1. இத்தாலி படகு விபத்து
எரித்ரியா, சோமாலியா போன்ற ஏழை ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து ஐரோப்பாவுக்கு இடம் பெயர்ந்து வரும் மக்கள் 500 பேரை ஏற்றி வந்த படகு ஒன்று இத்தாலிய கடற்கரையில் மூழ்கியதில் குழந்தைகள், பெண்கள் உட்பட 300 பேர் வரை உயிரிழந்தனர்.
ஏழைகளுக்கு பிறந்த மண்ணில் மட்டும் அல்ல, பிழைக்கச் செல்லும் மண்ணிலும் வாழ்வில்லை.
2. வாஷிங்டன் கார் சேசிங் – பெண் ஓட்டுனர் சுட்டுக் கொலை
வெள்ளை மாளிகை வெளி கேட்டில் தனது காரை மோதி விட்டுச் சென்ற பெண்ணை துரத்தி சுட்டுக் கொலை செய்த அமெரிக்க போலீஸ். காரிலிருந்து அந்தப் பெண்ணின் 1 வயது பெண் குழந்தை மீட்கப்பட்டது.
வெள்ளை மாளிகைக்குள் நுழைய முயலும் ஈ, காக்கை கூட சுட்டுக் கொல்லப்படும் என்பது அந்த அப்பாவிப் பெண்ணுக்கு தெரியவில்லை.
3. மெக்சிகோவில் 1968 படுகொலையை நினைவு கூர்ந்து மாணவர் பேரணி
1968-ல் 300 பல்கலைக் கழக மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டதை நினைவு கூர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் மெக்சிகோ நகரில் ஊர்வலம் நடத்தினர். மாணவர்கள் கலவர போலீசாருடன் மோதினார்கள்.
படுகொலையின் நினைவு நாளில் கூட படுகாயங்களுக்குக் குறைவில்லை.


4. ரியோ டி ஜெனிரோவில் ஆசிரியர்கள் வேலை நிறுத்தம்
மோசமான பணிச் சூழலையும், குறைந்த சம்பளத்தையும் எதிர்த்து பிரேசிலில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் சாலை மறியல் செய்தனர்.
கல்விப் பணி வகுப்பறையில் மட்டுமல்ல, தெருவிலும் தொடர்கிறது.
5. மான்செஸ்டர் பேரணி
பிரிட்டனின் சுகாதரத் துறையில் வெட்டுக்களை எதிர்த்து வடமேற்கு இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் நகரில் ஊர்வலம்.
அரசின் அநீதியை எதிர்த்து போராடுவதுதான் மக்களுக்கு ஆரோக்கியத்தைத் தரும்.
6. மும்பையில் கட்டிடம் இடிந்து 50 பேர் சாவு
செப்டம்பர் 27-ம் தேதி தெற்கு மும்பையில் மாநகராட்சி கட்டிய 5 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 61 பேர் உயிரிழந்தனர்.
மாநகராட்சியின் கட்டிட ஊழலுக்கு நரபலி.
7. கென்யா ஷாப்பிங் மால் தாக்குதல்
செப்டம்பர் 20-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை கென்ய தலைநகர் நைரோபியில் உள்ள வெஸ்ட்கேட் வணிக வளாகத்தில் இஸ்லாமிய தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 65 பேர் உயிரிழந்தனர், 200 பேர் காயமடைந்தனர்.
இஸ்லாமிய மதவெறிக்கு மற்றுமொரு இரத்த சாட்சியம்.
8. வங்கதேச ஆயத்த ஆடைத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்
வங்க தேசத்தில் ஊதிய உயர்வு கோரி லட்சக் கணக்கான தொழிலாளர்கள் தாக்காவிலும், காசிப்பூரிலும் செப்டம்பர் 21-ம் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்தனர்.
நெய்த கரங்கள் உரிமைக்காக உயர்கின்றன.
9. சீனாவில் தேசிய தின வார விடுமுறை
சீனாவில் அக்டோபர் 1 தேசிய தினத்தை ஒட்டிய ஒரு வார விடுமுறையின் போது லட்சக் கணக்கான மக்கள் சுற்றுலா தலங்களுக்கு பயணம் செய்தனர்.
வாங்கிய சம்பளத்தை செலவழிப்பதற்கு சீன அரசின் நுகர்வு கலாச்சார விடுமுறை.
