Tuesday, July 1, 2025
முகப்புசெய்திஒரு வரிச் செய்திகள் – 29/01/2014

ஒரு வரிச் செய்திகள் – 29/01/2014

-

செய்தி: ஐநா மனித உரிமை கவுன்சிலில் வரும் மார்ச் மாதத்தில் இலங்கை சம்பந்தமாக மறுபடியும் தீர்மானம் கொண்டுவர அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இந்த தகவலை அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்தது.

நீதி: நான்காண்டுகளாக இடைவிடாமல் ஓடும் வெற்றிகரமான நாடகம்.
_______

செய்தி: மு.க.ஸ்டாலினை பற்றி மு.க.அழகிரி வெறுக்கத்தக்க வகையில் பேசியதைத் தன்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி உருக்கமாக கூறினார்.

நீதி: கருணாதிக்கு இருப்பது புத்திர சோகமா, ‘பாரம்பரிய’ குடும்ப சொத்தை பிரிப்பதில் உள்ள தலைவலியா?

_______

செய்தி: ஊழல் எதிர்ப்பு மாநாடு நடத்தும் தே.மு.தி.க, ஊழல்வாத கட்சிகளுடன் கூட்டணி வைக்காது என்று பாஜக தமிழக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

நீதி: இதைக் கேட்டு பாஜகவில் மீண்டும் இணைந்த ஊழல் முத்து எடியூரப்பா வெட்கப்படமாட்டாரா?

______

செய்தி:   கேரளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய டி.பி.சந்திரசேகரன் கொலை வழக்கில் மார்க்சிஸ்ட் பிரமுகர்கள் 3 பேர் உள்பட 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மற்றொருவருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

நீதி: போலிக் கம்யூனிஸ்டுகளின் கட்சி பலம் ரவுடித்தனம்தான் என்பதை நிரூபித்த வழக்கு.
_______

செய்தி: மக்களவைத் தேர்தலில் செல் போன், இணையதளம் மூலம் ஹைடெக் பிரச்சாரத்தில் ஈடு பட அதிமுகவின் இளைஞர்- இளம்பெண் பாசறை தயார் படுத்தப்படுகிறது.

நீதி: ‘அம்மா’ காலில் விழுவதற்கு இந்த ஹைடெக் பிரச்சாரத்தில் என்ன ஏற்பாடு?
______

செய்தி: “நம் நாட்டில் பின்பற்றப்படும் ஆங்கில கல்வி முறை பயனற்றது. இந்த கல்வி முறையில் படிக்கும் இளைஞர்களுக்கு, சமுதாய பொறுப்புணர்வு வருவதில்லை. வேலை தேடுவதற்கான கல்வியாகவே இது உள்ளது. ‘’- மோகன் பாகவத், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் தலைவர்

நீதி: தில் இருந்தால் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் ஆங்கில கல்வி கற்க கூடாது என்று மோகன்சீ உத்திரவு போடத் தயாரா?
_______

செய்தி: வாரிசு அரசியலை நான் எதிர்க்கிறேன். காங்கிரசில் மட்டுமல்ல, தி.மு.க., சமாஜ்வாடி, பா.ஜ., ஆகிய கட்சிகளிலும் வாரிசு அரசியல் உள்ளது – ராகுல் காந்தி.

நீதி: வாரிசு அரசியலை துவக்கி வைத்ததே நேரு பரம்பரைதான் என்பதால், தான் மல்லாக்க படுத்தவாறு துப்புவது ராகுல் காந்திக்கு தெரியும்.
_______

செய்தி: குஜராத் கலவரம் குறித்து, மோடி மீது காங்., துணை தலைவர் ராகுல் சுமத்திய குற்றச்சாட்டிற்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய பா.ஜ., முக்கிய தலைவர்களில் ஒருவரான அருண் ஜெட்லி, ‘ராகுலுக்கு சரித்திரம் தெரியாது,’ என்றார்.

நீதி: காவிக் கும்பல் புனையும் ‘வரலாறு’ தெரியாமல் இருப்பதே வரலாறுக்கு செய்யப்படும் மரியாதை என்பது ஜெட்லிக்கு தெரியாதா?
_______

செய்தி: கடந்த 1984-ம் ஆண்டு, சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரத்திற்கும், 1989-ம் ஆண்டு, பகல்பூரில் நடந்த கலவரத்திற்கும் காங்கிரஸ் கட்சியே காரணம். அதுபோல, 2002-ம் ஆண்டு குஜராத் கலவரத்திற்கு பா.ஜ., காரணம் என, பீகார் முதல்வர் நிதிஷ்குமார் குற்றம் சாட்டி உள்ளார்.

செய்தி: இரண்டு கட்சிகளோடு மாறி மாறி கூட்டணி வைக்கும் போது கலவர காரணம் பரணில் படுத்துறங்குமோ?
________

செய்தி: நாட்டிற்காக உயிர் நீத்த வீரர்களுக்காக காஙகிரஸ் அரசு, ஒரு போர் நினைவுச் சின்னத்தை இதுவரை ஏற்படுத்தவில்லை. போரில் உயிர் நீத்த வீரர்களின் தியாகத்தை கவுரவிப்பதற்காக அமைக்கப்படும் நினைவுச் சின்னம் இல்லாத ஒரே நாடு இந்தியாதான் என்பது வேதனையான விஷயம் – மோடி

நீதி: வாஜ்பாயி ஆட்சிக்கும் இது பொருந்தும் என்பது கூட இந்த புண்ணாக்கிற்கு புரியவில்லை.
_______

செய்தி: கடைசியாக நடந்த சட்டசபை தேர்தலில், அதிக அளவில் பணம் செலவிடப்பட்ட மாநிலமாக தமிழகம், 35.4 கோடி ரூபாயுடன் முதலிடத்திலும், உத்தர பிரதேசம், 34 கோடி ரூபாயுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளன.

நீதி: தேர்தல், டாஸ்மாக் என்று அம்மா ஆட்சியில் எல்லாமே நம்பர் 1தான்
_______

செய்தி: இந்தியாவில் தற்சமயம் 7.5 கோடி வீடுகளுக்கு மின் இணைப்பே இல்லாத நிலையில்தான் உள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது.மேலும் நாட்டில் உள்ள கிராமங்களில் மின் நுகர்வு மாதத்திற்கு சராசரியாக 8 யூனிட்களும் நகரங்களில் 24 யூனிட்களாக உள்ளதாக ஆய்வில் தெரிவந்திருக்கிறது.

நீதி: இந்த இருட்டு இந்தியாவை ஒளித்துக் கொண்டுதான் வல்லரசு இந்தியாவை காட்டி நாடகம் போடுகிறார்கள்.
_______

செய்தி: மத்திய பிரதேச மாநிலம், ஜபல்பூரில், சர்ச்சை சாமியார் ஆசாராமிற்கு ஒரு ஆசிரமம் உள்ளது. இந்த ஆசிரம கட்டடத்தை இடித்து தள்ள, அங்குள்ள பெதகாட் நகர் பஞ்சாயத்து நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

நீதி: மோடி பக்தனாக இருந்து என்ன பயன் என்று ஆசாராமிற்கு ஆயாசமாம்.
_______

செய்தி: தமிழகத்தில், இந்து சமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில், மொத்தம், 38,481 கோவில்களில் பணியாற்றும் புரோகிதர்கள் பயன்பெறும் வகையில், புத்தொளி பயிற்சி வழங்க, அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, சைவம், வைணவம் ஆகிய பிரிவுகளுக்கு, தனித்தனியாக பயிற்சிகள் வழங்கப்படுகிறது. அதற்காக, மாவட்டந் தோறும் இரண்டு சிறப்பு புரோகிதர்கள் தலைமையில், புத்தொளி பயிற்சி வழங்கப்படுகிறது.

நீதி: கோவில் யானைகளுக்கு புத்துணர்ச்சி முகாம், கோவில் புரோகிதர்களுக்கு புத்தொளி பயிற்சி… பக்தனுக்கு பட்டை நாமம்.
_______

செய்தி: நாட்டிலேயே நவீன ஆயுதங்கள், கட்டமைப்பு மற்றும் பயிற்சி பெற்றதாக திகழ்வது தமிழக போலீஸ் தான்” என, தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

நீதி: அதனால்தான் லாக்கப் கொலைகளில் தமிழகம் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது.
_______

செய்தி: பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியை நாங்கள் ஆதரிக்கிறோம், குஜராத்தில் கிறிஸ்தவ ஆலயங்கள் கட்டுவதற்கு எந்த தடையும் இல்லை என்று கிறிஸ்தவ மத பிரசாகர் மோகன் சி லாசரஸ் கூறினார்.

நீதி: நாலுமாவடி முதலாளி ஏசுவை வைத்து நடத்தும் பிசினெசுக்கு நரேந்திர மோடியின் ஆசிர்வாதம் அவசியம் என்றால் அவருக்கு யார் ஆண்டவர்?
_______

செய்தி: மயிலாடுதுறையை அடுத்த திருக்கடையூர், அபிராமி சமேத அமிர்த கடேஸ்வரர் கோயிலில், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார்- ராதிகா தம்பதி, சரத்குமாரின் 60-வது பிறந்தநாளை ஒட்டி, ஹோமம் வளர்த்து சாமி கும்பிட்டனர்.

நீதி: அறுபது வயசாகியும் ‘அம்மா’ காலில் விழுந்து கிடக்கும் அடிமைத்தனத்தை அபிராமியோ, அமிர்த கடேஸ்வரரோ மாற்ற முடியுமா என்ன?