மொழிப்போர் மறவர் ம.நடராசன் தலைமையில் மாவீரன் பழ.நெடுமாறன் அவர்களால் 6.11.2013 அன்று காலை 11 மணிக்கு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திடீரென்று திறந்து வைக்கப்பட்டு விட்டது.
அம்மாவை வைத்து திறப்பு விழா நடத்த முயற்சி நடப்பதாக ஏற்கெனவே செய்திகள் வந்தன. இப்போது மூடுவிழா நடத்த அம்மா முயற்சிப்பதால் உடனே திறப்பு விழா நடத்தி விட்டதாக கூறுகிறார்கள். எப்படியோ ஈழத் தாயிடமிருந்து முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் காப்பாற்றப்பட்டு விட்டது.

திமுக-அதிமுக வுக்கு இடையே ஈழம் சிக்கித் தவித்ததைப் போல இப்போது முற்றமும் நடராசன் – ஜெயலலிதா என்ற இருபெரும் ஆளுமைகளுக்கு இடையே சிக்கித் தவிக்கிறது. அம்மையார் களத்தில் இறங்கி விட்டால் யுத்த தருமங்களையெல்லாம் பார்க்கமாட்டார் என்பது நடராசனுக்குத் தெரியும். அங்கு வருகை புரியும் சான்றோர் பெருமக்களும் தெரிந்து கொள்வது நல்லது.
“ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் கட்டப்பட்டிருப்பதால் நினைவு முற்றத்துக்கு தடை விதிக்க வேண்டும்” என்று “யாரோ” மனுச் செய்தார்களாம். அடுத்த படியாக “அனுமதி கிடையாது” என்று போலீசு மறுத்தது. வழக்கம் போல சரியான காரணம் சொல்ல முடியாமல் நீதிமன்றத்தில் அரசு தரப்பு சொதப்பி விட்டதால், உயர்நீதி மன்றம் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க மறுத்து விட்டது.
இந்த தோல்விச் செய்தியை அம்மாவுக்கு யார் சொல்வது? “பேட் நியூஸ்” என்று பாட்ஷா ரகுவரனைப் போல அம்மா சேதி சொன்னவனையே போட்டுத் தள்ளி விட்டால்?
உடனே மேல் முறையீடு செய்திருக்கிறார்கள். இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு என்பதால், அட்வகேட் ஜெனரலே வந்து ஆஜராகியிருக்கிறார். ஏதோ ஒரு பயங்கரமான லா பாயின்ட்டை பேசவிருக்கிறார் என்று எண்ணிக் கொண்டிருந்த போது, அவர் ஒரு பொட்டலத்தை நீதிபதி கையில் கொடுத்திருக்கிறார். நீதிபதிகளும் தைரியமாக அதை கையில் வாங்கினர்.
நடராசன் சம்மந்தப்பட்ட வழக்கில் இப்படி ஒரு பொட்டலத்தை கொடுத்ததால் நமக்குத்தான் முதுகுத் தண்டு சில்லிட்டு விட்டது. “நீதிபதிக்கே பொட்டலமா” என்று நாம் எண்ணி முடிப்பதற்குள் பொட்டலத்தில் என்ன இருக்கிறது என்பதை அட்வகேட் ஜெனரல் திறந்து கூறிவிட்டார்.
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத் திறப்பு “விழாவுக்கு வருகிறவர்களின் உயிருக்கு ஆபத்து” இருப்பதாக உளவுத்துறை செய்தி வந்திருப்பதாகவும், அதனால்தான் அனுமதி மறுப்பதாகவும் சொன்னார். ஆபத்து பற்றிய விவரங்களை வெளிப்படையாக நீதிமன்றத்தில் கூற முடியாதல்லவா? அதனால், மூடி முத்திரையிட்ட உறையில் கொடுத்திருக்கிறார்கள். “போதிய போலீசு பாதுகாப்பு கொடுங்கள்” என்று கூறி பொட்டலத்தை போலீசு கையிலேயே திருப்பித் தந்து விட்டார் நீதிபதி.

உளவுத்துறையின் ஒரு எச்சரிக்கை இப்படி ஊரறிய உதாசீனப்படுத்தப் படும் போது, தங்களுடைய எச்சரிக்கை உண்மையானதுதான் என்று லைட்டாகவேனும் நிரூபித்துக் காட்டுகின்ற “தார்மிகப் பொறுப்பு” உளவுத்துறைக்கு வந்து விடுகிறது. பொட்டலம் வரவழைப்பது, குண்டு வரவழைப்பது போன்ற அற்புதங்களை நிகழ்த்திக் காட்டும் வல்லமை கொண்டவர்கள் அல்லவா உளவுத் துறையினர்!
அதேபோல, நீதிமன்றம் “போதிய போலீசு பாதுகாப்பு” கொடுக்கச் சொல்லியிருப்பதால், “போ…….திய” அளவுக்கு பாதுகாப்பு கொடுக்கப்படக் கூடிய ஆபத்தும் உண்டு. முன்னர் ஒருமுறை கோவை முஸ்லிம் தீவிரவாதம் பற்றி பாஜகவினர் ரொம்ப அலப்பறை கொடுத்தனர். அப்போது அத்வானி கோவைக்கு வந்தார். அவர் பங்கேற்ற பொதுக்கூட்டத்துக்கு அன்றைய கமிசனர் ராதாகிருஷ்ணன் வெயிட்டாக பாதுகாப்பு கொடுத்து விட்டார் – கூட்டத்துக்கள் முஸ்லிம் தீவிரவாதி மட்டுமல்ல, ஒரு பாரதிய ஜனதாக்காரன் கூட நுழைய முடியவில்லை. பாதுகாப்பென்றால் அப்படி ஒரு பாதுகாப்பு!
மேற்கூறிய எச்சரிக்கைகளை அய்யா பழ.நெடுமாறன் கணக்கில் கொள்வது நல்லது.
கடந்த இரு நாட்களாக வரும் செய்திகளைப் பார்க்கும்போதுதான், தஞ்சை நிகழ்ச்சி, தமிழர் வரலாற்றில் ஒரு திருப்புமுனை நிகழ்ச்சி என்று குறிப்பிட்டுள்ளதற்கான காரணம் புரிந்தது. பாஜக, தேமுதிக, மதிமுக அடங்கிய தமிழருவி கூட்டணி அம்மாவுக்கு பிடிக்கவில்லையென்றும், அதனால்தான் கெடுபிடிகள் அதிகரிக்கப் படுவதாகவும் கூறுகின்றன செய்திகள்.
“அ.தி.மு.க. அரசின் பாசிச முகத்திரை கிழிந்தது. ஈழத்தமிழர்களுக்கு எதிராக, குறிப்பாக விடுதலைப்புலிகளுக்கு எதிராக கடந்த காலத்தில் சர்வாதிகார பொடா அடக்குமுறையை ஏவிய முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழக மக்களை ஏமாற்றுவதற்காக ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு என்று ஒரு கபட நாடகத்தை நடத்தினார்” என்று வைகோ பொளந்து கட்டியிருக்கிறார்.
அம்மா ஒவ்வொரு முறை கபட நாடகம் போடும்போதும் அவருக்கு மேக் அப் அணிவித்து, கதை வசனம் எழுதிக் கொடுத்து, பிற நடிகர்களை ஏற்பாடு செய்து, வசனம் மறக்கும் போது சைடில் நின்று பிராம்ப்டர் வேலை பார்த்தவர்கள் என்பதால், வைகோ, நெடுமாறன், சீமான் போன்றவர்கள், ஜெ நடத்தியது கபட நாடகம்தான் என்று கூறும்போது அதை நாம் நம்பாமல் இருக்க முடியவில்லை.

அடுத்த கபட நாடகத்துக்கு கதாநாயகன், ஸ்கிரிப்ட் மற்றும் நடிகர்களை ஏற்பாடு செய்ய தீயாய் வேலை செய்யத் தொடங்கி விட்டார்கள் நெடுமாறன் குழுவினர். நேற்று தமிழக பாஜக சார்பில் பொன் இராதா கிருஷ்ணனும், இல. கணேசனும் டில்லி சென்றிருக்கிறார்கள். கபட நாடகம்-2 இன் கதையை விளக்கி கூறி டில்லி பாஜக தலைவர்களின் கால்ஷீட் வாங்குவதற்கு!
டில்லி பாஜக தலைவர்களிடம் வசனங்களை ஒப்படைப்பதற்கு முன்னால், பத்திரிகையாளர்களிடம் ஒரு பஞ்ச் டயலாக்கை எடுத்து விட்டிருக்கிறார் இல.கணேசன்.
“இலங்கைக்கு நிதி மட்டுமல்ல: போர்ப் பயிற்சியும் மத்திய அரசு தந்தது. தார்மிக ஆதரவும் தந்தது. இவ்வளவும் செய்து விட்டு ராஜபக்சேவை கண்டிக்க காங்கிரசுக்கு தகுதி இல்லை” என்று பேசியிருக்கிறார் இல.கணேசன்.
இந்த பஞ்ச் டயலாக்கை ஏற்கெனவே எங்கேயோ கேட்ட மாதிரி இல்லை? 2009 இல் ஈழத்தாய்க்கு எழுதிக் கொடுக்கப்பட்டு அவர் பேசிய அதே வசனம்தான். அது கபட நாடகம் – பார்ட் 1.
தற்போது கபட நாடகம் பார்ட்-2 தொடங்கி விட்டது. அதன் முதல் காட்சி இன்று தஞ்சையில் அரங்கேறுகிறது. “மோடி பிரதமரானால், ஈழம் அல்லது சம உரிமை அல்லது அல்வா கொடுப்பார்” என்று பொன்.இராதாகிருஷ்ணன் இன்று மாலை பிகடனம் செய்யக்கூடும்.
இந்தக் கபடநாடகம்-2 வெற்றி பெறும் பட்சத்தில், 2019 இல் கபடநாடகம் பார்ட்-3 தொடங்கும். அதன் முதல் காட்சியில் மோடியின் பாசிச முகத்திரையை வைகோ கிழிப்பார்.
000