8 அணிகளின் முதலாளிகள்; அவர்கள் முன்பு படைக்கப்படும் 514 வீரர்கள்; அவர்களில் 160 பேர் வெளிநாட்டு வீரர்கள்; 219 பேர் சர்வதேச கிரிக்கெட் அனுபவம் உடையவர்கள்.

2 நாட்களாக நடைபெறும் ஏலம்; திறமை மற்றும் தகுதியின் அடிப்படையில் 53 பிரிவுகளாக பிரிக்கப்பட்ட வீரர்கள்; ஒவ்வொரு அணிக்கும் சம்பள உச்ச வரம்பாக ரூ 60 கோடி; அணியில் குறைந்தபட்சம் 16 பேர், அதிகபட்சம் 27 பேரை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற விதிமுறைகள்.
ஐபிஎல் 7-வது பருவத்துக்கான வீரர்கள் ஏலம் கன ஜோராக கூத்தும் கும்மாளமுமாக நடந்து கொண்டிருக்கிறது. பெங்களூருவின் ஐடிசி கார்டனியா ஹோட்டலில் ஐந்து நட்சத்திர கேளிக்கை நிகழ்ச்சியாக இந்த ஏலம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஏலங்கள் அமெரிக்க டாலரில் இல்லாமல் இந்திய ரூபாயில் நடத்தப்பட்டது இந்திய ரூபாயின் மதிப்பை அதிகரிப்பதற்கு ப சிதம்பரம் எடுத்த அதிரடி நடவடிக்கைகளில் ஒன்றா அல்லது மோடி பிரதமராகி விடுவாரோ என்று அஞ்சி நடுங்கிய ஐபிஎல் முதலாளிகளின் தேசப்பற்று வெளிப்பாடா என்று தெரியவில்லை.
ஏலத்தை நடத்தியவர் வேல்ஸைச் சேர்ந்த ஆங்கில ஏல நிபுணர் ரிச்சர்ட் மேட்லி. எதிர்காலத்தில் இந்திய நாட்டின் அலைக்கற்றை, நிலக்கரி வயல், இரும்புத் தாது, விளைநிலங்கள் போன்றவற்றை பன்னாட்டு முதலாளிகளுக்கு ஏலம் விடுவதற்கும் இது போன்ற வெளிநாட்டு நிபுணர்களை கொண்டு வருவதற்கு இந்த ஐபிஎல் ஏலம் ஒரு முன்மாதிரியாக அமைந்து விடலாம்.

ஏலம் கேட்க வந்தவர்கள் மத்தியில் பெங்களூரு அணியின் விஜய் மல்லையா, மும்பை அணியின் நீத்தா அம்பானி போன்ற தொழிலதிபர்கள், பஞ்சாப் அணிக்காக பிரீத்தி ஜிண்டா, கொல்கத்தா அணிக்காக ஜூஹி சாவ்லா போன்ற பாலிவுட் நட்சத்திரங்கள், மும்பை இந்தியன்ஸ் அணியின் அனில் கும்ப்ளே, ராஜஸ்தான் அணிக்காக ராகுல் டிராவிட் போன்ற முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொண்டார்கள். ஐபிஎல்லுக்கு தம்மை ஒப்படைத்துக் கொண்டிருக்கும் முன்னணி கிரிக்கெட் வீரர்களை ஒரு வருடத்துக்கு குத்தகை எடுக்கும் உரிமை அவர்களது பணப் பை சுருக்கில் வைக்கப்பட்டிருந்தது. விருப்பப்பட்டால் அதே விலையில் சிறிது கூட்டிக் கொடுத்து இன்னும் இரண்டு ஆண்டுகள் ஒப்பந்தத்தை நீட்டிப்பதற்கும் அவர்களுக்கு உரிமை இருக்கிறது.
ஏற்கனவே அணியில் இருக்கும் வீரர்களில் எந்தெந்த அணிகள் எத்தனை வீரர்களை தக்க வைத்துள்ளன; தக்க வைக்காமல் அனுப்பிய வீரர்களை அதிகபட்ச ஏலத் தொகைக்கு எடுக்கும் மேட்ச் கார்ட் உரிமையை யாருக்கு பயன்படுத்துவது; குறிப்பிட்ட வீரரை ஏலத்துக்கு எடுக்க எப்படி போட்டி வியூகம் வகுக்க வேண்டும்; உள்நாட்டு வெளிநாட்டு வீரர்களின் எண்ணிக்கை வரம்புக்குள் எப்படி ஏலம் எடுக்க வேண்டும்; ஒட்டு மொத்த சம்பளத் தொகையான ரூ 60 கோடியை எப்படி திட்டமிட வேண்டும் என்று ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் அனைத்து விறுவிறுப்புகளும் இந்த ஏல நிகழ்வில் இருந்தன. இதில் உள்ள மேட்ச் பிக்ஸிங்குகளும், சூதாட்டங்களும், திரை மறைவு பேரங்களும் நமக்கு தெரியப் போவதில்லை.

இந்த கணக்குகளை எல்லாம் போட்டுக் கொண்டே நாடெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் தத்தமது கணினிகளின் முன்பு காத்திருந்தார்கள். அவர்களுக்கு தீனி போட விளையாட்டு வல்லுனர்கள் தமது கருத்துக்களை பொழிந்து கொண்டிருந்தார்கள். வீரர்களின் திறமையை பற்றி நிபுணர்கள் பேசி ரசிகர்களை வாய்பிளக்க வைக்கும் நேரத்தில் அங்கே முதலாளிகள் கரன்சி ஆட்டத்தை மேசையிலும், மேசைக்கு கீழும் ஆடிக் கொண்டிருந்தார்கள். ரசிகனுக்கு தேவை விறுவிறுப்பான 4 மற்றும் 6. முதலாளிகளுக்குத் தேவை கருப்பிலும், வெள்ளையிலுமாய் சில பல ஆயிரம் கோடிகள்.
ஆவலோடு எதிர்பார்த்த பரபரப்பான போட்டி அன்று மழை வருவதற்கான சாத்தியம் இருப்பதாக என்று வானிலை ஆராய்ச்சி மையம் அறிவிப்பது போல ஏலம் நடப்பதற்கு 2 நாட்கள் முன்பு ஐபிஎல் போட்டிகளில் சூதாட்டம் குறித்த முட்கல் கமிட்டி அறிக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அது 12,13 தேதிகளில் நடைபெறவிருக்கும் ஏலத்துக்கு ஏதாவது முட்டுக்கட்டை போட்டு விடுமோ என்ற கடைசி நிமிட டென்ஷனும் சிலருக்கு இருந்தது. ஆனால், அப்படி எதுவும் நடந்து விடாமல் உச்சநீதி மன்றம் ‘இந்தியாவின்’ தேசிய பெருமையை காப்பாற்றி விட்டிருந்தது.
பந்தயம் கட்டி சூதாடியவர்களுக்கு தோனி உடந்தையாக இருந்தாரா இல்லையா போன்ற சங்கடமான கேள்விகளை அணியின் மீதான விசுவாசமும் இந்திய தேசபக்தியும் விஞ்சின. சூதாடியும், மேட்ச் பிக்சிங் மோசடி பேர்வழியுமான அணி முதலாளி குருநாத் மெய்யப்பன் வாங்கிக் கொடுத்த டுக்காட்டி பைக்கையும் அவர் கண்காணித்துக் கொண்டிருந்தார் என்பதை வசதியாக மறந்து விட்டு, “அப்படில்லாம் இருக்காது, அவரைச் சுத்தி என்ன நடந்தாலும் விளையாட்டே கண்ணாக இருப்பவர்” என்று சமாதானப்படுத்திக் கொள்கிறார்கள்.
அப்படி அப்பாவியாக இல்லாத புத்திசாலிகள், “கிரிக்கெட்டில் பெட்டிங் நடக்கிறது, மேட்ச் பிக்சிங் நடக்கிறது எல்லாம் எங்களுக்குத் தெரியும். டிவியில் சீரியல் பார்ப்பது போல என்று வைத்துக் கொள்ளுங்களேன். அதிலும் கதை, திரைக்கதை எழுதி நடிகர்களை நடிக்க வைத்துதான் எடுக்கிறார்கள். யார் சாக வேண்டும், யார் யாரை காதலிக்க வேண்டும், யார் யாரை கடத்த வேண்டும் என்பதை எல்லாம் பிக்ஸ் செய்துதான் காட்டுகிறார்கள். அதனால் அதில் சுவாரஸ்யம் குறைந்து விடுகிறதா என்ன? அதில் நடிக்கும் நடிகர்கள் பற்றிய கிசுகிசுக்களுக்கு மவுசு குறைந்து விடுகிறதா என்ன? அது போலத்தான் கிரிக்கெட்டும் எங்களுக்கு. எங்களுக்கு ஒரு இளைப்பாறலுக்கு கிரிக்கெட் பயன்படுகிறது” என்று என்ன நடந்தாலும் சலிக்காமல் மிக்சர் தின்ன ஆவலாகப் பறக்கிறார்கள்.

ஏலம் நடந்து கொண்டிருந்த அதே பெங்களூருவில் ஐபிஎம் நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர்கள் 2,000 பேர் வேலை நீக்கம் செய்யப்பட்டு, மடிக்கணினிகள் பிடுங்கப்பட்டு ஒரு மணி நேர கால அவகாசத்தில் அலுவலகத்தை விட்டு வெளியேற்றப்பட்டுக் கொண்டிருந்தார்கள். ஐபிஎல் முதலாளிகள் கிரிக்கெட் வீரர்களை ஏலம் பிடித்து தமது லாபத்தை பெருக்கி விட வேண்டும் என்று போட்டி போடுவது போல நிறுவனத்தின் லாப வீதத்தை ஒரு பங்குக்கு $20 என்ற மட்டத்துக்கு உயர்த்தி விட வேண்டும் என்ற நோக்கத்தில் $1 பில்லியன் செலவில் ஐபிஎம் நிறுவனம் மேற்கொண்டிருக்கும் மறுசீரமைப்பு (அதாவது, ஆள்குறைப்பு) நடவடிக்கைகளின் முதல் பலிகள் பெங்களூருவிலிருந்து ஆரம்பித்திருந்தன.
ஆனால், அவர்களுக்கு தோள் கொடுத்து போராட வேண்டிய மென்பொருள் துறை ஊழியர்கள் உட்பட ‘தேசத்தின்’ கவனம் ஐபிஎல் ஏலத்தில் குவிந்திருந்தது. முதல் நாள் ஏலத்திற்கு வைக்கப்பட்ட்டிருந்த 219 வீரர்களில் 70 வீரர்கள் ரூ 212 கோடி செலவில் ஏலம் பிடிக்கப்பட்டனர், 149 வீரர்கள் ஏலம் போகவில்லை. ரு 14 கோடி கொடுத்து ஐபிஎல் வரலாற்றிலேயே இல்லாத அதிக மதிப்பில் யுவராஜ் சிங்கை பெங்களூர் அணிக்கு ஏலம் பிடித்திருக்கிறார் அதன் முதலாளி விஜய் மல்லையா. பஞ்சாபின் சிங்கம் என்று அழைக்கப்படும் யுவராஜ் சிங் பெங்களூரு அணியில் விளையாடி மல்லையாவுக்கு கோடிகளை குவிக்க உதவுவாரே தவிர, விமான சேவை ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டிய சம்பள பாக்கிக்கோ, வங்கிகளிடம் வாங்கிய கடனை அடைப்பதற்கோ உத்தரவாதம் கேட்டு அவரது சட்டையைப் பிடித்து உலுக்கி விடப் போவதில்லை.

2011-ல் கவுதம் கம்பீர் ரூ 11.04 கோடிக்கு வாங்கப்பட்டதுதான் இதுவரையிலான சாதனையாக இருந்ததாம். டெண்டுல்கர் முதலானவர்கள் விளம்பர நிறுவனங்களுக்கு தங்களை விற்றுக் கொண்ட தொகை இந்தக் கணக்கில் சேராது.
சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவுடனான கிரிக்கெட் தொடரில் சரியாக விளையாடவில்லை என்று இங்கிலாந்து அணியிலிருந்து துரத்தப்பட்ட கெவின் பீட்டர்சன் என்ற ஆங்கில கனவான் டெல்லி அணியால் ரூ 9 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொதப்பியதற்கு பரிசாக ஏப்ரல் 8 தொடங்கி, மே 30 வரை நடைபெறவிருக்கும் ஐபிஎல் ஏழாவது பருவம் முழுவதும் விளையாடுவதற்கான அவகாசம் அவருக்கு கிடைத்திருக்கிறது. இங்கிலாந்து அணியை அவர் ஏமாற்றினாலும் ஐபிஎல்லை அவர் ஏமாற்றமாட்டார். காரணம் அவருக்கு இங்கே கிடைப்பது சில பல கோடிகள்.
அதே போல, ஐபிஎல் நடக்கவிருக்கும் போது இலங்கை அணி இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் போகவிருப்பதால் அந்நாட்டு அணியினர் யாரையும் அணி முதலாளிகள் ஏலம் எடுக்க முன்வரவில்லை. கூடவே, இந்தியர்களின் ‘தேசபக்தி’க்கு மதிப்பு கொடுத்து பாகிஸ்தான் வீரர்கள் ஏலத்தில் சேர்க்கப்படவேயில்லை. அது குறித்து அவர்கள் அழுது பார்த்தும் எந்தப் பலனுமில்லை.
ஆனால், ஐசிசி-யின் நிரந்தர உறுப்பினர்களாக ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து இருப்பார்கள் என்றும் அதன் தலைவராக இந்தியாவின் இந்தியா சிமென்ட்சின் சீனிவாசன் பொறுப்பேற்பார் என்றும் முடிவு எடுக்கப்பட்ட போது இலங்கையும், பாகிஸ்தானும் அந்த முடிவை ஆதரித்து வாக்களிக்காமல் பின் வாங்கியது கூட ஐபிஎல் முதலாளிகளின் இலங்கை, பாகிஸ்தான் புறக்கணிப்புக்கு காரணமாக இருக்கலாம்.

ஏலத்தின் இரண்டாவது நாளான இன்றைக்கும் 295 வீரர்களுக்கான ஏலத்துடன் தொடரும். அனைத்து அணிகளும் தமது செலவழிக்கும் வரம்பை கிட்டத்தட்ட தீர்த்து விட்ட நிலையில் இன்றைய ஏலத்துக்கு வரும் 150 வீரர்களில் பலர் விலை போகாமலேயே விடப்படுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
2ஜி அலைக்கற்றையை ஏலம் விட வேண்டும், நிலக்கரி வயல்களை ஏலம் விட வேண்டும் என்று பாரதமாதாவையே பன்னாட்டு நிறுவனங்களிடம் ஒப்படைப்பதற்கு ஏலம் விடுவதை ஆதரிக்கும் ‘தேச பக்தர்களில்’ சிலர் “என்ன நடந்துகிட்டு இருக்குது இங்கே. ஆடு மாடுகளைப் போல கிரிக்கெட் வீரர்களை ஏலத்துக்கு விடுறாங்க, எடுக்கறாங்க” என்று சமூக வலைத்தளங்களில் ஆவேசப்படுகிறார்கள். வழக்கம் போல, அவர்களை யாரும் கண்டு கொள்ளவில்லை.
சென்ற வருடம் மேட்ச் பிக்சிங்கில் பிடிபட்டது போல இந்த வருடம் இருக்காது எனும் அளவுக்கு சதிகளும், சூதாட்டங்களும் மிகுந்த பாதுகாப்புடன் அரங்கேற்றப்படும். ஒருக்கால் இன்னும் ஓரிரு ஆண்டுகளில் சூதாட்டமும் கூட சட்டபூர்வமாக்கி விட்டால் ஐபிஎல் முதலாளிகள் இப்படி பயந்து பயந்து சூதாட வேண்டியிருக்காது. எது எப்படியோ ரசிகனுக்கு சியர் லீடர்ஸ் டான்சும், சிக்சரும், ஃபோரும் மட்டுமே முக்கியம் என்பதால் ஐபிஎல் முதலாளிகளின் போங்காட்டம் குறித்து கவலைப்படுவதில்லை.
வருடா வருடம் நடக்கும் இந்த பிரம்மாண்டமான கிளாடியேட்டர் காட்சியில் விளையாட்டு வளராவிட்டாலும் அடிமைகள் பெருகுகிறார்கள். அடிமைகளை மறக்கச் செய்து பிக்பாக்கட் அடிப்பதற்கு இதை விட சிறப்பான ஆட்டம் ஏதும் உண்டா?
– அப்துல்.
மேலும் படிக்க