செய்தி: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகிய மூன்று பேரும் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. இதில், மூவர் தூக்கு தண்டனையை ஆயுளாக குறைக்க மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
நீதி: நிரபராதிகளை தூக்கிடுவதில் உள்ள மூர்க்கம் குற்றவாளிகளுக்கு இருந்தே தீரும்.
________
செய்தி: ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வருவோம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது இலங்கையை இழிவுபடுத்தும் செயல் என அந்நாட்டு அதிபர் ராஜபக்ஷே தெரிவித்துள்ளார்.
நீதி: மனித உரிமையை மதிக்காத நாடு, மனித உரிமையே இல்லாத நாட்டை எதிர்த்து மனித உரிமைக் கவுன்சிலில் எப்படி தீர்மானம் கொண்டு வர முடியும் என்கிறார் இலங்கை அதிபர்.
_______
செய்தி: இலங்கையில் உள்நாட்டிலேயே புலம்பெயர்ந்தோருக்கு, இந்தியாவின் நிதியுதவியுடன் 50,000 வீடுகள் கட்டித்தரும் திட்டத்தில் இதுவரை 10,250 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன என மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
நீதி: இலட்சம் பேர் கொல்லப்பட்டதற்கு ஐம்பதாயிரம் வீடுகளை கட்டி கணக்கை நேர் செய்கிறாராம், வட்டிக் கடை புகழ் செட்டி நாட்டு சிதம்பரம்.
_______
செய்தி: ரத்த வகையைக் கண்டறிவதில் அண்மைக்காலமாக தனியார் ரத்த வங்கிகள் அலட்சியம் காட்டுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
நீதி: இலாப வெறியுடன் மக்கள் ரத்தத்தை உறிஞ்சும் தனியார் மயம், சேவை உணர்வுடன் மனித ரத்தத்தை மட்டும் மதிக்குமா என்ன?
________
செய்தி: “உளுந்தூர்பேட்டை ஊழல் எதிர்ப்பு மாநாட்டில் தொண்டர்களின் எண்ணத்தைக் கேட்டு தேர்தல் கூட்டணி பற்றி அறிவிப்பேன்’’ என்று சொன்ன விஜயகாந்த் அவரது தொண்டர்களையும் அவரை எதிர்பார்த்துக் காத்திருந்த அரசியல் கட்சிகளையும் மீண்டும் குழப்பத்தில் ஆழ்த்திவிட்டதாக விமர்சனம் எழுந்துள்ளது.
நீதி: கிராக்கி இல்லை, பேரம் படியவில்லை என்பதால் கூட்டத்தை கூட்டிக் காட்டி கூட்டணி வியாபாரத்தின் மதிப்பை ஏற்றும் விஜயகாந்தின் தொழிலில் குழப்பம் ஏது? கொள்கை ஏது?
_______
செய்தி: போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக காஷ்மீர் போலீஸ்காரர் குர்ஷித் ஆலம் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த பி.கணேஷ், எம். செந்தில் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.35 கோடி மதிப்புள்ள 10 கிலோ ஹெராயின் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை பிப்ரவரி 17-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
நீதி: இப்படி தமிழகத்து கணேஸும் அவரது ‘தம்பி’ செந்திலாண்டவனும் சிக்கியிருப்பதைப் பார்த்தால் ஐஎஸ்எஸ சதி, முசுலீம் பயங்கரவாதம் என்று ஊளையிடும் இந்து முன்னணி இனி எப்படி கல்லா கட்டும்?
_______
செய்தி: ஏழுமலையானுக்கு ரூ.11 கோடி செலவில் 33 கிலோ தங்க காசுமாலையை காணிக்கையாக வழங்க பக்தர் ஒருவர் முன்வந்துள்ளார் என்று திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தெரிவித்துள்ளது.
நீதி: கருப்புப் பணமும், கடத்தல் பணமும் இருக்குமிடம் சுவிஸ் நாடா, வெங்கடேஸின் கோவிலா?
________
செய்தி: மாஸ்கோ புறநகர்ப் பள்ளியில் துப்பாக்கியுடன் வகுப்பறைக்குள் நுழைந்த மாணவன், ஆசிரியரையும் போலீஸ் அதிகாரியையும் சுட்டுக் கொன்றுவிட்டு 20 மாணவர்களை பிணைக் கைதிகளாக சிறை பிடித்தான்.
நீதி: முதலாளித்துவ ரசியாவில் முதலாளித்துவ அமெரிக்காவின் காட்சிகள்.
_______
செய்தி: லோக்சபா தேர்தலில் 3-வது அணி குறித்த பேச்சு, நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கவே பெரிதும் உதவும் என்று ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவரும் பாஜக மூத்த தலைவருமான அருண் ஜேட்லி கூறினார்.
நீதி: எனில் 3வது அணியை வரவேற்று, வாழ்த்துரைத்து, கொண்டாடாமல் சோகப் பாட்டு ஏன் மிஸ்டர் ஜேட்லி?
______
செய்தி: “பா.ஜ.,வுடன், சிவசேனா, நீண்டகாலமாக கூட்டு வைத்துள்ளது. பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடியின், மும்பை கூட்டங்களில், பால் தாக்கரே பற்றி ஒரு வார்த்தை கூட, அவர் பேசுவதில்லை. மகாராஷ்டிரா வந்து, சர்தார் படேல் பற்றி பேசும் மோடி, மாவீரன் சிவாஜி பற்றி பேசுவதில்லை. இதற்கு என்ன காரணம் என தெரியவில்லை” – ராஜ் தாக்கரே, மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சித் தலைவர்
நீதி: மோடி வெறுமனே ஒரு குஜராத்தி வாலா, நான்தான் ஒரிஜினல் மராட்டிய வாலா என்று முணுமுணுப்புதற்கு கூட தயாரில்லாத இந்தக் கோழைதான் அப்பாவி பீகார் தொழிலாளிகளை அடித்து விரட்ட சொன்னவர்.
_______
செய்தி: “மூத்த மகனால் ஆபத்து என்றதும், பிரதமருக்கு கடிதம் எழுதும் கருணாநிதி, பத்திரிகை எரிப்பு சம்பவம், தா.கிருட்டிணன் கொலை வழக்கில், என்ன நிலைப்பாடை எடுத்தார்?தனக்கு ஒரு நீதி; தன் குடும்பத்திற்கு ஒரு நீதி; மற்றவருக்கு ஒரு நீதி என செயல்படும், கருணாநிதியை தலைவராகக் கொண்டு செயல்படும், தி.மு.க.,வினர், சட்டம் – ஒழுங்கு குறித்து பேசுவது, நகைப்புக்குரியது.” – ஜெயலலிதா.
நீதி: சசிகலா கும்பலோடு சண்டை வந்த போது சுதாகரன், செரினா வீடுகளில் கஞ்சா கேஸ் போட்டு சட்டம் ஒழுங்கைப் பாதுகாத்த புரட்சித் தலைவியின் தைரியம் கருணாநிதிக்கு உண்டா?
________
செய்தி: தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், “ஊழலை ஒழிப்போம்’ எனக் கூறுவது, காங்கிரசை குறித்து அல்ல; பா.ஜ.,வையும், அதன் பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடியையும் தான் கூறியுள்ளார்,” என, மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
நீதி: இப்படியெல்லாம் நாக்கை தொங்கப் போட்டு அலையும் நிலையிலாவது காங்கிரஸ் கட்சி இருக்கிறதே என்று தேற்றிக் கொள்கிறார் நாரவாய் நாராயணசாமி.
________
செய்தி: “அரசு செவிலியர் பயிற்சிப் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவியருக்கும், கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இதனால், அரசுக்கு கூடுதலாக, ஆண்டுக்கு, 3.41 கோடி ரூபாய் செலவாகும்,” என, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
நீதி: அரசு செவிலியர் பயற்சிப் பள்ளி மாணவிகளுக்கு, அரசு செவிலியர் வேலைகளில் இடமில்லை என்று கதவை மூடிவிட்டு இந்த கருணைத் தொகை எதற்கு?
_______
செய்தி: இந்தியாவிடம் பாடம் கற்றுக் கொள்ளுங்கள் என சீனாவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் திபெத்திய தலைவர் தலாய்லாமா.
நீதி: உப்பிட்ட இந்தியாவை உயர்த்தினால்தானே தர்மஸ்தாலாவில் உள்ள அவரது சாம்ராஜ்ஜியம் போஷாக்குடன் பராமரிக்கப்படும்.
________
செய்தி: மத்திய அரசு 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை நேற்று ஏலம் விடப்பட்டது. இதில், ஒரே நாளில் அரசுக்கு 39 ஆயிரத்து 300 கோடி ரூபாய் வருமானம் கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதி: இதில் வருமானமே சாத்தியமில்லை என்று கூப்பாடு போட்ட மன்மோகன்சிங் அரசிற்கு யார் தண்டனை கொடுப்பது?
_________
செய்தி: திருப்பதியில், பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்திய தலைமுடியை, பாதுகாப்பாக வைக்க, குளிரூட்டப்பட்ட கிடங்கு கட்ட, தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
நீதி: மொட்டையடிக்கப்படும் பக்தனை விட ஏற்றுமதி செய்யப்படும் முடியின் அந்நியச் செலவாணி மதிப்பு அதிகம்.
________
செய்தி: அண்ணாதுரை நினைவு தினத்தை ஒட்டி, கோவில்களில் நடந்த சமபந்தி விருந்துக்கு, அமைச்சர்கள் தாமதமாக வந்ததால், சாப்பிட வந்தவர்கள், பசியால் தவித்தபடி காத்திருந்தனர்.
நீதி: அம்மா ஆட்சியில் அமைச்சர்களே அடிமைகளாக அலையும் போது அன்னதானம் சாப்பிடுபவர்களுக்கு மட்டும் ராஜ உபசாரம் கிடைத்து விடுமா?
________
செய்தி: உடல் நலக்குறைவால், நெல்லூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, காஞ்சி பீடாதிபதி ஜெயேந்திரர், சென்னை, ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் உடல் நிலை, முன்னேற்றம் அடைந்து வருவதாக, மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நீதி: கொலை வழக்கில் ஜெயேந்திரன் கைது செய்யப்பட்டதால், சுனாமி வந்து பழி தீர்த்தது என்று அவாள்கள் அப்போது சாபம் விட்டதைப் பார்க்கும் போது சங்கர் சாரியை சங்கரராமன் ‘ஆவி’ ஏதும் பதம் பார்த்திருக்குமோ என்று தோன்றலாமில்லையா?
________