Sunday, May 4, 2025
முகப்புகட்சிகள்இதர கட்சிகள்தேவை: மாற்று அதிகாரத்துக்கான மக்கள் எழுச்சி!

தேவை: மாற்று அதிகாரத்துக்கான மக்கள் எழுச்சி!

-

தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பாகவே, தமிழக மக்கள் மீது வேறொரு முடிவு இடியாய் இறங்கியுள்ளது. மின்கட்டணம் மீண்டும் உயர்த்தப்படவிருக்கிறது. ஜெ ஆட்சிக்கு வந்தவுடனே மின் கட்டணத்தை இருமடங்கு உயர்த்தி விட்டு, இனி கட்டண உயர்வும் மின்வெட்டும் இருக்காது என்று அறிவித்தார். மின்வெட்டு தீராதது மட்டுமல்ல, கட்டணமும் மீண்டும் உயர்த்தப்படுகிறது. மூன்றே ஆண்டுகளில் தமிழக மின்வாரியத்தின் நட்டம் ரூ 45 ஆயிரம் கோடியிலிருந்து 75 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. தமிழக அரசு தனியார் நிறுவனங்களிடமிருந்து ஒரு யூனிட்டுக்கு ரூ 12 வரை விலை கொடுத்து மின்சாரம் வாங்கியிருப்பதுதான் நட்டத்துக்கு காரணம். பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்து குறைந்த விலையில் மின்சாரத்தை வாங்குவதற்குப் பதிலாகத் தனியார் முதலாளிகளிடம் அதிக விலைக்கு வாங்கியிருப்பதில் கோடிக்கணக்கில் இலஞ்சம் கைமாறியிருக்கும் என்ற போதிலும், இந்த முடிவே இல்லாத கட்டண உயர்வுக்குக் காரணம் மின்சாரம் தனியார்மயம்தான்.

உரிமைகள் அற்ற ஜனநாயகம்
படம் : நன்றி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புதுச்சேரி

மின் உற்பத்தி நிலையங்கள் மட்டுமல்ல, நிலக்கரிச் சுரங்கங்களும் எண்ணெய் எரிவாயு வயல்களும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தரகு முதலாளிகளுக்கும் விற்கப்படுவதால், நிலக்கரி மற்றும் எரிவாயுவின் விலையும் இனி கார்ப்பரேட் முதலாளிகளால்தான் தீர்மானிக்கப்படும். அடுத்ததாக முகேஷ் அம்பானியின் கொள்ளை இலாபத்துக்காக எரிவாயு விலை பன்மடங்கு உயர்த்தப்படவிருக்கிறது. அதன் காரணமாக சமையல் எரிவாயுவின் விலை மட்டுமின்றி, மின் கட்டணமும் பன்மடங்கு உயரும். எல்லாப் பொருட்களின் விலையும் அதிகரிக்கும். காப்பீட்டுத் துறை, சுரங்கங்கள், இரயில்வே உள்ளிட்ட பொதுத்துறைகள் தனியார்மயம், விவசாய மானிய வெட்டு, தொழிலாளர்களின் பணிப் பாதுகாப்பு, குறைந்த பட்ச ஊதியம் உள்ளிட்ட உரிமைகள் ரத்து போன்ற அடுத்தடுத்த தாக்குதல்கள் காத்திருக்கின்றன.

மின் கட்டண உயர்வு என்பது பானைச் சோறுக்கு ஒரு சோறு. கல்வி, மருத்துவம், பால், குடிநீர், பேருந்துக் கட்டண உயர்வு என அடுத்தடுத்த தாக்குதல்கள் காத்திருக்கின்றன. இப்படித் தனியார்மயக் கொள்ளைக்கு மென்மேலும் வழியமைத்துக் கொடுக்கும் விதத்தில் ஆட்சி நடத்துவதைத்தான் வளர்ச்சி என்றும் சிறந்த அரசாளுமை என்றும் முதலாளித்துவ ஊடகங்கள் சித்தரிக்கின்றன. டில்லியில் ஒரு கூட்டணி ஆட்சி ஏற்பட்டு அதன் விளைவாக, மேற்கூறிய தனியார்மய நடவடிக்கைககள் தள்ளிப்போடப்பட்டால், இந்தியாவிலிருந்து அந்நிய முதலீட்டாளர்கள் வெளியேற நேரிடும் என்றும், அதன் விளைவாக இந்தியப் பொருளாதாரம் திடீரென்று கவிழும் நிலை ஏற்படுமென்றும் “மூடி” என்ற ஏகாதிபத்திய தர நிர்ணய நிறுவனம் சென்ற மாதம் வெளிப்படையாகவே எச்சரிக்கை செய்திருக்கிறது.

இதற்கேற்ப காங்கிரசும் பா.ஜ.க.வும் ‘வளர்ச்சி’ என்ற பெயரால் கார்ப்பரேட் முதலாளிகளின் கொள்ளைக்கு தமது தேர்தல் அறிக்கைகளின் வழியாக உத்திரவாதம் அளித்துள்ள நிலையில், யார் தலைமையில் எத்தகைய கூட்டணி ஆட்சி அமைந்தாலும், அது கார்ப்பரேட் கொள்ளையர்களின் நோக்கத்தைச் செயல்படுத்துவதாகவே இருக்கும் என்பது நிச்சயமாகி விட்டது.

மறுகாலனியாக்க கொள்கைகள் அமலாகத் தொடங்கிய நாள் முதல் நடந்து வருவது இதுதான். நாடாளுமன்றம், சட்டமன்றம், நிர்வாக எந்திரம், நீதித்துறை ஆகிய அனைத்து நிறுவனங்களின் பெயரளவிலான சுயேச்சைத்தன்மையும் அதிகாரமும் பறிக்கப்பட்டு, அதிகாரம் முழுவதும் ஒழுங்குமுறை ஆணையங்கள், நிபுணர் குழுக்கள் என கார்ப்பேரட் விசுவாச அதிகார வர்க்கத்திடமும் உள்நாட்டு – வெளிநாட்டு கார்ப்பரேட் முதலாளிகளின் கைகளுக்கும் மாற்றப்பட்டு விட்டன.

இன்னொருபுறம், ஓட்டுக்கட்சிகள், அதிகார வர்க்கம், போலீசு, இராணுவம், நீதித்துறை போன்ற அரசின் உறுப்புகள் அனைத்தும் தாங்களே கூறிக்கொள்ளும் விதிகள், மரபுகள் ஆகியவற்றைத் தூக்கியெறிந்து விட்டு, இலஞ்சம், மோசடி, பித்தலாட்டம் உள்ளிட்ட ஒழுக்கக் கேடுகள்தான் தங்கள் விழுமியங்கள் என்று அம்மணமாக நிற்கின்றன. இந்த அரசுக் கட்டமைப்பு நிமிர்த்தவே முடியாத வண்ணம் உளுத்துச் சரிந்து விட்டது என்று புலம்பும் நிலையை ஆளும் வர்க்க சித்தாந்தவாதிகளே எய்தி விட்டனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் என்று கூறப்படுவோர் முதல், அதிகாரிகள், நீதித்துறை உள்ளிட்ட அனைவரும் மக்களின் எதிரிகளாக, கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்தின் அடியாட்படையாக அணிவகுத்து நிற்கின்றனர்.

தங்களைப் பற்றி மக்கள் வைத்திருக்கும் தப்பபிப்பிராயங்களை அவர்களே ஒவ்வொன்றாக நொறுக்கி வருகின்றனர். வாக்குப்பதிவு முடியும் வரை காத்திருந்து மறுநாளே மின் கட்டணத்தை உயர்த்தும் அரசு, தானே கூறிய பாதுகாப்பு ஏற்பாடுகளை அணுசக்தித்துறை செய்ய மறுத்த போதிலும், அணு உலைக்கு அனுமதி வழங்கும் உச்ச நீதிமன்றம், அம்பானியின் எரிவாயுக் கொள்ளையை ஆதரித்து நிற்கும் சர்வகட்சிக் கூட்டணி – இந்த அரசமைப்பின் யோக்கியதையைப் பறைசாற்றும் எண்ணற்ற எடுத்துக் காட்டுகள் நம் முன் அணிவகுத்து நிற்கின்றன. வாக்குரிமை ஒன்றை மட்டும் காட்டி, மக்களுக்கு ஜனநாயகம் இருப்பதாகப் பேசுவது மாய்மாலம் என்று விளங்கவில்லையா? ஓட்டுப் போடுவது ஜனநாயகக் கடமையல்ல, மடமை என்பது இப்போது புரியவில்லையா?

மின்கட்டண உயர்வு, கல்விக் கட்டண உயர்வு, தண்ணீர் வணிகம், மீதேன், ஜிண்டால், கூடங்குளம், விசைத்தறிகளின் அழிவு, தாதுமணற்கொள்ளை, ஆற்று மணற்கொள்ளை – எனப் பிரச்சினை எதுவானாலும், இந்த அரசு அதற்கு வைத்திருக்கும் இறுதித் தீர்வு, அடக்குமுறை ஒன்றுதான். இருக்கின்ற வாழ்க்கையைத் தக்கவைத்துக் கொள்வதற்கு மக்கள் முன் இருக்கும் ஒரேவழி அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொள்வதுதான். போராட்டங்கள் – எழுச்சிகள் மூலம் தமக்கான மாற்று அதிகாரத்தை நிறுவிக் கொள்வதுதான் மக்கள்முன் இருக்கும் ஒரே தீர்வு.
________________________________________
புதிய ஜனநாயகம் – மே 2014
________________________________________