சங்கர்ராமன் கொலைவழக்கு : சங்கராச்சாரி உட்பட 24 பேர் விடுதலை..!
தமிழக அரசே!
- சங்கர்ராமன் கொலை வழக்குத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்து கொலைகாரர்களுக்கு உரிய தண்டனை வழங்க நடவடிக்கை எடு..!
உழைக்கும் மக்களே !
- நீதி மன்றம், போலீசு, அதிகார வர்க்கமென்லாம் சங்கராச்சாரி கையில் –
- பிறழ்சாட்சி என்பதெல்லாம் சங்கராச்சாரியின் திருவிளையாடலே.
- சாதித் தீண்டாமையை உயர்த்திப் பிடிக்கும் பார்ப்பனீயத்துக்கு பாடை கட்டுவோம்…! சங்கர மடத்திற்கு சமாதி கட்டுவோம்..!
- நந்தனை எரித்துக் கொன்ற தீட்சிதர்கள் தில்லைக் கோயிலைக் கைப்பற்ற அனுமதியோம்!
- பாரதிய ஜனதா – சுப்பிரமணியசாமி கும்பலின் சதிகளை முறியடிப்போம்!
- ஜெயலலிதா அரசின் பார்ப்பனிய மீட்பு நடவடிக்கைகளை அம்பலப்படுத்துவோம்!
- பெரியார் பிறந்த மண்ணில் பார்ப்பன பாசிசம் தலையெடுக்க அனுமதியோம்!
இந்த முழக்கங்களை முன்வைத்து மதுரை திருச்சி புதுச்சேரி கிருஷ்ணகிரி கோவை ஆகிய ஆறு மண்டலங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (30/11/2013) நடைபெறுகிறது.
கண்டன ஆர்ப்பாட்டம், மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய ஐந்து அமைப்புகள் சார்பாக நடைபெறுகிறது.
திராவிட இயக்கக் கொள்கைகளில் பற்று கொண்டவர்களும், கோயில்கள் கொள்ளைக் கூடாரங்களாக்கக் கூடாது என்ற அக்கறை கொண்டவர்களையும், ஆலயத் தீண்டாமையை எதிர்ப்பவர்களையும், தமிழ் வழிபாட்டை ஆதரிப்பவர்களையும் ஜெயலலிதா அரசின் பார்ப்பனீய மீட்பு நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுக்க அழைக்கிறோம்
_________________________________________________________________________
தில்லைக் கோவில் தொடர்பாக துவக்கம் முதல் போராடி வரும் மனித உரிமைப்பாதுகாப்பு மையம் நடத்தும் கருத்தரங்கத்தின் செய்தியும், அது தொடர்பான துண்டறிக்கையும் கீழே இணைக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் சங்கராச்சாரி விடுதலையானது ஏன் என்ற தலைப்பில் மூத்த வழக்குறைஞர் திருமலைராசன் பேச உள்ளார். அனைவரும் வருக!
அன்பார்ந்த தமிழ் மக்களே,
வணக்கம்
சிதம்பரம் நடராசர் கோயில் 2009 ஆம் ஆண்டில் இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. இதனை எதிர்த்து தீட்சிதர்கள் தொடுத்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தீட்சிதர்கள் அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாவை சந்தித்து முறையிட்டனர். உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடும் செய்தனர்.
இவ்வழக்கில் தீட்சிதர்களுக்கு ஆதரவாக இணைந்து கொண்ட சுப்பிரமணியசாமி, உச்ச நீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்தார். “சிதம்பரம் கோயிலை தீட்சிதர்கள் வசம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும். சிற்றம்பல மேடையில் தேவாரம் பாடுவதை தடை செய்ய வேண்டும். எல்லா கோயில்களிலிருந்தும் அறநிலையத்துறை அதிகாரிகளை அகற்றவேண்டும்” என்பதே சுப்பிரமணியசாமி தாக்கல் செய்திருக்கும் மனுவின் சாரம்.
தில்லைக் கோயிலின் சிற்றம்பல மேடையில் தமிழ் பாடுவதற்கான போராட்டத்தை முன்நின்று நடத்திய நாங்கள், சிவனடியார் ஆறுமுகசாமியை மனுதாரராக கொண்டு 2008 இலேயே இந்த வழக்கில் உயர்நீதி மன்றத்தில் இணைந்து கொண்டோம். பல ஆண்டுகளாக உறக்கத்தில் ஆழ்த்தப்பட்டிருந்த இந்த வழக்கைத் தட்டியெழுப்பி விசாரணைக்கு கொண்டு வந்தோம். இந்த வழக்கில் நாங்கள் மேற்கொண்ட முயற்சியின் விளைவாகத்தான் கோயிலை அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது சாத்தியமாயிற்று. இது மிகையல்ல. உண்மை.
உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து உண்டியலே இல்லாத தில்லைக் கோயிலில் உண்டியலை வைத்ததுடன், நிர்வாக அதிகாரியையும் நியமித்தது திமுக அரசு. ஆத்திரம் கொண்ட தீட்சிதர்கள் உண்டியலில் எண்ணையை ஊற்றுவது உள்ளிட்ட எல்லா வகையான கீழ்த்தரமான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார்கள். கோயிலின் நகைகள் உள்ளிட்ட சொத்துக்களை அறநிலையத்துறையிடம் ஒப்படைக்க இந்தக் கணம் வரை மறுத்து வருகிறார்கள். இருந்த போதிலும் தீட்சிதர்கள் மீது வழக்கு எதையும் பதிவு செய்யாமல் தமிழக அரசு மென்மையாகவே நடந்து வருகிறது.
அறநிலையத் துறை கோயிலை எடுத்த பின்னர் ஆண்டுக்கு சுமார் 30,000 ரூபாய்தான் கோயிலின் வருமானம் என்று தீட்சிதர்கள் காட்டி வந்த கணக்கு பொய்க்கணக்கு என்பது அம்பலமானது. உண்டியல் காணிக்கை சுமார் ஒன்றரை கோடிக்கு மேல் வசூலாகியிருக்கிறது. இவையன்றி தங்க, வெள்ளி நகைகள் போன்றவையும் காணிக்கையாக குவிந்திருக்கின்றன. பராமரிப்பின்றி பாழடைந்திருந்த கோயிலில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. திருவிழா நாட்களில் கூடும் லட்சக்கணக்கான மக்களின் தேவைகளை நிறைவு செய்யும் ஏற்பாடுகள் அறநிலையத்துறையால் செய்யப்பட்டிருக்கின்றன.
கோயில் தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் இருந்தபோது எத்தனை மோசமாகப் பராமரிக்கப் பட்டது என்பதையும், தங்களை தீட்சிதர்கள் எப்படி நடத்தினார்கள் என்பதையும் பக்தர்கள் அறிவார்கள். நடராசன் சந்நிதிக்கு எதிரான சிற்றம்பல மேடை தீட்சிதர்களின் டோல்கேட்டாக இருந்தது. பக்தர்களிடம் இவ்வாறு காசு பிடுங்குவதை எதிர்த்த ஆறுமுகசாமி போன்ற சிவனடியார்கள் தாக்கப்பட்டார்கள். அங்கே தேவாரம் பாடுவதற்கு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இத்தகைய கொடுமைகளுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல கோயிலுக்குள்ளேயே கொலைகள் நடந்தன. கணக்கு கேட்ட நேர்மையான தீட்சிதர் கொல்லப்பட்டு குளத்தில் வீசப்பட்டார். சந்தேக மரணம் என்று கொலை வழக்கு கோப்புகள் மூடப்பட்டன. இரவில் மது, மாமிசம், விபச்சாரம் உள்ளிட்ட பஞ்சமா பாதகங்களும் கேட்பாரின்றி அரங்கேறுவது குறித்த செய்திகள் புகைப்படங்களுடன் வெளிவந்து பத்திரிகைகளில் சந்தி சிரித்தன. இவை மட்டுமின்றி, “நடராசப் பெருமான்” பெயரில் எழுதி வைக்கப்பட்ட நிலங்கள், வீட்டு மனைகள் போன்றவற்றை நடராசன் என்ற பெயர் கொண்ட தீட்சிதர்கள் தங்கள் நிலமென்று சொல்லி ரியல் எஸ்டேட் முதலைகளுக்கு விற்று லட்சக்கணக்கில் சம்பாதித்தார்கள். நகை திருட்டு முதல் சைக்கிள் திருட்டு வரையிலான திருட்டுக் குற்றங்கள், போலீசு அதிகாரியைத் தாக்கிய குற்றம் முதல் கொலைக் குற்றம் வரையிலான கிரிமினல் குற்றங்கள் தீட்சிதர்களின் மேல் நிலுவையில் இருக்கின்றன. அவர்களுடைய அரசியல் செல்வாக்கு காரணமாக இவை எதுவும் விசாரிக்கப்படவில்லை.
மேற்கண்ட பல குற்றச்சாட்டுகள் நாம் கூறுபவையல்ல. அவை தீட்சிதர்களிடையேயான பங்கு பிரிக்கும் மோதலில் வெளி வந்தவையே. 1890-லேயே இவர்களுக்கு இடையிலான மோதல்கள் வெளிவரத் தொடங்கி விட்டன. இருப்பினும் அப்போதைய அரசுகளைக் கையில் போட்டுக் கொண்டும், கோயில் சொத்துக்களை அரசியல்வாதிகளுடன் இணைந்து கூட்டுக் கொள்ளை செய்தும், தந்திரமான பார்ப்பன வக்கீல்கள் மூலம் வழக்குகளையே நடக்க விடாமல் தடுத்தும் எல்லா வகையான குற்றங்களிலிருந்தும் தீட்சிதர்கள் தப்பித்து வந்தார்கள்.

மன்னர்களால் கட்டப்பட்ட இந்தக் கோயிலுக்கு உரிமையாளர்கள் தாங்கள்தான் என்று சாதித்தும் வந்தார்கள். இந்தக் கோயில் தங்களுடைய உடைமை என்று கூறிக் கொள்வதற்கு எந்த ஆதாரமும் இவர்களிடம் கிடையாது. 1890 முதல் பல தீர்ப்புகள் “ இது மக்களுக்கு சொந்தமான பொதுக் கோயில்” என்று உறுதிபடக் கூறியிருக்கின்றன. ஆனால் கிரிமினல்தனமாக சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி, இத்தனை காலமும் கோயிலை தம் கட்டுப்பாட்டில் இவர்கள் வைத்திருந்தார்கள். கோயில் இவர்களது கட்டுப்பாட்டில் இருந்த காரணத்தினால்தான் சிற்றம்பல மேடையில் பக்தர்கள் தேவாரம் பாடினால் தீட்டு என்று தடுத்து வந்தார்கள். தமிழ் பாடும் உரிமையைப் பெற்றதுடன், கோயிலையும் பிடுங்கி அரசின் கையில் ஒப்படைக்க நாங்கள் போராடினோம்.
நாங்கள் மக்களைத் திரட்டிப் போராடி, தடியடி பெற்று, சிறை சென்று, வழக்கு நடத்தி பெற்ற வெற்றிக்கு இன்று ஆபத்து வந்துவிட்டது. உச்ச நீதிமன்றத்தில் “கோயிலை அரசு எடுத்தது குற்றம்” என்று கூறும் தீட்சிதர்களுடனும் சுப்பிரமணிய சாமியுடனும் ஜெயலலிதாவின் அரசு கள்ளத்தனமாக கூட்டு சேர்ந்து கொண்டு விட்டது. தமிழ் மக்களுக்கு சொந்தமான பல்லாயிரம் கோடி மதிப்புள்ள கோயிலை தீட்சிதர்களின் தனிச் சொத்தாக மாற்றும் சதித்திட்டம், இன்று உச்ச நீதிமன்றத்தில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.
28.11.2013 அன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் தீட்சிதர் தரப்பு வக்கீல்கள் பேசவேயில்லை. தனது தரப்பு வாதங்களை எடுத்து வைத்த சுப்பிரமணியசாமி, தீட்சிதர்கள் அனைவரும் சோத்துக்கில்லாமல் பிச்சை எடுப்பதைப் போலவும், திமுக அரசு கோயிலை இடித்துத் தள்ள சதித் திட்டம் தீட்டியது போலவும் ஒரு பொய்ச் சித்திரத்தை உருவாக்கினார். நடராசப் பெருமானே ஒரு பார்ப்பன தீட்சிதர்தான் என்று இந்துக்கள் நம்புவதாகவும், அதன் காரணமாக கோயிலை தீட்சிதர்களிடம் ஒப்படைத்து விட வேண்டும் என்று வாதிட்டார்.
இவ்வளவு முக்கியமான வழக்கில் தமிழக அரசின் தரப்பில் தலைமை வழக்குரைஞர்களோ, அறநிலையத்துறை அதிகாரிகளோ யாரும் உச்சநீதிமன்றத்திற்கு வரவில்லை. வழக்கில் தோற்பதற்காகவே, யோகேஷ் கன்னா என்ற வட இந்திய வழக்குரைஞரை ஒப்புக்கு அமர்த்தியிருந்தனர். அவருக்கு வழக்கை பற்றி எதுவும் தெரியவில்லை.
எமது தரப்பில் வாதாடிய வழக்குரைஞர் “தீட்சிதர்களின் நிதிக் கையாடல் காரணமாகத்தான் அரசு கோயிலை மேற்கொள்ள நேர்ந்தது” என்று பேசத்தொடங்கியவுடனே, உடனே சவுகான், பாப்டே ஆகிய இரு நீதிபதிகளும் அவர் மீது பாய்ந்தனர். “கோயில் சொத்தை அபகரிக்க நினைக்கிறீர்களா? நிர்வாக அதிகாரிக்கு கோயிலுக்குள் என்ன வேலை? முதலில் கோயிலை விட்டு வெளியேறுங்கள்” என்று கீழ்த்தரமான முறையில் பேசிக் குறுக்கிட்டனர். “கோயிலை தீட்சிதர்களிடம் ஒப்படைத்து விடுமாறு தமிழக அரசுக்கு சட்ட ஆலோசனை கூறுங்கள்” என்று தமிழக அரசின் சார்பில் வாதாடிய வழக்குரைஞரை தனியே அழைத்துச் சென்று அறிவுரை கூறினார் சுப்பிரமணியசாமி.
உண்மை விவரங்கள், சட்டம், தீர்ப்புகள் என்ற எதைப்பற்றியும் கவலையில்லாமல், திமிர் பிடித்த ஒரு பார்ப்பன சாதிப் பஞ்சாயத்தாகவே உச்சநீதிமன்ற நீதிபதிகள் நடந்து கொண்டனர். இது சிதம்பரம் கோயில் பிரச்சினை மட்டுமல்ல. தமிழகத்தின் எல்லாக் கோயில்கள் தொடர்பான பிரச்சினை. சுப்பிரமணிய சாமி, முன்வைக்கும் கோரிக்கைகள் இந்து முன்னணியின் கோரிக்கைகள் ஆகும். தமிழ்நாடு அறநிலையத்துறைச் சட்டத்தின் பிரிவு எண் 45 அகற்றப்படுமானால், சிதம்பரம் கோயில் மட்டுமின்றி, எல்லாக் கோயில்களிலும் நிர்வாக அதிகாரிகள் அகற்றப்பட்டு கோயில்கள் அனைத்தும் மீண்டும் கொள்ளைக் கூடாரங்களாக மாற்றப்பட்டு விடும்.
ஏற்கெனவே ஜெயலலிதா அரசு இந்த திசையில்தான் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான கட்டிடங்களில் நாத்திகர்களின் உரிமையை ரத்து செய்வது, அறநிலையத்துறையின் பணி நியமனத்தில் நாத்திகர்களை அகற்றுவது, கோயில் பிரசாதங்கள் தயாரிக்கும் பணிகளுக்கு “பார்ப்பனர் மட்டும்” என்று பகிரங்கமாக விளம்பரம் கொடுப்பது- என்பன போன்ற அரசியல் சட்டத்துக்கு விரோதமான நடவடிக்கைகள் தமிழக அரசால் கேட்பாரின்றி மேற்கொள்ளப்படுகின்றன. அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் சட்டத்தையும் நீதிமன்றத்தில் காவு கொடுத்து, அதன் அடிப்படையில் பயிற்சி பெற்ற மாணவர்களை பெருங்கோயில்களில் நியமனம் செய்யாமல் வெளியேற்றும் சதியிலும் ஜெ அரசு ஈடுபட்டிருக்கிறது.
சிதம்பரம் வழக்கில் நாங்கள் ஒரு மனுதாரராக இணைந்து கொண்டிருப்பதால், எமது வழக்குரைஞர்களை டெல்லிக்கு அனுப்பி வழக்கு தொடர்பான பணிகளை கவனித்து வருகிறோம். மூத்த வழக்குரைஞர்களையும் அமர்த்தியிருக்கிறோம். திராவிட இயக்கக் கொள்கைகளில் பற்று கொண்டவர்களும், கோயில்கள் கொள்ளைக் கூடாரங்களாகக் கூடாது என்ற அக்கறை கொண்டவர்களும், ஆலயத் தீண்டாமையை எதிர்ப்பவர்களும், தமிழ் வழிபாட்டை ஆதரிப்பவர்களும் ஜெயலலிதா அரசின் இந்தப் போக்கிற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்.
பாரதிய ஜனதாக் கட்சியைச் சேர்ந்த சுப்பிரமணியசாமி என்ற அரசியல் தரகனும், தீண்டாமை வெறி பிடித்த தீட்சிதர்களும் தமிழகத்தின் சுயமரியாதைப் பாரம்பரியத்தையும், கோடிக்கணக்கான மக்களின் தமிழ் உணர்வையும் தோற்கடிக்க நாம் அனுமதிக்கக் கூடாது.
- நந்தனை எரித்துக் கொன்ற தீட்சிதர்கள் தில்லைக் கோயிலைக் கைப்பற்ற அனுமதியோம்!
- பாரதிய ஜனதா – சுப்பிரமணியசாமி கும்பலின் சதிகளை முறியடிப்போம்!
- ஜெயலலிதா அரசின் பார்ப்பனிய மீட்பு நடவடிக்கைகளை அம்பலப்படுத்துவோம்!
- பெரியார் பிறந்த மண்ணில் பார்ப்பன பாசிசம் தலையெடுக்க அனுமதியோம்!
மனித உரிமைப் பாதுகாப்பு மையம்
தமிழ்நாடு