Saturday, May 10, 2025
முகப்புசெய்திஉசிலம்பட்டி பொதுப் பாதை ஆக்கிரமிப்பு போராடி அகற்றப்பட்டது !

உசிலம்பட்டி பொதுப் பாதை ஆக்கிரமிப்பு போராடி அகற்றப்பட்டது !

-

உசிலம்பட்டி பொதுமக்கள் போராட்டம் வெற்றி
பொதுப் பாதையில் இருந்த ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.

துரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா, உசிலம்பட்டி டவுன், 7-வது வார்டு, விரிவாக்கப்பகுதியில் கடந்த 30 வருடங்களாக பொது மக்கள் பயன்படுத்தும் பொதுப்பாதையை ஆசிரியர் ஜோசப் மற்றும் காவல்துறை அதிகாரி நவராஜ் குடும்பத்தார்கள் ஆக்கிரமிப்பு செய்து கல் ஊன்றி, முள்வேலி அடைத்து, இரும்புகேட் போட்டு ஆக்கிரமிப்பு செய்து வந்தனர், இதுநாள் வரை அந்தப் பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து போராடி பாதையில் இருந்த ஆக்கிரமிப்பை அகற்ற முடியவில்லை.

இந்நிலையில் நமது மனித உரிமை பாதுகாப்பு மையம் மற்றும் விவசாயிகள் விடுதலை முன்னணி அமைப்புகளைச் சேர்ந்த உசிலை பகுதி தோழர்கள் 7-வது வார்டு விரிவாக்கப்பகுதியில் வசிக்கும் மக்களை குடியிருப்போர் நலச்சங்கம் என்ற பெயரில் அமைப்பாக்கினர். பொதுப்பாதையில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் 20.01.2014-ம் தேதி நகராட்சியில் மனு கொடுக்கப்பட்டது. மனுகொடுத்து நான்கு நாட்கள் காலதாமதப்படுத்திய நகராட்சி அதிகாரிகளை நமது தோழர்கள் முற்றுகையிட்டு நெருக்கடி கொடுத்த பின் பணிந்தனர்.

தொடர்ந்து எடுத்த முயற்சியின் காரணமாக 26.01.14-ம் தேதியில் அரசு தலைமை சர்வேயர் மற்றும் கட்டிட ஆய்வாளர் தலைமையில் பொதுப்பாதையை அளந்து கல் ஊன்றினார்கள். அதன்பின் ஆக்கிரமிப்பை அகற்ற 15 நாளுக்குமேல் ஆகும் என்று அதிகாரிகள் கூறியதால் அங்கு கூடியிருந்த 7,8,9 வார்டு பொதுமக்கள், குடியிருப்போர் நலச்சங்க உறுப்பினர்கள், ஜனநாயக சக்திகள், 9-வது வார்டு கவுன்சிலர் உள்பட அனைவரும் ஒன்று சேர்ந்து பாதையில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினார்கள். அதைத் தொடர்ந்து 30 வருடங்களாக பொதுப்பாதையில் ஆக்கிரமிப்பு செய்து வந்த ஜோசப் மற்றும் நவராஜ் குடும்பத்தார்கள் காவல் துறையில் புகார் செய்தார்கள்.

அன்று மாலை பொதுப்பாதை ஆக்கிரமிப்பு இடத்தை பார்வையிட வந்த டி.எஸ்.பி கட்டிட ஆய்வாளரிடம் விசாரித்து நிலைமையை தெரிந்து கொண்ட பின், “பொதுப்பாதையில் 30 வருடங்களாக ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவா? ஆக்கிரமிப்பை அகற்றாமல் இதுவரை வேடிக்கைபார்த்த நகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவா? அல்லது ஆக்கிரமிப்பை அகற்றி சட்டத்தை தன் கையில் எடுத்த பொதுமக்கள் மீது நடவடிக்கை எடுக்கவா?” என்று நகராட்சி ஆணையாளரிடம் எச்சரிக்கை செய்து, “பொதுப்பாதை பொதுமக்களுக்கானது, அதை யாரும் தடுக்கக் கூடாது” என்று பேசி பொறுப்போடு நடந்து கொண்டார்.

இந்த விசயத்தில் சார்பு ஆய்வாளர் மாரிமுத்து ஆரம்பத்திலிருந்தே பொறுப்பாக நடந்து கொள்ளவில்லை, ஆக்கிரமிப்பு செயுத தனிநபர்களுக்கு ஆதரவாக செய்ல்பட்டார், நமது அமைப்பு தோழர்கள் சார்பு ஆய்வாளரிடம் உங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிவரும் என்று எச்சரிக்கை செய்தவுடன் பின்வாங்கினார்.

நகராட்சியில் இருந்து ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு 3 நாளில் ஆக்கிரமிப்பை எடுத்துக் கொள்ள வேண்டும் தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது. மூன்று நாள் கெடு முடிந்து 29.01.14 புதன் கிழமை நகராட்சி அதிகாரிகள் காவல்துறையின் உதவியோடு காலை 11 மணியளவில் பொதுப்பாதையில் மீதம் இருந்த ஆக்கிரமிப்புகளை சட்டப்படி அகற்றினார்கள்.

இப்பொழுத் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் பொதுப்பாதையில் நடந்து சென்று வருகின்றனர். இந்த நிகழ்வானது ஒரு புரட்சிகர அமைப்பின் கீழ் அமைப்பாகி போராடினால் நிச்சயமாக வெற்றி பெறலாம் என்ற படிப்பினையை அந்தப் பகுதி மக்களுக்கு உணர்த்தியுள்ளது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

இவண்
புதிய ஜனநாயகம் செய்தியாளர்,
உசிலை வட்டம்