Saturday, May 10, 2025
முகப்புபார்ப்பனிய பாசிசம்பார்ப்பன இந்து மதம்பென்குயினுக்கு அருந்ததி ராய் கண்டனம்

பென்குயினுக்கு அருந்ததி ராய் கண்டனம்

-

சிக்காகோ பல்கலைக் கழகத்தில் சமயங்களின் வரலாற்றுத் துறை பேராசிரியரான வென்டி டோனிகர் எழுதிய “இந்துக்கள் : ஒரு மாற்று வரலாறு” (The Hindus : An Alternative History) என்ற நூல் பென்குயின் நிறுவனத்தால் 2009-ம் ஆண்டு வெளியிடப்பட்ட து.

வெனடி டோனிகர்
வெனடி டோனிகர்

இந்துக்கள் : மாற்று வரலாறு என்ற புத்தகத்தில் இந்திய சமூக அடுக்குமுறையில் ஒடுக்கப்பட்டிருந்த தலித்துகள் மற்றும் பெண்களின் தரப்பிலிருந்து இந்திய வரலாற்றை ஆய்வு செய்து முன் வைத்திருக்கிறார் வெனடி டோனிகர் .

இந்நூல் இந்து மதத்தை இழிவுபடுத்துவதாகக் கூறி டெல்லியைச் சேர்ந்த சிக்ஷா பச்சாவோ ஆந்தோலன் சமிதி என்ற இந்துத்துவா அமைப்பு  வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த அமைப்பு ஆர்எஸ்எஸ்சின் கல்விப் பிரிவாக செயல்பட்டு வருகிறது.

நீதிமன்ற ஆணையின் பேரில் அந்த அமைப்புடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்ட பென்குயின்,  “இந்துக்கள்” புத்தகத்தின் அனைத்து பிரதிகளையும் புத்தக கடைகளிலிருந்து திரும்பப் பெற்று கூழாக்கப் போவதாக அறிவித்திருக்கிறது.

தனது சின்ன விஷயங்களின் கடவுள் (God of Small Things), வெட்டுக்கிளிகளுக்கு காது கொடுத்தல் (Listening to Grasshoppers),  உடைந்த குடியரசு (Broken Republic) போன்ற நூல்களை வெளியிட்ட பென்குயின் நிறுவனத்தின்  இந்த முடிவைக் கண்டித்து அருந்ததி ராய் எழுதிய கடிதத்தின் மொழிபெயர்ப்பை இங்கு தருகிறோம்.  

அருந்ததி ராய் பென்குயின் நிறுவனத்துக்கு எழுதிய கடிதம்

அருந்ததி ராய்
அருந்ததி ராய்

வென்டி டானிகரின் “இந்துக்கள் : ஒரு மாற்று வரலாறு” (The Hindus : An Alternative History) என்ற நூலை ‘பாரதத்தின்’ புத்தக நிலையங்களிருந்து திரும்பப் பெற்று அதனைத் தூளாக்க நீங்கள் முடிவு செய்திருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. அதிகம் தெரிய வராத ஒரு இந்து அடிப்படைவாத இயக்கத்துடன் நீதிமன்றத்துக்கு வெளியே போட்டுக் கொண்ட  ஒப்பந்தத்தை நீங்கள் நிறைவேற்றியிருக்கிறீர்கள்.

நீங்கள் எதைக் குறித்து பயப்படுகிறீர்கள் என்று தயவு செய்து எங்களுக்கு சொல்லுங்கள். நீங்கள் யாரென்பதை மறந்து விட்டீர்களா ? உலகில் பழமையும், பெருமையும் கொண்ட பதிப்பகங்களுள் ஒன்றல்லவா, பென்குயின் ? பதிப்பகங்கள் லாபமீட்டும் வர்த்தகமாக மாறுவதற்கு முன்பிருந்தே நீங்கள் பதிப்புத் துறையில் செயல்பட்டு வருகிறீர்கள். சோப், கொசு மருந்து போன்ற அழிந்து போகும் பொருட்களில் ஒன்றாக புத்தகங்கள் மாறுவதற்கு முன்னரே நீங்கள் இருக்கிறீர்கள்.

உலகின் தலைசிறந்த எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தியவர்கள் அல்லவா, நீங்கள். அவர்களுக்கு உங்கள் உதவி தேவைப்பட்ட தருணங்களில் ஒரு பதிப்பகத்தார் எப்படி துணை நிற்க வேண்டுமோ அப்படி துணை நின்றீர்கள். மிகவும் மோசமான வன்முறை மற்றும் அச்சுறுத்தல்கள் எழுந்த போது , கருத்து சுதந்திரத்துக்காக போராடியிருக்கிறீர்கள்.

ஆனால், இப்போது அது மாதிரி எந்த சூழலும் இல்லை. பத்வா விதிக்கபடவில்லை; புத்தகத்துக்கு தடை இல்லை; நீதிமன்ற ஆணை இல்லை. ஆனால், நீங்கள் சரிந்து விழுந்து கிடப்பதோடு மட்டுமல்லாமல், அருவருக்கத்தக்க அவமானத்தை உங்களுக்கு தேடிக் கொண்டிருக்கிறீர்கள். அதுவும் இராப்பூச்சி போன்ற ஒரு அமைப்பிடம் சரணடைந்துள்ளீர்கள். ஏன் ? ஒரு சட்டப் போராட்டத்தை தொடர்ந்து நடத்த  வேறு யாருக்கு இருப்பதை விடவும் அனைத்து ஆதாரங்களும் கொண்டவர்கள் நீங்கள். உங்கள் நிலைப்பாட்டில் நீங்கள் உறுதியாக நின்றிருந்தால் அறிவுச் சமூகத்தின் பேராதரவு உங்கள் பக்கம் மலை போல் குவிந்திருக்கும். எழுத்தாளர்களில் பெரும்பான்மையோர் – நீங்கள் அடையாளப்படுத்திய எழுத்தாளர்கள்முழுமையாக இல்லை என்றாலும் – ஆதரவளித்திருப்பார்கள். உங்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை எங்களுக்கு விளக்க வேண்டும். உங்களை அச்சுறுத்தியது எது ? உங்கள் எழுத்தாளர்களான என்னைப் போன்றோரிடமாவது அதனைப் பகிரும் குறைந்தபட்சக் கடமை உங்களுக்கு இருக்கிறது.

இந்துக்கள் : ஒரு மாற்று வரலாறு
இந்துக்கள் : ஒரு மாற்று வரலாறு

தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் உள்ளன. பாசிஸ்ட்கள் தேர்தல் பிரச்சாரத்தை மட்டுமே ஆரம்பித்து உள்ளார்கள். ஆம், இது அசிங்கமான சூழல் தான். எனினும் அவர்கள் அதிகாரத்தில் இல்லை. இன்னும் இல்லை. ஆனால் நீங்கள் இப்போதே மண்டியிட்டுள்ளீர்கள்.

இந்த பிரச்சினையை நாங்கள் எப்படி புரிந்து கொள்ள ? இனிமேல் நாங்கள் இந்துத்துவ ஆதரவு புத்தகங்களை மட்டுமே எழுத வேண்டுமா? இல்லை என்றால் புத்தக பிரதிகள் அனைத்தும் ‘பாரதத்தின்’ (உங்கள் அறிக்கையில் பயன்படுத்தப்பட்ட வார்த்தை) புத்தக நிலையங்களிலிருந்து நீக்கப்பட்டு, தூளாக்கப்படும் அபாயத்தை எதிர் கொள்ள வேண்டுமா?  பென்குயின் மூலம் தமது புத்தகங்களை வெளியிட விரும்பும் எழுத்தாளர்களுக்கு என்று பென்குயின் ஏதேனும் ஆசிரிய நெறிமுறைகள் வழங்குமா ? ஒரு கொள்கை விளக்க அறிக்கை அளிக்கப்படுமா ?

இப்படி ஒன்று நடந்ததை என்னால் நம்பவே முடியவில்லை. இது உங்கள் எதிரி பதிப்பகத்தின் பொய்ப்பிரச்சாரம் என்று சொல்லுங்கள். அல்லது முட்டாள் தின நையாண்டி ஒன்று மு்ன் கூட்டியே கசிந்து விட்டது என்றாவது சொல்லுங்கள். தயவு செய்து ஏதாவது சொல்லுங்கள். நடந்தது உண்மையில்லை என்று அறிவியுங்கள்.

இதுவரையிலும் என் எழுத்துக்களை பென்குயின் பதிப்பித்தது மகிழ்ச்சிக்குரியதாக இருந்தது. ஆனால், இப்போது ?

நீங்கள் செய்தது எங்கள் அனைவரையும் கடுமையாக பாதித்துள்ளது.

– அருந்ததிராய்

தமிழில், சுக்தேவ்.

மேலும் படிக்க