privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகலைகதைசிறுகதை: பணிவின் பாடு

சிறுகதை: பணிவின் பாடு

-

“மாடா, சீனு சார் வரலியாடே” மெய்கண்ட மூர்த்தியின் குரல் திணறலாக வெளிப்பட்டது.

அப்படியொரு நிலையில் இப்படியொரு கேள்வியை நான் எதிர்பார்க்கவில்லை.

ஏனெனில் மெய்கண்டன் படுக்கையில் கிடத்தப்பட்டிருந்தான். ஆடைகள் களையப்பட்டு மேலிருந்து கீழ் வரை ஒன்று போலத் தைக்கப்பட்டிருந்த தொள தொளப்பான அங்கி ஒன்றை அணிவித்திருந்தனர். கொஞ்சம் பருத்த உடல் அந்த அங்கியினுள் அடங்கி பெரும் துணி மூட்டை போலக் கிடந்தான். கண்ணில் நீர் வழிந்து கொண்டிருந்தது. அது விபத்து மற்றும் அவசரகால சிகிச்சைகளுக்குப் புகழ்பெற்ற தனியார் மருத்துவமனை.

மெய்கண்டன் மிக மோசமான விபத்தில் சிக்கியிருந்தான். மதியம் மூன்று மணிக்கு விபத்து நடந்திருக்கிறது. மூன்றரை மணிக்கு சுடலைமுத்து ஓடிச் சென்று மெய்கண்டனை மருத்துவமனைக்குத் தூக்கி வந்திருக்கிறான். ஐந்தரை மணி நேரங்களாக இந்த அங்கியை அணிவித்ததைத் தவிர வேறு மருத்துவம் ஏதும் நடந்திருக்கவில்லை. நானும் சுடலையும் அந்த மருத்துவமனையின் எல்லாக் கதவுகளையும் தட்டித் தீர்த்து விட்டோம். கடைசியாக அப்போது தான் வந்திருந்த தலைமை மருத்துவரின் காலையாவது பிடித்து கெஞ்சிப் பார்த்து விடலாம் என்று கிளம்பிய போது தான் மெய்கண்டன் மேற்படிக் கேள்வியைக் கேட்டான்.

”மெய்கண்டா, முதல்ல வைத்தியம் பாத்துக்கிடுவோம்டே. எவம் வந்தான் வரலைன்னு பொறவு கணக்கெடுப்போம்” முடிந்த வரை ஆத்திரம் தலை காட்டாமல் பதில் சொல்லி விட்டுத் திரும்பிப் பார்க்காமல் மருத்துவரின் அறைக்கு நானும் சுடலையும் விரைந்தோம்.

”சார், இது மெடிக்கல் இன்சுரன்ஸ் கேசுங்க. டி.டி.கே காரன் இன்னும் எக்ஸ்பெண்டிச்சர் அப்ரூவல் கொடுக்கல்லே. நாங்க என்னா செய்ய முடியும் சொல்லுங்க? நீங்க எங்க கிட்ட கோபப்படறதிலே அர்த்தமே இல்ல சார்” நாற்பத்தைந்து வயது வெள்ளைப் பூசணிக்காய் ஸ்டெத்தஸ் கோப்பை நிரடிக் கொண்டே சாவகாசமாய் பதில் சொன்னது. மருத்துவமனையின் மற்ற துணைக் கிரகங்கள் இந்த காரணத்தை இதுவரை சொல்லாமலே காலம் கடத்தியிருக்கிறார்கள்.

காப்பீட்டு நிறுவனத்தின் ஒப்புதலுக்கு காத்திருக்கத் தேவையில்லையென்றும், மருத்துவ செலவுகளுக்கு கையிலிருந்தே பணம் கட்டி விடுவோமென்றும் சொல்லி அவர்களை ஏற்கச் செய்வதற்கு ஒரு மணி நேரம் கோபம், கெஞ்சல், இறைஞ்சல், வேண்டல் என்று நவரசங்களையும் பிரயோகிக்க வேண்டியிருந்தது. இறுதியாக ஒப்புக் கொண்டனர். முன்பணத்தையும் கறாராக பெற்றுக் கொண்டனர். எக்ஸ்ரே அறைக்குள் எடுத்துச் செல்லும் முன் மெய்கண்டன் மீண்டும் ஒரு முறை அதே கேள்வியைக் கேட்டான்.

“மாடா, சீனு சார் வரலியாடே” நாங்கள் பதில் சொல்லவில்லை.

ஒரு மணி நேரம் கழித்து ஸ்கேன் முடிவுகள் வந்தது. மெய்கண்ட மூர்த்தியின் உடலில் மொத்தம் மூன்று எலும்பு முறிவுகள் ஏற்பட்டிருந்தன. கெண்டைக்கால் எலும்பில் முழங்காலின் வெளி எலும்பு பொருந்தும் இடம் நொறுங்கியிருந்தது. முழங்காலின் முன்னெலும்பு நடு மையத்தில் உடைந்திருந்தது. இவை இரண்டும் போக கை மணிக்கட்டில் ஒரு மயிரளவு கீறல் ஏற்பட்டிருந்தது. கையிலும் முழங்காலிலும் மாவுக் காட்டுப் போடப் போவதாகவும், கெண்டைக்காலில் உலோகத் தகடு பொருத்த வேண்டுமென்றும் மருத்துவர் விளக்கினார். அறுவை சிகிச்சை அறைக்கு எடுத்துச் செல்லும் வழியில் மீண்டும் ஒரு முறை அதே கேள்வியைக் கேட்டான்.

“மாடா, சீனு சார் வரலியாடே” அறைக்குள் மெய்கண்டன் எடுத்துச் செல்லப்படும் வரை அடக்கிக் கொண்டிருந்த சுடலை வெடித்து விட்டான்,

”சவத்த அந்தால கெடந்து அழுந்தட்டும்னு போட்டுட்டு போயிருவமாடே? நம்மளை கோட்டிப்பயலுவன்னி நினைச்சிகிட்டு இருக்கானோ. நாம இங்க கூட கெடந்து லோல் பட்டுகிட்டு இருக்கோம், இவன் என்னடான்னா வராத ஆள விசாரிக்கான்”

’சீனு சார்’ என்று மெய்கண்டனால் பயபக்தியோடு அழைக்கப்பட்டவர் எங்கள் நிறுவனத்தின் கிளை மேலாளர். சுடலையும் மெய்கண்டனும் எனது பால்ய கால நண்பர்கள். இத்தனை வருடங்களாக ஒன்றாகப் பழகியும் மெய்கண்டனின் குணத்தை சுடலையால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. மெய்கண்டன் கட்டுப் போட்டு வரும் வரை பழைய கதைகள் சிலவற்றைச் சொல்கிறேன், உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா பாருங்கள்.

விசுவாசம்அப்போது நாங்கள் திசையன்விளை செயின்ட் சேவியர்சில் பத்தாம் வகுப்பு முடித்து விட்டு நெல்லை அரசு பாலிடெக்னிக்கில் மின்னணுவியல் பிரிவில் சேர்ந்தோம். நான் கண்டித்தான் குளத்திலிருந்த பாட்டி வீட்டிலும், மெய்கண்டன் பேட்டையில் இருந்த அவன் அத்தை வீட்டிலும் தங்கி கல்லூரிக்கு சென்று வந்தோம். மெய்கண்ட மூர்த்தி நல்லவன் என்பதால் நண்பர்கள் குறைவு. அவனும் அனாவசியமாக யாரோடும் பேச்சு வழக்கு வைத்துக் கொள்ள மாட்டான். என்னோடு மட்டுமே அவனுக்குப் பழக்கம் இருந்தது. அதுவும் படிப்பு சம்பந்தமாகவும், படித்த பின் பார்க்கப் போகும் வேலை சம்பந்தமாகவுமே இருக்கும். பள்ளியைப் போன்றே கல்லூரியிலும் அவன் வாத்தியார்களுக்குப் பிடித்த மாணவனாய் இருந்தான்.

அப்போது வரதராஜ பெருமாள் என்று ஒரு விரிவுரையாளர் இருந்தார். அவருக்கு மட்டுமே விளங்கும் வகையில் ஆங்கிலம் பேசக் கூடியவர். வகுப்பின் பெரும்பான்மை மாணவர்கள் தமிழ் வழியில் படித்து வந்தவர்கள். அவர் பேசும் ஆங்கிலம் வெள்ளைக்காரனுக்கே புரியாத போது எங்களுக்கு மட்டும் எப்படிப் புரியும் சொல்லுங்கள்? அதனால் தான் அவரை மாற்ற வேண்டும் என்று கோரி நாங்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட முடிவு செய்தோம். மொத்தம் நாற்பது பேரில் 25 மாணவர்கள் 15 மாணவிகள். மாணவர்களை ஒருங்கிணைக்கும் வேலையை நானும், மாணவிகளிடம் பேசி சம்மதிக்க வைக்கும் வேலையை சுடலை முத்துவும் எடுத்துக் கொண்டோம். மெக்கானிக்கலும் சிவிலும் எங்களுக்கு ஆதரவாக வந்து நின்றனர். நாற்பதில் முப்பத்தொன்பது பேர் வகுப்புகளுக்குச் செல்லவில்லை. நீங்கள் நினைத்தது சரி தான்; மெய்கண்ட மூர்த்தி மட்டும் தவறாமல் வகுப்புகளுக்குச் சென்றான்.

போராட்டத்தின் மூன்றாம் நாள் கல்லூரி முதல்வர் மாணவர்களிடையே பேச முன்வந்தார்.

“படிக்கிற காலத்திலேயே ஆர்பாட்டம், போராட்டம்னு நீங்க எல்லாம் எங்க உருப்படப் போறீங்க? வரது சார் பேசறது புரியலைன்னு இதுவரைக்கும் யாரும் சொன்னதில்லே. வெட்டியா கிளாஸை கட் அடிச்சிட்டு ஊர் சுத்த உங்களுக்கு இந்த காரணம் தான் கிடைச்சதா?”

“சார்.. அவெம் வாக்குள்ளே என்னத்தையோ போட்டு மென்னுகிட்டே பேசுதான் சார்” “சார், வரது ஐய்யரு பான்பராக் திங்காரு சார்” “குடிச்சிட்டு வாரான் சார்” “மூப்பனாரு கெணங்கா பேசுதாம் சார்” அமைதியாய் இருந்த கூட்டத்தில் இருந்து மர்மக் குரல்கள் திடீரெனக் கிளம்பின.

“எவம்லே அது..  சண்டியரு. வாலே முன்னாடி. நான் ரவுடிக்கு ரவுடி தெரியுமாலே” வேறு வழியின்றி முதல்வரும் எங்கள் தரத்துக்கு இறங்கி விட்டார்.

“யேலேய்.. வெளியே வாடே சொட்ட தலையா” இன்னொரு முனையிலிருந்து இன்னொரு மர்மக் குரல். முதல்வர் பதிலுக்கு ஏதோ கத்த, மாணவர்களிடையே இருந்து கூச்சல் கிளம்பியது. ‘சொட்ட மண்ட பிரின்ஸி டவுன் டவுன்’ ‘பனை மரத்துல வவ்வாலா எலக்ஸுக்கே* சவ்வாலா’ – பேச்சுவார்த்தைக் கூட்டத்தின் வெப்பம் கட்டுப்படுத்தவியலாத படிக்கு அதிகரித்துக் கொண்டே சென்றது. (*எலக்ஸ் – எலக்ட்ரானிஸ்/ மின்னணுவியல் துறை)

துறைத் தலைவர் குறுக்கிட்டார். அவர் கொஞ்சம் குயுக்தியானவர்.

“யேய் சைலன்ட்டா இருங்கப்பா.. வரது சார் கிளாஸ் எடுக்கது புரியலையா, நீங்க படிக்க லாயக்கில்லாத சல்லிப் பயலுவலான்னி இப்ப தெரியும் பாருங்க. தம்பி மெய்கண்ட மூர்த்தி, நீ இவங்களோட சேராம வகுப்பு வந்திட்டு இருக்கியே, உனக்கு வரது சார் பேசறது புரியுதா?” மெய்கண்டன் வாத்தியார்களுக்குப் பின்னிருந்து உதயமானான்.

“யெஸ் சார்…”

“வரது சாரை கண்டிப்பா மாத்தணுமோடே?”

“நோ சார்…” அவ்வளவு பவ்யமான குரல்.

மெய்கண்டனைத் தொடர்ந்து மாணவர் கூட்டத்திலிருந்த கோகிலா மருண்டபடியே சுடலையைப் பார்த்துக் கொண்டு எழுந்தாள் “சார் எனக்கும் புரியுது சார்…”. கோகிலாவைத் தொடர்ந்து சண்முகப்பிரியா; சண்முகப்பிரியாவைத் தொடர்ந்து வசந்தி. துறைத்தலைவரின் முகத்தில் ஒரு வில்லங்கப் புன்னகை வந்து அமர்ந்தது.

“யாருக்கெல்லாம் வரது சார் க்ளாஸ் புரியுதோ அவங்க எல்லாம் வகுப்புக்குப் போகலாம். ஸ்ட்ரைக் நடத்தினதுக்காக நடவடிக்கை எடுக்க மாட்டோம்”  நாங்கள் நண்பர்கள் பதினைந்து பேர் மட்டும் தனியே நின்றோம்.

“தெரியும்லெ உங்க பவுசு.. உங்களுக்குள்ளேயே ஒத்துமை இல்லே. சுத்த தயிர் வடை பயலுவோ” மெக்கானிக்கலும் சிவிலும் கலைந்து சென்றனர். அன்று மாலை இரண்டு வார இடை நீக்க உத்தரவோடு நாயர் டீ கடை மறைவில் விழித்துக் கொண்டு அமர்ந்திருந்தோம்.

‘சவத்த மென்னியத் திருவி கொன்னு போடலாம்டே அந்த துரோகிய’ – சுடலைமுத்து நிலையாய் நின்றான். மெய்கண்டனை வெளுத்து விடுவது என்பதில் எல்லோருக்கும் ஒத்த கருத்து இருந்தது. சில பில்டர் கோல்டுகள் புகையான பின் அமைதியாயினர்.

“ஏம்ல கால வாரி விட்ட?” பிரச்சினை ஓய்ந்து ஒருவாரம் கழித்து மெய்கண்டனிடம் கேட்டேன்.

”ரிக்கார்டு நோட் மார்க்லயும் இண்டர்னல் மார்க்லயும் கை வச்சிட்டா பொறவு வேலைக்குப் போவ முடியாதுல்லா?”

அவனும் தமிழ்வழியில் படித்தவன் தான். அவனுக்கும் புரியவில்லை தான். என்றாலும், வகுப்பில் விரிவுரையாளர்கள் ஆங்கிலத்தில் பேசுவதை அப்படியே தமிழில் எழுதி வைத்து மனப்பாடம் செய்வதாக சொன்னான். அந்த நோட்டுகளையும் காட்டினான். ‘டையோடு வில் அல்லோவ் எலக்ட்ரிக் கரன்ட் டு பாஸ் இன் ஒன் டைரக்சன். டையோடு வில் ப்லாக் எலக்ட்ரிக் கரன்ட் டு பாஸ் இன் ஆப்போசிட் டைரக்சன்…’ – இந்த பாணியில் அந்த நோட்டு முழுக்க தமிங்கிலத்தில் குறிப்புகள்!

மெய்கண்ட மூர்த்தி அவன் தந்தையால் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டவன். மெய்கண்டனின் அப்பா திருநீலகண்டர் போஸ்ட்மேனாக இருந்தார். மூன்று வயதில் நாங்கள் துள்ளுப் புட்டான்களைப் பிடித்து ஆராய்ச்சிக்கு உட்படுத்திக் கொண்டிருந்த போது மெய்கண்டன் தன் அப்பாவோடு சதுரங்கம் ஆடிக் கொண்டிருந்தான். நாங்கள் தெருவில் பிள்ளைகளோடு ‘ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்துச்சாம்’ என்று சொல்லிக் கொண்டிருந்த போது மெய்கண்டன் நெற்றி நிறைய நீறு பூசி “பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை அணிந்தவனே” என்று சுந்தரமூர்த்தி நாயனாரோடு உறவாடிக் கொண்டிருப்பான்

திருநீலகண்டர் தன் பிள்ளைகளை நல்ல விசுவாசம் மிக்கவர்களாகவும் கீழ்படிதல் குணம் கொண்டவர்களாகவும் வளர்த்தார்; என்றாலும் அவர்களுக்கு வெளியிலிருந்து திணிக்கப்பட்ட குணங்களை வரித்துக் கொண்டதற்கு தம்மளவிலேயே காரியவாத நோக்கங்கள் இருந்தன. ’நல்லவனாக’ இருந்ததன் பலனாக மெய்கண்டனின் செய்முறைத் தேர்வு மதிப்பெண்கள் தொண்ணூறுகளில் இருக்கும்; நாங்களோ நாற்பது மதிப்பெண்கள் எடுக்கவே திணறினோம். படிப்பு முடித்ததும் வளாகத் தேர்வில் எங்கள் மூவருக்கும் ஒரே நிறுவனத்தில் வேலை கிடைத்தது.

விசுவாசம்
“ஒன்னோட விசுவாசத்தை நாங்க பாராட்டாம இல்லை…”

சென்னையில் இயங்கி வந்த மேசைக் கணினிகள் தயாரித்து விற்கும் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவைப் பிரிவில் வேலை. அந்தப் பிரிவில் எங்களையும் சேர்த்து மொத்தம் பத்து பேர். தினசரி வாடிக்கையாளர்களிடம் இருந்து கணினியில் ஏற்பட்டுள்ள கோளாறுகள் குறித்த புகார்கள் தொலைபேசி வழியே வரும். நாங்கள் நேரில் சென்று திருத்திக் கொடுக்க வேண்டும்.

வாடிக்கையாளர்களிடமிருந்து எந்த நேரத்திலும் அழைப்பு வரக்கூடும். கணினியில் ஏற்பட்டுள்ள கோளாறின் தன்மையைப் பொறுத்து சில நாட்கள் இரவில் கூட பணிபுரிய நேரிடும். அலுவலகத்தைக் கோயிலாகவும், மேலாளரை பூசாரியாகவும், முதலாளியைத் தெய்வமாகவும் பாவித்தான் மெய்கண்டன். மற்றவர்கள் ஒரு நாளைக்கு ஆறு வாடிக்கையாளர்களைச் சந்தித்தார்கள் என்றால் மெய்கண்டன் பத்து பேரைச் சந்தித்தான்.

ஒரு வாடிக்கையாளரைச் நேரில் சந்திக்க சென்னை நகரத்தின் அடர்த்தியான போக்குவரத்து நெரிசலில் பத்து கிலோ மீட்டர்களாவது பைக்கில் பயணிக்க வேண்டியிருக்கும். மெய்கண்டன் சராசரியாக ஒவ்வொரு நாளும் நூற்றி இருபது கிலோமீட்டர்கள் சென்னை நகரத்துக்குள் அலைந்தான்.

இரவு வேலை செய்தால் தொடர்ந்து வரும் பகலில் அரை நாள் விடுப்பு எடுத்துக் கொள்ளவும் வார இறுதியில் வேலை பார்த்தால் அதற்கு ஈடாக வார நாளில் சம்பளத்துடன் கூடிய விடுப்பு எடுத்துக் கொள்ளவும் சலுகைகள் இருந்தன. வேலை தொடர்பான இரவு நேர பயணங்களுக்கும், நகரத்துக்கு வெளியே நூறு கிலோமீட்டர்களுக்கு மேல் பயணிக்க வேண்டும் என்றாலும் கம்பெனி செலவில் வாடகை கார் அமர்த்திக் கொள்ளலாம் என்று விதிகள் இருந்தன. இவையெதையும் அவன் பயன்படுத்திக் கொள்ள மாட்டான்.

முதலாளியின் மனம் கோணாமல் நடப்பது என்று மெய்கண்டன் விரதம் பூண்டிருந்தான். அவன் விசுவாசத்தின் பாரத்தை நாங்கள் சுமந்தோம். சலுகைகள் ஒவ்வொன்றாக வெட்டப்பட்ட போது மெய்கண்டனை முன்னுதாரணமாகக் காட்டினர். இன்று சிரீபெரும்புதூருக்கு பைக்கிலேயே வாடிக்கையாளரைச் சந்திக்க சென்று கொண்டிருந்த வழியில் தான் விபத்தில் சிக்கிக் கொண்டான்.

“மாடா, சீனு சார் வரலியாடே” – மெய்கண்டனின் குரல் எனது நினைவுகளைக் கலைத்து நிகழ்காலத்துக்கு இழுத்து வந்தது. அன்று சீனு சார் வரவேயில்லை. அன்று மட்டுமல்ல, தொடர்ந்த நாட்களிலும் அவர் நேரில் வந்து விசாரிக்கவேயில்லை. மெய்கண்டன் மிகவும் வருத்தப்பட்டான். ஒரு வாரம் கழித்து தொலைபேசிய சீனு சார், மீண்டும் எப்போது வேலைக்குத் திரும்புவாய் என்று கேட்டு விட்டு வேறு விசாரணைகள் இன்றி கத்தரித்து விட்டாராம்.

மெய்கண்டன் சீக்கிரமே வேலைக்குத் திரும்பி விட்டான். ஒன்றரை மாதங்களாவது படுக்கையில் ஓய்வாக இருக்க வேண்டுமென்றும், தொடர்ந்து ஒரு மாதங்கள் வீட்டுக்குள்ளேயே நடந்து பழக வேண்டுமென்றும் அப்புறம் தான் வழக்கமான வேலைகளில் ஈடுபட வேண்டுமென்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தனர். எனினும், இரண்டே மாதத்தில் வேலைக்குத் திரும்பி விட்டான்.

”மெடிக்கல் லீவுல இருந்து கம்பேனி காச திங்க மனசு ஒப்பல்லெ மக்கா”  ‘சீனு சாரின்’ காதில் விழும்படிக்கு எங்களிடம் சொல்லிக் கொண்டான்.

மெய்கண்டனுக்கு இயல்பிலேயே பருத்த உடல். அதிலும் இரண்டு மாதங்கள் நடமாட்டம் இன்றி போஷாக்கான உணவுகளைத் தின்றதில் இன்னும் கொஞ்சம் பருத்திருந்தான். திடீரென்று கூடிய எடையை உடைந்த கால்களால் சுமந்து நடக்க மிகவும் சிரமப்பட்டான்.

”மெய்கண்டா, நீ நேர்ல போயி சர்வீஸ் செய்யாண்டாம்லே, ஆபீஸ்ல இருந்து கிட்டு போன்ல பேசி சரி செய்யக் கூடிய வேலைய மட்டும் பார்த்துகிடு. மற்றத நாங்க பார்த்துகிடுதோம்” சுடலை கொஞ்சம் முன்கோபக்காரன்  என்றாலும் மற்றவர்களுக்காக கவலைப்படுபவன். மெய்கண்டனின் மேலான உண்மையான பரிவில் தான் இதைச் சொன்னான். எங்கள் உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த சீனு சார் உள்ளே நுழைந்தார்

“வாட் மெய், ஆர் யூ கோயிங் டு சிட் சிம்ப்ளி இன் ஆபீஸ்? உன்னாலே வேலை பார்க்காம இருக்க முடியாதேப்பா”

”நோ சார். கால் வலி அவ்வளவா இல்ல சார். நான் பீல்டுக்கு போய் வேலை பார்க்க முடியும் சார்” மெய்கண்டன் ஒரு பாராட்டுதலை எதிர்பார்த்தான்.

“அப்ப, நீ என்ன செய்யிறே எண்ணூர் அசோக் லேலண்ட்ல ஒரு ப்ராப்ளம் ரிப்போர்ட் பண்ணிருக்காங்க போய் என்னான்னு பார்த்துட்டு வந்துடு” என்ற சீனு சார், சுடலையைப் பார்த்து “உங்க வேலையை மட்டும் பாருங்க” என்று சொல்லி விட்டு நறுக்கென்று திரும்பிக் கொண்டார்.

சுடலை ஆத்திரத்தோடு என்னைப் பார்க்கத் திரும்பினான். ஒரே தெருக்காரன் என்பதால் எல்லா நேரமும் நானே அணை போட வேண்டியிருப்பது ஒரு கொடுமை, “சரி சுடலை, அவனைப் பத்தித் தான் தெரியும்லா. நீ சும்மா ஆவுதாலி சொல்லிட்டு கிடக்காம விடு” முகம் பார்க்காமல் கிசுகிசுத்து விட்டு அகன்றேன்.

சரியாக ஒரே மாதம். மெய்கண்டனின் காலில் லேசாக வலி கூட ஆரம்பித்தது. நன்றாக நடந்தவன் கொஞ்சம் தாங்கித் தாங்கி நடக்க ஆரம்பித்தான். படிக்கட்டுகளில் நின்று நின்று ஏறினான். நாளாக நாளாக அவனது கெண்டைக் கால் உடைந்த இடத்தில் ஒரு வீக்கம் தோன்ற ஆரம்பித்தது. என்றாலும் அனைத்தையும் சமாளித்துக் கொண்டு பழையபடி ஓடியாடி வேலைபார்த்துக் கொண்டிருந்தான்.

அந்தச் சமயம் ஆவடி டாங்கி தொழிற்சாலைக்கு இருநூறு கணினிகள் சப்ளை செய்திருந்தோம். அவைகளை கூரியர் நிறுவனத்திற்கு வழக்கமாக கொடுக்கும் தொகையை எங்கள் நிறுவனம் இந்த முறை குறைத்துக் கொடுத்ததால் அவர்கள் கடுப்பில் தொழிற்சாலையின் முன்பாக கணினிகளை இறக்கி வைத்து விட்டுச் சென்று விட்டனர். இருநூறு கணினிகளுக்கு நானூறு பெட்டிகள். சில பாரம் சுமக்கும் தொழிலாளிகளோடு நாங்கள் இருவர் நேரடியாகச் சென்று எல்லா பெட்டிகளையும் உள்ளே எடுத்துச் செல்லக் கிளம்பினோம். மெய்கண்டனும் எங்களோடு ஒட்டிக் கொண்டான்.

”இன்னும் தாங்கித் தாங்கி தானே நடந்திட்டிருக்கா, நீ வராண்டாம் நாங்களே பாத்துக்கிடுதோம்” சுடலைக்கு மீண்டும் அவன் மேல் பரிவு பிறந்திருந்தது.

“இல்ல நானும் வாரேன், ஒரு லோடு மேனை நிப்பாடிக்கிடுவோம். ஓராளு கூலி மிச்சம் தானே” வழக்கம் போல சீனு சாரின் காதில் படும் படிக்கு எங்களிடம் சொன்னான்.

”யேல கோட்டிப் பயலே, முன்னயே ஆளு சொல்லியாச்சிடே. இப்பம் கூப்பிட்டு ஓராளை மட்டும் நிப்பாட்ட முடியுமா. கம்பேனி காசு தானேலெ உன் கைக்காசா போவுது. நீ சும்மா கெட, நாங்க பாத்துகிடுவோம்” சுடலையின் பதிலுக்கு உள்ளிருந்து சீனு சாரின் குரல் வந்தது.

“ஹலோ, இந்த ஆர்டர்ல ஏற்கனவே நமக்கு மார்ஜின் கம்மி. இதுல லோட் மேனுக்கு வேற தனியா அழணுமா. பேசாம லோடு மேன்களை மொத்தமா வேணாம்னு சொல்லிடுங்க. நம்ம என்ஜினியர்ஸ் எல்லாரும் போய் கன்சைன்மெண்டை உள்ளே சேர்த்துட்டு வாங்க. மெய்கண்டனைத் தவிர வேற யாருக்கும் காஸ்ட் எபக்டிவா யோசிக்கவே தெரியாதா?”

சுடலை கொலை வெறியாகி விட்டான். அவன் மட்டுமல்ல, மற்ற பொறியாளர்களும் தான். அன்று மதியம் வரை குறைவான நொண்டல்களோடு பெட்டிகளை சுமந்து கொண்டிருந்த மெய்கண்டன், உணவு வேளைக்கு சற்று முன்பாக திடீரென்று சரிந்து விழுந்தான். நானும் சுடலையும் ஓடிச் சென்று பார்த்தோம்; அவனது உடைந்த கெண்டைக் கால் எழும்பு ஒரு டென்னிஸ் பந்து அளவுக்கு வீங்கியிருந்தது. பக்கத்திலேயே ஒரு வாடகைக் காரை அமர்த்தி மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றோம்; அதே மருத்துவமனை தான்.

கார்ப்பரேட் லாபம்
“உங்க வீட்டுக்காரர் நிறைய லாபம் சம்பாதிச்சதோட இல்லாம, போனசும், ஓய்வூதியமும் கொடுக்கறதையும் மிச்சப்படுத்திட்டார்”

“உங்களை மூணு மாசம் வரைக்கும் ரெஸ்ட் எடுக்கச் சொல்லியிருந்தேனே. யார் வேலைக்குப் போகச் சொன்னது? படிச்சிருக்கீங்களே கொஞ்சமாவது அறிவு இருக்கா? இப்ப பாருங்க, உள்ளே வச்ச ப்ளேட் வளைஞ்சி நகர்ந்திருக்கு. இப்ப உடனே ஆப்பரேட் பண்ணியாகனும். இல்லேன்னா பர்மனெண்டா காலை எடுக்க வேண்டியிருக்கும். ஒரு நாலஞ்சி மாசத்துக்கு வேலை கீலைக்கு எதையும் யோசிக்க கூடாது” தலைமை மருத்துவர் கொஞ்சம் கோபமாகவே பேசினார். தொடர்ந்து,

“லாஸ்ட் டைம் மெடிக்கல் இன்சுரன்ஸ் க்ளெய்ம் பண்ணி வாங்கிட்டீங்க இல்ல. உங்க லிமிட் எவ்ளோ வச்சிருக்கீங்க” என்று ஒரு கொக்கியும் போட்டு வைத்துக் கொண்டார்.

“சார் நான் இப்பவே அட்மிட் ஆகிக்கறேன்” என்று மருத்துவரிடம் சொன்ன மெய்கண்டன், திரும்பி எங்களிடம் “சீனு சாருக்கு விஷயத்தை சொல்லிடறீங்களா” என்றான்.

சுடலை மறுத்து விடவே, நான் தான் கூப்பிட்டுச் சொன்னேன், “ஓ, அப்படியா” என்பதோடு முடித்துக் கொண்டார்.

அறுவை சிகிச்சை முடிந்து ஒரு வாரம் கழித்து மெய்கண்டனின் அறைக்கு ஆரஞ்சுப் பழங்களோடு சீனு வந்தார்.

“மெய், நீங்க ரெக்கவர் ஆக இன்னும் மூணு மாசம் ஆகுமாமே. அதுக்கு அப்புறமும் உங்களால பழையபடி பீல்டுல வேலை செய்ய முடியாதாமே?” கொஞ்சம் தயக்கமாகவே ஆரம்பித்தார்.

“யெஸ் சார்”

“நீங்க ஏற்கனவே ரெண்டு மாசம் மெடிக்கல் லீவ் எடுத்திருந்தீங்க. இப்ப திரும்ப மூணு மாசம்….”  ஏதோ சொல்ல வந்து இழுத்தார், பின் தொடர்ந்தார்.

“மூணு மாசத்துக்கு அப்புறமும் உங்களால பீல்ட் ஒர்க் பார்க்க முடியாது.. உங்களுக்கே தெரியும் நம்ம கம்பெனி இப்ப முன்ன மாதிரி லாபகரமா நடக்கலை. நிறைய காம்பெடிஷன். உங்களுக்கு ஆபீஸ்லயும் எந்த மாதிரி வேலை குடுக்க முடியும்னு தெரியலை…”

“இல்ல, சார். நான் பீல்டுக்கே திரும்பவும்….” மெய்கண்டன் வரப்போவதை உணர்ந்து விட்டான். அவசரமாக குறுக்கிட முயற்சித்தான் – தொண்டை அடைத்துக் கொண்டது.

”நோ நோ.. நாங்க அந்தளவுக்கு கொடுமையானவங்க இல்லப்பா. எம்.டி கிட்டே இது பத்தி ஏற்கனவே பேசிட்டு தான் வர்றேன். உன்னை திரும்பவும் பீல்டுக்கு அனுப்பி இன்னும் சீரியஸா எதுனா பிரச்சினை வந்துட்டா கம்பனிக்கு தானே கெட்ட பேரு?”

“இல்ல சார்…” மெய்கண்டன் மீண்டும் குறுக்கிட முயற்சித்தான், சீனு அதைக் கத்தரித்தார்.

“இல்ல, அப்படி வந்துடும்னு சொல்லலை, பட் வந்துட்டா சிக்கல் தானே. பெஸ்ட் என்னான்னா, நீங்களே ரெசிக்னேஷன் குடுத்துடுங்க. மூணு மாதம் பேசிக் சாலரியை தந்துடறோம். நீங்க வேறு கம்பெனில கொஞ்சம் ஒக்காந்து வேலை பார்க்கிறா மாதிரி  தேடிக்கங்களேன். புரிஞ்சுக்குவீங்கன்னு நினைக்கிறேன்”

“…..” மெய்கண்டனிடம் மேற்கொண்டு பேச பதில் ஏதும் இல்லை.

“சரி நான் வர்றேன்” ஆரஞ்சுப் பழங்களை வைத்து விட்டு சீனு கிளம்பினார்

மெய்கண்டன் மிகுந்த தயக்கத்தோடு சுடலையின் பக்கமாகத் திரும்பினான், ஆரஞ்சுப் பழங்களைப் பார்த்துக் கொண்டே “எவ்வளவோ சின்சியரா இருந்ததுக்கு கடேசில இவ்வளவு தானாடே?” குரல் அடைத்துக் கொண்டு வந்தது.

“அவ்வளவு தாண்டே” சுடலை உணர்ச்சிகள் எதையும் காட்டாமல் பதில் சொல்லி விட்டு அகன்றான்.

மாடசாமி

  1. கொத்தடிமையாக வேலை செய்தாலும் முதலாளிகளுக்குத் தேவை இல்லையென்றால் ஒரே நொடியில் தூக்கி எறிந்துவிடுவார்கள் என்பதுதான் இன்றைய யதார்த்தம் என்பதற்கு பணிவின் பாடு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.மாடசாமியின் நெல்லை – குமரி மாவட்ட வட்டார வழக்கு அணு பிசகாமல் பதிவு செய்யப்பட்டிருக்கிறது சிறப்பு.வாழ்த்துக்கள்.

  2. “அவ்வளவு தாண்டே” சுடலை உணர்ச்சிகள் எதையும் காட்டாமல் பதில் சொல்லி விட்டு அகன்றான்.

Leave a Reply to ஜெரூ பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க