Tuesday, August 9, 2022
முகப்பு கலை கவிதை டிசம்பர் 25 : வெண்மணி தீயின் தெறிப்புகள்...

டிசம்பர் 25 : வெண்மணி தீயின் தெறிப்புகள்…

-

ரிக்கும் பார்வையிலிருந்து
இன்னும் தப்பமுடியவில்லை
தாழ்த்தப்பட்ட மக்கள்.

trichy-demonstrationநந்தனைப் பார்த்த
தில்லைவாழ் அந்தணன் முதல்
இளவரசனைப் பார்த்த
திண்டிவனம் ராமதாசு வரை
எரிந்து விழுகிறார்கள்!

அவர்களாகப் பார்த்து
பிச்சையிடுவதை
பிறழாமல் வாங்கிக்கொண்டால்,
பெரிய புராணம்!

தானாகத் தலைநிமிர்ந்து
உரிமைகளை கையிலெடுத்தால்
வெண்மணிப் பிணம்!

கழனி தொடங்கி ஐ.ஐ.டி. வரை
வெண்மணி வெறிநாக்கு
விதம் விதமாக
துப்புகிறது கங்குகளை.

மண்கலம் மட்டுமே
அனுமதிக்கப்பட்ட கைகளில்
வெண்கலமும்.

இடுப்புத்துண்டு மட்டுமே
அனுமதிக்கப்பட்டவர்கள்
ஜீன்ஸ் அணிவதையும்,

பாதை மறுக்கப்பட்ட கால்களில்
பல வித ஷீக்களும்,

எந்நேரமும்
ஆண்டையின் பிம்பம் மட்டுமே
இருத்தப்பட்ட கண்களில்
கூலிங் கிளாசும்… பார்த்து
பற்றிக்கொள்கிறது
ஆதிக்க சாதி மனம்!

தாழ்த்தப்பட்ட பெண்
‘நாப்கின்’ வாங்குவதைப்
பார்த்து கூட,
”பாத்தியா!” என ஜாடை காட்டி
வயிறெரியும் ஊர் தெரு வக்கிரம்,

வெண்மணியில்
கருக்கிய நெருப்பு
இன்னும்,
பலரின் கண் மணிகளில்
புகைந்து கிடக்குது!

வாய்ப்பு கிடைக்கையில்
வர்க்கத் திமிரோடு
வருகிற சாதிவெறி,
இலவச உழைப்பை
சுரண்ட முடியாத கடுப்பில்
தலித்துகள்
உழைத்துச் சேர்த்த செல்வங்களை
எரித்த புகையில்
இதயம் நிறைகிறது!

நாகரிகத்தின் தோற்றத்தில்…
காரிய ஒப்பனைகளில்…
மறைந்துகொள்ளும் சாதீய நகம்
சந்தர்ப்பம் வாய்க்கையில்
எந்த ஊர்?… எந்தத் தெரு?
அப்பா பெயர்?… என
நுட்பமாக சுற்றி வளைக்கிறது.

அடங்கும் இடங்களில்
கையில் விபூதி எறியும்
ஆண்டை சாமிகள்,
திமிறும் இடங்களில்
ஆளையே சாம்பலாக்கும்
அநியாயங்கள்
இன்னும் முடிந்தபாடில்லை!

மூவாயிரம் மைல்கள் தாண்டி
இலக்கைத் தாக்கி அழிக்கும்
அக்னி மூன்றை அனுப்பிவிட்டதாய்
அலப்பறை போடும் அன்பர்களே!
மூணு தெரு தாண்டி
ஊர் பொதுக்குழாயில் நீரெடுக்கவும்,
ஊர் பஞ்சாயத்தின் இலக்கைத் தொடவும்
ஒரு தாழ்த்தப்பட்டோரை அனுப்ப
உங்களிடம் கருவி உள்ளதா காட்டுங்கள்!

தில்லை… வெண்மணி…
குறிஞ்சாண் குளம்… கொடியன்குளம்… மேலவளவு…
உஞ்சனை… விழுப்புரம்… பரமக்குடி
காலந்தோறும் கைமாறி வருகிறது
ஆதிக்க நெருப்பு,

பக்திக்கும் உரிமையில்லை
சொத்துக்கும் உரிமையில்லை
அது நந்தன் காலம்,

விளைநிலங்கள் அழிக்கப்பட்டு
கைத்தொழில்கள் எரிக்கப்பட்டு
அத்துக் கூலிகளாய் தலித்துகளை
அடித்து நகரத்திற்கு துரத்தும் உலகமயம்!

இருஞ்சூர் கோபாலகிருஷ்ண நாயுடுவின்
நெருப்புக்குத் தப்பியவனை
இருங்காட்டுக் கோட்டை பன்னாட்டுக் கம்பெனி
எந்த உரிமையுமின்றி எரிக்கிறது!

ஆண்டையின்
கொலைக்களத்திற்கு தப்பிய
படியாளின் மகனை,
ஹீண்டாயின் காண்ட்ராக்ட் வேலை
கழுத்தறுக்கிறது!

சவுக்கடிக்கும், சாணிப்பாலுக்கும் தப்பிய
நடவாளின் கைகளை,
நோக்கியாவின் மதர்போர்டு
நறுக்கி எறிகிறது!

வெண்மணித் தீ முடியவில்லை
அது மூலதனத்தின் வழி நீள்கிறது,
வெண்மணி ரத்தமும் உறையவில்லை
அது செங்கொடி முழக்கத்தில் எழுகிறது!

உள்ளடக்கத்திலும், வடிவத்திலும்
உருமாறும் ஆதிக்க நெருப்பை
எதிர்கொள்ளும் அரசியலை
ஏற்கனவே தம் பிணத்தின் மீதும்
அடையாளம் காட்டியவர்கள்
அந்த வெண்மணித் தியாகிகள்!

கார்ப்பரேட் ஆண்டைகள்,
மறுகாலனிய சவுக்குகள்,
நீதிமன்ற சாணிப்பால்கள்…
பாராளுமன்ற கிட்டிகள்…

ஏற்க மறுத்து, எதிர்த்து அடித்து
பதிலடி தந்தவர் செங்கொடி தியாகிகள்!
சோற்றுக்கு மட்டுமல்ல
சுரணைக்கும்,
கூலிக்கு மட்டுமல்ல
அரசியல் உரிமைக்கும்,
வர்க்கப்போரைத் தொடுத்ததின்
அடையாளம் வெண்மணி…

எரிய எரிய
சாம்பலாகாமல் – மக்கள்
சங்கமான
ஒரே இயக்கம்… கம்யூனிச இயக்கம்…
வெண்மணி தியாகிகளின்
விடுதலைத் தாகமும் அதுவே!

– துரை.சண்முகம்

 1. எரிய எரிய
  சாம்பலாகாமல் – மக்கள்
  சங்கமான
  ஒரே இயக்கம்… கம்யூனிச இயக்கம்…
  வெண்மணி தியாகிகளின்
  விடுதலைத் தாகமும் அதுவே!

  -தோழர் துரை.சண்முகம் கவிதை கணைகள் தொடரட்டும்….

Leave a Reply to அசுரபாலகன் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க