privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கநீதித்துறைக்கு கிரிமினல் சட்டமேதை ஜெயாவின் சவால்கள்!

நீதித்துறைக்கு கிரிமினல் சட்டமேதை ஜெயாவின் சவால்கள்!

-

நாட்டின் சட்டத்துறை-நீதித்துறை மாணவர்கள் ஜெயலலிதாவின் கிரிமினல் சட்ட சாகசங்களில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியவை நிறையவே உள்ளன. அவை சட்டப் பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சிக்கு வைக்கத் தகுந்தன. இந்த உண்மையை சட்ட – நீதி வல்லுநர்கள் எப்படிக் கவனிக்கத் தவறினர் என்பது வியப்பாகவே இருக்கிறது!

பெங்களூருவில் நடந்து வரும் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் அடுத்தடுத்துப் பல வினோதங்கள்! வழக்கை “நடத்தும்” அரசுத் தரப்பின் கண்களில் இவ்வளவு காலமும் விரல்விட்டு ஆட்டிவந்த ஜெயலலிதா தரப்பினர் இப்போது திருட்டு “முழிமுழிக்கின்றனர்.” காரணம், அவர்கள் பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்கைப் பிடித்து விட்டதுதான்!

ஜெயா சொத்து
ஜெயாவின் போயஸ் தோட்டக் குகையிலிருந்து கைப்பற்றப்பட்ட தங்க-வைர நகைகள், வெள்ளிச் சாமான்கள் மற்றும் கைக்கடிகாரங்கள் (கோப்புப் படம்).

ஜெயலலிதாவின் ஆலோசகராக இருந்தவர் வி.பாஸ்கரன். இவர் ஒரு தணிக்கையாளர், கருத்துக்கணிப்பு நிபுணர். ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கிற்காக 1996-ம் ஆண்டு கைப்பற்றப்பட்ட பொருட்களில் 55 இலட்சம் ரூபாய் மதிப்புடைய வெள்ளிப் பொருட்களை அரசுக் கருவூலத்தில் இருந்து 2003-ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, நிபந்தனையுடன் இவர் வாங்கிப் போயுள்ளார். “அவற்றை மீட்டுச் சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைத்த பிறகுதான் வழக்கைத் தொடரவேண்டும், அதுவரை வழக்கைத் தள்ளிப் போடவேண்டும்” என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் பவானிசிங் கடந்த மாதம் ஒரு மனு போட்டார்.

ஆனால், அந்த நபரோ மூன்று மாதங்களுக்கு முன்பே செத்துப் போய்விட்டவர். வழக்கில் அரசுத் தரப்புக்கு உதவுவதற்காகத் தானே முன்வந்து சேர்ந்துகொண்ட தி.மு.க. வழக்கறிஞர் இந்த உண்மையைப் போட்டுடைத்த பிறகு, சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதாவுக்குச் சம்மன் அனுப்பியது. அவர் உயிருடன் இருக்கிறாரா, இல்லையா என்று ஜெயலலிதாவின் கைக்கூலியான அரசு வழக்கறிஞருக்குத் தெரியவில்லையாம்! 10 நாட்கள் விசாரணைக்குப் பிறகும் மாநிலப் போலீசுக்கும் உளவுத்துறைக்கும் தெரியவில்லையாம்! குற்றவாளிக்கும் அவரது வழக்கறிஞர்களுக்கும்கூடத் தெரியவில்லையாம்! அந்த வி. பாஸ்கரன் வேலூர் மருத்துவமனையில் புற்று நோயால் இறந்துபோனதற்கான இறப்புச் சான்றிதழை தி.மு.க. வழக்கறிஞர் சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைத்த பிறகு மாநிலப் போலீசும் உளவுத்துறையும் அதை நம்புவதாகச் சொன்னபோதும் ஜெயலலிதாவின் கைக்கூலியான அரசு வழக்கறிஞர், தான் இன்னமும் நம்பவில்லை என்று சாதிக்கிறார்.

வி.பாஸ்கரன் மரணமடைந்த செய்தி அப்போதே பிரபல ஆங்கில நாளிதழ் “தி இந்து’’வில் கொட்டை எழுத்துகளில் வந்திருக்கிறது. ஏதாவது ஒரு குக்கிராமத்தில் தனது கழக இரத்தத்தின் இரத்தம் ஒருவர் செத்துப்போனால் “நமது எம்ஜியாரில்” இரங்கலைப் பெட்டிச்செய்தியாகப் போடும் ஜெயாவின் பாசிசப் பரிவாரங்களுக்கு அவரது ஆலோசகராக இருந்தவர், “அவரது” 55 இலட்சம் ரூபாய் மதிப்புடைய வெள்ளிப் பொருட்களை வாங்கிக்கொண்டு போனவர் உயிருடன் இருக்கிறாரா, இல்லையா என்று தெரியவில்லையாம்! நம்பமுடிகிறதா? இதைச் சிறப்பு நீதிமன்ற நீதிபதி கேட்டபோது தலைகுனிந்து மவுனமாக இருந்தது, ஜெயலலிதாவின் வழக்கறிஞர் பட்டாளம்.

ஜெயா, சசி
தங்க-வைர நகைகளை அணிந்து கொண்டு அலங்காரப் பதுமைகளாக “போஸ்” கொடுக்கும் ஜெயா-சசிகலா. அடித்த கொள்ளைக்கு ஆதாரபூர்வமான சான்று! (கோப்புப் படம்)

கேப்பையில் நெய் வடிகிறதென்றால் கேட்பவன் முட்டாள்தான். ஆனால் சொல்பவன் ஏய்ப்பவன் இல்லையா! 55 இலட்சம் ரூபாய் மதிப்புடைய அந்த வெள்ளிப் பொருட்களோ ஜெயலலிதாவின் வீட்டில்தான் இருக்கின்றன என்று செத்துப்போனவரின் வாரிசான மகன் கூறுகிறார்! என்னவொரு கிரிமினல் புத்தி! ஒப்படைக்கக் கோரும் பொருட்களும் தம்மிடமேயுள்ளது; ஒப்படைக்க வேண்டியவரும் உயிரோடில்லை. அவற்றை பத்தாண்டுகளுக்கு முன்பு வாங்கிப்போய், மூன்று மாதங்களுக்கு முன் செத்துப் போனவர், அவற்றை ஒப்படைத்த பிறகுதான் வழக்கைத் தொடரவேண்டும், அதுவரை வழக்கைத் தள்ளிப் போட வேண்டும் என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் மூலமாகவே ஒரு மனுப் போட வைக்கிறார்கள். இதன் நோக்கம் யாவரும் எளிதில் புரிந்துகொள்ளக் கூடியது தான்!

வருமானத்திற்கு மேல் 66 கோடி ரூபாய்க்கு மேல் சொத்துக் குவித்தது மற்றும் 48 கோடி ரூபாய்க்கு மேல் இலண்டனில் நட்சத்திர ஓட்டல் வாங்கியது ஆகிய வழக்குகளில் 1997-இல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு 17 ஆண்டுகளாகி விட்டன. “குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது; ஆனால், இன்னமும் அது நிரூபிக்கப்பட்டுத் தண்டிக்கப்படவில்லையே!” என்ற வழக்கமான வாதத்தை வைத்துத்தான் ஜெயலலிதா போன்ற பெருச்சாளிகள் சுதந்திரமாகத் திரிகிறார்கள் மேற்கண்டவாறான கிரிமினல் சட்ட மோசடிகள் மூலம் ஜெயலலிதாவும் அவரது கூட்டாளிகளும் இத்தனை காலமும் தப்பித்து வருகின்றனர். ஆனால், குற்றப்பத்திரிக்கை எதுவும் இல்லாமலேயே, விசாரணை எதுவும் நடத்தப்படாமலேயே பல ஆயிரக்கணக்கான அப்பாவிகள் பல ஆண்டுகளாக இந்தியச் சிறைகளில் சும்மா இல்லை, போலீசு, சிறைத்துறை, நீதித்துறை அதிகாரிகளுக்குக் கொத்தடிமை ஊழியம் செய்வற்கென்றே அடைக்கப்பட்டுக் கிடக்கிறார்கள்.

ஜெயலலிதா போன்ற பெருச்சாளிகளோ, இலஞ்ச -ஊழல், அதிகாரமுறைகேடுகள் போன்ற கிரிமினல் குற்றங்கள் புரிந்துவிட்டு, கிரிமினல் சட்ட மோசடிகள் செய்து தொடந்து சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும், மேலும் சொகுசாகவும் வாழ்கிறார்கள். இந்த நிலையிலேயே தேர்தல்களில் நின்று, மீண்டும் மீண்டும் பதவிக்கு வந்து, அதிகாரமும் வசதியும் பெற்று வாழ்வதோடு, தாங்கள் எதிர்கொள்ளும் வழக்குகளிலிருந்து விடுபடுவதற்காக அந்த அதிகாரத்தையும் கேடாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

சுதாகரன் இளவரசி
ஜெயாவின் கூட்டுக் களவாணிகள் : ஜெயாவின் முன்னாள வளர்ப்புப் பிராணி சுதாகரன் மற்றும் சசிகலாவின் அண்ணி இளவரசி (கோப்புப் படம்)

இந்த வகையில்தான் ஜெயலலிதா கும்பல் மீது 1997-ம் ஆண்டு மூன்று சிறப்பு நீதி மன்றங்களில் தொடுக்கப்பட்ட 48 இலஞ்ச-ஊழல், அதிகாரமுறைகேடுகள் வழக்குகளில் சொத்துக் குவிப்பு மற்றும் இலண்டன் ஓட்டல் வழக்கு தவிர, 47- வழக்குகளில் இருந்து விடுபட்டுக் கொண்டது.

1998-நாடாளுமன்றத் தேர்தல்களில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து வாஜ்பாய் அமைச்சரவையில் பங்கேற்ற ஜெயலலிதா கும்பல், அப்போதைய தி.மு.க. ஆட்சியைக் கலைக்கவும் சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுபடவும் நிர்பந்தித்தது. வாஜ்பாய் தலைமையிலான கூட்டணி அரசுடனான பேரங்கள் படியாததால், சுப்பிரமணிய சாமியின் தூண்டுதலால் காங்கிரசை நம்பி ஜெயலலிதா கும்பல் ஆட்சியைக் கவிழ்த்தது. அதன் இந்த சந்தர்ப்பவாத, பிழைப்புவாத அரசியல் காரணமாக 1999 நாடாளுமன்றத் தேர்தல்களில் தோல்வியுற்றது.

2001-ல் காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்து, இரண்டாம் முறையாக அதிகாரத்தைப் பிடித்த ஜெயலலிதா கும்பல் தானே நியமித்த அரசுத் தரப்பு வழக்கறிஞரையும் ஊழல் தடுப்புப் போலீசையும் பயன்படுத்தி, சொத்துக் குவிப்பு வழக்கில் ஏற்கெனவே சாட்சியமளித்துவிட்ட 74 நபர்களை மீண்டும் வழக்கு மன்றத்துக்கு அழைத்து, 63 பேரை பிறழ் சாட்சியமாக மாற்றிவிட்டது. இந்தக் குற்றச்சாட்டை உறுதிசெய்துதான், அதிகாரத்தில் இருந்து கொண்டு இவ்வாறான கிரிமினல் சட்ட மோசடிகளில் ஜெயலலிதா ஈடுபடுவார் என்பற்காகத்தான், உச்ச நீதிமன்றம் 2001 மே மாதம் சொத்துக் குவிப்பு வழக்கை சென்னையிலிருந்து பெங்களூருவிற்கு மாற்றியது. அப்போது 6 மாதங்களில் அதை முடிக்கும்படி உச்சநீதி மன்றம் உத்திரவு போட்டது. ஆனாலும், மேலும் 13 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கை இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது, ஜெயலலிதா கும்பல். இந்த வழக்கில் மட்டும் சுமார் 500 தள்ளிவைப்புகள் வாங்கி சாதனை படைத்து, “வாய்தா ராணி” என்று பட்டமும் பெற்றுள்ளார், ஜெயலலிதா.

சில மாதங்களுக்கு ஒருமுறை இந்த வழக்கிலிருந்து தம்மை/தன்னை விடுக்கும்படித் தனித்தனியாகவும் கூட்டாகவும் மனுப்போட்டு விசாரணை-வாதங்கள் நடத்துவது; நீதிபதிகள் மற்றும் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்து விட்டதாகத் தனித்தனியாகவும் கூட்டாகவும் மனுப்போட்டு விசாரணை-வாதங்கள் நடத்துவது; வழக்குப் போடுவதற்கு முன் உரியவர்களிடமிருந்து முன்அனுமதி பெறவில்லை என்று தனித்தனியாகவும் கூட்டாகவும் மனுப்போட்டு விசாரணை-வாதங்கள் நடத்துவது; ஆவணங்கள் கேட்டும், அவற்றை மொழிபெயர்த்துத் தரும்படியும், மொழிபெயர்ப்பு சரியில்லையென்றும் மனுப் போட்டு விசாரணை- வாதங்கள் நடத்துவது; பல சட்ட நுட்பக் கேள்விகள் எழுப்பி வழக்கைத் தடுத்து வைப்பது, தமது வழக்கறிஞர்களை மாற்றுவது – புதியவர்கள் ஆவணங்களைப் படிக்க அவகாசம் கேட்டுத் தள்ளிவைக்கக் கோருவது; இவை ஒவ்வொன்றுக்கும் உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் வரை மேல் முறையீடு செய்து விசாரணை-வாதங்கள் நடத்துவது என்று வழக்கை இழுத்தடித்தது, ஜெயலலிதா கும்பல்.

பாஸ்கரன்
ஜெயா-சசி கும்பலின் ஆலோசகரான இறந்து போன பாஸ்கரன்

2011 தமிழக சட்டமன்றத் தேர்தல்களில் மூன்றாம் முறையாக ஆட்சியைப் பிடித்ததும் பல கிரிமினல் வேலைகளில் இறங்கியது. தமிழக இலஞ்ச ஒழிப்புப் போலீசை வைத்து வழக்கை மீண்டும் விசாரிக்கும் முடிவைப் புகுத்தியது. உச்ச நீதிமன்றம் வரை போய் தி.மு.க. அம்முயற்சியை முறியடித்தது. பின்னர், ஏற்கெனவே சாட்சியளித்தவர்களை மீண்டும் விசாணைக்கு அழைத்து, பிறழ் சாட்சியங்களாக்கும் சதி நோக்கில் மனுப் போட்டது. அதையும் உச்ச நீதிமன்றம் வரைபோய் தி.மு.க. முறியடித்தது.

பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதியும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யாவும் தமக்குச் சாதகமாக மாறமாட்டர்கள் என்பது உறுதியானவுடன் நேரடியாகவே அவர்களைத் துரத்தியடிக்கும் முயற்சியில் ஈடுபட்டது. மல்லிகார்ஜுனையாவின் நியமனத்தில் விதிமுறைகளைப் பின்பற்றவில்லை என்று மனுப்போட்டு வாதாடியது. அது பொய்யென நிரூபிக்கப்படும் நிலையில் மனுவை விலக்கிக் கொண்டது. பி.வி. ஆச்சர்யாவைப் பதவி விலகும்படி மிரட்டியது, ஜெயா கும்பல். இது தொடரவே வேறு வழியின்றி, தான் நிர்பந்திக்கப்படுவதாகப் பகிரங்கமாகவே அறிவித்து, அவர் பதவி விலகினார்.

இப்படிப் பல ஆண்டுகளாகச் சொத்துக் குவிப்பு வழக்கை இழுத்தடித்த ஜெயலலிதா கும்பல், கடந்த ஆண்டு பி.வி.ஆச்சார்யா பதவி விலகியும் மல்லிகார்ஜுனையா ஓய்வு பெற்றும் போனவுடன், தனக்குச் சாதகமான பி.எஸ்.பாலகிருஷ்ணாவை சிறப்பு நீதிமன்ற நீதிபதியாகவும், பவானிசிங்கை அரசுத் தரப்பு வழக்கறிஞராகவும் கர்நாடகா பா.ஜ.க ஆட்சியைப் பயன்படுத்தி நியமிக்கச் செய்தது. இந்தத் தில்லுமுல்லுகள் உச்ச நீதிமன்றத்தில் பின்னர் நடந்த வழக்கின் போக்கில் அம்பலமாகிப்போயின.

பி.எஸ். பாலகிருஷ்ணாவும் பவானிசிங்கும் சேர்ந்து கொண்டு ஜெயலலிதா கும்பலுக்குச் சாதகமாகத் வழக்கைத் திருப்பிவிட்டு, அவசர அவசரமாக நடத்தி முடிக்க எத்தனித்தனர். பவானி சிங், அரசுத் தரப்புச் சாட்சியங்களாக இருந்த 166 பேரை 99-ஆகக் குறைத்துக் கொண்டார். அரசுத் தரப்புச் சாட்சியமாக இருந்த தமிழக இலஞ்ச ஒழிப்பு போலீசு அதிகாரியை குற்றவாளிகளின் சாட்சியமாக அழைத்து விசாரித்தார். அவரைப் பிறழ் சாட்சியமாக அறிவித்துக் குற்ற நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. ஜெயலலிதா கும்பலின் மனுக்கள்-கோரிக்கைகள் எதையும் மறுத்துரைக்கவில்லை. இதை நீதிபதி பாலகிருஷ்ணாவும் எதிர்க்கவில்லை. (தில்லைக்கோவில் வழக்கிலும் இப்படித்தான் அரசு வக்கீலையும் நீதிபதிகளையும் தம் கைக்குள் போட்டுகொண்டு, தீட்சிதர்களுக்குச் சாதகமாகத் தீர்ப்புப் பெற்றனர், சு.சாமியும் ஜெ.மாமியும்.)

பி.வி.ஆச்சார்யா
ஜெயா-சசி கும்பலால் மிரட்டப்பட்டதால் அரசு வழக்குரைஞர் பதவியிலிருந்து விலகிக் கொண்ட பி.வி.ஆச்சார்யா (கோப்புப் படம்)

வழக்கில் ஏற்படுத்தப்பட்ட சட்டவிரோதப் போக்கைப் புரிந்துகொண்ட தி.மு.க. அரசுத் தரப்புக்குத் துணையாக தலையீடு செய்யும் உரிமையைப் பெற்றது; பின்னர், குற்றவாளிகளுக்குச் சாதகமாகப் பவானிசிங் செயல்படுவதை அம்பலப்படுத்தியது. அவரை வழக்கிலிருந்து கர்நாடகா அரசு விலக்கிக் கொண்டதும், இதை சட்டவிதிப்படி உயர்நீதிமன்ற அனுதியுடன் செய்யவில்லை என்ற காரணத்தைக் காட்டி பவானிசிங்கே அரசுத் தரப்பு வக்கீலாக நீடிக்கவேண்டும்; வழக்கை விரைந்து முடிப்பதற்காக ஓய்வுபெறும் நீதிபதி பாலகிருஷ்ணாவின் பதவிக் காலத்தை நீட்டிக்கவேண்டும் என்று உச்சநீதி மன்றத்துக்குப்போய் ஜெயலலிதா கும்பல் வாதிட்டது. (எதிர்த் தரப்பு வக்கீலாக யார் வாதாடவேண்டும், யார் நீதிபதியாக அமர வேண்டும் என்று கோரி, உச்சநீதிமன்றத்தில் வழக்குப்போட்டு உரிமையும் பெற்ற அதிசயத்தையும் நிகழ்த்திக் காட்டினார், ஜெயலலிதா.)

பவானிசிங் நியமனமே முறைகேடாக நடந்துள்ளது. சட்டவிதிப்படி அரசுத் தரப்பு வக்கீல் நியமனத்துக்கு உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு அனுப்பப்பட்ட பரிந்துரைப் பட்டியலில் பவானிசிங் பெயரே கிடையாது. ஆனாலும், தற்காலிகத் தலைமை நீதிபதி அவரை அரசுத் தரப்பு வக்கீலாக நியமித்துவிட்டார். இந்த முறைகேடு தன் முன்வைக்கப்பட்டபோதும் உச்சநீதிமன்றம் அதைக் கண்டுகொள்ளாமல், பவானிசிங்கையே மீண்டும் அரசுத் தரப்பு வக்கீலாக நீட்டிக்கும்படி உத்திரவு போட்டது. ஓய்வுபெற்ற நீதிபதி பாலகிருஷ்ணாவுக்கு சட்டவிதிமுறைக்கு மாறாகப் பதவி நீட்டிப்பு வழங்கும்படியும் கர்நாடகா அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்திரவு போட்டது.

நீதிபதிகள் பாப்டே, சௌகான் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு ஏன் இப்படி நடந்து கொள்கிறது? தில்லைக்கோவில் வழக்கு, சேதுசமுத்திரம் வழக்கு, ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு என்று சுப்பிரமணிய சாமி-ஜெயலலிதா மாமி கும்பல் தொடர்புடைய உச்ச நீதிமன்ற வழக்குகளில் எல்லாம் இந்த அமர்வுதான் விசாரித்து “நல்லதீர்ப்பு” வழங்கவேண்டும் என்று திட்டமிட்டு காய்கள் நகர்த்தப்படுகின்றன. அதனால்தான் அங்கே அந்தக் கும்பல் உரிமையுடனும் துணிவுடனும் வாதிடுகிறது.

நீதிபதி பாலகிருஷ்ணாவோ தானே பதவி நீட்டிப்பை ஏற்காது போய்விட்டார். மீண்டும் அரசுத் தரப்பு வக்கீலாகப் பொறுப்பேற்ற பவானிசிங்கோ வழக்கம் போல ஜெயலலிதா கும்பலுக்கு ஊழியம் செய்கிறார். ஓய்வுபெற்ற நீதிபதி பாலகிருஷ்ணாவையே சொத்துக் குவிப்பு வழக்கில் மீண்டும் நியமிக்கவேண்டும் என்ற ஜெயலலிதா தொடுத்துள்ள வழக்கு உச்சநீதி மன்றத்தில் இன்னமும் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கையில், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள குன்ஹா என்ற நீதிபதி சொத்துக் குவிப்பு வழக்கை மறுபுறம் விசாரித்து வருகிறார்! இவர் முன்புதான், ஜெயலலிதாவின் ஆலோசகர் பாஸ்கரன் வாங்கிப்போன பொருட்களை சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைத்த பிறகுதான் வழக்கைத் தொடர வேண்டும், அதுவரை வழக்கைத் தள்ளிப் போடவேண்டும் என்ற பவானிசிங்கின் வினோதமான மனு-கோரிக்கை-வாதம் நடக்கிறது.

பவானிசிங்
ஜெயா-சசி கும்பலுக்கு தொண்டூழியம் செய்து வரும் தற்போதைய அரசு வழக்குரைஞர் பவானிசிங்.

இப்போது ஊழலுக்கு எதிராகப் பெருங்கூச்சல் போடும் அன்னா ஹசாரே, கேஜ்ரிவால் மற்றும் ஊடகங்கள் உட்பட எவரும் ஜெயலலிதா இலஞ்ச – ஊழல்கள் செய்து கையும் களவுமாகப் பிடிபட்டுள்ள இத்தனை ஆண்டுகளாக, இத்தனை தகிடுதத்தங்கள் செய்வதைக் கண்டுகொள்வதில்லை. கேஜ்ரிவால் வெளியிட்டுள்ள ஊழல்வாதிகள் பட்டியலில் ஜெயலலிதாவின் பெயரில்லை. யாரும் ஆட்டவோ, அசைக்கவோ முடியாத ஜெயலலிதாவுக்குள்ள அவரது சமுதாயச் செல்வாக்கும் ஒட்டுமொத்த சமூகத்தின் விழிப்புணர்வின்மையும்தான் இவை எல்லா வற்றுக்கும் காரணம்! இல்லையென்றால் அம்பலப்பட்டு போன இவ்வளவு பெரிய இலஞ்ச- ஊழல் பெருச்சாளியை மீண்டும், மீண்டும் அதிகாரத்தில் வைப்பார்களா!

**

ஊறுகாய் பானைக்குள் ஊறும் வழக்குகள்!

பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் நடத்தும் வழக்கு அல்லாமல், இதே 17 ஆண்டுகளாக மேலும் மூன்று வழக்குகள் ஜெயலலிதாவுக்கு எதிராக நடந்து வருகின்றன. அவை, தனக்கு வரும் பரிசுப் பொருட்களை அரசுக் கருவூலத்தில் முதலமைச்சர் ஒப்படைக்க வேண்டும் என்ற விதியை மீறி அவற்றை அமுக்கிக் கொண்ட “பரிசுப்பொருள் வழக்கு’’; வெளிநாட்டிலிருந்து அடையாளம் தெரியாத நபரிடமிருந்து மூன்று கோடி ரூபாய்களை ஜெயாவும் சசியும் தம் கணக்கில் போட்டுக்கொண்ட “அந்நியச் செலாவணி மோசடி வழக்கு’’; 1991,92, 93 ஆகிய ஆண்டுகளில் ஜெயாவும் சசியும் தமது வருமானக் கணக்கு அறிக்கையை ஒப்படைக்காத “வருமான வரிமோசடி” வழக்கு. “அந்த ஆண்டுகளில் தமக்கு வருமானமேயில்லை. அதனால்தான் வருமானக் கணக்கு அறிக்கை ஒப்படைக்கவில்லை” என்கிறார்கள், ஜெயாவும் சசியும். வருமானமேயில்லை என்றால் எப்படி இவ்வளவு சொத்துக்களைக் குவித்தார்கள்?

– ஆர்.கே.
___________________________________
புதிய ஜனநாயகம் – மார்ச் 2014
___________________________________

  1. வினவுக்கு இந்திய நீதி மன்றங்களின் மீது நீதீ கிடைக்கும் என்ற நம்பிக்கையுள்ளதற்காக அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை

    குஜராத் வழக்கில் பிரழ் சாட்சியாக மாறிய சாகிரபானுக்கு இரண்டான்டுகள் சிறைத்தண்டனை…
    ஆனால் சங்கராச்சாரியார் வழக்கில் ….(No comments)
    பாபரி மஸ்ஸித் வழக்கில் … (கட்ட பன்சாயத்து)
    பிளசன்ட் வழக்கில் .. (கட்ட பன்சாயத்து)
    அப்சல் குரு வழக்கில் ….(No comments)

  2. அடுத்த இந்திய பிரதமராகும் தகுதி (நரசிம்மராவைபோல) இது தானோ?

  3. மத்தவங்க மட்டும் என்ன உசத்தியோ? பத்தோட இதுவும் ஒன்னு.மொத்த கட்டுரையே வேஸ்டுதான். வினவு கொஞ்சம் பிராட்டிகலா யோசிக்கனும் போல தெரியுது.

  4. நீதித்துறையையும், நீதிபதியையும் விமர்சித்தால் சவுக்கு தளத்திற்கு எற்பட்ட நிலை தான் வினவுக்கும்.

  5. சொம்பு+கிழிஞ்ச ஜமுக்காளம்(சாயம் போனது)+ ஆலமரம்= பெஙகலூரு நீதிமன்றம்

    • //சொம்பு+கிழிஞ்ச ஜமுக்காளம்(சாயம் போனது)+ ஆலமரம்= பெஙகலூரு நீதிமன்றம்//

      இல்லை
      சொம்பு+கிழிஞ்ச ஜமுக்காளம்(சாயம் போனது)+ ஆலமரம்= இந்திய நீதிமன்றம்

  6. இந்தியா ஒரு மக்களாட்சித் ததுவத்தைக் கொண்ட நாடு.மக்களாட்சித் தத்துவத்தில், ஒரு நாட்டைத் தாங்கிப் பிடிக்க,அரசியல்,அதிகாரவர்க்கம்,நீதித் துறை மற்றும் ஊடகம் என்ற நான்கு தூண்கள் வேண்டும்.இந்த நான்கு தூண்களும் செம்மையாகவில்லை என்றால் அந்த நாடு காடாகத்தான் ஆகும்.இந்த நான்கு தூண்களிலிலும் நேரு காலத்திலிருந்தே ஒரு பெரிய லாபி இயங்கிக் கொண்டிருக்கிறது.இந்த லாபியை வலுப்பெறச் செய்யத்தான்,மாநிலச் சுயாட்ச்சியை உள்ளடக்கிய, 1919 இல் உறுவான லக்னோ ஒபந்தத்தை 1936 இல் நடந்த நாக்பூர் காங்கிரஸ் மாநாட்டில்,அந்த லாபியின் பெரும்பான்மையை வைத்து, நேருவின் தந்தையும் மகனும் ஆன மோதிலால் நேருவும்,ஜவஹர்லால் நேரும் சேர்ந்து முறியடித்தனர்.நேருகாலத்தில் அந்த லாபி 4 தூண்களிலும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்தது.அப்பொழுது அந்த லாபி, நான்கு தூண்களிலும், தங்களுக்குச் சாதகமான அம்சங்களை அழுத்தமாகப் பதிவு செய்துவிட்டது.அந்த லாபியின் தாக்கம் அரசியல் என்ற தூணில்,காந்தியின் சீடரான திரு.ஜெயப் பிர்காஷ் நாராயணன் எழுச்சியால் வலுவிழந்தது.மண்டல் கமிஷன் ஒரு எடுத்துக் காட்டு.அரசியலில் மீண்டும் அந்த லாபியின் அதிகாரத்தை மீட்டெடுக்க, அரசியல் ரீதியாக, மதத்தைக் கையில் எடுத்துக் கொண்டு பிஜேபி,முயன்றது.அது, வி.பி.சிங்க் மண்டல் கமிசனின் அறிக்கையை(obc reservation) நடை முறைப் படுத்தியதற்காகவும்,முதல் முறையாக பாபர் மசூதியை இடிக்கச் சென்ற அத்வானியையும்,அவரது சகாக்களையும் மாநிலத்தின் எல்கையிலேயே கைது செய்து பாபர் மசூதியை இடிக்கவிடாமல் தடுத்தமைக்காகவும்(ஜெயா இங்கிருந்து கர சேவகர்கள் அனுப்பினார் என்பது நினைவு கூறத் தக்கது), பிஜேபி விபி சிங்கிற்கு அளித்த ஆதரவை விலக்கிக் கொண்டது.ராஜிவ் காந்தியின் மரணத்தால் அந்த லாபியின் சொந்தக்காரரான நரசிம்ம ராவ் பிரதமனார்.அதன் பின்பு வாஜ்பாய் அவர்கள் மட்டும் பல தரப்பினரின் ஆதரவுடன் பிரதமரானர்.அதன் பின்பு அரசியல் என்ற தூணை அந்தக் கூட்டத்தினரால் மீடெடுக்க முடியவில்லை.ஆனால் மீதமுள்ள மூன்று தூண்களையும் வைத்து,மீன்டும் அரசியல் என்று தூணை மீட்டெடுக்க இன்றுவரை,மற்ற மூன்று தூண்களிலும் உள்ள அந்த லாபி கடுமையாக முயற்சி செய்கிறது.இன்று மம்தா பானர்ஜியும்,விதிவிலக்கல்ல.இந்த லாபியின் தாக்கம் இடது சாரிகளிடமும் உண்டு.காங்கிரஸ் கட்சியிலும் அந்த லாபியின் அதிகாரம் இன்றும் உண்டு.இந்த லாபி அந்த நான்கு தூண்களில் மட்டும் ஆதிக்கம் செலுத்தவில்லை.அது மக்களின் மத நம்பிக்கையையும் ஆட்டிப் படைக்கிறது.அதன் விளைவுதான் குற்ற வாழ்க்கையே வாழ்ந்து கொண்டிருக்கும் ஜெயா அந்த லாபியால் காப்பாற்றப் படுகிறார்.அகில இந்திய ரீதியில் இன்று அந்த லாபியைத் தலைமை தாங்குபவர் சுப்பிர மணிய சாமி.தமிழகத்தில் தலைமை தாங்குபவர் சோ.ராமசாமி ஆவார்.ஜெயாவை வழிகாட்டுவது 4 தூண்களிலும் உள்ள அந்த லாபிதான்.

Leave a Reply to ramadoss kothandaraman seethapathi பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க