செய்தி: குஜராத்தில் அமைதியான முறையில் தேர்தல் நடக்க வேண்டும் என்பதற்காக, கடந்த ஞாயிறு வரை 1,86,460 பேர் முன்னெச்செரிக்கையாக கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருக்கின்றனர். இதில் அபாயகரமானவர்கள் என்று கருதப்படும் 19,164 பேர் அகமதாபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று குஜராத் தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்திருக்கிறார்.
நீதி: குஜராத் ‘வளர்ச்சி’, ‘அமைதி’ என்பது இதுதானோ?
___________
செய்தி: பொருளாதார மந்தநிலை இருந்த போது கூட, மருமகன் ராபர்ட் வதேரா, ஒரு இலட்ச ரூபாய் முதலீட்டில் 300 கோடி ரூபாய் சம்பாதித்தது எப்படி என்று சோனியா காந்தியிடம், பாரதிய ஜனதா கேட்டிருக்கிறது.
நீதி: பொருளாதார மந்த நிலை இருந்த போதும், ரத்தன் டாடாவுக்கு ஒரு ரூபாய் எஸ்எம்எஸ் செலவில் பல ஆயிரம் கோடி ரூபாய் சலுகைகள் அளித்த மோடி, இதைப் பற்றி வாயைத் திறந்து பேசலாமா?
___________
செய்தி: மூன்றாவது அணி ஆதரவைக் கோரவோ இல்லை அவர்களது அரசை ஆதரிப்பது குறித்தும் காங்கிரசு கட்சி பரிசீலிக்குமென்று அதன் தலைவர்கள் சமீப நாட்களாக பேசி வருகிறார்கள்.
நீதி: தான வறட்சியால் பட்டினி கிடக்கும் பெருமாள் கோவில் ஆண்டிக்கு, எலி கடித்த பழம்தான் போஜனமென்றால் மறுக்காமல் ஓடத்தானே செய்வான்?
____________
செய்தி: தேர்தல் நாளன்று ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கவில்லை என்று, ஹெச் சி எல், விப்ரோ, சோடக்ஸோ நியூ டிராவல் லைன், வோல்ட்டாஸ், ஃபர்ஸ்ட் சோர்ஸ் ஆகிய ஆறு ஐடி நிறுவனங்கள் மீது செம்மஞ்சேரி போலிஸ் வழக்கு பதிவு செய்திருக்கிறது.
நீதி: வாக்களிப்பது கடமை, உரிமை என்று நமக்கு விளம்பரங்கள் மூலம் காசு செலவழித்து, இந்த ஜனநாயக காதல் முதலைகள் சொன்னதுதான் மடமை, பொய்மை என்பதை ஏற்கிறீர்களா?
___________
செய்தி: தேர்தல் பிரச்சாரத்திற்காக மதுரை வந்த ராகுல் காந்தி, விமான நிலையத்தில் பத்து நிமிடம் ஒதுக்கி, தன்னை சந்தித்த நாடாளும் மக்கள் கட்சி தலைவர் கார்த்திக்கை காங்கிரசில் சேருமாறும், அவருக்கு ஏதாவது ஒரு பதவி தரப்படும் என்றும் கூறினார்.
நீதி: இதனால சத்யமூர்த்தி பவனில் வேட்டியைக் கிழிக்கும் கோஷ்டி மோதலில் கூடுதலாக ஒரு கோஷ்டி அதுவும் நையாண்டி கோஷ்டி வரப்போகிறது என்றாலும் நட்டமென்னவோ ஆதித்யா சேனலுக்குத்தான்.
____________
செய்தி: மைசூர் உயிர்க்காட்சி சாலையில் இருந்த 43 வயதான கொரில்லா குரங்கு “போலோ” கடந்த சனிக்கிழமை உயரிழந்தது.
நீதி: மோடி போன்ற காட்டுமிராண்டிகள் ஆளவந்து விட்டால் தன்னைப் போல நாகரீக ஜீவன்கள் இங்கே இருப்பது எப்படி என்று வருந்தி இறந்திருக்குமோ?
___________
செய்தி: மோடி எங்கள் குடும்பத்தில் ஒருவர் என்று லதா ரஜினி காந்த் கூறியுள்ளார்.
நீதி: அப்படியா, இனி உங்கள் குடும்பத்தையும் கொலைகார குடும்பம் என்று அழைக்க வேண்டியிருக்கும், பரவாயில்லையா லதா மாமி!
___________
செய்தி: தேர்தல் பிரச்சாரத்தினை அடுத்து ஓய்வுப் பயணமாக ஜெயலலிதா கொடநாடு சென்றார்.
செய்தி: ஒரு வழியாக செய்வீர்களா லாவணியில் இருந்து மக்களுக்கு விடுதலை. வானத்தில் பறக்கும் ஹெலிகாப்டர்களை வணங்கி வந்த அமைச்சர்களுக்கு விடுதலை. ஒரே முகத்தை ஒரு கோடி தடவை எடிட் செய்த ஜெயா டிவி எடிட்டருக்கு விடுதலை.
___________
செய்தி: குஜராத் முதல்வர் நரேந்திர மோடியிடம் இருந்து எந்த சலுகையும் பெறவில்லை என்று அதானி தொழில் குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி கூறினார்.
நீதி: குஜராத் அரசு அள்ளிக் கொடுத்த சலுகைகளை ஏதோ மோடி தனது சட்டைப் பாக்கெட்டில் இருந்து தனிப்பட்ட முறையில் கொடுத்தார் என்பது சரியா? அதுதான் அதானியின் ஆதங்கம்.
____________
செய்தி: மோடியின் மீது முஸ்லீம்களுக்குகிடையே உள்ள அச்சம், அவர் பிரதமரான பின்பு நீங்கி விடும் என்று குஜராத் முன்னாள் அமைச்சரும், பாஜக உத்தரபிரதேச தேர்தல் பொறுப்பாளருமான அமித் ஷா கூறினார்.
நீதி: மோடி பிரதமர் ஆன பிறகு முசுலீம்களுக்கு பேரச்சம் வந்து விடுவதால் வெறும் அதிர்ச்சி போய்விடும் என்பது உண்மையே.
____________
செய்தி: “நான் ஆட்சிக்கு வந்தால், நாட்டை சொர்க்கமாக மாற்றுவேன் என எப்போதும் சொன்னதில்லை. அதிசயங்கள் நிகழ்த்துவதை மக்கள் எப்போதும் விரும்புவதில்லை. திடமான, திறமையான, அறிவார்ந்த அரசைதான் விரும்புகின்றனர்.” – மோடி
நீதி: காங்கிரசு ஆட்சி போல பாஜக ஆட்சியும் பாலைவனம்தான் என்றாலும், ஒடுக்குமுறையில் திறம், முதலாளிகளுக்கு உதவுதில் திறமை, மக்களை ஏமாற்றுவதில் அறிவு என்று வேறுபடுமென்கிறார் மோடி.
___________
செய்தி: “நாங்கள் ஆட்சிக்கு வந்து, ஐந்தாண்டுகளுக்கு பிறகு, 2019ல் நடைபெறும் லோக்சபா தேர்தலில், ஊழல்வாதிகளுக்கும், கிரிமினல்களுக்கும் கட்டாயம் இடமிருக்காது.” – மோடி
நீதி: அதற்குள் இந்த கிரிமினல்களின் ரவுடி கெட்டப்பு மாற்றப்பட்டு காந்தி கெட்டப்பிற்குள் கொண்டு வரப்படுவார்கள். சட்டபூர்வமாகவே கொள்ளையடிக்கலாமென்று ஆக்கி விட்டால், சட்ட விரோதமாக திருட வேண்டியதில்லையே?
___________
செய்தி: மோடி போட்டியிடும் வதோதரா தொகுதியில் பிரச்சாரம் செய்வதற்காக ஹெச்.ராஜாவும், வாரணாசி தொகுதிக்கு சி.பி.ராதாகிருஷ்ணன், பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், தமிழிசை சவுந்தரராஜன் ஆகிய தமிழக பாஜக தலைவர்களும் செல்கின்றனர்.
நீதி: காசி யாத்திரைக்கு போனவர்கள் திரும்ப வரவில்லை என்றால் பாக்கியம் செய்தவர்கள் என்பதை இவர்களுக்கு நினைவுபடுத்துவோம்.
_____________