Friday, May 2, 2025
முகப்புஅரசியல்ஊடகம்புதிய ஜனநாயகம் 29-ம் ஆண்டு சிறப்பு வாசகர் வட்டம் - திருச்சி.

புதிய ஜனநாயகம் 29-ம் ஆண்டு சிறப்பு வாசகர் வட்டம் – திருச்சி.

-

திருச்சி சந்தன மகாலில் 15-12-13 அன்று மாலை 6 மணிக்கு வாசகர் வட்டம் புதிய ஜனநாயக விற்பனைக் குழுவின் தோழர். சேகர் தலைமையில் நடைபெற்றது. 200-க்கும் மேற்பட்ட வாசகர்கள் கலந்து கொண்டனர். மக்கள் கலை இலக்கிய கழக மையக் கலைக்குழுத் தோழர்கள் பறை முழக்கத்தோடு பாடல் பாடி வாசகர்களை உற்சாகப்படுத்தினார்கள்.

தலைமை உரையாற்றிய தோழர்.சேகர் பத்திரிகை எப்படி வரவேண்டும் என்பது பற்றி தோழர்.லெனின் சுட்டிக் காட்டிய வழிமுறைகளை விளக்கிப் பேசினார். பத்திரிகை மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்வதாக இருக்க வேண்டுமேயொழிய, அதை விடுத்து சாலை விபத்துக்கள்,கள்ளக் காதல், நடிக நடிகையரைப் பற்றிய கிசுகிசுச் செய்திகளையும், 2G ஸ்பெக்ட்ரம், நிலக்கரி, தாதுமணல் கொள்ளை போன்ற மெகா ஊழல்களைப் பற்றிய பரபரப்புச் செய்திகளையும் வெளியிடுகின்றனர். இதனால் வாசகர்களுக்கு என்ன பயன்?

ஆனால் புதிய ஜனநாயகம் பத்திரிகை செய்திகளை வெளியிடுவதோடு மட்டுமல்லாமல் ஊழலுக்கு தனியார்மயம், தாராளமயம், உலகமயமாக்கல் என்ற மைய அரசின் கொள்கையே காரணமாக இருக்கிறதென்றும், தனியார்மய கொள்கைகளை ஒழிக்காமல் ஊழலை ஒழிக்க முடியாது என்பதை பல்வேறு ஆதாரங்களுடன் அதற்க்கான தீர்வுகளையும் வெளியிடுகிறது. இதனால் வாசகர்கள் பயனடைகிறார்கள் என தனது உரையில் குறிப்பிட்டுப் பேசினார்.

வாசகர்வட்டக் கூட்டத்தில் பின்வரும் கருத்துக்களை வாசகர்கள் தெரிவித்தனர்.

  • ஒரு பத்திரிகை ஆசிரியர், புதிய ஜனநாயகம் இதழை படிக்க வாய்ப்பு கிடைத்தது. புதிய ஜனநாயகம் இந்த சமூகத்தை மாற்றியமைக்க ஆர்வமாக இருப்பதாக அறிகிறேன். இந்த ஊழல் மலிந்த சமுதாயத்தை மாற்றியமைக்க புதிய ஜனநாயகத்தால் முடியுமென நம்புவதாகவும் தெரிவித்தார்.
  • இந்த பத்திரிகை தேர்தல் பாதையை திருடர் பாதை என்று தேர்தலை புறக்கணிக்கச் சொல்லக்கூடியது. நான் ஒரு தேர்தலில் போட்டியிடும் கட்சியில் இருந்து கொண்டே புதிய ஜனநாயகம் 5 ரூபாய் விலையில் வந்த காலத்தில் இருந்து தொடர்ந்து வாசகராக இருக்கிறேன். எந்தப் பிரச்சனையானாலும் பத்திரிகையில் வெளிவரும் கருத்துக்களை தன்னுடைய கருத்தாக மாற்றி பல இடங்களில் பேசி வருகிறேன். புதிய ஜனநாயகம் மாதமிருமுறை இதழாக வரவேண்டும் என விரும்புகிறேன் என்றார்.
  • அடுத்த வாசகர் பு.ஜ-வில் தாது மணல் கொள்ளையன் வைகுண்ட ராஜனைப்பற்றி கட்டுரை படித்தேன். அதே போல இங்குள்ள தொழிற்சாலைகளும் ஊரையே மாசுபடுத்தி வருகின்றன அதை பற்றிய செய்திகளும் வெளியிட வேண்டும் என்றார்.
  • 25 ஆண்டுகளுக்கு முன்னர் ஈழப்பிரச்சனை பற்றி ஒரு கட்டுரை படித்தேன். அன்றே பு.ஜ கூறிய கருத்துபடிதான் இன்றைக்கு ஈழப்பிரச்சனை முடிந்துள்ளது என்று வாசகர் ஒருவர் குறிப்பிட்டார்.
  • என்னிடம் ஒவ்வொரு மாதமும் பு.ஜ கொடுக்கிறார்கள் முடிந்த அளவுக்கு படிக்கிறேன். நல்ல கருத்துக்களையும் அரசு அடக்கு முறைக்கு எதிரான கருத்துக்களையும் பத்திரிக்கையில் எழுதுகின்றனர். நான் பு.ஜ.வை கையில் வைத்துக் கொண்டு பேருந்தில் பயணம் செய்தேன். அதே பேருந்தில் பயணம் செய்த ஒருவர் அதை பார்த்தவுடன் பு.ஜ குழுவினர் நீதி, நியாயத்துக்காகவும் போராடக் கூடியவர்கள் என்று சொன்னார். எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்த்து என்றார்.
  • நாங்கள் பல்வேறு இடங்களுக்கு பு.ஜ இதழ் கொண்டு சென்று இருக்கிறோம். கடந்த மாதப் பத்திரிக்கையில் மன்மோகன்சிங் கார்ட்டூன் படத்தோடு “ஆடி அதிரடி விற்பனை” என்ற தலைப்பிட்ட அட்டைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால் இந்த இதழில் வந்த தாதுமணல் கொள்ளை குறித்த வைகுண்டராஜனின் அட்டைப்படம் அவ்வாறு எடுபடவில்லை. வைகுண்டராஜனையே கார்டூனாக போட்டிருக்கலாம் என்று கூறினார்.
  • அடுத்ததாக பேசிய பெண் தோழர் ஒரு நாள் இரயிலில் பிரயாணம் செய்யும்போது கால்முடியாத மாற்றுத் திறனாளி ஒருவர் தனது வயிற்று பிழைப்புக்காக இரயிலில் குழந்தைகளுக்கான பொம்மைகள், புத்தகங்கள் விற்றுக் கொண்டிருந்தார். அதோடு சேர்த்து பு.ஜ இதழ்கள் விற்பதை பார்த்த தோழருக்கு ஆச்சர்யம். உடனே அவரிடம் விசாரித்ததில் அவர் பு.ஜ. வாசகர் என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். அவரது உணர்வை மதித்து மற்றவர்களும் அதிகளவில் பு.ஜ.இதழை விற்போம் என உறுதியளித்தார்.
  • ஒரு வழக்குரைஞர் எனக்கு பு.ஜ.வில் வெளிவரும் செய்திகளெல்லாம் உண்மைதானா? என்ற சந்தேகம் ரொம்ப நாளாக இருந்தது. நான் கூடங்குளம் போராட்டத்தில் மக்களுடன் களத்தில் நின்று போராடினேன். அப்போது எனக்கு கிடைத்த அனுபவங்கள் அனைத்தும் அப்படியே அடுத்த பு.ஜ.இதழில் வெளிவந்தது. அதிலிருந்துதான் உண்மையைத் தவிர வேறு எதையும் அவர்கள் எழுதுவதில்லை என உணர்ந்தேன் என்றார்.
  • பு.ஜ.கட்டுரைகள் படிப்பதால் அரசின் ஒடுக்கு முறைகளுக்கு எதிராக போராட வேண்டும் என்ற உணர்வு ஏற்படுகிறது. எல்லா துறையும் சார்ந்த அதிகாரிகள் மத்தியிலும் நம்மை ஐக்கியப்பட வைக்கிறது. நமக்கு எதிராக உள்ள அரசியல்வாதிகள், சாதி தலைவர்களையும் பு.ஜ.வாங்கி படிக்க வைக்கிறது.
  • ஆரம்பத்தில் 5 இதழ்கள் மட்டுமே விற்பனையான இடத்தில் இன்று 50 இதழ்கள் விற்பனையாகிறது. மக்கள்படும் கஷ்டங்கள், துன்ப துயரங்கள் பற்றி எழுதுகிறார்கள். தாதுமணல் கொள்ளையன் வைகுண்டராஜனை பற்றி எந்த பத்திரிக்கையும் எழுதவில்லை. பு.ஜ.மட்டுமே வெளியிட்டது. இதனால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெருகிறது என்றார்.
  • நான் கடந்த 2மாதமாகத்தான் இந்த இதழை படித்து வருகின்றேன். இயல்பிலேயே நான் கூச்ச சுபாவம் உள்ளவன். ஆனால் இந்த மேடை ஏறி பத்திரிகை பற்றி கருத்து கூறும் அளவிற்க்கு தைரியம் கொடுத்தது பு.ஜ.தான் என்றார்.

அடுத்ததாக மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் திருச்சி மாவட்ட தலைவர் தோழர்.காவிரிநாடன் “சங்கராச்சாரி விடுதலை….பார்ப்பன கும்பல் கும்மாளம்! தில்லை சிதம்பர நடராஜர் கோவிலை மீண்டும் கைப்பற்ற தீட்சிதர்கள் சதி உச்சிக்குடுமி மன்றத்தில் நடப்பது என்ன?” என்ற தலைப்பில் விளக்கவுரை ஆற்றினார்.

“காஞ்சிபுரம் கோவில் மேலாளர் சங்கரராமனை கடந்த 2004ல் சங்கராச்சாரியே ஆளை வைத்து கோவிலின் உள்ளேயே வெட்டி படுகொலை செய்தார். இந்த உண்மை அனைவருக்கும் தெரியும். அதற்கான ஆதாரங்களும் நீதிமன்றத்தில் ஒப்படைத்தும் சாட்சிகள் பிறழ் சாட்சியங்களாக மாறிவிட்டார்கள். (கைப் புண்ணுக்கு கண்ணாடி எதற்கு என்பது போல) போலீசு சரிவர குற்றத்தை நிரூபிக்கவில்லை என்று சங்கராச்சாரி உள்ளிட்ட கொலை கும்பலை விடுதலை செய்து விட்டார் நீதிபதி. பார்ப்பனக் கும்பல் கொண்டாட்டத்தில் திளைக்கிறது.

தில்லை கோவில் யாருக்கு சொந்தம் என்ற வழக்கில் 1890-ல் நீதிபதி முத்துசாமி ஜயர் என்பவர் தீட்சிதர்களுக்கு சொந்தம் கொண்டாட எந்த உரிமையில்லை என தீர்ப்பளித்து விட்டார். மனித உரிமை பாதுகாப்பு மையத் தோழர்களும், புரட்சிகர அமைப்புகளைச் சார்ந்த தோழர்களும் தீட்சிதர்களிடம் இருந்த இந்த கோவிலை போராடி இந்து அறநிலைய துறையிடம் ஒப்படைக்க வைத்தனர். அந்த கோவிலில் தமிழில் பாடக்கூடாது என்றும் தமிழ் நீசபாசை, வேசி மக்கள் பேசும் மொழி என்றும் தீட்சிதர்கள் தடுக்கின்றனர். கோவில் எங்களுக்கு சொந்தம் என்று உச்சநீதிமன்றத்தில் வாதாடுகின்றனர். உச்சநீதி மன்றமும் தீட்சிதர்கள் கருத்துக்களைதான் கேட்கிறது. நமது கருத்தை கேட்க மறுக்கிறது. ஆக மொத்தத்தில் நீதி மன்றத்தில் கூட பார்ப்பன கும்பலின் ஆட்சிதான் நடக்கிறது என்பதை தெளிவுபடுத்துகிறது”

என்று அவர் தனது உரையில் கூறினார்.

இறுதியாக பு.ஜ விற்பனைக்குழு தோழர்.ஜோசப் நன்றி கூறி வாசகர் வட்ட நிகழ்ச்சியை நிறைவு செய்து வைத்தார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

செய்தி :
பு.ஜ. செய்தியாளர், திருச்சி.