இந்தியா ‘வல்லரசா’க வேண்டும் என்பதில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கும், உ.பி சாமியார் சோபன் சர்க்காருக்கும் இரு வேறு கருத்து இல்லை. அதனால் அவர்களுக்கிடையே ஏற்பட்ட ஒரு சிறிய கருத்து வேறுபாடு சுமுகமாக முடித்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.

உத்தர பிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த தௌண்டியா கேரா கோட்டையில் 1,000 டன் தங்கம் இருப்பதாக 19-ம் நூற்றாண்டில் அந்த கோட்டையை ஆண்டு வந்த ராஜா ராம் பக்ஸ், சாமியார் சோபன் சர்க்காரின் கனவில் வந்து சொல்லியிருக்கிறார். “அது கனவு இல்லை, இறந்து போன ராஜாவின் ஆன்மாவுடனான உரையாடல்” என்கிறார் சோபன் சர்க்கார். மேலும், ஃபதேபூரில் உள்ள ஆதம் நகரில் 2,500 டன் தங்கம் உள்ளதாகவும், கான்பூரில் மூன்று இடங்களில் தங்கம் இருப்பதாகவும் சோபன் சர்க்கார் தெரிவித்திருக்கிறார். இந்திய அரசுக்கு 21,000 டன் தங்கத்தை வழங்குவதன் மூலம் இந்தியாவை வல்லரசாக்குவதுதான் தன் நோக்கம் என்றும் கூறியிருக்கிறார்.
கடந்த வெள்ளிக் கிழமை இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை தௌண்டியா கேரா கோட்டையில் அகழ்வாராய்ச்சியை ஆரம்பித்தது. அன்று சென்னைக்கு வந்த நரேந்திர மோடி, பா.ஜ.க கூட்டம் ஒன்றில் “யாரோ கனவு கண்டாங்களாம், அதைக் கேட்டு அரசு அகழ்வாராய்ச்சி நடத்துகிறதாம். அகில உலகமும் இந்தியாவைப் பார்த்து சிரிக்கிறது. இப்படி அகழ்வாராய்ச்சி செய்து தங்கத்தை தேடுவதை விட்டு சுவிஸ் வங்கியில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பல லட்சம் கோடி ரூபாயை கொண்டு வரும் வேலையை அரசு பார்க்க வேண்டும்” என்று இந்திய அரசை சாடுவதன் மூலம், ஒரு இந்துத்துவ புனிதரின் ஆன்ம உரையாடலை களங்கப்படுத்தியிருக்கிறார்.

அதன் மூலம், தனக்கு இணையாக மல்லுக் கட்டக் கூடிய அந்த இந்துத்துவ தீவிரவாதியின் கிடுக்குப்பிடியில் சிக்கிக் கொள்ளப் போகிறோம் என்று மோடி எதிர்பார்த்திருக்கவில்லை.
சனிக்கிழமை சோபன் சர்க்காரின் சீடர் ஓம்ஜி வெளியிட்ட அறிக்கையில்,
“வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கியிருக்கும் கருப்புப் பணம் பற்றி மோடிக்கு இப்போதுதான் தெரிய வந்ததா? வாஜ்பாயி தலைமையில் பாஜக ஆட்சி புரிந்த போது, ஏன் அந்தப் பணத்தை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை?” என்றும்,
“பிரதமர் வேட்பாளராக உங்கள் பிம்பத்தை கட்டமைக்க பல கோடி ரூபாய் செலவழிக்கிறீர்களே? அது அனைத்தும் வெள்ளைப் பணமா, கருப்புப் பணமா என்று கணக்கு காட்ட முடியுமா” என்றும்
“ராமர் சேது என்பது மட்டும் அறிவியல் ஆராய்ச்சியால் நிரூபிக்கப்பட்டதா? நம்பிக்கையின் அடிப்படையில்தானே அதை வைத்து அரசியல் செய்கிறீர்கள்? ராமனே விபீஷணனிடம் பாலத்தை அழித்து விடும்படி கூறி விட்டான். அது தெரியா விட்டால் பத்ம புராணத்தை படித்து தெரிந்து கொள்ளுங்கள்” என்றும்

“இப்போது சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதில் முன்னணியில் இருப்பதாக பீற்றிக் கொள்கிறீர்களே, இந்த சமூக வலைத்தளங்களை உருவாக்குவதற்கு அடித்தளம் இட்டது ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில்தானே? அப்போது அதை ஏன் எதிர்த்தீர்கள்?” என்றும்,
“ஊழல் என்று நீங்கள் சாமியாடிய போபர்ஸ் பீரங்கிதான் கார்கில் போரின் போது சரியாக சுட்டு நாட்டை காப்பாற்றியது” என்றும்,
“மோடியே பிரதமர் ஆனாலும், பன்னாட்டு வழிமுறைகளை கடைப்பிடித்துதான் கருப்புப் பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வர முடியும்” (அதாவது கொண்டு வரவே முடியாது) என்றும்
ஆழமான இந்துத்துவ மற்றும் ‘வளர்ச்சி’ மொழியில் மோடியை காய்ச்சி எடுத்திருக்கின்றார்.
இன்னும் விட்டால், “குஜராத்தில் அன்னிய முதலீடு என்ற பெயரில் நிலங்களையும், வரிச் சலுகைகளையும் கார்ப்பரேட்டுகளுக்கு அள்ளி வழங்கி, நாட்டின் சொத்துக்களை வெள்ளைப் பணமாகவே வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பது தேசத் துரோகம் இல்லையா” என்றும், “அயோத்தியில் பாபர் மசூதி இடத்தில்தான் ராமன் பிறந்தான் என்ற அத்வானியின் கனவை நிரூபிக்க தொல்லியல் துறையை அகழ்வாய்வு செய்யச் சொன்னீர்களே” என்றும், பா.ஜ.கவின் ஊழல்களையும், இந்துத்துவா மோசடி அரசியலையும் அம்பலப்படுத்தும் கேள்விகள் அடுத்தடுத்து வந்து விடுமோ என்று பயந்து மோடி உடனடியாக சரண்டர் ஆகி விட்டார்.

‘மகான் சோபன் சர்க்கார் பல ஆண்டுகளாக, பல லட்சம் மக்களின் வழிபாட்டுக்கு உரியவராக இருக்கிறார். அவரை நான் மதிக்கிறேன்” என்று டுவிட்டரில் எழுதி விட்டு கூடவே, கான்பூரின் மகாராஜ்பூர் சட்ட மன்ற உறுப்பினர் சதீஷ் மஹானாவை அனுப்பி சோபன் சர்க்காரை சமாதானப்படுத்த முயன்றிருக்கிறார்.
தன் பரிவாரங்களுடன் மன்னிப்பு கேட்கச் சென்ற சதீஷ் மகானாவிடம் சோபர் சர்க்கார் கோபத்தில் பொரிந்து தள்ளியிருக்கிறார். “செத்துப் போன ராஜாவுடன் நான் நடத்திய ஆன்மீக உரையாடலை அரசுக்கு தெரிவித்து, அறிவியல் பூர்வமாக சோதித்து பார்த்து விட்டு அகழ்வாய்வு செய்யுமாறு சொன்னேன். இது தொடர்பான ஆவணங்களும் என்னிடம் உள்ளன. வேண்டும் என்றால் மோடியிடமும் காட்டுகிறேன்” என்று கொதித்திருக்கிறார்.
“சாமி, அதெல்லாம் வேண்டாம், நீங்க சொன்னா போதும், நானும் சரி, மோடிஜியும் சரி, கேள்வி கேட்காமல் ஏத்துப்போம்” என்று சொல்லியிருக்கிறார் சதீஷ் மகானா. கூடவே, மோடியின் டுவிட்டர் தகவலையும் பஜனை போல திரும்பத் திரும்ப பாடியிருக்கிறார்.
இவ்வளவுக்கும் பிறகு, மோடிஜியின் மன்னிப்பை சோபன் சர்க்கார் சாமிஜி ஏற்றுக் கொண்டதாக சீடர் ஓம்ஜி பின்னர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.

ஆனால், தொல்லியல் துறையின் அகழ்வாய்வு போதிய வேகத்தில் நடைபெறவில்லை என்று சோபன் சர்க்கார் கோபமாக இருக்கிறாராம். எதற்கும் இருக்கட்டும் என்று “சீக்கிரம் தோண்டவில்லை என்றார் தங்கம் மறைந்து விடும்” என்றும் சொல்லி வைத்து விட்டார் ஓம்ஜி.
தங்கம் தோண்டி இந்தியாவை வல்லரசாக்கும் இந்த புனித இயக்கத்தில் தன்னையும் இணைத்துக் கொள்வதற்காக இந்தூரைச் சேர்ந்த நிரஞ்சனி ஆகாராவின் மகா மண்டலேஷ்வர் ஸ்வாமி வைராகி மகாராஜ் சம்பவ இடத்தில் யோக முத்திரையில் உட்கார்ந்திருக்கிறார். இந்தூரிலிருந்து உன்னாவ் வந்திருக்கும் இந்த சாமியார் “சில்லி யாகம் (மிளகாய் யாகம்)” நடத்துவதில் புகழ் பெற்றவராம். வேத கால உத்தியான இதன் படி மிளகாய்களை பயன்படுத்தி அவர் நோய்களை குணப்படுத்துகிறாராம். கோட்டையில் புதைந்திருக்கும் தங்கத்தை மீட்பதற்கு உதவியாக தான் அந்த யாகத்தை நடத்த தயாராக இருப்பதாக அறிவித்திருக்கிறார்.
இந்தியா முழுவதிலும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் அகழ்வாராய்ச்சி நடத்துவதை இந்திய தொல்லியல் துறை கட்டுப்படுத்துகிறது. ஒவ்வொரு ஆண்டும் அகழ்வாராய்ச்சி செய்வதற்கான விண்ணப்பங்களை பரிசீலித்து எவற்றை அனுமதிக்கலாம் என்று சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் நிலைக் குழு ஒன்று முடிவு செய்கிறது. பல விண்ணப்பங்கள் அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் அற்றவை என்று நிராகரிக்கப்படுகின்றன. 2013-14 ஆண்டுக்கான திட்டம் ஜூலை 31-ம் தேதி வரை வந்த விண்ணப்பங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு விட்டது.

இந்நிலையில், சோபன் சர்க்கார் தனது கனவை மத்திய விவசாய மற்றும் உணவு பதப்படுத்தும் துறை அமைச்சர் சரண்தாஸ் மகந்திடம் தெரிவித்திருக்கிறார். இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடையும் போது கை கொடுப்பதற்காக பல ஆயிரம் டன் தங்கத்தை தான் ஞான திருஷ்டியில் கண்டறிந்து சொல்வதாக டீல் போட்டிருக்கிறார்.
இந்து ஞான மரபின் வாரிசு என்ற பட்டத்துக்கு பா.ஜ.கவுடன் போட்டி போடும் காங்கிரஸ் கட்சியில் இருக்கும் சரண்தாஸ் மகந்த் பிரதமர், உள்துறை அமைச்சர், நிதி அமைச்சர், சுரங்கத் துறை அமைச்சர் மற்றும் தொல்லியல் துறை, புவியியல் ஆய்வகத்திற்கும் இது தொடர்பாக கடிதம் எழுதியுள்ளர். காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்திக்கும் ராகுல் காந்திக்கும் இந்தத் தகவலை தெரிவித்திருக்கிறார்.
இதைத் தொடர்ந்து இந்திய புவியியல் ஆய்வகம் தௌண்டியா கேரா கோட்டை இருக்கும் இடத்தில் நிலத்துக்கு அடியில் காந்தத் தன்மை இல்லாத உலோகம் இருப்பதாக கண்டறிந்தது. அப்படி என்றால் அது தங்கம், வெள்ளி, அல்லது தாமிரமாகத்தான் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் தொல்லியல் ஆய்வுத் துறை அகழ்வாராய்ச்சியை தொடங்கியிருக்கிறது. இதற்கான அனுமதி வழங்குவதற்கான தொல்லியல் துறையின் நிலைக் குழுவிடம் ஒப்புதல் பெறப்படாமல், தொல்லியல் துறை இயக்குனரின் உத்தரவின்படி பணி ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.
இப்போதைய ‘போலி இந்துத்துவ’ காங்கிரஸ் ஆட்சி நீங்கி பா.ஜ.க தலைமையில் ‘உண்மையான இந்துத்துவ’ ஆட்சி அமைந்து விட்டால், தங்கம் இருப்பதை கண்டறிய சோபன் சர்க்காரின் ஆன்ம உரையாடலை பயன்படுத்தியதோடு நில்லாமல், அகழ்வாராய்ச்சி செய்வதற்கு வைராகி மகாராஜின் மிளகாய் யாகத்தை பயன்படுத்தி பல கோடி ரூபாயை மிச்சப்படுத்துவார்கள் என்று நம்பலாம், நம்ப வேண்டும். இதை கேள்வி கேட்பவர்கள் தேச விரோதிகள் என்று மோடியின் ஆதரவாளர்களால் முத்திரை குத்தப்படுவார்கள்.

தௌண்டியா கேரா போன்று 1857 முதல் இந்திய சுதந்திரப் போருடன் தொடர்புடைய ஃபதேபூரின் ஆதம் நகரில் கங்கைக் கரையில் உள்ள சிவன் கோவிலின் பீடத்தை அடையாளம் தெரியாத நபர்கள் உடைத்து புதையல் தேடியிருக்கின்றனர். அதைத் தொடர்ந்து அந்த பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.
பஹ்ரைச்சில் உள்ள சார்தா கோட்டையில் 3 அடி நீளமும் 4 அடி ஆழமும் உடைய குழி ஒன்றை தோண்டிய சிலர் புதையல் கிடைக்காததால் அதை அப்படியே விட்டு விட்டு ஓடி விட்டிருக்கின்றனர்.
இதே போல பாந்தா பிப்பர்ஹரி பகுதியில் உள்ள சிவன் கோவிலும் தங்கப் புதையல் வேட்டையாளர்களின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
நரேந்திர மோடி போன்ற ‘வளர்ச்சி நாயகர்களும்’, அவர்கள் அடி பணியும் சோபன் சர்க்கார் போன்ற இந்து ஞான மரபின் புரோக்கர்களும், இவர்களை பூசை செய்யும் பக்த கோடிகளும் இருக்கும் வரை இந்தியா வல்லரசாகாமல் போய்விடுமா என்ன?
– பண்பரசு
மேலும் படிக்க
- Bring back black money instead of chasing pipe dream
- Modi meets his match in gold baba, MLA rushes to genuflect
- Digging continues for dream gold
- The ASI is singing in the wind
- Unnao treasure hunt – if digging is not accelerated gold will disappear
- With not so saintly note – gold dreamer gets Modi to say sorry
- Unnao gold hunt leads to digging for precious metal elsewhere