privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்சாதி – மதம்திருவாரூரில் வெண்மணித் தியாகிகள் நினைவு நாள்

திருவாரூரில் வெண்மணித் தியாகிகள் நினைவு நாள்

-

டிசம்பர் 25, 2013 – வெண்மணித் தியாகிகள் நினைவு நாள்

  • கூலி உயர்வு கேட்டதற்காக உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 44 வெண்மணித் தியாகிகளின் நினைவு நாளன்று திருவாரூர் பகுதியில் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகளின் சார்பில் அறைக்கூட்டங்கள் நடைபெற்றன.
  • இந்நினைவு நாளையொட்டி திருவாரூர் மாவட்டப் பகுதிகளில் பு.மா.இ.மு சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.
  •  திருவாரூர் மாவட்டத்தில் ஐந்து இடங்களில் அறைக்கூட்டங்கள் நடைபெற்றன.
  • இன்றைய தலைமுறைக்குத் தஞ்சை மாவட்டத்தின் பெரும் நில உடைமையாளர்களான பண்ணையார்கள், உழைக்கும் மக்களாகிய விவசாயிகள், விவசாயத் தொழிலாளர் மீது செலுத்திய கொடூரங்களின் வலி தெரியாது.

பொழுது விடியும் முன்பே பண்ணையார்களின் வயல்களுக்குச் சென்று பசியோடும், பட்டினியோடும், நோயுற்றிருந்தாலும் ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் வேலை செய்து கொண்டே இருக்க வேண்டும். ஒரு சின்னஞ்சிறிய கிழிந்த சேலையில் கருவேல மரத்தில் கட்டித் தொங்க விடப்பட்டிருக்கும் தொட்டிலில் பசியால் துடித்து அழும் தன் குழந்தைக்குப் பால் கொடுக்க முடியாமல் பரிதவிக்கும் தாய் குழந்தைக்குப் பால் கொடுப்பதற்காக நிமிர்ந்து பார்க்கிறாள். வரப்பில் நிற்கிறான் கங்காணி, கையில் சாட்டையுடன்.

தருமபுரி தாக்குதல்
தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தொடரும் வன்கொடுமைகள் (சென்ற ஆண்டு தருமபுரியில் கொளுத்தப்பட்ட வீடுகள்)

குழந்தை வீறிட்டு அழுகிறது; துடிக்கிறது. பால் கொடுக்கச் சென்றால் தடிப்பயல் கங்காணி அந்தத் தாயைச் சாட்டையால் அடித்தக் கொன்று போடுவான். இவள் மட்டுமா வதைபடுவாள்? இவள் கணவன் சாணிப் பால் கொடுக்கப்பட்டு, சவுக்கடிக்கு ஆளாகி, சித்ரவதைப்பட்டுச் செத்துப் போவான். குடும்பமே பண்ணையாரின் கொடுமைக்கு ஆளாகும். இவள் குடியிருக்கும் சேரிப் பகுதியே ஒட்டுமொத்த தண்டனைக்கு உள்ளாகும். என்ன செய்வாள்…?

கர்நாடக மாநிலத்தில் பிறந்து கீழ தஞ்சை மாவட்டத்தில் வந்து தங்கி, கம்யூனிஸ்ட் இயக்கத்தையும், விவசாயத் தொழிலாளர்கள், விவசாயிகள் சங்கத்தையும் கட்டி அமைத்து, ஆயிரக்கணக்கான உழைக்கும் மக்களின் மனதில் வீரத்தை விதைத்து, உரிமைக்காகப் போராடிட அவர்களைச் சங்கமாக அணி திரட்டியவர் தோழர் பி.சீனிவாசராவ். ஆயிரக்கணக்கான ஆண்டுகள் அடிமைகளாகவே வாழ்ந்து வந்த மக்களுக்கு உழைப்புக்கேற்ற கூலி உயர்வு மட்டுமா அவர்களது பிரச்சினை? சமூகத்தில் மனிதனாக, எல்லா உரிமைகளும் பெற்ற மனிதனாக மதிக்கப்பட வேண்டிய சுயமரியாதை உணர்வும் அவர்களது தலையாய பிரச்சினை. பண்ணையார்களும், ஜமீன்தார்களும் மட்டுமே அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சியாளர்கள், நெல் உற்பத்தியாளர்கள் சங்கத்தை உருவாக்கி, இராணுவத்தையும், போலீசையும் ஏவி விட்டு, உழைக்கும் மக்கள் மீது நடத்திய அடக்குமுறைகளின் கோர தாண்டவம், 1968 டிசம்பர் 5-இல் கீழ வெண்மணி கிராமத்தில் கொழுந்து விட்டெறிந்த அதிகார வர்க்கத்தின் தீயில் 44 உயிர்களைப் பலிகொண்ட பிறகுதான் அடங்கியது.

  • கீழ் வெணமணி படுகொலையைத் திட்டமிட்டு நடத்திய இரிஞ்சூர் கோபாலகிருஷ்ண நாயுடுவை “நிரபராதி” என்று விடுதலை செய்ததன் மூலம் போலீஸ், சட்டம், நீதிமன்றம் அனைத்தும் அதிகாரவர்க்கத்தின் அடியாள் படைதான் என்பதை நிரூபித்தது.
  • இந்தத் தீர்ப்பை எழுதிய உயர்நீதிமன்றம் சொன்னது, “கோபாலகிருஷ்ண நாயுடு பணக்காரர்; கார் வைத்திருக்கிறார்; கார், பங்களா வைத்திருக்கும் கனவான் குடிசையைக் கொளுத்துவாரா?” என்று.
  • வெண்மணித் தீயில் வெந்து மடிந்த உயிர்களில் தப்பிப் பிழைத்த 13 வயது நந்தன் எனும் சிறுவன் மனதில் கனன்று கொண்டிருந்த தீக்கங்குகள்தான் பின்பு நக்சல்பாரி புரட்சியாளர்கள் வெண்மணிப் படுகொலையாளி கோபாலகிருஷ்ண நாயுடுவை 44 துண்டுகளாகக் கூறு போட்டுத் தீர்ப்பெழுதிய பின்பு அடங்கியதோ?! இது உயர்நீதிமன்றத் தீர்ப்பல்ல; மக்கள் மன்றத்தின் தீர்ப்பு!

சமூகத்தில் நிலவும் எல்லா கொடுமைகளுக்கும் பிழைப்புவாத அரசியல்வாதிகள் நடத்தும் அராஜக ஆட்சியால் நாடாளுமன்றமெனும் நாறிப் புழுத்துப் போன சகதியால் எந்தத் தீர்வும் காண முடியாது! “ஒரு புதிய ஜனநாயகப் புரட்சிக்கு நக்சல்பாரிகள் தலைமையில் அணி திரள்வதே உழைக்கும் மக்களின் விடுதலைக்கு வழி” –என்று அறைக்கூட்டத்தில் உரை நிகழ்த்திய தோழர்கள் எடுத்துரைத்தார்கள்.

venmani-poster

டிசம்பர்-25 வெண்மணி தியாகிகளுக்கு வீர வணக்கம்!

  • விவசாயத்தை விட்டே விவசாயிகளை விரட்டியடிக்கும் மறுகாலனியாதிக்கத்தை முறியடிப்போம்!
  • உழுபவனுக்கே நிலம்; உழைப்பவர்க்கே அதிகாரம் என்பதை நிலைநாட்டுவேம்
  • நக்சல்பாரிகள் தலைமையில் புதிய ஜனநாயகப் புரட்சியைச் சாதிப்போம்!

நாள் : 26.12.2013

இடம் : திருவாரூர்

புதிய ஜனநாயகப் புரட்சி ஓங்குக!
அனைவருக்கும் கல்வி!
அனைவருக்கும் வேலை!!

செய்தி :

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, தமிழ்நாடு
திருவாரூர் மாவட்டம்
பேசி: 9943494590