்டியது.  ஐரோப்பிய யூனியன் இதைச் சாக்காகக் காட்டி,  எதிர்த்தரப்புக்கு ஆயுதங்கள் வழங்குவதற்கு விதிக்கப்பட்டிருந்த பெயரளவுக்கான தடைகளையும் நீக்குவதாக அறிவித்தது.  சிரியாவில் அமைதியை ஏற்படுத்துவது குறித்து நடைபெறவிருந்த ஜெனிவா பேச்சுவார்த்தைகளுக்கு முட்டுக்கட்டை போட்டது, அமெரிக்கா.

அலெப்போவில் கடந்த ஜூனில் நடந்த இரசாயன ஆயுதத் தாக்குதல்கள் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், அந்தத் தாக்குதலை எதிர்த்தரப்புதான் நடத்தியது என்பது அம்பலமான பிறகும் அமெரிக்காவும் எதிர்த்தரப்பும் சற்றும் அசராமல் அடுத்த குற்றச்சாட்டை அஸாத் அரசு மீது வீசியுள்ளன. ”சிரியாவின் இரசாயன ஆயுதங்கள் குறித்து ஆய்வு செய்ய ஐ.நா. குழுவை அனுமதித்துள்ள நேரத்தில், எதிர்த்தரப்பின் வசமுள்ள அல்-கௌதா பகுதி மீது தாக்குதலை நடத்துவோமா?” எனக் கேள்வி எழுப்புகிறது, அஸாத் அரசு.  ஆனால், அமெரிக்கா ஏகாதிபத்தியமோ இத்தாக்குதல் குறித்த ஐ.நா. ஆய்வின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்கும் விதத்தில், ”ஐ.நா. தனது ஆய்வை மிகவும் தாமதமாகத் தொடங்கியிருப்பதாகவும், அஸாத் அரசு ஏற்கெனவே ஆதாரங்களை அழித்துவிட்டதாகவும்” அடித்துக் கூறிவருகிறது.  ஐ.நா. ஆய்வு முடிவு எப்படியிருந்தாலும், சிரியா மீது தாக்குதல் தொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது என்ற தொனியில் இங்கிலாந்தும் பிரான்சும் சவால் விடுகின்றன.

இராக்கில் சிரிய அகதிகள்
ஆகஸ்டு 15 அன்று இராக்கிற்கு அகதிகளாக தப்பியோடிய பல்லாயிரக்கணக்கான சிரிய மக்களுள் ஒரு பகுதி

மேற்காசியாவில் இரானின் செல்வாக்கை மட்டுப்படுத்தி, அதைத் தனிமைப்படுத்துவதற்கும், எதிர்காலத்தில் இரானில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவருவதற்கும் சிரியாவில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவருவதை முதல்படியாகக் கருதுகிறது, அமெரிக்கா.  இதனால்தான் எந்தவிதமான சமாதான முன்னெடுப்புகளுக்கும் அமெரிக்கா ஒத்துழைக்க மறுக்கிறது.

அமெரிக்காவின் இந்த மேலாதிக்க வெறியின் காரணமாக, கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் ஆயுத மோதல்களில் சிக்கிக்கொண்டு ஏறத்தாழ ஒரு இலட்சம் சிரிய மக்கள் உயிரிழந்துள்ளனர்.  கிறித்தவர்கள், குர்து இனத்தவர்கள் உள்ளிட்ட ஏறத்தாழ 10 இலட்சம் சிரிய மக்கள் லெபனானிலும், இராக்கிலும், ஜோர்டானிலும் அகதிகளாகத் தஞ்சமடைந்துள்ளனர்.  சிரியாவில் ஒரு மிகப்பெரும் மனிதப் பேரழிவு நடந்து கொண்டிருப்பதைப் பற்றி அலட்டிக் கொள்ளாத அமெரிக்கா, போருக்குத் தயாராவது எத்துனை பெரிய அயோக்கியத்தனம்!  முசுலீம் தீவிரவாதத்தை ஒழிப்பதற்காகவே அவதாரமெடுத்திருப்பதாகக் கூறிக்கொள்ளும் அமெரிக்கா சிரியாவில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வர முசுலீம் அடிப்படைவாத அமைப்புகளோடும், அல்-காய்தாவோடும் கூட்டுச் சேர்ந்திருப்பது எத்துனை பெரிய மோசடி!  ஜப்பான் மீது அணுகுண்டை வீசிய அமெரிக்கா, வியட்நாம் மீது ஏஜெண்ட் ஆரஞ்ச் என்ற இரசாயன ஆயுதத்தை வீசிய அமெரிக்கா, இராக் மீது செறிவு குறைந்த அணு ஆயுதங்களைப் பிரயோகித்த அமெரிக்கா, அஸாத்தின் வசமுள்ள இரசாயன ஆயுதங்களிலிருந்து சிரிய மக்களைக் காப்பாற்றுவதற்குத்தான் போர் தொடுக்கப் போவதாகக் கூறுவது வக்கிரம் நிறைந்த வரலாற்று முரண் அல்லவா!

– செல்வம்.

_____________________________________________

புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2013

_____________________________________________

  1. //அஸாத் ஆட்சியின் கீழ் காணப்படும் மத நல்லிணக்கமும் சமூக இணக்கமும் ஒழிந்துபோய், சவூதி அரேபியா வகைப்பட்ட சலாபிகளின் மதவெறி சர்வாதிகாரம் சிரியாவிலும் கோலோச்சும் என அவர்கள் அஞ்சுகிறார்கள்.//

    முற்றிலும் உண்மை. ஒரு சர்வாதிகாரியாக இருந்தாலும் பெரும்பாண்மையான மக்கள் அசாத்தை ஆதரிப்பதற்குத் இதுவே காரணம். நாமும் இந்த யுத்தத்தில் அசாத்தை ஆதரிக்க வேண்டும்.

Leave a Reply to Sunder பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க