privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்இதர கட்சிகள்முசாஃபர் நகர் : கிழிந்தது சமூகநீதி ஆட்சியின் கருணைமுகம் !

முசாஃபர் நகர் : கிழிந்தது சமூகநீதி ஆட்சியின் கருணைமுகம் !

-

.பி. மாநிலத்திலுள்ள முசாஃபர்நகர் மற்றும் ஷாம்லி மாவட்டங்களில் கடந்த ஆண்டு ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் நடந்த இந்து மதவெறிக் கலவரம், குஜராத் முசுலீம் படுகொலைக்குப் பிறகு மிகப்பெரும்பாலான முசுலீம்கள் மீது இழைக்கப்பட்டிருக்கும் கொடூரமான அநீதியாகும். குஜராத் படுகொலைகளோடு ஒப்பிட்டால், முசாஃபர் நகர் கலவரத்தில் விழுந்த முசுலீம் பிணங்களின் எண்ணிக்கை குறைவுதான். ஆனாலும், இந்து மதவெறிக் கும்பலும் ஜாட் சாதிவெறியர்களும் கைகோர்த்துக் கொண்டு நடத்திய இந்தக் கலவரத்தைப் பத்தோடு பதினொன்றாக ஒதுக்கித் தள்ளவிட முடியாது.

முசாஃபர் நகர்
உ.பி. அகதி முகாம்களின் குழந்தைகள் குளிரில் விறைத்துச் செத்துக் கொண்டிருந்த பொழுது, கலை நிகழ்ச்சி நடத்தி ரசித்துக் கொண்டிருந்த உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவின் உருவ பொம்மையை எரித்து போபால் விஷவாயு விபத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப்பினர் ம.பி. மாநிலத் தலைநகர் போபாலில் நடத்திய ஆர்ப்பாட்டம்.

இக்கலவரத்தின் காரணமாக இவ்விரு மாவட்டங்களின் கிராமப்புறங்களிலிருந்து 50,180 முசுலீம்கள் அகதிகளாக வெளியேறியிருப்பதாக உ.பி. அரசு அறிவித்திருக்கிறது. அரசுசாரா நிறுவனங்களோ கிராமப்புறங்களிலிருந்து அகதிகளாகத் துரத்தப்பட்ட முசுலீம்களின் எண்ணிக்கை ஏறக்குறைய ஒரு இலட்சம் வரை இருக்கக் கூடும் எனக் கூறி வருகின்றன. குஜராத் படுகொலைகளின்பொழுது அகதிகளாக்கப்பட்ட முசுலீம்களின் எண்ணிக்கையோடு உ.பி. நிலையை ஒப்பிட்டால், உ.பி. அரசின் புள்ளிவிவரமே அதிர்ச்சியளிக்கக்கூடியதுதான்.

முசாஃபர்நகர் கலவரம் நடந்து முடிந்து நான்கு மாதங்களுக்கு மேலாகிவிட்ட பிறகும், அகதிகளாக வெளியேறியிருக்கும் முசுலீம்களில் பெரும்பாலோர் தமது சொந்த கிராமத்திற்கு இதுவரை திரும்பிச் செல்லவில்லை. இன்னும் ஓரிரு மாதங்களுக்குப் பிறகாவது திரும்பிச் செல்வார்கள் என்று நம்புவதற்கும் வழியில்லை. ஏனென்றால், “திரும்பிச் சென்றால் மீண்டும் ஜாட் சாதிவெறியர்களால் தாக்கப்படுவோம்; மீண்டும் கலவரம் வெடிக்கக் கூடும்” என அவர்கள் அச்சப்படுகின்றனர். “முசுலீம்கள் ஜாட் சாதியினரை நம்ப மறுக்கிறார்கள். முசுலீம்கள் தமது சொந்த கிராமங்களுக்குத் திரும்புவதை ஜாட்டுகள் விரும்பவில்லை” என்றவாறு தீவிரமான சமூகப் பிளவுகளை இந்தக் கலவரம் உருவாக்கியிருக்கிறது.

“குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்; தமக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும்” எனக் கோருகிறார்கள் பாதிக்கப்பட்ட முசுலீம்கள். முசுலீம்களின் காவலன் என்று சுயதம்பட்டம் அடித்துவரும் சமாஜ்வாதி கட்சி அரசோ அவர்களின் இந்த நியாயமான கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்பது மட்டுமல்ல; நிவாரணம் என்ற பெயரில் சமாஜ்வாதி அரசு எடுத்த ஒவ்வொரு நடவடிக்கையும் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாகவே அமைந்துவிட்டன.

கலவரத்தால் பாதிக்கப்பட்டு அல்லது ஜாட் சாதிவெறியர்களால் அச்சுறுத்தப்பட்டு கிராமங்களிலிருந்து வெளியேறிய முசுலீம்களைத் தங்க வைப்பதற்கு 41 முகாம்கள் உ.பி. அரசால் அமைக்கப்பட்டன. எனினும், தமிழகத்திலுள்ள அகதி முகாம்களில் ஈழத் தமிழர்களுக்குக் கிடைக்கும் அற்பமான வசதிகள்கூட, இந்தச் சொந்த நாட்டு அகதிகளுக்குச் செய்து தரப்படவில்லை. வெட்ட வெளியில் தார்பாயினால் அமைக்கப்பட்ட கூடாரங்களில்தான் ஒவ்வொரு முசுலீம் குடும்பமும் தங்க வைக்கப்பட்டனர். குடிநீர், கழிப்பறை உள்ளிட்டு எந்தவொரு அடிப்படையான வசதியும் அவர்களுக்கு அளிக்கப்படவில்லை.

இது குறித்து பத்திரிகை நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, “முகாம் என்ன ஐந்து நட்சத்திர விடுதி போலவா இருக்கும்” எனத் திமிராகவும் அகங்காரத்தோடும் பதில் அளித்தார், ஒரு உயர் அதிகாரி. அகதிகளுக்கு இந்த அடிப்படை வசதிகள் அளிக்கப்படவில்லை என்பது மட்டுமல்ல, அவர்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்குவதும்கூட அக்டோபர் முதல் வாரத்திற்குள்ளாகவே தடாலடியாக நிறுத்தப்பட்டது. அகதிகளாகத் தஞ்சமடைந்த இடத்தில் உணவுக்கு உத்தரவாதமில்லை, ஆண்களுக்கு வேலையில்லை, சிறுவர்கள் பள்ளிக்குச் செல்ல வழியில்லை – என இப்படி பல அவலங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலைமைக்கு முசுலீம்கள் தள்ளப்பட்டனர்.

இவை மட்டுமா? வெட்டவெளியில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களில் குளிர்கால இரவு நேரத்தைக் கழிப்பது சாவை நேருக்குநேர் எதிர்கொள்வதற்கு ஒப்பானதாக அமைந்தது. பல்வேறு முகாம்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட கைக்குழந்தைகளும், சிறுவர்களும் குளிராலும் பனியாலும் நிமோனியா காச்சலுக்கு ஆளாகி இறந்துபோன செய்தி டிசம்பர் மாதத் தொடக்கத்திலேயே அம்பலமானது. ஆனால், சமாஜ்வாதி அரசு இந்தப் பரிதாபகரமான சாவுகளை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. முசுலீம் அகதிகள் முகாம்களில் குளிரால் விறைத்துக் கொண்டிருந்தபோழுது, உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவும், அவரது தந்தை முலயம் சிங் யாதவும் தமது சொந்த கிராமத்தில் கலைநிகழ்ச்சி என்ற பெயரில் பாலிவுட் நடிகர்-நடிகைகளை அழைத்துவந்து குத்தாட்டம் நடத்தி ரசித்துக் கொண்டிருந்தனர். “உலகிலேயே அதிகக் குளிர் வீசும் சைபீரியாவில்கூட யாரும் குளிரால் இறந்து போனதாக வரலாறு கிடையாது” என எகத்தாளமாகக் கூறி, முகாம்களில் நடந்த மரணங்களை மூடி மறைத்தார் அம்மாநில உள்துறைச் செயலர். இந்தச் சாவுகள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்ட பிறகுதான், குளிரால் 11 பேர் மட்டுமே இறந்து போனதாக ஒரு இமாலயப் பொய்யை அவிழ்த்துவிட்டது, உ.பி. அரசு.

இதன் பிறகு நடந்ததோ இன்னும் கொடூரமானது. முகாம்கள் அனைத்தையும் மூடிவிடும் முடிவை எடுத்து அமல்படுத்தத் தொடங்கியது, சமாஜ்வாதி அரசு. முகாம்களில் தங்கியிருக்கும் முசுலீம்களில் ஒரு பகுதியினருக்கு ஐந்து இலட்ச ரூபாய் நட்ட ஈடு அளிக்கப்பட்டிருப்பதைக் காரணம் காட்டி, முகாம்களிலிருந்து முசுலீம்களை வெளியேற்றும் நடவடிக்கை நியாயப்படுத்தப்பட்டது. சொந்த கிராமத்திற்குத் திரும்புவதைவிடப் பசி, குளிர், மரணம் ஆகிய ஆபத்துக்களினூடே, எந்தவிதமான வசதியும் அற்ற முகாம்களில் இருப்பதே மேல் எனக் கருதிய முசுலீம்கள் தம்மை வெளியேற்றும் நடவடிக்கையை எதிர்க்கத் தொடங்கிய பொழுது, அவர்களைச் “சதிகாரர்கள்” எனக் குற்றஞ்சுமத்தினார், முலயம் சிங். உ.பி. மாநில அமைச்சர் சிவபால் சிங், “முகாம்களில் இருப்பவர்கள் அகதிகளே அல்ல; அரசு நிலத்தைக் கைப்பற்றுவதற்காக மதரஸாக்களால் ஏற்பாடு செயப்பட்டு அனுப்பப்பட்டவர்கள்” என நாக்கில் நரம்பில்லாமல் பேசி இழிவுபடுத்தினார்.

மதச்சார்பற்ற கட்சி எனக் கூறிக் கொள்ளும் சமாஜ்வாதிக் கட்சியின் இலட்சணம் இதுவென்றால், மதச்சார்பின்மையையும், முசுலீம்களின் நலனைப் பாதுகாப்பதையும் மொத்தமாகக் குத்தகை எடுத்துக் கொண்டிருப்பதாகப் பீற்றிக் கொள்ளும் காங்கிரசு கட்சியைச் சேர்ந்த யோக்கியர் திருவாளர் ராகுல் காந்தி, “ஆள் பிடிப்பதற்காக பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. இந்த முகாம்களை வட்டமிடுவதாக”ப் பீதி கிளப்பி விட்டார்.

குஜராத் படுகொலையின் பின் அமைக்கப்பட்ட அகதி முகாம்களை அம்மாநில அரசு புறக்கணிப்பது குறித்துக் கேட்டபொழுது, “நாங்கள் பிள்ளை பெறும் தொழிற்சாலைகளை நடத்த விரும்பவில்லை” என ஏகடியமாகப் பதில் அளித்தார், மோடி. ராகுலோ இன்னும் ஒருபடி மேலே போ, முகாம்களைத் தீவிரவாதிகளைப் பிரசவிக்கும் இடமாக அடையாளம் காட்டுகிறார்.

முகாம்களில் அகதிகளாகத் தஞ்சமடைந்த அனைவருக்கும் நிவாரண உதவி வழங்கப்படவில்லை என்பது ஒருபுறமிருக்க, நட்ட ஈடு பெற்றவர்களிடம், “இனி நானோ எனது குடும்பத்தாரோ எந்தச் சூழ்நிலையிலும் எனது சொந்தக் கிராமத்திற்குத் திரும்பிச் செல்ல மாட்டோம்; அரசு கொடுத்த நிவாரண பணத்தைக் கொண்டு வேறு எங்காவது நானே எனது சொந்த முயற்சியில் குடும்பத்தைக் குடியமர்த்திக் கொள்வேன்” என்பன உள்ளிட்டுப் பல நிபந்தனைகளை விதித்துப் பிரமாண பத்திரத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டு ஐந்து இலட்ச ரூபாய் நட்ட ஈட்டை அளித்திருக்கிறது, சமாஜ்வாதி அரசு.

இந்து மதவெறிக் கும்பலும் ஜாட் சாதிவெறியர்களும் சட்டவிரோதமான பயங்கரவாதப் படுகொலைகள், தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள் மூலம் முசுலீம்களைக் கிராமங்களிலிருந்து துரத்தியடித்தனர் என்றால், ‘மதச்சார்பற்ற’ சமாஜ்வாதி அரசோ பணத்தின் மூலம் சட்டபூர்வமான முறையில் ஏழை முசுலீம்களைத் தமது சொந்த கிராமங்களிலிருந்து நிரந்தரமாக அப்புறப்படுத்த முயலுகிறது. இந்த வகையில் இந்து மதவெறிக் கும்பலின் திட்டத்தை நிறைவேற்றிக் கொடுக்கும் கையாளாக ‘மதச்சார்பற்ற’ சமாஜ்வாதி செயல்பட்டிருக்கிறது என்றே கூறலாம். பா.ஜ.க.வும் மோடியும் அம்பலமான இந்து மதவெறியர்கள் என்றால், காங்கிரசும் சமாஜ்வாதிக் கட்சியும் நண்பன் என்ற போர்வையில் செயல்படும் துரோகிகள் என்பதுதான் வேறுபாடு.

– செல்வம்
___________________________________
புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2014
___________________________________