கடந்த 12-ம் தேதி பாராளுமன்றத்தில் ரயில்வே இடைக்கால வரவு செலவு திட்டம் தாக்கல் செய்யப்பட்ட போது இந்திய ஜனநாயகத்தின் ‘மாண்பு’ பட்டொளி வீசிப் பறந்ததை அடுத்து வாயில்லா அப்பாவிப் பூச்சியான மன்மோகன் சிங் ”இந்த அவையில் நடந்த விஷயங்களைப் பார்த்து எனது இதயத்தில் ரத்தம் வடிகிறது” என்றார்.

ரயில்வே வரவு செலவு திட்டம் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனநாயகத்தை ஒரு கை பார்த்து விடும் முடிவோடுதான் வந்திருந்தார்கள். இந்த ஜனநாயக ஆர்வம் வரும் தேர்தலில் வாக்குகளை கவர வேண்டும் என்பதற்காக வந்திருக்கும் ஒரு இடைவெளிப் பணி. தி.மு.க உறுப்பினர்களுக்கு தமிழக மீனவர்கள் படும் துன்பங்கள் குறித்த போன ஜென்மத்து நினைவு திடீரென்று பீறிட்டு அடித்திருக்கிறது. ஆந்திரத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் தெலுங்கானாவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் இரண்டு குழுக்களாக பிரிந்து நின்று தர்மயுத்தத்தில் தங்கள் பங்களிப்பை செய்திருக்கிறார்கள்.
எல்லோரும் மைய மண்டபத்தில் நின்று ஜனநாயகத்தை ஒரு கை பார்த்துக் கொண்டிருக்கும் போது நாம் மட்டும் சும்மா இருந்தால் அம்மாவின் ஆத்திரத்திற்கு ஆளாக நேரிடும் என்கிற கொத்தடிமைப் பார்வையோடு அ.தி.மு.க உறுப்பினர்களும் மைய மண்டபத்தில் குழுமியிருக்கிறார்கள். சும்மா குழுமினால் போதுமா, எனவே “எங்களுக்கு நீதி வேண்டும்” என்று கோஷங்களை எழுப்பியிருக்கிறார்கள் – எதற்காக நீதி என்று நமக்குத் தெரியாது; அவர்களும் எதற்காக நீதி கேட்கிறோம் என்று சொல்லவில்லை. அம்மாவின் அருள் பெற கத்தும் அந்த காக்கைகளுக்கு கோரிக்கை என்பது எந்தக் கந்தாயமாய் இருந்தால் என்ன?
பா.ஜ.கவினரும் மைய மண்டபத்தில் குழுமியிருக்கிறார்கள். இந்தக் குழப்பமான வரலாற்றுத் தருணத்தில் நாம் என்ன செய்ய வேண்டுமென்று அவர்களுக்கு குழப்பம். இத்தனை கட்சிகளும் களத்தில் இறங்கும் போது நாம் மட்டும் கடமையை ஆற்றாமல் போனால் வரலாறு மன்னிக்காது என்று புரட்சிகரமாக சிந்தித்த உதிரிக் கட்சிகளான ”வலது” டி.ராஜா கட்சியும் ”இடது” பிரகாஷ் காரத் கட்சியும் மைய மண்டபத்திற்கு விரைந்தோடி இருக்கிறார்கள். பேப்பர் வெயிட்டுகள் பறக்க, மைக் செட்டுகள் சிதற, நாற்காலிகள் வானவீதி உலா செல்ல, கெட்ட வார்த்தைகளும், தள்ளு முள்ளுகளுமாக ஓட்டுக் கட்சி ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டது. இதனால் பிரதமரின் இதயத்தில் ஆனந்தக் கண்ணீர்தான் வந்திருக்க வேண்டும். ‘ஜனநாயகத்தை’ சமாளிக்க இந்த கோமாளித்தனங்களை விட வேறு எதுவும் உதவுமா என்ன?

இது 12-ம் தேதி கள நிலவரம். அதற்கடுத்த நாள் தெலுங்கானா மசோதா அறிமுகம் செய்யப்படும் நாள். கிறுக்குப் பிடித்த குரங்குக்கு சாராயம் ஊற்றிக் கொடுத்த கதையானது. பாராளுமன்றம் துவங்கும் போதே ஆந்திர உறுப்பினர்கள் ஒரு தீர்மானத்தோடும் கைப் பையில் போதுமான அளவுக்கு ஜனநாயகத்தோடும் தான் நுழைந்துள்ளனர். தெலுங்கானா மசோதா வாசிக்கப்பட்டது என்று பரவலாக முதலாளித்துவ ஊடகங்களில் பேசிக் கொள்கிறார்கள், என்றாலும் களத்தில் நடந்ததை தொலைக்காட்சியில் நேரலையாக பார்த்த வகையில் நம்மால் உறுதியாக எதையும் சொல்ல முடியவில்லை.
பன்னிரண்டு மணி அளவில் பாராளுமன்றத்தின் மைய மண்டபத்தில் நடந்து கொண்டிருந்த போர்களத்திற்குள் வியூகம் வகுத்து நுழையும் சீமாந்திராவைச் சேர்ந்த காங்கிரசு நாடாளுமன்ற உறுப்பினர் ராஜகோபால், தனது கைப்பையில் வைத்திருந்த “மிளகு பொடி ஸ்ப்ரே” ஆயுதத்தை எடுத்து எதிரி அணிவரிசையைச் சேர்ந்த வீரர்கள் மேல் பீய்ச்சி அடிக்கிறார். அவர் களத்தில் பேரழிவு ஆயுதங்களோடு நுழைந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்த எதிரணியினர் தங்களது யுத்த தந்திரங்களை உடனடியாக மாற்றியமைக்கிறார்கள். மைக் செட்டுகளையும் கணினிகளையும் விசிறியடிக்கும் எதிரணியினர் ராஜகோபாலின் தெலுங்கானா எதிர்ப்பு அணிக்கு கடுமையான முறியடிப்பு தாக்குதலை தொடுக்கிறார்கள்.
ஜனநாயக காவலர் ராஜகோபாலின் களச் செயல்பாடுகளைப் பார்த்து நீங்கள் அவரை ஆனந்த விகடனில் வரும் அரசியல்வாதியைப் போல் பட்டா பட்டி அண்ட்ராயர், ஏற்றிக் கட்டிய வேட்டி, முறுக்கு மீசை, கன்னத்தில் மரு என்றெல்லாம் நினைத்துக் கொள்ளத் தேவையில்லை. அவர் ஆந்திரத்தைச் சேர்ந்த புகழ் பெற்ற தொழில் அதிபர். வருடாந்திரம் 13 ஆயிரம் கோடி ரூபாய் புரளும் அளவிற்கு லாபம் கொழிக்கும் தொழிலை நடத்தி வருகிறார். 50 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்களுக்கு அதிபதியான காங்கிரசைச் சேர்ந்த சாதாரண ஏழை தான் அவர்.

போர்க்கள காட்சிகளுக்கு வருவோம். ராஜகோபாலின் தாக்குதலில் பாதிப்படைந்த எதிரணியைச் சேர்ந்த மூன்று வீரர்களுக்கு பார்வையில் பாதிப்பு ஏற்பட்டது – இன்னொருவர் எங்கே அடிவாங்கினார் என்று சரியாக புலப்படவில்லை, மாரடைப்பு ஏற்பட்டது. காயமடைந்த வீரர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த களேபரங்களுக்கு இடையே தெலுங்கு தேசத்தைச் சேர்ந்த வீரர் வேணுகோபால் மறைத்து வைத்திருந்த கத்தியை உருவி கூட்டத்திற்குள் சொழட்டி சொழட்டி வூடு கட்டினார் என்று மத்திய அமைச்சர் கமல்நாத் தெரிவித்தார்.
”நான் வைத்திருந்தது ஆயுதம் கத்தியில்லை. நேர்மையாக ஜனநாயக கடமை ஆற்றிய என்னைப் பற்றி அவதூறு செய்கிறார்கள்” என்று இதை கடுமையாக மறுத்துள்ள வேணுகோபால் ரெட்டி, தான் ஜனநாயகத்துக்கான போர் விதிமுறைகளுக்கு உட்பட்டு மைக்கை உருவித் தான் அடித்தேன் என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
களத்திலிருந்து காயமடைந்த வீரர்கள் வெளியேறிய காட்சியை நீங்கள் கண்டிருக்க வேண்டும். சீமைப் பன்றிகளைப் போல் அசங்காமல் கசங்காமல் வளர்ந்த அந்த உடல்கள் சோர்ந்து தளர்ந்து போயிருந்தது. தண்ணீர் மின்சாரம் கேட்டோ, நிலப்பறிப்புகளுக்கு எதிராகவோ போராடும் சாமானிய மக்களைப் போல் கண்ணீர் புகைக் குண்டுகளுக்கு பழக்கமில்லாதவர்கள் அல்லவா? அது தான் சாதாரண மிளகுத் தண்ணீருக்கு அசந்து விட்டார்கள்.
இப்படியாக ஜனநாயகத்துக்கான தர்மயுத்தம் உச்சகட்டத்தை அடைந்ததைத் தொடர்ந்து பஞ்சாயத்து நடுவர் மீரா குமார் உடனடியாக ஆட்ட விதிகளுக்கு புறம்பாக கள்ள ஆட்டம் ஆடிய 16 உறுப்பினர்களை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும் 17ம் தேதி நாடாளுமன்ற பாதுகாப்புக் குழு அவசர ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்த உள்ளதாகவும், அதில் பாராளுமன்ற களத்திற்கு வரும் எம்.பிக்களை சோதனையிட்டு பேரழிவு ஆயுதங்கள் ஏதும் இருந்தால் பறிமுதல் செய்வது தொடர்பாக முடிவெடுக்க உள்ளதாகவும் அறிவிப்பு வெளியிட்டார்.
காங்கிரசு, பா.ஜ.க, காரத் கட்சி, டி.ராஜா கட்சி, தி.மு.க, அ.தி.முக என்று சர்வகட்சியைச் சேர்ந்த வீரர்களும் இதனால் கலக்கமடைந்திருப்பதாக டில்லி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்கள் அலட்டிக் கொள்வதைப் பார்த்தால் நமக்கு ஆச்சரியமாக உள்ளது. உண்மையில் ஜனநாயகம் பண்பட்டுள்ள தமிழகத்தில் சட்டமன்ற ஜனநாயகத்தின் மாண்பு எப்படி குண்டுக்கட்டாக காப்பாற்றப்படுகிறது என்கிற பாடத்தை நமது சபாநாயகர் தனபாலிடம் கேட்டால் தெளிவாக சொல்லிக் கொடுத்து விடுவாரே?
நடந்த சம்பவங்கள் பாராளுமன்ற ஜனநாயகத்துக்கு நேர்ந்த மிகப் பெரிய அவமானம் என்கிறார் ஜஸ்வந்த் சிங். இருக்காதா பின்னே கைகள் பேசிக் கொண்டிருக்கும் போது கத்திகளுக்கு என்ன வேலை என்கிற நியாயமான வருத்தம் அவருக்கு வந்ததில் வியப்பில்லை. ஆனால், வழக்கமாக பாராளுமன்ற மாண்பு குலையும் போதெல்லாம் சவுண்டு கொடுக்கும் “டி.ராஜா கட்சியும்” “பிரகாஷ் காரத் கட்சியும்” இந்த முறை ஏன் இன்னும் வாய் திறக்கவில்லை என்பது தான் வியப்பாக இருக்கிறது.
ஒருவேளை இந்தச் சண்டைகள் இல்லையென்றாலும் பாராளுமன்றம் ஒரு அரட்டை மடம்தான், பொழுது போக்கு ரோட்டரி கிளப்தான் என்பதில் மாற்றமில்லை. அதனால்தான் ஊடகங்கள் மற்றும் அறிவு ஜீவி கனவான்கள் இந்த தெருச்சண்டை ஜனநாயகத்தை மட்டும் எதிர்த்து விட்டு, ரோட்டரி கிளப் ஜனநாயகத்தை ஆதரிக்கிறார்கள். நம்மைப் பொறுத்தவரை குழாயடிச் சண்டையும், ரோட்டரி கிளப் நளினங்களும் வேறு வேறு இல்லை என்கிறோம்.
எப்படியிருந்தாலும், 12-ம் தேதி நடந்த சம்பவங்களை அடுத்து பிரதமரின் இதயத்தில் ரத்தம் வழிந்ததோ இல்லையோ, பகத் சிங்கின் கல்லறையிலிருந்து எக்காளச் சிரிப்பொலி வழிந்து கொண்டேயிருக்கிறது. அதன் அதிர்வுகள் பாராளுமன்ற சுவர்களில் மீண்டும் மீண்டும் எதிரொலித்துக் கொண்டேயிருக்கிறது.
பிரதமரின் வருத்தத்தில் அர்த்தம் இல்லாமல் இல்லை. சுமார் இரண்டு டஜனுக்கும் மேற்பட்ட பன்னாட்டு சுரங்க நிறுவனங்களுக்கு நமது நிலத்தையும் காடுகளையும் மலைகளையும் அள்ளி ஒப்படைக்க வகைசெய்யும் உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களுக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் பெற்று வைத்திருக்கிறார். இனி அந்த மசோதாக்களை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவது என்கிற ஒரு சடங்கு மிச்சமிருக்கிறது. அடுத்த இரண்டு மாதங்களில் தேர்தல் வேறு வருவதால், போட்டுக் கொண்ட டீலிங்கை கையிலிருக்கும் கடைசி கூட்டத் தொடரிலாவது முடித்து விட வேண்டும் என்பது அவரது தவிப்பு. இதை விட்டால் படியளந்த எசமான்கள் அடுத்து அமையவிருக்கும் அமைச்சரவையிடம் புதிதாக டீலிங் போட வேண்டியிருக்கும் அல்லவா?
அந்த உள்ளக் கொதிப்பைத் தான் ரத்தினச் சுருக்கமாக “இதயத்தில் ரத்தம் வழிகிறது” என்று வெளிப்படுத்தியிருக்கிறார். மன்மோகன் குறைவாக பேசினாலும் செறிவாகப் பேசுவார் என்று முதலாளித்துவ ஊடகங்கள் சொல்வதிலும் உண்மை இருக்கத்தான் செய்கிறது.
இவர்கள் தான் நமது ஓட்டுக் கட்சி ஜனநாயகம் பெற்றெடுத்த ஜனநாயகத்தின் குலக் கொழுந்துகள். இவர்களைத் தான் மக்கள் ஓட்டுப் போட்டு தெரிவு செய்து அனுப்புகிறார்கள். இந்திய ஜனநாயகத்தின் மகுடத்தில் பதிக்கப்பட்டுள்ள ஓட்டுக்கட்சி ரத்தினங்களின் ஒளி கண்களைக் கூசச் செய்கிறதோ இல்லையோ, அவர்களை அனுப்பி வைத்த உங்களுக்கு உள்ளம் கூச வில்லையா?
– தமிழரசன்.