privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்வைப்பாறில் மணல் கொள்ளை - விளாத்திகுளத்தில் மாட்டுவண்டி முற்றுகை !

வைப்பாறில் மணல் கொள்ளை – விளாத்திகுளத்தில் மாட்டுவண்டி முற்றுகை !

-

வைப்பாறில் நவீன இயந்திரங்களால் மணல் கொள்ளை போவதைத் தடுப்போம் !
பாரம்பரியமாக மாட்டு வண்டியில் மணல் அள்ளும் உரிமையை நிலை நாட்டுவோம்!!

என்ற தலைப்பின் கீழ் விவசாயிகள் விடுதலை முன்னணி தலைமையில் விளாத்திகுளம் மாட்டுவண்டி தொழிலாளர் பாதுகாப்பு சங்கம் மற்றும் கட்டிட தொழிலாளர் சங்கமும் இணைந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில் சென்று தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை இடப்பட்டது.

பேரணி விளாத்திகுளம் ஆற்றுப் பாலத்திலிருந்து துவங்கியது. ஆற்றுப்பாலத்திலிருந்து தாலுகா அலுவலகம் 1 கிலோமீட்டர் தூரம் இருக்கும். சுமார் 1 கிலோமீட்டர் தூரம் வரை அணி வகுத்து நிறுத்தப்பட்ட மாட்டு வண்டிகளை நகரத்திற்குள் நுழைய விடாமல் தடுத்த காவல் துறையின் தடுப்பு அரண்களை முறியடித்து நகரத்திற்குள் நுழைந்து வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது. மாட்டு வண்டியில் கோரிக்கைகளை வலியுறுத்தி பேனர் பிடித்தனர். விண்ணதிரும் முழக்கங்களுடன் பேரணி தொடங்கியது.

இந்த போராட்டத்தில் கொத்தனார்கள், எலக்ட்ரீசியன்கள், கடைக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் ஆதரவோடு 500-க்கும் மேற்பட்டோர் ஆர்வத்தோடு கலந்து கொண்டார்கள். இந்த முற்றுகை போராட்டத்தினால் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. அந்த போர்க்குணமிக்க போராட்டத்தை சீர்குலைக்க 100-க்கும் மேற்பட்ட அதிரடிப்படை ரிசர்வ் போலீஸ் ஆகியோரைக் கொண்டு மிரட்டிப் பார்த்தும் மக்கள் யாரும் பின்வாங்கவில்லை.

இப்போராட்டத்தின் உறுதியைப் பார்த்த தாசில்தார், மாவட்ட துணைக் கண்காணிப்பாளர், மற்றும் பொதுப்பணித் துறையைச் சேர்ந்த நான்கு மாவட்ட பொறுப்பு அதிகாரிகள் கலந்து கொண்டு நடத்திய பேச்சு வார்த்தையில் மாட்டு வண்டிகளில் மட்டும் மணல் அள்ளுவதற்கும், இயந்திரங்களில் வாகனங்களில் மணல் அள்ளுவதை தடை செய்யவும் 20 நாட்களில் பரிந்துரைக்கிறோம் என்று எழுதிக் கொடுத்ததன் அடிப்படையில் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

பேச்சுவார்த்தையில் விளாத்திகுளம் வி.வி.மு பொறுப்பாளர் தோழர் ஸ்ரீரங்கன், தோழர் ஆதி, தேனி மாவட்ட வி.வி.மு பொறுப்பாளர் தோழர் மோகன், உசிலை வட்ட வி.வி.மு பொறுப்பாளர் தோழர் குருசாமி ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

மாட்டு வண்டி தொழிலாளர் பாதுகாப்பு சங்கம் மாவட்டத் தலைவர் ராஜாராம் அவர்களை காவல் துறையினர் அன்று காலையிலேயே கைது செய்தனர். பேச்சு வார்த்தையின் போது அவரை விடுதலை செய்து இங்கு அழைத்து வந்து கூட்டத்தில் பேச வைத்தால்தான் கூட்டத்தை முடிப்போம் என்று உறுதியாகக் கூறியதால் ராஜாராமை அழைத்து வந்து கூட்டத்தில் பேச வைத்தனர்.

கூட்டத்தில் மாட்டு வண்டித் தொழிலாளர்கள் 300 பேரும், கட்டிடத் தொழிலாளர்கள் 50 பேரும், பெண்கள் 35 பேரும்  கலந்து கொண்டனர். வியாபாரிகள் முகம் சுழிக்காமல் போராட்டத்தை மனமுவந்து ஆதரித்தனர். இந்த முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொண்ட தொழிலாளர்கள் கலந்து பேசி 20 நாட்களில் அரசு நல்ல முடிவு எடுக்கவில்லை எனில் அடுத்த கட்டமாக விளாத்திகுளத்தில் அடைப்பு போராட்டம் நடத்துவோம் என்று முடிவு செய்தனர். கடை வியாபாரிகளும் இதை அங்கீகரித்தனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல் :
பு.ஜ செய்தியாளர்கள, விளாத்திகுளம்