privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபார்ப்பனிய பாசிசம்சிறுபான்மையினர்முசாஃபர் நகரில் மோடி – ஆர்.எஸ்.எஸ்-ன் உண்மை முகம்

முசாஃபர் நகரில் மோடி – ஆர்.எஸ்.எஸ்-ன் உண்மை முகம்

-

“இந்துக்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டிய நேரம் வந்திருக்கிறது. அதை செய்து முடிப்பதற்கான தலைவர் மோடிதான்”.

முசாஃபர் நகரில் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரம்
முசாஃபர் நகரில் மோடிக்கு ஆதரவாக ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரம்

“இன்றைய நிலைமையில் இந்துக்கள் எப்படி எல்லாம் சித்திரவதை செய்யப்படுகிறார்கள் என்று பாருங்கள். நாம ஏதாவது செய்யணும். இந்துக்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து மோடியை ஜெயிக்க வைக்க வேண்டும். பா.ஜ.கவுக்கு ஓட்டு போட்டு மோடியை பிரதமர் ஆக்க வேண்டும்”

“ராமர் கோயில் பிரச்சனையை நாங்கள் மறந்து விடவில்லை. இந்த நாட்டில் ஒரு தேசியவாத அரசு வரும் போது ராமர் கோயில் கட்டப்படும். ராமர் கோயில் மட்டுமில்லை, காசி விஸ்வநாதர் கோயில், மதுரா மூன்று இடங்களிலும் கோயில்கள் கட்டப்படும். இது எல்லாம் எங்கள் திட்டத்தில் இருக்கின்றன. ஆனால் இப்போதைக்கு ஒரு தேசிய வாத அரசாங்கத்தை ஏற்படுத்துவதுதான் நோக்கம்”

“முஸ்லீம்கள் பகுதிகளில் நாங்க பிரச்சாரம் செய்ய மாட்டோம். அவங்க எப்பவுமே பாஜகவை தோற்கடிக்கும் வேட்பாளருக்குத்தான் வாக்களிப்பாங்க. அவங்க பகுதிக்குள் எங்களை அனுமதிப்பதேயில்லை”

உத்தர பிரதேசத்தில் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரம் குறித்து என்.டி.டி.வி தொலைக்காட்சியின் சீனிவாசன் ஜெயின் தயாரித்த நிகழ்ச்சியில் மோடியின் பா.ஜ.க சார்பாக களம் இறங்கியிருக்கும் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகர்கள் சொல்லும் சில கருத்துக்கள்தான் இவை.

“வளர்ச்சி நாயகன் மோடி, 10 ஆண்டுகளாக மதக் கலவரமே இல்லாமல் ஆட்சி செய்து வரும் முன்னோடி மாநிலம் குஜராத்” என்றெல்லாம் நாட்டின் பிற பகுதிகளில் பிரச்சாரம் செய்து வருகிறது பா.ஜ.க; அயோத்தியில் ராமர் கோயில், பொது சிவில் சட்டம், அரசியல் சட்டப் பிரிவு 370-ஐ ஒழித்தல் போன்ற மதவாத நோக்கங்களை பா.ஜ.க மறந்து விட்டதாக அதனுடன் சந்தர்ப்பவாத கூட்டணி வைத்திருக்கும் வை.கோ., சந்திரபாபு நாயுடு, ராம் விலாஸ் பாஸ்வான் போன்றவர்கள் மக்களை நம்ப வைக்க முயற்சிக்கின்றனர். ‘சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் அணைத்துச் செல்வதுதான் மோடியின் கொள்கை; இந்துக்கள், முஸ்லீம்கள் என்று பார்க்காமல் 6 கோடி குஜராத்திகளுக்கும் சேவை செய்பவர் மோடி’ என்று பா.ஜ.கவுக்கு ஆதரவாக ஊடகங்கள் பிரச்சாரம் செய்து வருகின்றன.

ஆனால், உத்தர பிரதேச மாநிலத்தில் தெருத் தெருவாக பா.ஜ.கவின் மதவெறி பிரச்சாரம் பகிரங்கமாக நடத்தப்பட்டு வருகிறது.

சீனிவாசன் ஜெயின்
சீனிவாசன் ஜெயின்

கடந்த ஆண்டு மேற்கு உ.பியின் முசாஃபர் நகர் மாவட்டத்தில் ‘முஸ்லீம்கள் லவ் ஜிகாத் என்ற பெயரில் இந்துப் பெண்களை மயக்கி திருமணம் செய்து கொள்கிறார்கள்’ என்று பிரச்சாரம் செய்து ஜாட் ஆதிக்க சாதியினரை திரட்டி முஸ்லீம்களுக்கு எதிராக கலவரங்களை நடத்தின சங்க பரிவார அமைப்புகள். ஆயிரக்கணக்கான முஸ்லீம் மக்கள் அவர்களது கிராமங்களிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு சொந்த மண்ணிலேயே அகதிகளாக திறந்த வெளி முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

முசாஃபர் நகர் பகுதியில் 18 சர்க்கரை ஆலைகள் இருக்கின்றன. இந்திய அளவில் கரும்பு விவசாய உற்பத்தி நன்றாக நடக்கும் பகுதிகளில் முசாஃபர் நகரும் ஒன்று. ஜாட் சாதியினர் பெரும்பாலும் விவசாயிகளாக இருக்கின்றனர். இந்த பகுதியினரின் சாதி வெறியைத் தூண்டி விட்டு தேர்தலில் ஆதாயம் காண முயற்சிக்கும் பா.ஜ.க, முசாஃபர் நகர் தொகுதியில் ஜாட் சாதி பிரமுகர் சஞ்சீவ் பாலியானை வேட்பாளராக நிறுத்தியிருக்கிறது.

முசாஃபர் நகரின் பட்டேல் நகர் பகுதியில் காலையில் ஷாகா முடித்து விட்டு தமது காக்கி டவுசர்களைக் கூட மாற்றாமல் “பாரேத் மாதா கீ ஜெய்” என்ற முழக்கத்துடன் பா.ஜ.கவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கின்றனர் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள். வழக்கமாக ‘ஆர்.எஸ்.எஸ் வேறு, பா.ஜ.க வேறு, இரண்டுக்கும் சித்தாந்த தொடர்பு இருந்தாலும் இயக்க ரீதியான தலையீடு தொடர்பு இல்லை, பாஜகவை ஆர்.எஸ்.எஸ் இயக்குவதில்லை, ஆர்.எஸ்.எஸ் அரசியலில் ஈடுபடுவதில்லை’ என்றெல்லாம் பசப்பும் சங்க பரிவாரம் இங்கு தன் முகமூடிகளை கழற்றி வீசி விட்டு நரேந்திர மோடிக்கும் பாஜக வேட்பாளருக்கும் ஓட்டு கேட்டு பிரச்சாரம் செய்து வருகிறது.

“தேர்தலில் ஆர்.எஸ்.எஸ்சின் முக்கியமான பங்களிப்பு அதன் அடிமட்ட சுவயம் சேவக்குகள் கட்டமைப்பை பா.ஜ.கவின் தேர்தல் நிர்வாகப் பணிகளுக்காக களம் இறக்கி விட்டிருப்பதுதான்” என்கிறார் ஆர்.எஸ்.எஸ் செய்தித் தொடர்பாளர் ராம் மாதவ். 10 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு ஒரு பிராந்த் (வட்டார) பொறுப்பாளர், அவர்களுக்குக் கீழே ஒவ்வொரு மக்களவை தொகுதிக்கும் ஒரு பொறுப்பாளர், அந்தத் தொகுதியில் அடங்கிய ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் ஒரு பொறுப்பாளர். அவருக்குக் கீழ் 10 வாக்குச் சாவடிகளுக்கு ஒரு பொறுப்பாளர் என ஆர்.எஸ்.எஸ் சுவயம் சேவக்குகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ்சில் இத்தனை சுவயம் சேவக்குகளா என்று யாராவது ஆச்சரியப்பட்டால், ஒரு நபர் தன் வாழ்நாளில் ஒரு முறை ஆர்.எஸ்.எஸ் ஷாகாவை எட்டிப் பார்த்திருந்தாலே அவர் சுவயம் சேவக் தகுதியை பெற்று விடுகிறார். மேலும் ஷாகாவிற்கு டிமிக்கி கொடுக்கும் முன்னாள் சுவயம் சேவக்குகள் கூட தேர்தல் அரசியலின் ஆதாயங்களை பெறுவதற்கு படை திரண்டு வருவார்கள் என்பதால் இந்த திட்டம் அசாத்தியமானதல்ல.

"ஆர்.எஸ்.எஸ்சில் இத்தனை சுவயம் சேவக்குகளா?"
“ஆர்.எஸ்.எஸ்சில் இத்தனை சுவயம் சேவக்குகளா?”

பா.ஜ.கவின் சிந்தனையாளர் சுதீந்த்ர குல்கர்னி, “பா.ஜ.கவில் மத்தியிலிருந்து கீழ் மட்டங்கள் வரை ஒரு தலைமுறை மாற்றம் நிகழும் போது ஆர்.எஸ்.எஸ் தனது அழுத்தமான முத்திரையை பதிக்க விரும்புகிறது. தேர்தல் பிரச்சாரத்தில் ஆர்.எஸ்.எஸ் ஈடுபடுவது ஒரு ஆண்டுக்கு முன்பிருந்தே திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்படுகிறது” என்கிறார்.

உட்கட்சி அமைப்பில் ஜனநாயகத்தின் வாசனை கூட இல்லாத ஆர்.எஸ்.எஸ்., பெண்களை தனது இயக்கத்தில் இன்று வரை சேர்க்கக் கூடாது என்று விதி வைத்திருக்கும் இவர்கள் இந்த தேர்தல் அரசியலில் என்ன ஜனநாயகத்தை பிரச்சாரம் செய்வார்கள்? வேறு என்ன, இந்துமதவெறி, அகண்ட பாரதக் கனவு, சிறுபான்மையினர் வெறுப்பு, கம்யூனிச கடுப்பு, தேசிய இன ஒழிப்பு, பாலின ஒடுக்குமுறை, சாதி ரீதியான துவேசம், மாட்டுக்கறி புனிதம், மதமாற்றத் தடை சட்டம்…..இவைதான் இவர்களது முக்கிய பிரச்சாரங்கள்.

முசாஃபர் நகரில் வாக்காளர்களை பட்டியலில் சேர்க்கும் இயக்கத்தை ஆர்.எஸ்.எஸ் நடத்தியிருக்கிறது. “உங்கள் மொபைல் எண்ணை கொடுத்து விட்டால் ஒரு குறுஞ்செய்தி வரும். அதைத் தொடர்ந்து நீங்கள் இப்போது ஒரு மோடி ஆதரவாளர் என்று மோடியின் குரலில் ஒரு அழைப்பு வரும்.” என்கிறார் ஒரு  ஆர்.எஸ்.எஸ் தொண்டர்.

இந்த அடிமட்ட பிரச்சாரத்தை ஒருங்கிணைப்பதற்கு ஆர்.எஸ்.எஸ்-சும் மோடி பிரச்சாரக் குழுவும் இணைந்து bharatvijay.com என்ற இணைய தளத்தை உருவாக்கியுள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ்-சின் கோரிக்கைப் படி மும்பையைச் சேர்ந்த நெட்கோர் சொல்யூசன்ஸ் என்ற மென்பொருள் நிறுவன உரிமையாளர் ராஜேஷ் ஜெயின் இந்த தளத்தை வடிவமைத்திருக்கிறார். 200 ஊழியர்களை கொண்ட அவரது நிறுவனம் பல ஆண்டுகளாகவே மோடியின் இணைய பிரச்சாரத்தை நடத்தி வருகிறது. அவர்கள் நாடெங்கிலும் உள்ள 400 தொகுதிகளில் கடந்த நான்கு மக்களவை தேர்தல்கள் தொடர்பான புள்ளிவிபரங்களை திரட்டி களத்தில் வேலை செய்யும் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களுக்கு உதவியாக இருக்கும்படி தயாரித்துள்ளனர்.

ஆர்.எஸ்.தொண்டர்கள் தமது கடவுச்சொல்லை பயன்படுத்தி கிராம மட்டம் வரையிலான வாக்காளர் பற்றிய விபரங்களை பெற்றுக் கொள்ளலாம். உதாரணமாக எந்த கிராமத்தில் வெற்றி நிச்சயம், எந்த கிராமத்தில் வெற்றி இன்னும் உறுதியாகவில்லை, எந்த கிராமத்தில் வாய்ப்பு இல்லை என்று பார்த்துக் கொள்ள முடியும்.

“ஒரு தொகுதியை பற்றி புரிந்து கொள்ள எங்களுக்கு இது உதவுகிறது” என்கிறார் ராம் மாதவ். “மக்கள் தொகை கணக்கெடுப்பு (சென்சஸ்) தரவுகளிலிருந்து ஒரு வாக்குச் சாவடியில் எத்தனை இளைஞர்கள், எத்தனை வயதானவர்கள், எத்தனை பெண்கள், எத்தனை ஆண்கள், எத்தனை தாழ்த்தப்பட்ட சாதியினர், எத்தனை பழங்குடியினர் உள்ளனர் என்று தெரிந்து கொள்கிறோம்” என்கிறார் அவர்.

ராம் மாதவ்
“மக்கள் தொகை கணக்கெடுப்பு (சென்சஸ்) தரவுகளிலிருந்து ஒரு வாக்குச் சாவடியில் எத்தனை இளைஞர்கள், எத்தனை வயதானவர்கள், எத்தனை பெண்கள், எத்தனை ஆண்கள், எத்தனை தாழ்த்தப்பட்ட சாதியினர், எத்தனை பழங்குடியினர் உள்ளனர் என்று தெரிந்து கொள்கிறோம்”

ஆனால், ஆர்.எஸ்.எஸ் இத்தகைய புள்ளிவிபரங்களை தேர்தல் திட்டமிடலுக்கு பயன்படுத்துகிறதோ இல்லையோ வேறு எதற்கு பயன்படுத்தும் என்பது குஜராத்தில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. குஜராத்தில் 2002-ம் ஆண்டு முஸ்லீம்களுக்கு எதிராக நடத்திய இனப்படுகொலைக்கு முன்பு ஆர்.எஸ்.எஸ் பல பத்தாண்டுகளாக வேலை செய்து முசுலீம்கள் மக்கள் தொகை, முசுலீம்கள் செய்து வந்த வியாபாரம் போன்ற விவரங்களைத் திரட்டி முன் தயாரிப்பு செய்திருப்பதை, வனவாசி கல்யாண் ஆசிரமத்தின் மூலம் பழங்குடியினரிடையே ஊடுருவி அவர்களிடையே மதவெறி நஞ்சூட்டி முசுலீம் சமுதாயத்திற்கு எதிராய் அணி திரட்டியதை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

இந்நிலையில், ஆதார் போன்ற திட்டங்களின் மூலம் குடிமக்கள் பற்றிய அடிப்படை விபரங்கள் அனைத்தும் இத்தகைய பாசிஸ்டுகளின் கையில் கிடைக்கும் போது அவற்றை தமது பாசிச பயங்கரவாத செயல்களை திட்டமிட்டு நடத்த பயன்படுத்திக் கொள்வார்கள் என்பது நிச்சயம்.

“முசாஃபர் நகரில் இந்துக்களுக்கு பல பிரச்சனைகள் ஏற்பட்டன. பல முறை சண்டை போட (கலவரங்கள் நடத்த) வேண்டியிருந்தது. மத்திய மாநில அரசுகள் ஒரு தரப்பாக நடந்து கொண்டன. அதனால இந்துக்கள் அனைவரும் கோபமாக உள்ளனர். ஒவ்வொரு இந்துவும், இந்து குடும்பமும் மோடி தலைமையிலான ஆட்சி அமைவதற்காக தமது குரலை எழுப்பி வருகின்றது.” என்கிறார் முசாஃபர் நகரின் விஸ்வ இந்து பரிஷத் தலைவர் மகேஸ்வரி.

ஆதிக்க சாதி அடையாளம் மற்றும் ஆதிக்கத்தை முசுலீம் எதிர்ப்பாக மாற்றி முசாஃபர் நகரில் கலவரத்தை நடத்தின சங்க பரிவார அமைப்புகள். பா.ம.க. ராமதாசு நாடகக் காதல் என்ற கதையை ஊதிப்பெருக்கி தாழ்த்தப்பட்டோருக்கு எதிராக ஆதிக்க சாதிவெறியைத் தூண்டிவிட்டதைப் போல, லவ் ஜிகாத் என்பதை ஊதிப் பெருக்கி, அதன் மூலம் தன் கள்ளப் பிள்ளை பா.ஜ.க.வுக்கு ஜாட் சாதி ஓட்டுக்களைக் கவர திட்டமிட்டது ஆர்.எஸ்.எஸ்.

இந்த மதவெறியூட்டப்பட்ட சாதிவெறி கும்பல்களால் துரத்தியடிக்கப்பட்ட 50,000 முஸ்லீம்கள் கடும் குளிர் காலத்தில் திறந்த வெளி முகாம்களில் வைத்து சாகடித்தன மத்திய மாநில அரசுகள். அவர்களை கிராமங்களுக்கு திரும்பி வர அனுமதிக்க மாட்டோம் என்று கொக்கரித்த ஜாட் சாதி அமைப்புகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

விஸ்வ இந்து பரிசத்தைச் சேர்ந்த விஜய் சவுத்ரி “நாங்க சனாதன தருமத்தின்படி ஓம்கார், விஷ்ணு, பிரம்மா, மகேஷ் என்று பல கடவுள்களை வழிபடுகிறோம். எந்த மனிதனையும் கடவுளாக கருத முடியாது என்றாலும், நாங்கள் விக்கிரகங்களை கடவுள் என்று நம்பி வழிபடுவது போல மோடியின் பிம்பம் எங்கள் பிரச்சாரத்தில் உதவியாக இருக்கிறது” என்கிறார்.

ஆர்.எஸ்.எஸ் தலித் கொள்கை
சில தலித் மக்களும் ஆர்.எஸ்.எஸ்சின் பிரச்சாரத்துக்கு பலியாகி விடலாம்.

தமிழ்நாட்டில் வன்னிய சாதி வெறியைத் தூண்டி மக்களை பிளந்து போடும் பா.ம.கவைப் போலவே, முசாஃபர் நகரில் ஜாட் சாதி வெறியைத் தூண்டி அரசியல் செய்கிறது பா.ஜ.க. சென்ற ஆண்டு நடந்த கலவரத்தின்பொழுது, “நரேந்திர மோடி ஒருவரால்தான் முசுலீம்களுக்குத் தகுந்த பாடம் கற்பிக்க முடியும்” எனத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்யப்பட்டதன் தொடர்ச்சியாக இப்போது மோடி குறித்த பிம்பத்தை ஆர்.எஸ்.எஸ் பயன்படுத்தி வருகிறது.

ஆனால், பல கோடி ரூபாய் செலவு செய்து நடத்தப்பட்ட பிரச்சாரங்கள் மூலமாகவும், ஊடகங்களாலும் ஊதிப் பெருக்கப்பட்ட மோடியின் பிம்பத்துக்கேற்ப உள்ளூர் அரசியலில்  தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல், உ.பியிலும் பா.ஜ.கவுக்கு பிடி இல்லை.  “பில்டிங் ஸ்ட்ராங், பேஸ்மென்ட் வீக்” என்ற இந்த நிலைமையை மனதில் வைத்து தமிழ்நாட்டில் இல.கணேசன் பிரச்சாரம் செய்வது போலவே “இது நாடாளுமன்றத்துக்கான தேர்தல், மோடியை பிரதமராக்குவதற்கான தேர்தல். மாநில அரசியலை மனதில் வைத்துக் கொண்டு சமாஜ்வாதி கட்சி அல்லது பகுஜன் சமாஜ் கட்சி போன்ற மாநில கட்சிகளுக்கு ஓட்டு போட்டு விடாதீர்கள்” என்று பிரச்சாரம் செய்கிறார்கள்.

மேலும், முசாஃபர் நகரின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 50% முஸ்லீம்களும், தலித்துகளும் உள்ளனர். 40% முஸ்லீம்களுக்கு எதிராக இந்துக்களை ஒன்று திரட்ட பிரச்சாரம் செய்து வரும் ஆர்.எஸ்.எஸ், தலித் வாக்குகளை பெறுவதற்கு முயற்சி செய்கிறது. மோடி மேற்கு வங்கத்தில் பிரச்சாரம் செய்யும் போது “மாநிலத்தில் மம்தா, மத்தியில் மோடி” என்று நைஸ் செய்தது போல தலித் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்கின்றனர் ஆர்.எஸ்.எஸ் ஊழியர்கள்.

பார்ப்பன சமூக அமைப்பில் “சமத்துவம் (சமதா) இருக்க முடியாது ஆனால், அனைத்து சாதி மக்களும் சகோதர உணர்வுடன் வாழ முயற்சிக்கிறோம்” என்கிறார் 92 வயதான ஆர்.எஸ்.எஸ் சிந்தனையாளர் எம்.ஜி வைத்யா. இதுதான் ஆர்.எஸ்.எஸ்சின் தாழ்த்தப்பட்ட மக்கள் தொடர்பான கொள்கை என்பதை புரிந்து கொள்ளாத சில தலித் மக்களும் ஆர்.எஸ்.எஸ்சின் பிரச்சாரத்துக்கு பலியாகி விடலாம்.

பா.ஜ.க பலவீனமாக இருக்கும் கிராமப்புறங்களில் மதவாத பிரச்சாரத்தை நடத்துவதற்கு விஸ்வ இந்து பரிசத் ஹரித்வாரிலிருந்தும் மீரட்டிலிருந்தும் பண்டாரம், பரதேசிகளை இறக்குமதி செய்திருக்கிறது. “இந்து சமூகத்தை பாதுகாக்கவும், நாட்டை முன்னேற்றவும், இந்துக்கள் அனைவரும் பா.ஜ.கவுக்கு தவறாமல் வாக்களிக்க வேண்டும்” என்று அவர்கள் பிரச்சாரம் செய்கிறார்கள். முதலாளிகள் கூட்டங்களில் “ஏற்றுமதி வளரணும், இறக்குமதி குறையணும்…” என்று மோடி பேசுவதற்கு மாறாக இந்த பண்டாரம், பரதேசிகளின் இறக்குமதி அதிகரித்திருக்கிறது.

அனைத்து மதத்தவரையும் அணைத்துச் செல்வதுதான் எங்கள் கொள்கை என்று மோசடி செய்யும் பா.ஜ.க முசாபர் நகரில் உள்ள 40% முஸ்லீம்கள் பகுதியில் பிரச்சாரம் செய்வதில்லை என்பதோடு எட்டிக் கூட பார்க்காமல் ஒதுக்கி வைத்து விட்டது.

“நாட்டை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியிலிருந்து விடுவிக்கத்தான் பா.ஜ.க.வை ஆதரிக்கிறோம்” என்கிறார் ஆர்.எஸ்.எஸ் செய்தித் தொடர்பாளர் ராம் மாதவ். “பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி,  ஊழல் ஒழிப்பு, இவற்றுடன் சாதி, வட்டாரம், மதம், சிறுபான்மை, பெரும்பான்மை இவற்றின் பெயரில் சமூக நல்லிணக்கும் பாதிக்கப்படுவதை தடுக்க வேண்டும்” என்கிறார் அவர். அவரைப் பொறுத்த வரையில் பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்து உழைக்கும் மக்கள் போராடுவதும், இந்துத்துவா வெறியர்களின் அடக்குமுறையை எதிர்த்து சிறுபான்மை மதத்தினர் போராடுவதும்தான் சமூக அமைதியை பாதிக்கும் விஷயங்கள். கூடவே, மோடி பாணி வளர்ச்சியில் பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட்டுகளுக்கு நிலங்களை தாரை வார்ப்பதை எதிர்த்து விவசாயிகள் போராடுவதையும், கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமாக தமது உரிமைகள் பறிக்கப்படுவதை எதிர்த்து தொழிலாளர்கள் போராடுவதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பாபா ராம்தேவ்
மோடியின் பெயரை சொல்லாமலேயே அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செயகிறாராம் பாபா ராம்தேவ்.

பா.ஜ.க இடத்துக்கு ஏற்றபடி தனது பிரச்சார உத்திகளை மாற்றிக் கொள்கிறது. உதாரணமாக டெல்லியில் ஆர்.எஸ்.எஸ்சின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பியால் ஆரம்பிக்கப்பட்ட இந்தியா வோட் 272 என்ற குழு இளைஞர்களை ஈர்ப்பதற்காக தெருமுனை பாட்டுக் கச்சேரி நடத்துகிறது. இங்கே அல்ட்ரா மாடர்னாக தங்களது பிரச்சாரத்தை காட்டிக் கொள்வார்கள். அதையும் மீறி குடுமி வெளியே தெரியுமென்பது வேறு விசயம்.

பாபா ராம்தேவின் பக்தர்களையும் கவர் செய்திருக்கிறது மோடி பிரச்சாரக் குழு. யோகா மூலம் இந்தியர்களை ஆரோக்கியமாக்குவதற்கு 75% நேரம் செலவழிப்பதாகவும், இந்தியர்கள் பணக்காரர்கள் ஆவதற்கு மோடி பிரதமர் ஆக வேண்டும் என்றும் கூறுகிறார் ராம்தேவ். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் மோடியின் பெயரை  சொல்லாமலேயே அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செயகிறாராம்.

‘ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க என்னும் ஆள் தின்னும் புலி தனது கோடுகளை அழித்து விட்டு சைவப் புலியாகி விட்டது’ என்று மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வரும் அதன் கூட்டணிக் கட்சிகளான ம.தி.மு.க, தே.மு.தி.க, தமிழருவி மணியன் மற்றும் இணையத்தில் கொடி பிடிக்கும் பத்ரி வகையறாக்கள், உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க வெளிப்படுத்தும் அதன உண்மை முகம் தொடர்பாக எப்படி சப்பைகட்டு கட்டுவார்கள் ?

– பண்பரசு

மேலும் படிக்க

  1. முஜ்ஜபார்ணகரில் அரசாங்கம் நேரடியாக கலவரத்தை துவாக்கிய இஸ்லாமியார்களுக்கு ஆதரவாக செயல்பட்தாதலெயே இன்று அங்கு உள்ள ஹிந்துக்கள் பாஜாக விர்க்கு ஆதரவாக உள்ளனர்.

    நீங்கள் இங்கு வருத்தப்பட்டு எதுவும் ஆகாப்போவது இல்லை.

    மேலும்,வட இந்தியாவில் உள்ள இஸ்லாமியர் தாழ்த்தப்பட்ட மக்களை பல கொடூராங்களுக்கு ஆளாக்கி உள்ளனர்.

    அதனால் அவர்களில் எவரும் இஸ்லாமியார்க்கு ஆதரவாக வாக்களிக்க மாட்டார்.

Leave a Reply to அசுரபாலகன் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க