Saturday, May 10, 2025
முகப்புசெய்திதோழர் சீனிவாசன் 2-ம் ஆண்டு சிவப்பஞ்சலி

தோழர் சீனிவாசன் 2-ம் ஆண்டு சிவப்பஞ்சலி

-

மே 5, ம.க.இ.க மாநில பொருளாளராக அறியப்பட்ட தோழர் சீனிவாசனது இரண்டாம் ஆண்டு சிவப்பஞ்சலி

தோழர் சீனிவாசன்
தோழர் சீனிவாசன்

தோழர் மார்க்ஸ்-ன் பிறந்தநாள் மே 5, ம.க.இ.க தோழர் சீனிவாசனின் மறைவு நாளும் கூட. இறுதி நாட்களில் தனது நோய் காரணமாக கடுமையாக போராடிய தோழர் சீனிவாசன் வாழ்நாள் முழுவதும் வர்க்கப் போராட்டக் சூட்டில் ஓய்வு ஒழிச்சலின்றி தமிழகத்தின் நகரங்கள், கிராமங்களில் புதிய ஜனநாயக புரட்சி மாற்றத்தை கணீர் என்ற குரல் மூலம் பரப்புரை செய்தார்.

மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனை குளியலில் எப்போதும் ஒளிபெற்ற தோழர் உழைக்கும் மக்களுக்கு அச்செய்திகளை எடுத்துச் சென்ற வண்ணமாகவே வாழ்ந்தார். மாணவர், தொழிலாளர், அரசு ஊழியர்கள், பெண்கள், இளம் தோழர்கள் என்று மக்களிடம் விதவிதமான வடிவங்கள் மூலம் மேடைப்பேச்சுகளை, விவாதங்களை எடுத்துச்சொன்றார்.

அரசியலில் சமரசமின்றி உறுதியாக புரட்சி நலனில் ஊன்றி நின்ற தோழர், சொந்த வாழ்க்கையிலோ இல்லை அரசியல் ரீதியில் அடக்குமுறை சார்ந்தோ பிரச்சினை வந்தாலும் அமைப்பு, தோழர்கள் உதவியுடன் தன்னை புடம் போட்டுக் கொண்டு எதிர் கொண்டார். எந்த நேரத்திலும் அவர் சளைத்துவிடவில்லை. அவர் சென்னைப் பகுதி சேத்துப்பட்டு உட்பகுதியில் ஒடுக்கப்பட்ட மக்களோடு சலியாமல் பலப்பல போராட்டக் களங்கள் கண்டு அரசியல் ரீதியாக ஐக்கியமானவர். சேத்துப்பட்டின் மேட்டுக்குடியினர் வசிக்கும் பகுதியில்தான் ஆர்.எஸ்.எஸ்-ன் மாநில தலைமை அலுவலகம் இருக்கிறது. ஆனால் சேத்துப்பட்டின் தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதியில் ம.க.இ.க வின் மாநில தலைமை அலுவலகமாக தோழர் சீனிவாசனது வீடு இயங்கியது. இப்போதும் கூட இங்கே ஆர்.எஸ்.எஸ் ஷாகாக்கள் வரமுடியாது எனும் விழிப்புணர்வு மக்களிடம் நிலவுகிறது என்றால் அதில் தோழர் சீனிவாசனது பங்களிப்பும் உண்டு. பகுதி மக்கள் அனைவரோடும் உறவு கொண்டிருந்த தோழர் சீனிவாசனை இன்றும் மக்கள் நினைவு கூர்கின்றனர்.

தோழரின் நினைவுகள் நம்மோடு, நம் இயக்கத்தோடு என்றும் நீங்காது நிலைத்திருப்பவை. தோழரின் அஞ்சலி நாள் அவரது அரசியல் களமான சேத்துப்பட்டு பகுதியில் (அவரது நிழற்படத்தோடு ம.க.இ.க கொடியையும் இணைத்து இளம் தோழர்கள் எளிமையாக அணி செய்து கொடுக்க) ம.க.இ.க குடும்பங்களோடு தோழரின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டு சிறப்பாக நினைவு கூரப்பட்டது. நிகழ்ச்சிக்கு தோழர் வாசு தலைமை தாங்க, தோழர் வீராச்சாமி சிறப்புரையாற்றினார். உரைகளிலும், கூடியிருந்த தோழர்களின் நினைவுகளிலும் நீங்கா இடம் பிடித்த  தோழர் சீனிவாசனை நினைவு கூர்வது, புரட்சிக்கு நாம் பணியாற்றுவதை உற்சாகத்துடன் அதிகப்படுத்துவோம் என்பதே.

– மகஇக
சென்னைக்கிளை