சென்ற வாரம் புதன் கிழமை (அக்டோபர் 16, 2013) அன்று வதோதரா மாவட்டத்தின் கர்ஜன் நகர காவல் துறைக்கு ஒரு ‘குற்றச் செயல்’ பற்றிய ரகசிய தகவல் கிடைக்கிறது. ஒரு ஆய்வாளர், நான்கு உதவி ஆய்வாளர்கள் உட்பட 40 பேர் கொண்ட காவல் படை ஒன்று சம்பவ இடத்துக்கு விரைகிறது. இரத்தக் கறையுடன் கையும் களவுமாக மூன்று பேரை பிடித்து கைது செய்கின்றனர் காவல் துறையினர். அவர்களை நகருக்கு கொண்டு போக முயற்சிக்கும் போது, பகுதி மக்கள் திரண்டு வந்து எதிர்க்கின்றனர்.

பெண்களை உள்ளடக்கிய அந்த கூட்டத்தினரிடமிருந்து தப்பிப்பதற்காக காவல் துறையினர் 3 பேர் ஊரிலிருந்து தமக்கு தகவல் தெரிவித்தவரின் வீட்டுக்குள் போய் பதுங்கிக் கொள்கின்றனர். வீட்டை மக்கள் கூட்டம் சூழ்ந்து கொள்கிறது.
தகவல் நகருக்குப் போய் மீட்பு நடவடிக்கைக்காக கூடுதல் போலீஸ் படை வருகிறது. கைது செய்யப்பட்டவர்களை விடுவித்தால்தான், ஊருக்குள் இருக்கும் காவல் அதிகாரிகளை அனுப்பி வைப்போம் என்று ஊர் தலைவர்கள் கூறியதாக போலீஸ் சொல்கிறது. “இது ஒன்றும் காஷ்மீர் இல்லை, குற்றவாளிகளை விடுவிக்க முடியாது. வேண்டுமென்றால் உங்களிடம் இருக்கும் போலீஸ் அதிகாரிகளை கொன்று போடுங்கள். நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்த்துக் கொள்கிறோம்” என்று வீர வசனம் பேசி அவர்களை முறியடித்ததாக தெரிவிக்கிறார் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சந்தீப் சிங்.
நடந்தது என்ன? பக்ரீத் பண்டிகையை ஒட்டி பெரும்பான்மை இஸ்லாமியர்கள் வசிக்கும் சான்ஸ்ராட் கிராமத்தில் இறைச்சிக்காக மிருகங்களை வெட்டிக் கொண்டிருந்திருக்கின்றனர். அந்த ஊரைச் சேர்ந்த ஜதின் வியாஸ் என்ற ‘ஜீவகாருண்ய’ ஆர்வலர் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க, கொல்லப்படும் விலங்குகளை மீட்க பெரும்படையுடன் வந்து இறங்கி, கசாப்பு கடைக்காரர்களை கைது செய்திருக்கிறது போலீஸ். தமது பண்டிகை கொண்டாட்டத்தையும், குடும்பத்துக்கான உணவையும் தட்டிப் பறித்த போலீசை எதிர்த்து மிளகாய் பொடி உள்ளிட்ட ‘பயங்கர’ ஆயுதங்களுடன் ஊர் பெண்கள் போலீசை சூழ்ந்திருக்கின்றனர்.

இதை அடிப்படையாக வைத்து அந்த ஊரைச் சேர்ந்த 37 பேரை கைது செய்திருக்கிறது காவல் துறை. 150 பேர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. 55 நபர்களின் பெயர்கள் அடையாளம் காணப்பட்டு தேடப்பட்டு வருகின்றனர். கொலை நோக்கத்தோடு தாக்குதல், காவல் துறையினரை தாக்குதல், காவல் துறை வாகனங்களை எரித்தல், காவல் துறை கைத்துப்பாக்கியை பறித்து செல்லுதல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
அந்த ஊரின் ஆண்கள் அனைவரும் ஊரை விட்டு போய் விட்டிருக்கின்றனர். இவர்கள் மீது குஜராத் சமூக விரோத நடவடிக்கைகள் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரலாமா என்று காவல் துறை ஆய்வு செய்து வருகிறது.
1954-ம் ஆண்டு மும்பை விலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தின்படி குஜராத்தில் பசுக்களை கொல்வது சட்ட விரோதமானது. அந்த சட்டம் 2011-ம் ஆண்டு திருத்தப்பட்டு, முறையான அனுமதி இன்றி பசுக்களை வாங்குவதோ, விற்பதோ, ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு போவதோ சட்டப்படி குற்றமாகும் என்ற விதிகள் சேர்க்கப்பட்டன. இந்த குற்றங்களை இழைப்பவர்களுக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
குஜராத்தில் மக்கள் ஊட்டச் சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதற்கு காரணமாக மக்கள் இறைச்சி சாப்பிடாதுதான் என்று முதலைக் கண்ணீர் விடுகின்றனர் மாநில முதல்வர் நரேந்திர மோடி முதலான பாரதிய ஜனதா கட்சியினர். ஆனால், மறுபக்கம் இந்துத்தவத்தின் புனிதம் என்ற மோசடி தத்துவத்தின் அடிப்படையில் உழைக்கும் மக்கள் மாட்டிறைச்சி உண்பதற்கு முட்டுக்கட்டை போடுகின்றனர்.
பசு பாதுகாப்பு என்ற பெயரில் சட்டங்கள் போட்டும், அப்படி சட்டம் இயற்ற முடியாத நிலையில், கலவரங்களைத் தூண்டியும் உழைக்கும் மக்களின் முக்கிய உணவு ஆதாரமான ஆட்டு மற்றும் மாட்டு இறைச்சிகளை மறுக்கின்றன இந்துத்துவ அமைப்புகள். குறிப்பாக தேர்தல் காலத்தின் போது பசுக்களை இசுலாமியர்கள் கொல்கிறார்கள் என்று வதந்திகளை பரப்பி விட்டு கலவரத்தைத் தூண்டி, ஓட்டு அறுவடை செய்யும் பயங்கரவாதிகள் இவர்கள். இவர்களது கட்சியான பாரதிய ஜனதா ஆட்சிக்கு வரும் போது மாற்று மதங்களைச் சேர்ந்த மனித உயிர்களை விடவும், உழைக்கும் மக்களின் வாழ்வுரிமையை விடவும், பசுக்களை பாதுகாப்பதை கோட்பாடாக தூக்கிப் பிடிக்கிறார்கள்.
இதுதான் குஜராத்தை கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டு வரும், இந்து மதவெறியர்களின் சாதனை.
மேலும் படிக்க