முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்புதுதில்லி அதிகார வர்க்கத்திற்கு 3000 கோடி ரூபாயில் பங்களாக்கள் !

புதுதில்லி அதிகார வர்க்கத்திற்கு 3000 கோடி ரூபாயில் பங்களாக்கள் !

-

டெல்லியில் மத்திய அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், நீதிபதிகள் வசிக்கும் பங்களாக்களை புதுப்பித்துக் கட்டுவதற்கு ரூ 3,000 கோடி செலவிலான திட்டத்தை மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் தயாரித்திருக்கிறது.

1920-களிலும், 1930-களிலும் அன்றைய காலனி ஆட்சியாளர்களின் வாசத்துக்காக கட்டப்பட்ட 516 பங்களாக்களின் கட்டுமானம் பலவீனமடைந்து விட்டதைத் தொடர்ந்து, நவீன கட்டுமான பொருட்களை பயன்படுத்தி, நிலநடுக்கத்தை தாங்கக் கூடிய வகையில் இந்த பங்களாக்களை மாற்றியமைப்பதற்கு இந்தத் திட்டம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இதன் முதல் கட்டமாக 29 பங்களாக்களுக்கான வேலை மேற்கொள்ளப்படும்.

லுத்யென்ஸ் பங்களா மண்டலத்தில் உள்ள சில பங்களாக்கள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

இந்தத் திட்டம் செலவுகளுக்கான நிதிக் குழுவின் ஒப்புதலைப் பெற்று அதன் பின்னர் அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படுமாம். இந்த திட்டத்தின்படி ஒவ்வொரு பங்களாவுக்கும் சராசரியாக ரூ 2.7 கோடி ரூபாய் செலவிடப்படும்.

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், சுனாமியால் வீடிழந்த மக்களுக்கு திருவள்ளூரில் 3,616 வீடுகளை ரூ 139 கோடிக்கும் (ஒரு வீட்டுக்கு ரூ 3.84 லட்சம்) , ஒக்கியம் துரைப்பாக்கத்தில் 2,048 வீடுகளை ரூ 106 கோடிக்கும் (ஒரு வீட்டுக்கு  ரூ 5.17 லட்சம்), நொச்சி நகரில் 628 வீடுகளை ரூ 45 கோடிக்கும் (ஒரு வீட்டுக்கு ரூ 7.16 லட்சம்) கட்டி கொடுத்திருக்கிறது என்பதை இதனுடன் ஒப்பிடலாம். திட்டக் கமிஷனின் மான்டேக் சிங் அலுவாலியாவின் கழிப்பறை புதுப்பிக்கும் செலவு சுனாமி மறுவாழ்வு வீடுகளின் செலவை விட மிக அதிகம். என்ன இருந்தாலும் மேன்மக்கள் கழிப்பிடம் அல்லவா?

சென்னையில் மீனவ மற்றும் பிற உழைக்கும் மக்களுக்கு வீடு கட்டுவதற்கு ஆகும் செலவை விட டில்லியில் அதிகாரிகளுக்கும், அமைச்சர்களுக்கும், நீதிபதிகளுக்கும் வீடு கட்டுவதற்கு 50 மடங்கு அதிகம் செலவாகிறது.

சுனாமி வீடுகள்
தொண்டையார்பேட்டையில் கட்டப்பட்டுள்ள சுனாமி வீடுகள்.

லுத்யென்ஸ் டெல்லி என்பது டெல்லியில் ஜனாதிபதி மாளிகை, ராஜ்பத் (மன்னரின் பாதை), ஜன்பத் (மக்களின் பாதை), பிரதமரின் அலுவலகம் இவற்றுடன் 2,800 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்துள்ள பங்களா மண்டலத்தையும் உள்ளடக்கியது. 1911-ம் ஆண்டு ஆங்கிலேய ஏகாதிபத்திய இந்தியாவின் தலைநகர் கொல்கத்தாவிலிருந்து டெல்லிக்கு மாற்றப்பட்ட பிறகு ஆட்சியாளர்களின் மேன்மைக்கு பொருத்தமான புதிய பங்களாக்களும் சாலைகளும் எட்வின் லுத்யென்ஸ் என்ற ஆங்கிலேய கட்டிடக் கலை வடிவமைப்பாளரால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது.

இந்த பங்களா மண்டலத்தில் வசிப்பதற்கு அரசு அதிகாரி, அமைச்சர் அல்லது நீதிபதி ஆக பதவி வகிக்க வேண்டும் என்று கூட இல்லை. இந்த பகுதியில் உள்ள 1,100 பங்களாக்களில் 100 எல்.என்.மிட்டல், நவீன் ஜிந்தால், கே பி சிங், சுனில் மிட்டல் போன்ற முதலாளிகளின் வசம் உள்ளன.

மும்பையைச் சேர்ந்த கமல் மொரார்கா என்ற முதலாளி பிருத்விராஜ் சாலையில் உள்ள ஒரு பங்களாவை ரூ 18 லட்சம் மாத வாடகைக்கு எடுத்துள்ளார். இன்னொரு முதலாளியும், திரிணாமூல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆன கே டி சிங், அவுரங்கசீப் சாலையில் ரூ 13 லட்சம் வாடகை கொடுத்து பங்களா எடுத்திருக்கிறார். கன்னாட் பிளேஸ் பகுதியில் உள்ள 15,000 சதுர அடி பங்களாவுக்கு ரூ 40 லட்சம் வாடகை கேட்கின்றனர் அதன் உரிமையாளர்கள்.

இந்தப் பகுதியில் உள்ள அரசு பங்களாக்களை பராமரிப்பதற்காக ஆண்டுக்கு ரூ 35 கோடி முதல் ரூ 40 கோடி வரை மத்திய பொதுப்பணித் துறை செலவழிக்கிறது.

காலனி ஆட்சியாளர்களின் சொகுசான நிர்வாகத்துக்காக கட்டப்பட்ட பங்களாக்களில் இருந்து கொண்டுதான் இந்த ஆளும் வர்க்கம் ஏழை இந்தியர்களை ஒடுக்குவதற்க்காக தீயாய் வேலை செய்கிறதாம்.

மேலும் படிக்க

  1. ஏழைகள் குடியிருக்க குடிசைகூட இல்லை ஏழையிடம் சுரண்டும் ஓட்டுப்பொருக்கிகளுக்கு கோடி ரூபாயில் பங்களா என்ன நாடுடா இது? இனி யோசிக்கவே நேரமில்லை இணைந்திடுவோம் புரட்சிக்கு அணிதிரண்டிடுவோம்.அதிகாரத்துவத்தையும்,அரசியல்வாதிகளையும்,வீழ்த்திடுவோம்.

  2. ஏழைகள் குடியிருக்க குடிசைகூட இல்லை ஏழையிடம் சுரண்டும் ஓட்டுப்பொருக்கிகளுக்கு கோடி ரூபாயில் பங்களா என்ன நாடுடா இது? இனி யோசிக்கவே நேரமில்லை இணைந்திடுவோம் புரட்சிக்கு அணிதிரண்டிடுவோம்.அதிகாரத்துவத்தையும்,அரசியல்வாதிகளையும்,வீழ்த்திடுவோம்.

Leave a Reply to மருதநாயகம் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க