உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக்கக் கோரி மதுரை கிளை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்களின் போராட்டம் நான்காவது நாளாக தீவிரமடைந்து வருகிறது.

உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக்க வேண்டும் என்கிற வழக்குரைஞர்களின் கோரிக்கையை ஏற்று 2006 ஆம் ஆண்டு தமிழக அரசு சட்டசபையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. குடியரசு தலைவருக்கு அனுப்ப வேண்டிய தமிழக அரசின் தீர்மானத்தை மத்திய அரசு உச்சநீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்தது. உச்சநீதிமன்றமோ வட்டார மொழிகளை எல்லாம் வழக்கு மொழியாக்க முடியாது என்று கூறி தீர்மானத்தை அங்கீகரிக்க மறுத்தது. தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியதோடு சரி, அதன் பிறகு தமிழை வழக்கு மொழியாக்க எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. அதையடுத்து தமிழகத்தில் இக்கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடந்தன, 2010-ம் ஆண்டு முதல் இக்கோரிக்கைக்கான போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன.
2010ம் ஆண்டு மதுரையிலும் சென்னையிலும் நடந்த போராட்டங்களின் விளைவாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இக்பால் தமிழ் மொழியில் வழக்கை நடத்திக்கொள்ளலாம் என்று வாய்மொழியாக உத்தரவிட்டார். இதையடுத்து மதுரை உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதாடியதற்காக நீதிபதி ஒரு வழக்குரைஞரின் வழக்கை தள்ளுபடி செய்து விட்டார். எனவே மீண்டும் போராட்டம் தீவிரமடைந்தது.
தாய்மொழியில் வழக்காடுவது இந்தியாவில் எங்கும் நடக்காத அதிசயம் அல்ல. இந்திய அரசியலமைப்புச் சட்டம் சரத்து-348 (2) இன்படி இந்தி பேசும் மாநிலங்களிலுள்ள பல உயர்நீதிமன்றங்களில் இந்தி மொழியில் தான் வழக்காடப்படுகின்றது. தாய்மொழியின் பெயரால் இந்தி மொழிக்கு கிடைத்திருக்கும் உரிமை மற்ற மொழிகளுக்கு மறுக்கப்படுவது அநீதியல்லவா?
தற்போது சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வளாகத்தில் வழக்குரைஞர்கள் பகத்சிங், எழிலரசு இருவரும், தமிழக அரசின் சட்டசபை தீர்மானத்திற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் வழங்கவும், மெட்ராஸ் உயர்நீதிமன்றம் என்பதை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என்று மாற்றவும், கீழமை நீதிமன்றங்களில் ஆங்கிலத்தில் தீர்ப்பு வழங்க வலியுறுத்தும் உயர்நீதிமன்ற சுற்றறிக்கையை திரும்பப்பெற வலியுறுத்தியும் நான்காவது நாளாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று முதல் இவர்களோடு வழக்குரைஞர் மாரிமுத்தும் தன்னை இணைந்து கொண்டார்.
போராட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்களும், தமிழகத்தின் பிற மாவட்டத்திலுள்ள வழக்குரைஞர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். நேற்று மதுரை கிளை முன்பாக வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை என்கிற பெயர்ப்பலகையில் உள்ள மெட்ராஸ் என்கிற வார்த்தையை மறைத்து தமிழ்நாடு என்று எழுதி தொங்கவிட்டனர்.
ஆலயங்களில் தமிழை விடமறுக்கிறது பார்ப்பனிய கும்பல், நீதிமன்றத்தில் தமிழை விட மறுக்கிறது உச்சிக்குடுமி மன்றமும், மத்திய அரசும். இந்து, இந்தி, இந்தியா என்று இந்திய மக்களை பண்பாட்டு ரீதியாக ஒடுக்கும் பார்ப்பனிய இந்து தேசியத்தின் ஆதிக்கத்தினாலேயே இந்தியும் காலனியாக்கத்தின் எச்சமான ஆங்கிலமும் திணிக்கப்படுகின்றனது. ஆளும் வர்க்கத்திற்கெதிராக தாய்மொழியை வழக்கு மொழியாக்கு என்கிற வழக்குரைஞர்களின் ஜனநாயக கோரிக்கையை தமிழ் மக்கள் மட்டுமல்ல அனைத்து தேசிய இனத்தை சேர்ந்த உழைக்கும் மக்களும் ஆதரிக்க வேண்டும். எல்லா தேசிய இனங்களின் தாய் மொழிகளும் அவற்றுக்குரிய மாநிலங்களின் நீதி, நிர்வாக துறைகளில் ஆட்சி செலுத்த வேண்டும்.