Tuesday, May 6, 2025
முகப்புஉலகம்அமெரிக்காஅமெரிக்க நாடாளுமன்றமா - பணக்காரர்களின் காஃபி கிளப்பா ?

அமெரிக்க நாடாளுமன்றமா – பணக்காரர்களின் காஃபி கிளப்பா ?

-

மெரிக்காவை ஆட்சி புரியும் நிதி ஆதிக்க சிறுபான்மையினருக்கு எதிராக வால் வீதி ஆக்கிரமிப்பாளர்கள் முன் வைத்த “நீங்கள் 1%, நாங்கள் 99%” என்ற முழக்கம் இப்போது இன்னும் கூர்மையடைந்திருக்கிறது. 1% பணக்காரர்களின் நலன்களுக்காக செயல்படும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் வரலாற்றில் முதல் முறையாக மில்லியனர்களின் பெரும்பான்மை ஏற்பட்டிருக்கிறது ஆம், அமெரிக்க நாடாளுமன்ற மேலவை, கீழவை உறுப்பினர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் மில்லியனர்கள் (சுமார் ரூ 6 கோடி சொத்து மதிப்பு) ஆகியிருக்கின்றனர்.

டாரல் இசா
$59.8 கோடி (சுமார் ரூ 3,588 கோடி) மதிப்பிலான சொத்துக்களுடன் இந்த பணக்காரர்களின் கிளப்பில் முதல் இடத்தைப் பிடித்துள்ள குடியரசுக் கட்சியைச் சேர்ந்த கீழவை உறுப்பினர் டாரல் இசா

அமெரிக்காவின் மேலவையில் ஒரு மாநிலத்துக்கு 2 உறுப்பினர்கள் வீதம் 50 மாநிலங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 100 செனட்டர்களும், கீழவையில் மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 434 உறுப்பினர்களும் உள்ளனர்.

இந்த மேல், கீழ் அவைகளின் மொத்தம் 534 அரசியல்வாதிகளில் 268 பேரின் சொத்து மதிப்பு $10 லட்சத்தை (சுமார் ரூ 6 கோடி) தாண்டியிருக்கிறது. சாதாரண மக்களின் கட்சி என்று கருதப்படும் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள், பணக்காரர்களின் கட்சியான குடியரசுக் கட்சி உறுப்பினர்களை விட சிறிதளவு அதிக சொத்து மதிப்பு கொண்டிருக்கின்றனர். ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களில் பாதிக்கு மேற்பட்டவர்களின் வருமானம் $10.4 லட்சமாகவும், குடியரசுக் கட்சி உறுப்பினர்களில் பாதிக்கு மேற்பட்டவர்களின் வருமானம் $10 லட்சமாகவும் உள்ளது.

அமெரிக்க மேலவையின் 100 உறுப்பினர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் $27 லட்சத்துக்கும் அதிகமான சொத்துக்களை வைத்திருக்கின்றனர். கீழவையான பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களில் சரிபாதி எண்ணிக்கையினரின் சொத்து மதிப்பு $8.96 லட்சத்தை விட அதிகமாக உள்ளது.

குடியரசுக் கட்சியைச் சேர்ந்த கீழவை உறுப்பினர் டாரல் இசா, $59.8 கோடி (சுமார் ரூ 3,588 கோடி) மதிப்பிலான சொத்துக்களுடன் இந்த பணக்காரர்களின் கிளப்பில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.

அமெரிக்க கார்ப்பரேட்டுகளுக்கும், உலகளாவிய நிதி நிறுவனங்களுக்கும் சேவை செய்யும் பணியில் தம்மையும் பணக்காரர்களாக்கிக் கொண்டுள்ள இந்த மேட்டுக்குடி கிளப்புகளின் உறுப்பினர்கள் 26 வாரங்களுக்கு மேல் வேலை கிடைக்காமல் திண்டாடும் சராசரி அமெரிக்கர்களுக்கு உதவித் தொகை வழங்குவதை நீட்டிக்கும் திட்டத்தை காலாவதி ஆக விட்டிருக்கின்றனர். டிசம்பர் இறுதியில் இந்த நீட்டிப்பு காலாவதியானதை அடுத்து, சுமார் 14 லட்சம் அமெரிக்கர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித் தொகை (சராசரியாக ஒரு வாரத்துக்கு சுமார் $300) ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

அமெரிக்காவில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய நிதித் துறை நெருக்கடியினால் லட்சக்கணக்கான மக்கள் வேலைகளை இழந்தனர். வேலை இழந்த ஒருவர் புதிய வேலையைத் தேடி அமர்வதற்கு 35 வாரங்கள் ஆகின்றன என்று புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், ஊழியர்களின் பங்களிப்பின் அடிப்படையிலான வேலையில்லாதோர் உதவித் தொகை 26 வாரங்கள் வரைதான் கொடுக்கப்படும். அதற்கு மேலும் வேலை கிடைக்காதவர்களின் அடிப்படை வாழ்க்கை தேவைகளுக்காகவும், வேலை தேடும் முயற்சிக்காகவும் உதவித் தொகை வழங்கும் கால கட்டத்தை நீட்டிப்பதைத்தான் இப்போது காலாவதியாக விட்டிருக்கின்றனர் இந்த மில்லியனர்கள்.

வேலை தேடும் அமெரிக்கர்கள்
வேலை தேடும் அமெரிக்கர்கள்

இதனால் சுமார் 14 லட்சம் அமெரிக்கர்கள் எந்த வருமானமும் இல்லாத நிலையில் விடப்படுவார்கள். ஏற்கனவே சூப் கிச்சன் எனப்படும் கஞ்சித் தொட்டிகளை சார்ந்து வாழும் 4.7 கோடி அமெரிக்கர்களின் (அமெரிக்காவின் மொத்த மக்கள்  தொகை சுமார் 31 கோடி) வரிசையில் இவர்களும் சேர்ந்து விடுவார்கள். வேலையில்லாதோருக்கான உதவித் தொகை கால நீட்டிப்பு புதுப்பிக்கப்படா விட்டால் 2014-க்குள் மொத்தம் 49 லட்சம் பேர் கூடுதலாக ஏழைகளின் வரிசையில் சேர்ந்து விடுவார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இவர்களில் இளைஞர்கள், திருமணமாகி குழந்தைகளுடன் வாழ்பவர்கள், முதியவர்கள் என அனைத்து வயது தரப்பினரும், பட்டதாரிகள், பள்ளிப் படிப்பை முடிக்காதவர்கள் என்று பல வகை கல்வித் தகுதி கொண்டவர்களும் உள்ளனர். வேலையில்லாதவர்கள் மத்தியில் மருத்துவ பிரச்சனைகள், தற்கொலைகள், குடும்பப் பிரச்சனைகள் ஆகியவற்றின் வீதம் அதிகரித்து வருகிறது.

இந்த உதவித் தொகையை நீட்டிப்பதன் மூலம் ஆண்டுக்கு $25 பில்லியன் கூடுதல் செலவாகும். இந்தச் செலவை ஈடு கட்ட முதியோர், ஏழைகளுக்கான மருத்துவ உதவி முதலான மற்ற மக்கள் நலத் திட்டங்களில் வெட்டு செய்ய வேண்டும் என்று குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் பிடிவாதம் பிடிக்கின்றனர்.

இதே நாடாளுமன்றம் 2009-ம் ஆண்டு வங்கிகளையும், நிதி நிறுவனங்களையும் முழுகி விடாமல் காப்பாற்றுவதற்கு வாரி வழங்கிய லட்சம் கோடி கணக்கிலான டாலர்களுக்கான வட்டிச் சுமை மட்டுமே ஒவ்வொரு ஆண்டும் $200 பில்லியனைத் தாண்டுகிறது. ஆனால், அமெரிக்க முதலாளித்துவத்தின் சாதனையாக வேலை இழந்து திண்டாடும் மக்களுக்கான உதவித் தொகையாக $25 பில்லியன் ஒதுக்க மறுத்து அவர்களையும் தெருவுக்கு அனுப்பியிருக்கின்றனர் அமெரிக்காவை ஆளும் மில்லியனர் நாடாளுமன்ற உறுப்பினர்கள்.

மேலும் படிக்க