Saturday, May 3, 2025
முகப்புசெய்திஒரு வரிச் செய்திகள் – 30/12/2013

ஒரு வரிச் செய்திகள் – 30/12/2013

-

செய்தி: ஆம் ஆத்மி கட்சி சார்பில் டெல்லி மக்களுக்கு அளிக்கப்பட்டிருந்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற கடவுளின் அருளைப் பெறும் வகையில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் தந்தை கோவிந்த் ராம், அங்குள்ள கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு யாகத்தை நடத்தினார்.

நீதி: யாகமோ, யோகமோ இப்படி மூடநம்பிக்கையில் உருண்டு புரள்வதில் இனி அம்மா கட்சிக்கும் ஆம் ஆத்மிக்கும் என்ன வேறுபாடு?
________

செய்தி: சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி புதிய கட்சி தொடங்கவுள்ளார். அக்கட்சி மக்களைவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் போட்டியிடும் என்று அறிவித்துள்ளார்.

நீதி: கைப்புள்ள களத்தில் இறங்கியாச்சு, இனி காமடிக்கு குறைவில்லை!
________

செய்தி: வரும் நாடாளுமன்றத் தேர்தலில், தேசியக் கட்சியான பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைக்கப்படும் என, கொங்குநாடு முன்னேற்றக் கழகம் (கொ.மு.க.) கட்சியின் தலைவர் பெஸ்ட் எஸ்.ராமசாமி தெரிவித்தார்.

நீதி: சாதியானாலும், மதமானாலும் வெறியர்கள் இனி ஓரணி!
________

செய்தி: ரஷியாவின் வோல்கோகிராட் நகரில் 17 பேர் கொல்லப்பட்ட ரயில் நிலைய தற்கொலை குண்டு வெடிப்பு நிகழ்ந்து 24 மணி நேரத்துக்குள் பேருந்து ஒன்றில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 14 பேர் பலியாகினர்.

நீதி: சோவியத் ரசியாவில் இல்லாதிருந்த மதவெறியை உருவாக்கியிருப்பதுதான் முதலாளித்துவ ரசியாவின் சாதனை!
________

செய்தி: கூட்டணி அரசை எவ்வாறு நடத்த வேண்டும் என்பதில் பிரதமர் மன்மோகன் சிங்கை உதாரணமாகக் கொண்டு டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செயல்பட வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே அறிவுரை வழங்கி உள்ளார். 

நீதி: என்னது கூட்டணியா? ஆம் ஆத்மிகளா இனி உங்க நேர்மை ‘கற்பு’ குறித்து சரடு விடாதீர்கள்!
_______

செய்தி: இந்தியாவில் இருக்கும் அமெரிக்க தூதரக வளாகத்தினுள் இயங்கும் சலுான் மற்றும் வர்த்தக நிறுவனங்களை அங்குள்ள அதிகாரிகளே பயன்படுத்த வேண்டும் என்பது சட்டம். ஆனால் வெளிநாடுகளில் இருந்து வரும் அமெரிக்க தூதரக அதிகாரிகளும், தூதரக அதிகாரிகள் அல்லாமல் ஏனையோர் அதனை பயன்படுத்தி வருவதாக தெரிய வந்துள்ளது.

நீதி: போபாலில் விபத்து என்று கொலை செய்த அமெரிக்க நிறுவனத்தை தண்டிக்க வக்கற்றவர்கள் முடிக் கடையில் கஸ்டமர் மாறிவிட்டார் என்று கம்பு சுழற்றுவது ஆபாசமில்லையா?
_________

செய்தி: இந்திய துணைத்தூதர் தேவயானி கோபகர்டே கைது செய்யப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசு எடுத்த அதிரடி நடவடிக்கைகள் காரணமாக அமெரிக்கா அதிர்ந்து போனதாக கூறப்படுகிறது.

நீதி: கைப்புள்ள சவாலுக்கு கட்டதுரை பயந்து விட்டாராம்!
________

செய்தி: இலங்கை சிறையில் வாடும் தமிழர்களை மீட்க பிரதமர் மன்மோகன்சிங் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாகவும், தமிழக முதல்வர் ஜெ., போதிய முயற்சிகள் எடுக்கவில்லை என்றும் காங்., எம்.பி., அழகிரி கூறினார்.

நீதி: இனி அழகிரி மேல் நிச்சயமாக நடவடிக்கை உண்டு.
_________

செய்தி:  நரேந்திரமோடியை பிரதமராக பார்க்க விரும்புகிறேன் என, கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பா கூறி உள்ளார்.

நீதி: அடுத்த சட்டமன்றத் தேர்தலில் இவரை முதலமைச்சராக பார்க்க அவர் விரும்பியிருக்கலாம். பதவி தேற்றுவோர்க்கு பிழைப்புவாதமே அறம்.
________

செய்தி: நரேந்திர மோடியைப் பிரதமர் வேட்பாளராக ஏற்பவர்களுடன் மட்டுமே பா.ஜ.க. கூட்டணி அமைக்கும் என்று அக்கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் இல.கணேசன் கோவையில் ஞாயிற்றுக்கிழமை கூறினார்.

நீதி: “இன்னைக்கு முடிஞ்சு போச்சு, நாளைக்கு பாக்கலாம்” என்று திமுகவும், அதிமுகவும் கதவை மூடியதும் பிச்சைக்காரர்களுக்கு வீரம் வருகிறது.
_______

செய்தி: தமிழக மீனவர் பிரச்சினையில் கண் துடைப்பு நடவடிக்கைகளே மேற்கொள்வதாக, மாநில அரசு மீது திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.

நீதி: இவர் செய்த கடிதத் துடைப்பு நடவடிக்கையைத்தானே ஜெயா அரசும் செய்கிறது. கழுதை விட்டைகளில் ஏது பொன் விட்டை, மண் விட்டை?