privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைகாதல் – பாலியல்ஹரியாணாவில் காதலர்களை கொன்ற ஜாட் சாதி வெறியர்கள் !

ஹரியாணாவில் காதலர்களை கொன்ற ஜாட் சாதி வெறியர்கள் !

-

ரியானா மாநிலம் ரோத்தக் மாவட்டத்திற்கு அருகில் உள்ள கர்னவதி என்ற கிராமத்தை நோக்கி அந்த வாகனம் வருகிறது. அதில் அழைத்து வரப்படுபவர்கள் தர்மேந்தர் (23), நிதி (20). ரோத்தக் நகரத்தில் ஐ.டி.ஐ படிக்கும் தர்மேந்திராவும், நுண்கலை பயிலும் நிதியும் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்தார்கள். ஒரே கோத்திரத்தை சார்ந்தவர்கள் தங்களுக்குள் திருமணம் செய்துகொள்ள கூடாது என்ற காப் பஞ்சாயத்தின் உத்தரவு இவர்களுக்கு தடையாக இருந்த்தால் கடந்த செவ்வாய் அன்று ஊரை விட்டு ஓடி டெல்லி சென்று திருமணம் செய்து கொண்டார்கள்.

நிதியின் பெற்றோர்
ரோத்தக் மாவட்ட நீதிமன்றத்துக்கு கொண்டு வரப்படும் நிதியின் பெற்றோர்.

புதன் காலையில் நிதியை தொடர்புகொண்ட அவரது பெற்றோர் இவர்களை சேர்த்து வைப்பதாகவும், எந்த தீங்கும் செய்யமாட்டோம் என்று கூறிய உறுதிமொழியை அடுத்து பெற்றோரால் அனுப்பி வைக்கப்பட்ட வாகனத்தில் தற்போது ஊருக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். வரும் வழியில் தாபாவில் உணவு வாங்கி கொடுத்து வெகு இயல்பாக, எந்த சலனமும் இல்லாமல் அவர்கள் டெல்லியிலிருந்து அழைத்துவரப்படுகிறார்கள். அவர்கள் தங்கள் கிராமத்தை நெருங்குகிறார்கள்.

வாகனம் நிதியின் வீட்டிற்கு செல்கிறது. அங்கு சென்றதுதான் தாமதம், நிதியின் பெற்றோரும் உறவினர்களும் அவரை சூழ்ந்துகொண்டு துடிதுடிக்க அடித்தே கொல்லுகிறார்கள். இதை ஊரார் அனைவரும் சுற்றி நின்று வேடிக்கை பார்க்கிறார்கள். அடுத்து தர்மேந்தர், இவரின் கை, கால்கள் முறிக்கப்பட்டு, பல முறை  தலை தனியாக வெட்டப்படுகிறது. பின் உடல் தர்மேந்தர் வீட்டு வாசலில் எறியப்படுகிறது. ஜாட் சாதிக்கு ஏற்பட்ட களங்கம் இருவரின் இரத்த்த்தாலும் கழுவப்பட்டு இறுதியில் கௌரவம் நிலை நாட்டப்படுகிறது.

நிதியின் பிணத்தை எரிக்க முற்படுகையில் தமிழ் சினிமா போல கிளைமேக்சில் ஆஜராகி நிதியின் பெற்றோரை கைது செய்திருக்கிறது போலீஸ். நிதியின் சகோதரனையும், மாமாவையும் தேடுவதாக சொல்கிறது. தன் மகளை கொன்றது குறித்து எள்ளளவு வருத்தமோ, குற்றவுணர்வோ இல்லாமல் ஏதோ ஒலிம்பிக்கில் தங்கம் வாங்கியதை போன்ற வெற்றி பெருமிதத்தொடு செல்கிறான் நிதியின் தந்தை நரேந்தர் என்ற பில்லு. “நான் செய்தது சரியான, கொளரவமான விசயம். இதை  மற்றவர்களும் தொடர்வார்களேயானால் இது போன்று நடப்பதை (காதல்) தடுத்து விடலாம்” என்று திமிர்த்தனமாக அறிவித்திருக்கிறான்.

காதல் திரைப்பட்த்தை நினைவூட்டும் இது போன்ற நிகழ்வுகள் ஹரியானாவில் இயல்பாக நடக்கின்றன. இவர்களுக்கு இந்த அதிகாரத்தையும், திமிரையும் வழங்குவது “காப் பஞ்சாயத்து” என்கிற சாதி பஞ்சாயத்துகள். பார்ப்பன வர்ணாசிரமத்தை நிலை நாட்டுவதற்காக அடக்கு முறைகளை ஏவி விடுவதில், கொலைகள செய்வதில் தாலிபான்களுக்கு நிகரானவர்கள் இவர்கள். ஆதிக்க ஜாட் சாதியினர் கையில் இருக்கும் இந்த பஞ்சாயத்துக்கள் அரசியல் சட்டத்தை மயிரளவு கூட மதிப்பதில்லை. இந்த பஞ்சாயத்துகளை கட்டுப்படுத்த உச்சநீதிமன்றம் பல முறை உத்தரவிட்டும் இது போன்ற செயல்கள் அதிகமாக நடப்பது தான் அதற்கு சாட்சி.

சமீபத்தில் நடந்த முசாஃபர்நகர் கலவரத்திலும் இந்த ஜாட் சாதி வெறியர்களும் பஞ்சாயத்துகளும் முக்கிய காரணமாக இருந்தன. முசாஃபர் நகரில் உள்ள நக்லா மந்தர் என்ற இடத்தில் செப்டம்பர் 7 அன்று நடந்த மகா காப் பஞ்சாயத்தில் கலந்து கொள்ள ஹரியானா, டெல்லி, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் இருந்து ஜாட் சாதி பிரதிநிதிகள்  வந்திருக்கிறார்கள். மகா பஞ்சாயத்து என்பது பல்வேறு மாநிலங்களில் உள்ள சுமார் ’8 கோடி’ ஜாட்டுகளின் பிரதிநிதிகளது பஞ்சாயத்து. அதனுடைய தொடர்ச்சியாகத் தான் கலவரம் நடந்திருக்கிறது.

மானேசர் தொழிலாளர் போராட்டம்
மானேசர் தொழிலாளர் போராட்டம்

தலித்துகளுக்கு எதிரான  வன்முறை மற்றும் பாலியல் வன் கொடுமை இங்கு அதிகமாக நடப்பதற்கு காரணமாக இருப்பவை இந்த காப் பஞ்சாயத்துகள் தான். இவைதான் தலித்துகளுக்கு எதிரான ஜாட் சாதி வெறியர்களின் அதிகார அமைப்பாக உள்ளன. ஹரியானாவில் 2002-ல் மாட்டுத்தோலை உரித்ததற்காக தலித்துகளை படுகொலை செய்தவர்களை விஸ்வ இந்து பரிஷத்தோடு சேர்ந்து நியாயப்படுத்தி ஆதரித்தவை இந்த காப் பஞ்சாயத்துகள். ஆண் பெண் விகிதம் மிகவும் குறைவாக உள்ள ஜாட் சாதி ஆண்களுக்கு தலித்துக்கள் மிக எளிய இலக்காகி இருப்பதாக ஆன்ந்த் டெல்டும்டே கூறுகிறார்.

இந்த காப் பஞ்சாயத்துகள் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாக தொழிலாளர் போராட்டத்திற்கு எதிராகவும் செயல்படுகின்றன. ஹரியானாவின்  மானேசர் தொழிற் பேட்டையில் செயல்படும் மாருதி நிறுவனம் தொழிலாளர்களை கசக்கிப் பிழிவதை சகிக்க முடியாமல் தொழிலாளர்கள் போராடினார்கள். போராடிய தொழிலாளர்களை வன்முறையாளர்களாக சித்தரித்து அவர்களை ஒடுக்கின மாநில அரசும், மாருதி நிர்வாகமும். அப்போது  மாருதி முதலாளிகளுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றி, தொழிலாளர்களை தங்கள் வாடகை வீட்டில் இருந்து வெளியேற்றின இந்த காப் பஞ்சாயத்துகள்.

ஹரியானா மாநிலம் கடுமையான முதலாளித்துவ சுரண்டலுக்கும், கொடூரமான நிலப்பிரபுத்துவ அடக்குமுறைக்கும் உதாரணமாக விளங்குகிறது. மானேசர் போன்ற இடங்கள் தொழிலாளர்கள் மீதான் சுரண்டலுக்கு அடையாளமாக இருக்கும் அதே வேளையில் இது போன்ற ஜாட் சாதி காப் பஞ்சாயத்துகள் நிலப்பிரபுத்துவத்தின் அடையாளமாக இருக்கின்றன. இவை இரண்டும் சேர்ந்து தொழிலாளர்கள், பெண்கள், தலித்துகள், சிறுபாண்மையினர்களை நசுக்கி வருகின்றன.

முசாபர் நகர் கலவரம்
முசாபர் நகர் கலவரம்

மாருதி தொழிலாளர்கள் மீது அடக்குமுறையை ஏவிவிடும் ஹரியானா அரசு இந்த காப் பஞ்சாயத்துகள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. மாறாக அனைத்து ஓட்டுக் கட்சிகளும் காப் பஞ்சாயத்தை ஆதரிப்பவர்களாகவே உள்ளனர். முசாஃபர்நகர் கலவரத்ற்கு அடித்தளமிட்ட மகா காப் பஞ்சாயத்தில் கட்சி வேறுபாடின்றி அனைத்து ஓட்டுக் கட்சிகளும் பங்கேற்றதே இதற்கு சாட்சி. இத்தகைய வட இந்திய பூமியில் இருந்துதான் இந்துமதவெறியர்கள் தமது செல்வாக்கான அடித்தளத்தை உருவாக்கியிருக்கின்றனர். இந்து மதவெறியும், ஜாட் சாதி வெறியும் ஒன்றொடு ஒன்று பின்னிப் பிணைந்தவை.

இந்தக் கொலையைப் பற்றி இது வரை எந்தக் கருத்தும் சொல்லாமல் மவுனம்  காக்கின்றன ஆளும் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியான இந்திய தேசிய லோக்தளமும். கருத்து தெரிவித்திருக்கும் அகில இந்திய  மாதர் சங்கம் போன்ற அமைப்புகள் “கவுரவ கொலைகளுக்கு” எதிராக புதிய சட்டத்தை கொண்டு வந்தால் இதற்கு தீர்வு கிடைக்கும் என்று, தெரிந்தே மக்களுக்கு பொய்யான ஆசை காட்டுகின்றன. ஆனால் காப் பஞ்சாயத்திற்கு அஞ்சி பெயரளவுக்கான அந்த சட்டத்தைக் கூட கொண்டு வர அரசு தயாராக இல்லை.

மானேசரில் உருவாகி வளர்ந்து வரும்  தொழிலாளி வர்க்க இயக்கம் பெண்கள், தலித்துகள், சிறுபான்மையினர் உள்ளிட்ட ஒடுக்கப்படும் மக்களை இணைத்து இந்த காப் பஞ்சாயத்துகளுக்கும், முதலாளித்துவ சுரண்டலுக்கும் ஒரு நாள் தீர்வு காணும்.

மேலும் படிக்க

  1. அட மங்குனிகளா…

    அவர்கள் இருவரும் உறவு முறையில் அண்ணன் தங்கை.

    உங்களுக்கு வேண்டுமானால் யார் யாருடன் வேண்டுமானாலும் சுற்றலாம், **** செய்யலாம்..

    ஆனால் உங்களை போல் எல்லோரும் இருப்பார்களா என்ன?

  2. kaathale en vuyir moochu endru kavithai yeluthum kavigargale konjam jaat saathi veriyargalai ambalapaduthi oru vari yeluthungal parpom… vinavin seithigalukku vungal pathil enna endru koorungal appoluthu neengal kavigargal enbathai yeatrukkollalam…

  3. சோழன் அவர்களே! அண்ணன் தங்கை காதலித்தார்கள் என்பதே அபத்தம்! சட்டப்படியும், மதபோதனைபடியும் குற்றமே! ஆனால் தண்டிக்கும் உரிமை நீதிமன்றங்களுக்குத்தானே உண்டு, குண்டர்கள் கையிலெடுத்துக்கொள்ளலாமா? இது காட்டு தர்பார் அல்லவா? ஆமாம் பூரி ஜகன்னாதரும், சுபத்திரையும் என்ன உறவு? அடுத்தவரை இழிவுபட பேசுமுன் தன் முதுகையும் பார்த்துகொள்ள வேண்டுமல்லவா?

  4. சோழரே, கோத்திரமுறையில் அண்ணன் தங்கை என்பது 2000 ஆண்டுகளுக்கு முன்பு சிறு இனக்குழுவாக இருக்கும்போதுதான். அப்பொழுதும்கூட இரத்த உறவு வகையில் வெகுவாக விலகிவிட்டது. இரத்த உறவுமுறையில் இப்பொழுது கொஞ்சம்கூட பொருந்தாது.

    மதம் என்ற அடிப்படை நம்பிக்கையில் கைவைக்காமல் வெறுமனே பார்பனீயத்தை பேசிக்கொண்டிருப்பதால் சாதிய அமைப்பை ஒழிக்கமுடியாது.

  5. உறவுகள் என்பது நம்மை,நம் ஆசைகளை கட்டுப்பாட்டில் வைத்து ஒழுக்கத்துடன் வாழ வழி செய்வதற்கே.நமது பேராசையால் பிறரது பொருளை அபகரிக்காமல் இருப்பதற்கும் கூட,நீஙகள் சொல்வது போல் வகை பிரிக்கப்பட்ட உறவுகள் மாற்றமடையுமேயானால் கற்காலநிலைக்குத்தான் போக வேண்டியதாக இருக்கும்.யார் யாருடன் வேன்டுமானாளும் இருக்கலாம்.அப்பொழுது வலிமை கொண்டவனே அபகரித்துக் கொள்வான்.நீங்கள் மீண்டும் உறவுகள் வேண்டும் என்று போராட வேண்டியிருக்கும்.

Leave a Reply to mkr பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க