privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்சினிமாஅஜித்தின் தத்துவம் - அண்ணாச்சியின் நாக் அவுட் !

அஜித்தின் தத்துவம் – அண்ணாச்சியின் நாக் அவுட் !

-

அஜித்: ‘மங்காத்தா’ படம் மாதிரி ‘ஆரம்பம்’ படத்துல ரொம்ப ஸ்டைலிஷான ரோல். முந்தைய ஏ.எம்.ரத்னம் படங்கள் மாதிரி, இந்த படத்துலயும் ஒரு நல்ல மெசேஜ் இருக்கும். உலகளாவிய பிரச்சினையை பத்தியும் இந்தப் படம் பேசும்.

அஜித்
படம் : நன்றி தி இந்து.

அண்ணாச்சி: அடிச்சவன் அழுவான், விக்குனவன் குடிப்பான், விக்கை விட்டா வழுக்கை, இதுதாம்டே மெசேஜ். உலகளாவிய பிரச்சினைன்னா பாத்தா அது அல்கைதாதான், அவனுக்கு பயந்தா போதை பொருள்.

அஜித்: ‘வீரம்’ படத்துல அப்படியே ‘ஆரம்பம்’ படத்திற்கு எதிர்மறையான ரோல். ஆக்ரோஷமான கதாபாத்திரம். முக்கால்வாசி படத்துல என் காஸ்ட்யூம் வேஷ்டிதான்.

அண்ணாச்சி: தல முழுப்படத்துலயும் கூட வரும் ஜட்டிய வுட்டுட்டியே!

அஜித்: நான் ஒரு தொழில்முறை நடிகன். சம்பளம் வாங்கிகிட்டு, இயக்குநர் உருவாக்கியிருக்க கதாபாத்திரத்துல நடிக்கறவன். அதிர்ஷ்டவசமா, இதுவரை நான் நடிச்ச படங்கள்ல எனக்கேத்த ரோல் கிடைச்சுது.

அண்ணாச்சி: தலக்கி பொருத்தமான கதையை டைரக்டருமாரு எழுதலயாம், அவுக எழுதுற கதயிலதான் இவரு நடிக்காறாம். ரொம்ப பணிவுதாம்டே!

அஜித்: தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் ரெண்டு பேரோடயும் நான் ஒத்துப் போகற மாதிரி இருக்கணும்னு எதிர்பார்ப்பேன். படம் பண்றதே நம்மளோட பெஸ்ட் என்னவோ அதை குடுக்கத்தான். என்னைப் பொருத்தவரை திருப்தியா படம் பண்ண மனநிறைவு இருக்கணும். எனக்கு அது தான் தேவை.

அண்ணாச்சி: எனக்கு பத்திருபது கோடி குடுத்துப் பாருவே, நானும் தயாரிப்பாளர், இயக்குநரோட ஒத்துப் போய் திருப்தியா படம் பண்ணுவம்டே! பிச்சக்காரனுக்கு கூட காசு வாங்குனாத்தான் திருப்பதி, இல்லேன்னா எச்சக்கலைன்னு நம்மளையே திட்டுவான்!

அஜித்: இயக்குநரோட கிரியேட்டிவிட்டில தலையிடாம, நாம நடிக்கறதுல நம்ம திறமையை மேம்படுத்திக்கிட்டா, அது படத்துக்கு பெரிய பலமா இருக்கும்னு நினைக்கறேன். ஷூட்டிங் நடக்கற இடத்துல ஈகோ இல்லாம போனாலே போதும், அது வாழ்க்கைய அற்புதமானதாக்கிடும், இல்லையா!

அண்ணாச்சி: சரிலே, டைருடக்கரு கிரியேட்டிவா உன் தலையை சாணி வாளிக்குள்ள முக்கி எடுக்கணும்னு யோசிக்காருன்னு வை, குதிப்பியாடே! சொன்னா ஒரு கொலவெறி வருமுல்லா, அதுதாம்லே ஈகோ!

அஜித்: என்னோட இளமைல நிறைய ரொமான்டிக் ஹீரோ ரோல் பண்ணினேன். வயசு கூட கூட, எனக்கு ஏத்த ரோல்களை மட்டுமே ஒத்துக்கறேன்… நரைத்த முடி உள்பட.

அண்ணாச்சி: என்ட்ரியில ரொமான்சு, ஸ்டார் வேல்யு வந்தா ஆக்ஷனுங்கிறது அல்லா பயபுள்ளைகளுக்கும் தெரியும்டே, அதுல ஏத்த ரோல் கிடையாதுல, வித்த ரோல்தாம்லே உண்டு!

அஜித்: ஸ்டன்ட் காட்சிகளைப் பொருத்தவரை, சில நேரங்கள்ல அதை நாமே நடிச்சாதான், படம் பாக்கும்போது சரியாயிருக்கும். இன்னைக்கு படம் பாக்க வர்றவங்க ரொம்ப தெளிவா இருக்காங்க. டூப் போட்டு எடுத்த காட்சிகள் சரியா வரலைனா, கரெக்ட்டா கண்டு பிடிச்சிடுவாங்க. காசு குடுத்து டிக்கெட் வாங்கி படம் பாக்க வர்றவங்களுக்கு, நாம முடிஞ்ச வரை ஏமாற்றத்தை குடுக்கக் கூடாது.”

அண்ணாச்சி: சரிலே, எந்தப் படத்துல இவரு எல்ஐசி மாடியில இருந்து குதிக்காரு! இவன் குதிக்கலேன்னு தெரிஞ்சுதான் நாம காசக் கொடுத்து ஏமாறுதோம்! பெறவு நீங்க என்னடே எங்கள ஏமாத்த?

அஜித்: இந்தியாவுலயும் வெளிநாடுகள்லயும் பிரபல ரேஸ் கார் ஓட்டுனர்களோட பழகியிருக்கேன். அவங்ககிட்டேந்து பாதுகாப்பா வண்டி ஓட்டறதோட முக்கியத்துவத்தை கத்துகிட்டேன். இன்னிக்கு என்னோட சூப்பர் பைக்கை ஓட்டும்போது ஹெல்மெட், க்ளவுஸ், பூட்ஸ் எல்லாம் போட்டுக்குவேன்.

அண்ணாச்சி: ஏலே போக்கத்தவனே எங்க மொக்க பைக்கெல்லாம் நாப்பத தாண்டனது கிடையாது. அதுல சூப்பரு பைக்கு, ஷூ, கிளவுஸுக்கெல்லாம் எங்கடே போக?

ajith-2அஜித்: ஒழுங்கா வரி கட்டினாலே, அது சமுதாயத்துக்கு நாம செய்யற பெரிய விஷயம்னு நினைக்கறேன். நம்ம வரிப் பணத்தை சமுதாயத்துக்கும், சுற்றுச் சூழலுக்கும் பயன்படற மாதிரி செலவழிக்கறது, அந்தந்த துறையோட கடமை. என் குடும்பத்துக்கும், என்கிட்ட வேலை செய்யறவங்களுக்கும் என்னால முடிஞ்சதை சிறப்பா செய்யறேன். நாங்க ஒருத்தரை ஒருத்தர் சார்ந்திருக்கோம், எங்களைச் சார்ந்து அவங்களும், அவங்களைச் சார்ந்து நாங்களும். நான் செய்யற நல்ல விஷயங்களை விளம்பரப்படுத்திக்க விரும்பலை.

அண்ணாச்சி: மக்கள்ஸ், தல அவரு கூட உள்ளவுங்களுக்கு மட்டன் பிரியாணி போட்டு பாத்துக்குவாருன்னு அழாம அடுத்த ஐட்டமா தல இன்னா சொன்னாருன்னு பாருப்பா! அதுலதான் இவரு சுத்துசூழலுக்கு என்னமா செலவழிக்காருன்னு இருக்குடே!

அஜத்: பல காரணங்களால எனக்கு பிரைவேட் பைலட் லைசென்ஸ் கிடைக்கலை. அதனால, நான் ஏரோ மாடலிங் பக்கம் திரும்பினேன். ரிமோட்டினால் இயக்கக் கூடிய சின்னச் சின்ன விமானங்கள் எங்கிட்ட நிறைய இருக்கு. அதையெல்லாம் தனியாருக்கு சொந்தமான இடத்துல பறக்க விடுவேன். போட்டோகிராபியைப் பொருத்தவரை, அது எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம். வித்யாசமான விஷயங்களை படம் பிடிக்கணும்னு எப்பவும் ஆசை உண்டு. அதனால அதை செஞ்சுகிட்டிருக்கேன்.!”

அண்ணாச்சி: பைலட் பயிற்சி, ஏரோ மாடலிங், காஸ்ட்லியான கேமராவில் போட்டோஃகிராபி இதுக்கெல்லாம் ஆவுற செலவுல ஒரு கிராமத்துக்கே அன்னாடம் கஞ்சி ஊத்தலாம்டே! இந்த தெண்டச் செலவே இவரு மத்தவங்களுக்கு உதவுற மனச காட்டுதே, இதுக்கு எதுக்குடே விளம்பரம்?

– காளமேகம் அண்ணாச்சி

(அஜித் நேர்காணல் தி இந்துவில் வெளிவந்திருக்கிறது)