பட்டுக்கோட்டை வட்டார விவசாயிகள் விடுதலை முன்னணியில் ஊக்கமுடன் செயல்பட்ட தோழர் ரேனா என்கிற ரெங்கசாமி அவர்கள் 5.5.2014 அன்று காலை 7 மணியளவில் தம்பிக்கோட்டை கீழக்காட்டில் தனது 74-வது வயதில் மாரடைப்பால் காலமானார். கம்யூனிஸ்ட் இயக்கத்தைப் பரப்பியதற்காக மலேசிய அரசால் தூக்கிலிடப்பட்ட தியாகி மலேயா கணபதி பிறந்த ஊர்தான் தம்பிக்கோட்டை. ஆதிக்க சாதிவெறியர்களின் அடக்குமுறை கோரத் தாண்டவம் ஆடிய ஊர்தான் எனினும் அதற்கெதிரான கம்யூனிச போராளிகளையும் நிரம்பப் பெற்ற ஊர் தம்பிக்கோட்டை.

தனது இளம் வயதிலேயே கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இணைத்துக் கொண்ட தோழர் ரேனா மார்க்சிஸ்ட் கட்சி பிரிந்த போது அதனுடன் இணைந்து பணியாற்றினார். கட்சி நடத்திய பல்வேறு போராட்டங்களிலும் பங்கேற்ற தோழர் ரேனா தனது பகுதியில் விவசாயத் தொழிலாளிகளின் கூலி உயர்வுக்காக மக்களைத் திரட்டி போராடி பல வெற்றிகளையும் சாதித்தவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சந்தர்ப்பவாதம், பிழைப்புவாதம் இவற்றால் வெறுப்புற்று 1994 முதல் பத்தாண்டு காலம் அரசியல் நடவடிக்கைகளிலிருந்து விலகியிருந்தார். அப்பகுதியில் செயல்பட்டு வந்த விவசாயிகள் விடுதலை முன்னணியின் செயல்பாடுகளால் உற்சாகமும் நம்பிக்கையும் பெற்ற தோழர் ரேனா 2004-ல் வி.வி.மு வில் இணைந்தார்.
அன்று முதல் வி.வி.மு வில் ஊக்கமுடன் பணியாற்றிய தோழர் ரேனா அனைத்து போராட்டங்களிலும் முன்வரிசையில் நின்றார். நமது பிரசுரங்கள், வெளியீடுகள் அனைத்தையும் வந்தவுடன் பெற்று முதல் ஆளாக விநியோகிப்பார். எந்த கட்டமாக இருந்தாலும், எந்தச் சூழலாக இருந்தாலும் மார்க்சிய அரசியலை அழுத்தமாகவும், துணிவாகவும் விவாதிப்பார். மே-1 அன்று தஞ்சையில் நடைபெற்ற மீத்தேன் எதிர்ப்பு முற்றுகையிலும் துடிப்புடன் கலந்து கொண்டார். மரணம் நெருங்கிக் கொண்டிருந்த அந்தக் காலை நேரத்தில் கூட திராவிட இயக்கத்தின் பிழைப்புவாத, காரியவாத அரசியலை அம்பலப்படுத்திக் கொண்டிருந்தார்.
மே 5 மாலை நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் ம.க.இ.க, வி.வி.மு, பு.மா.இ.ம தோழர்கள் பங்கேற்றனர். இறுதியில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில் ம.க.இ.க மாநில இணைப் பொதுச் செயலாளர் தோழர் காளியப்பன், வி.வி.மு பட்டுக்கோட்டை வட்டாரச செயலாளர் தோழர் மாரிமுத்து உட்பட பலர் தோழர் ரேனாவின் சிறப்பினை நினைவுகூர்ந்தனர்.
தோழரின் உழைப்பு, உறுதி, மார்க்சிய லெனினியத்தின் மீதான அளப்பரிய பற்று ஆகியவற்றை நெஞ்சிலேந்துவோம் !
தோழர் ரேனாவுக்கு சிவப்பஞ்சலி !
விவசாயிகள் விடுதலை முன்னணி,
பட்டுக்கோட்டை வட்டாரம்.