privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கதிருவண்ணாமலையை முழுங்க வரும் ஜிண்டால் – பின்னணி செய்திகள்

திருவண்ணாமலையை முழுங்க வரும் ஜிண்டால் – பின்னணி செய்திகள்

-

வுத்தி வேடியப்பன் மலைகள். நீண்ட நெடிய சாலையில் பயணித்தபடி பார்க்கும் போது தூரத்தில் மேகங்கள் கவிழ்ந்து தொடுவானத்திற்கு திரை போட்டது போல சாம்பல் நிறப் பரப்பாக விரிந்திருக்கும் இரண்டு மலைகள். இம்மலைகள் சார்ந்த பகுதியில் வாழும் 51 கிராம மக்களைப் பொறுத்த வரை அது அவர்களது வாழ்வுக்கு உயிர் கொடுக்கும் தாய்மையின் சின்னம். பருவமழை காலத்தில் சுமார் 40 ஏரிகளுக்கு நீர் கொண்டு வரும் ஓடைகளின் நீர் பிடிப்புப் பகுதி. பல வகையான அரிய விலங்கு, தாவர இனங்களின் தாயகம். 28,000 ஏக்கர் விளைநிலங்களில் விவசாயத்துக்கு உயிர் கொடுக்கும் ஆதாரம்.

கவுத்தி வேடியப்பன் மலை
கவுத்தி வேடியப்பன் மலை

இனாம் காரியந்தல் கிராமத்தில் 4 ஏரிகள், திருவண்ணாமலை குடிநீருக்கு பயன்படும் வேங்கிக்கால் ஏரி, ஆடையூர் ஏரி, ஊசம்பாடி ஏரி, தாங்கல் ஏரி, மன்னை ஏரி, கொளக்கரை வாடி ஏரி, வாய்விடந்தாங்கல் ஏரி, படூர், மேல் படூர், பெரியகுளம் ஏரி, நத்தவாடி ஏரி, வடமாத்தூர் ஏரி, நாச்சிப்பட்டு ஏரி, கன்னக் குரிக்கை பாய்ச்சல், பெரிய கோலப்பாடி, சின்ன கோலப்பாடி, பீமாநந்தல், தேவநந்தல், கருந்துவம்பாடி, பெரியகுளம், குலால்பாடி, ஏந்தல், ஆலத்தூர், பெரிய பாலிப்பட்டி, சின்ன பாலிப்பட்டி, புனல்காடு, தேவநந்தல் ஆகிய கிராமங்களின் நீர்நிலைகள் கவுத்தி வேடியப்பன் மலையை சார்ந்து இருக்கின்றன.

அந்த மலை அடிவாரத்தில் கொட்டிக் கிடக்கும் கற்கள் தம்முள் அடக்கியிருக்கும் இரும்புத் தாதுவின் பளபளப்பில் வெயிலில் மின்னுகின்றன. பல லட்சம் ஆண்டுகளாக இந்த கற்களுக்குள் உறைந்திருக்கும் இரும்புத் தாது அப் பகுதியில் வசிக்கும் 5 லட்சம் மக்களைப் பொறுத்த வரை அந்த மலையின் பிரிக்க முடியாத ஒரு அங்கம். கவுத்தி வேடியப்பன் மலைகளிலிருந்து இறங்கி வரும் நீருக்கு நோய்களை தீர்க்கும் அரிய மருந்து குணத்தை கொடுக்கும் ஜீவ சத்து. மக்களுக்கு சொந்தமான இந்த கனிம வளம் மக்களின் பொது நலனுக்காக கூட பயன்படப்போவதில்லை. அதை பறித்து தின்ன ஒரு தனியார் முதலாளி ஆலாய் பறக்கிறான்.

இம்மலைகள் அமைந்துள்ள திருவண்ணாமலையிலிருந்து சுமார் 2,000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அரியானா மாநிலத்தின் ஹிசாரைச் சேர்ந்த ஜிண்டால் குடும்பத்தினரை பொறுத்த வரை அம்மலை, அவர்களது உருக்குத் தொழில் சாம்ராஜ்யத்தை விரிவாக்குவதற்கு தேவைப்படும் இரும்புத் தாதை பாதுகாத்து வைத்திருக்கும் ஒரு பொதி மட்டுமே. மலையை உடைத்து வெளியில் எடுக்கப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு, உருக்கு ஆக்கப்பட்டு, கிராக்கி உள்ள இடங்களில் விற்று இலாபத்தை சுருட்டக் காத்திருப்பதுதான் அந்த இரும்புத் தாது. தனது உள்நாட்டு வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு லாபம் குவிக்க தேவைப்படுவதுதான் அந்த மலை. மக்களின் இரும்பு தாது கூட மக்களுக்கோ அரசுக்கோ பயன்படப்போவதில்லை.

கவுத்தி வேடியப்பன் மலைகளை வெடி வைத்து துளையிட்டு, 30 மீட்டர் அகலமான பள்ளங்கள் தோண்டி திறந்தவெளி சுரங்கம் வெட்டி ஆண்டுக்கு 10 லட்சம் டன் தாது எடுப்பதற்கு ஜிண்டால் திட்டம் தயாரித்திருக்கிறது. 1:0.36 என்ற விகிதத்தில் இரும்புத் தாது அடங்கியிருக்கும் கற்களிலிருந்து 1 டன்னுக்கு 360 கிலோ இரும்புத் தாது எடுத்து விட்டு 640 கிலோ சக்கையை கொட்டி விடும்.

ஓ.பி.ஜிண்டால்
ஓ.பி.ஜிண்டால்

இந்தப் பணிகளின் போது சுரங்கப்பகுதியில் 36.7 முதல் 56 டெசிபல் சத்தம் ஏற்படும் என்றும் சுற்று வட்டாரத்தில் 35.7 முதல் 52 டெசிபல் சத்தம் ஏற்படும் என்றும் ஜிண்டாலின் அறிக்கை தெரிவிக்கிறது. ஒரு நாளைக்கு 1.35 லட்சம் லிட்டர் தண்ணீர் தூசியை தணிப்பதற்கும், மரம் வளர்ப்பதற்கு 30,000 லிட்டர் தண்ணீரும், குடிநீருக்காக 20,000 லிட்டர் தண்ணீரும், 4 லட்சம் லிட்டர் தண்ணீர் இரும்புத் தாதுவை செறிவூட்டவும் என மொத்தம் 560 கனமீட்டர் (5.6 லட்சம் லிட்டர்) தண்ணீர் பயன்படுத்தப்படும் என்று கூறுகிறது திட்ட அறிக்கை.

இந்த திட்டத்தின்படி எடுக்கப்படும் 1 டன் இரும்புத் தாதுவுக்கு  ஜிண்டால் அரசுக்கு ரூ 27 மட்டும் உரிமத் தொகை செலுத்தும். சந்தையில் சுத்திகரிக்கப்பட்ட தாதுவின் விலை ஒரு டன்னுக்கு ரூ 6,000 வரை விலை வைத்து விற்கும். மக்களுக்கு நாமம், ஜிண்டாலுக்கு பெரும் இலாபம். அரசோ தரகு வேலை பார்க்கிறது.

இந்தத் திட்டத்தில் சுமார் 180 பேர் வரை நிரந்தரத் தொழிலாளர்களாக வேலை வாய்ப்பு பெறுவார்கள் என்றும் இன்னும் பல நூறு பேருக்கு மறைமுக வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறுகிறது ஜிண்டால். இந்த திட்டத்தின் மூலம் பகுதியில் கல்வி, நீர் வழங்கல், மின்சாரம், மருத்துவ வசதிகள் மேம்படும் என்றும் சேலத்தில் உள்ள உருக்கு ஆலைக்கு இரும்புத் தாது அனுப்பப்படும் என்றும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் மலை தகர்க்கப்படும் என்றும் தாது மணல் லாரிகளில் பத்திரமாக மூடப்பட்டு கொண்டு போகப்படும் என்றும் ஊழியர்களுக்கு அவ்வப்போது மருத்துவ பரிசோதனை செய்யப்படும் என்றும் சுற்றுச் சூழல் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும் ஜிண்டால் உறுதி அளித்திருக்கிறது. இங்கு வெட்டப்படும் 2.2 லட்சம் மரங்களுக்கு பதிலாக திருநெல்வேலி மாவட்டத்தில் மரங்கள் வளர்க்கப்படும் என்று கூறியிருக்கிறது. நல்ல வேளை ஜிண்டாலின் தாயகத்திற்கு அருகில் உள்ள தார் பாலைவனத்தில் மரங்கள் வளர்ப்பதாக அவர்கள் கூறவில்லை.

இந்தத் திட்டத்துக்கு எதிராக “இப்போது எங்களுக்கு காது நன்கு கேட்கிறது. எங்களுக்கு உங்கள் திட்டமும் வேண்டாம், அதனால் ஏற்படும் பாதிப்புக்கு உங்கள் செவிட்டு மெசினும் வேண்டாம்.” என்றும் “இங்கு 2 லட்சத்துக்கும் அதிகமான மரங்களை வெட்டி விட்டு எங்கோ திருநெல்வேலியில் மரம் வளர்ப்பீர்கள் என்று என்ன உத்தரவாதம், அப்படியே வளர்த்தாலும் அதனால் எங்களுக்கு என்ன பயன்” என்றும் “இங்கு யாரும் வேலை இல்லாமல் சுத்திக் கொண்டிருக்கவில்லை, உங்கள் திட்டம் கொண்டு வரப் போகும் 150 வேலைவாய்ப்புகளை நீங்களே வைச்சுக்கோங்க, மீதி பேரை தினக் கூலி அகதிகளாக நகரங்களுக்கு விசிறியடிக்கும் உங்கள் திட்டம் எங்களுக்கு வேண்டாம்” என்றும், “எங்களை கொன்று போட்டு விட்டு எங்கள் மலை மீது கை வையுங்கள்” என்றும் தமது நிலத்தையும், விவசாயத்தையும், வாழ்க்கையையும் பாதுகாக்க போராடுகின்றனர் மண்ணின் மைந்தர்களான திருவண்ணாமலை மக்கள்.

இம்மக்களுக்கும் இந்திய/தமிழக அரசுகள் மற்றும் பன்னாட்டு நிதி மூலதனத்தால் ஆதரிக்கப்படும் ஜிண்டால் குழுமத்துக்கும் இடையேயான முரண்பாடு எப்படி தீர்க்கப்படும்?

சஜ்ஜன் ஜிண்டால்
சஜ்ஜன் ஜிண்டால்

ஓ.பி. ஜிண்டால் அரியானா மாநிலத்தின் ஹிசார் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு அம்மாநிலத்தின் மின்துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர். ஜிண்டால் உருக்கு நிறுவனத்தின் (Jindal Steel Works Corporation) முதலாளியான அவரது மனைவி சாவித்திரி,  ஜிண்டால் அவரது மறைவுக்குப் பிறகு அதே தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகவும் அரியானா அமைச்சராகவும் இருந்து வருகிறார். நான்காவது மகன் நவீன் ஜிண்டால் குருக்சேத்திரா நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று மத்திய சுரங்கத் துறை இணை அமைச்சராகவும் பதவி வகித்தவர். இந்திய அரசியலில் முக்கிய பங்கு வகிக்கும் அதிகாரவர்க்க முதலாளிகள் குடும்பத்தில் முக்கியமானவர்களாக பரிணமித்திருப்பவர்கள் ஜிண்டால் குடும்பத்தினர். சாவித்திரி ஜிண்டால் மற்றும் குடும்பத்தினர் உலகக் கோடீஸ்வரர்கள் வரிசையில் 295-வது இடத்தையும் இந்தியாவில் 10-வது பெரிய பணக்காரராகவும் ஃபோர்ப்ஸ் பத்திரிகையால் மதிப்படப்பட்டுள்ளனர்.

ஓ.பி. ஜிண்டால் 2005-ம் ஆண்டு இறப்பதற்கு முன்பு தான் சேர்த்து வைத்த சொத்துக்களை தனது மனைவி சாவித்திரி ஜிண்டாலின் பெயருக்கு மாற்றியிருந்தார். பிருத்விராஜ் ஜிண்டால், சஜ்ஜன் ஜிண்டால், ரத்தன் ஜிண்டால், நவீன் ஜிண்டால் ஆகிய நான்கு மகன்களுக்கும் அந்த சொத்துக்கள் பிரிக்கப்பட்டு கொடுக்கப்பட்டன. ஆனால், சொத்துக்களின் உடைமை பல அடுக்கு பினாமி கம்பெனிகளை முன் வைத்து இந்து கூட்டுக் குடும்பம் என்ற வடிவிலேயே பராமரிக்கப்பட்டு வருகின்றது.

சஜ்ஜன் ஜிண்டால் தலைமையில் இயங்கும் ஜிண்டால் விஜயநகர் ஸ்டீல் லிமிட்டெட் (JVSL) என்ற நிறுவனம் கர்நாடகாவிலும் மகாராஷ்டிராவிலும் உருக்கு ஆலைகளை இயக்கி வருகிறது. பங்குதாரர்களுக்கு ஆண்டுக்கு ஆண்டு லாபத்தை அதிகரிக்க வேண்டும், அதற்கு  உருக்கு உற்பத்தி ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்க வேண்டும், அதற்கு ஆண்டுக்கு ஆண்டு அதிக இரும்புத் தாது தேவை. அந்த தேடலில் இருந்த ஜிண்டாலின் கண்ணில் விழுந்ததுதான் சேலத்தில் இயங்கி வந்த தென்னக இரும்பு/உருக்கு நிறுவனம் (Southern Iron and Steel Company – SISCOL).

சாவித்திரி ஜிண்டால்
சாவித்திரி ஜிண்டால்

1990-களில் கோவை லட்சுமி மில் வொர்க்ஸ் 40%, தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ – TIDCO) 10% ஆகியவற்றின் கூட்டு பங்கு நிறுவனமாக உருவாக்கப்பட்ட சிஸ்கால் ஆலைக்கு தேவையான கடன் கொடுக்காமல் இழுத்தடித்த ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி தேடிப் பிடித்த புதிய முதலாளிதான் ஓ.பி.ஜிண்டால். 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஓ.பி. ஜிண்டால் லட்சுமி மில் வொர்க்சிடமிருந்து சிஸ்காலின் பங்குகளை வாங்கி அந்நிறுவனத்தை தனது குடும்பத்துக்கு சொந்தமாக்கிக் கொண்டார். அந்நிறுவனத்தில் 11% பங்குகளை வைத்திருந்தது டிட்கோ.

இது ஒருபக்கம் நடந்து முடிந்திருக்க, இதற்கு இணையாக அந்த ஆண்டு ஜூலை மாதம் திருவண்ணாமலை கவுத்தி வேடியப்பன் மலைகளில் புதைந்திருக்கும் 3.5 கோடி டன் இரும்புத் தாதை தோண்டி எடுப்பதற்கான கூட்டு நிறுவனம் அமைக்க எடுக்க தனியார் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பம் கோரியது, டிட்கோ. அந்த மலையை குத்தகைக்கு விடப் போவது ஜிண்டாலுக்குத்தான் என்று ஏற்கனவே திரைமறைவு பேரங்களில் முடிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். இருப்பினும் மக்கள் சொத்தை முதலாளிகளுக்கு ஏலம் விடுவதை விதிமுறைகளின் படி செய்வதாக போக்கு காட்டப்பட்டது. விண்ணப்பித்த 15 நிறுவனங்களில் 6 மட்டுமே தேவைப்படும் ரூ 250 கோடி நிகர சொத்து மதிப்பு கொண்டிருந்தன. கோவாவிலும், கர்நாடகாவிலும் இரும்புத் தாது வெட்டி ஏற்றுமதி செய்து நாட்டிற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தி வரும் 4 நிறுவனங்கள் கேட்கப்பட்ட விபரங்களை சமர்ப்பித்திருந்தன.

மே 4-ம் தேதி நடந்த டிட்கோ இயக்குனர்கள் கூட்டத்தில் ஜிண்டாலுக்கு ஒப்பந்தம் வழங்குவதாக முடிவு செய்து இயக்குனர் குழு சார்பில் ரமேஷ்ராம் மிஸ்ரா என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி தமிழக அரசுக்கு கடிதம் அனுப்புகிறார். சரியாக 20 நாட்களுக்குப் பிறகு தமிழ்நாடு அரசின் தொழில்துறையின் செயலராகவும் இருக்கும் ரமேஷ்ராம் மிஸ்ரா டிட்கோவுக்கு  ஜிண்டாலுடன் ஒப்பந்தம் போட அனுமதி அளித்து கடிதம் அனுப்புகிறார். அடுத்த நாளே டிட்கோவுக்கும் ஜிண்டாலுக்கும் இடையே ஒப்பந்தம் போடப்படுகிறது. ஒரு ஓட்டுனர் உரிமம் வழங்குவதற்கே பல நாட்கள் இழுத்தடிக்கும் அரசு நடைமுறைகளுக்கு மத்தியில் அம்மாவின் பொற்கால ஆட்சியில் ஒரு சில மலைகளை தாரை வார்ப்பதற்கான ஒப்பந்தம் 3 வாரத்தில் போடப்பட்டு விட்டது என்ற சாதனையை எண்ணிப் பாருங்கள். ஐஏஎஸ் அதிகார வர்க்கம் இந்த நாட்டு தரகு முதலாளிகளுக்கு அடியாள் வேலை செய்யும் வேகத்தை பாருங்கள்!

ஜிண்டால் குடும்பம்
ஜிண்டால் குடும்பம்

டிட்கோவுக்கும், ஜிண்டாலுக்கும் இடையேயான ஒப்பந்தத்தின் படி, ஜிண்டால் குழுமம் டிம்கோ (தமிழ்நாடு இரும்புத் தாது சுரங்க நிறுவனம்) என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை ஆரம்பிக்கும்; திட்டப்பணிக்கும் தேவையான அனுமதிகள் அனைத்துக்கும் ஜிண்டால் பொறுப்பு ஏற்றுக் கொள்ள வேண்டும்; வெட்டி எடுக்கப்பட்ட இரும்புத் தாது சிஸ்கால் நிறுவனத்துக்கு தரப்பட வேண்டும்; டிட்கோ தன் பங்காக 1% முதலீடு செய்யும். மூன்று ஆண்டுகளுக்கு பிறகு டிட்கோ தனது பங்கு மூலதனத்தை ஜிண்டாலுக்கு விற்று விட வேண்டும்.

இந்நிறுவனத்தின் பெயரில் 99% பங்குகளை வைத்திருக்கும், 3 ஆண்டுகளில் அதை 100% ஆக உயர்த்திக் கொள்ளவிருக்கும், தனக்கு சொந்தமான சிஸ்காலுக்கு இரும்புத் தாதுவை எடுக்கவிருக்கும் ஜிண்டாலின் பெயர் அடையாளமே இல்லாமல், 1% வைத்திருக்கும் டிட்கோவை முன் வைத்து, டிம்கோ என்ற பெயரில் தமிழ்நாடு அரசு நிறுவனம் போல பிம்பத்தை கட்டியமைக்கின்றனர்.

இதற்கு 3 ஆண்டுகளுக்குள் 22.2.2008 அன்று மும்பை உயர்நீதிமன்றத்தின் அனுமதி பெற்று சிஸ்கால் முழுமையாக ஜிண்டால் விஜயநகர் ஸ்டீலுடன் இணைக்கப்பட்டு செரிக்கப்பட்டு விட்டது என்பதை பார்க்கும் போது இந்த மோசடி அப்பட்டமாக புரிய வரும்.

2005-ம் ஆண்டு மே மாதம் 24-ம் தேதி ஜிண்டாலின் பினாமி நிறுவனங்களான விருந்தாவன் சர்வீசஸ், சன் இன்வெஸ்ட்மென்ட் முதலானவற்றுக்கு 99% பங்குகள், தமிழக அரசு நிறுவனமான டிட்கோவுக்கு 1% பங்குகள் என்ற வகையில் புதிய நிறுவனமான டிம்கோ உருவாக்கப்படுகிறது.

டிம்கோ நிறுவனத்தில் பங்கு யார் பெயரில் இருக்கிறது என்று பார்த்தால் அது ஜிண்டால் -1, ஜிண்டால் -2, ஜிண்டால் -3 என்று வரிசையாக ஜிண்டால் குடும்பத்தினரையும் பல உறவினர்களையும் உள்ளடக்கியிருக்கிறது.

சன் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்தில் ஓம் பிரகாஷ் ஜிண்டால், ரத்தன் கே ஜிண்டால், புரான் சந்த் சர்மா, பி ஆர் ஜிண்டால், சங்கீதா ஜிண்டால், ஓ பி ஜிண்டால் (இந்து கூட்டுக் குடும்பம்), சாவித்ரி தேவி ஜிண்டால், ஸ்மினு ஜிண்டால், திருப்தி ஜிண்டால், தாரிணி ஜிண்டால், தான்வி ஜிண்டால், அபுதய் ஜிண்டால், ஊர்வி ஜிண்டால், தீபிகா ஜிண்டால், நவீன் ஜிண்டால் என்று வரிசையாக ஓ.பி.ஜிண்டாலின் வீட்டில் பிறந்த குஞ்சு குளுவான்கள் வரை பங்குதாரர்களாக உள்ளனர். இன்னொரு முக்கிய நிறுவனமான விருந்தாவன் கம்பெனியை கட்டுப்படுத்தும் அளவு பங்குகளை வைத்திருப்பது சன் சர்வீசஸ் நிறுவனம். இப்படி ஒன்றுக்குள் ஒன்று என புரிந்து கொள்ள முடியாத இடியாப்பச் சிக்கலாக இருப்பவைதான் இந்திய தரகுமுதலாளிகளின் சொத்து விவகாரங்கள்.

மும்பை ஜிண்டால் ஹவுஸ்
மும்பை ஜிண்டால் ஹவுஸ்

ஆர்.எஸ்.எஸ்சின் பொருளாதார மேதை குருமூர்த்தி உலகுக்கே வழிகாட்டக் கூடியதாக முன் வைத்த இந்திய பாணி இந்து கூட்டுக் குடும்ப, சாதி அடிப்படையிலான முதலாளித்துவத்தின் லட்சணம் இதுதான்.

“நீ அவல் கொண்டு வா, நான் உமி கொண்டு வருகிறேன் ஊதி ஊதி தின்னலாம்” என்ற இந்த ஒப்பந்தத்திற்குள் இருக்கும் பூனைக் குட்டி 2 நாட்களுக்குப் பிறகு வெளி வந்தது. ஒப்பந்தத்தில் இரும்புத் தாதுவை பெறவிருக்கும் சிஸ்கால் நிறுவனமும் ஜிண்டாலின் கட்டுப்பாட்டில் உள்ளது என்ற விபரம் குறிப்பிடப்படவில்லை. அதாவது, தமிழக மக்களுக்கு சொந்தமான இரும்புத் தாதுவை பெற்று லாபம் குவிக்கப் போவது ஜிண்டால், அதை வெட்டும் நிறுவனத்தின் உரிமையும் ஜிண்டாலுக்கு, ஆனால் பெயரளவில் பங்குதாரராக தமிழக அரசு நிறுவனமான டிட்கோ.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு 26.5.2000 அன்று கவுத்தி-வேடியப்பன் மலையை உடைத்து 325 ஹெக்டேரில் இரும்புத் தாது எடுப்பதற்கு உரிமம் கோரி டிட்கோ மத்திய அரசுக்கு விண்ணப்பம் அனுப்பியிருந்தது. ஜிண்டாலுடன் ஒப்பந்தம் போட்ட பிறகு பொறுப்பான அடியாளாக செயலில் இறங்கிய டிட்கோ, தான் அனுப்பியிருந்த விண்ணப்பத்தை புதிய நிறுவனமான டிம்கோ (ஜிண்டாலுக்கு  சொந்தமானது) வுக்கு மாற்றிக் கொள்ளும்படி மத்திய அரசுக்கு கடிதம் எழுதுகிறது.

இவ்வாறு, கவுத்தி வேடியப்பன் மலையையும், டிம்கோ நிறுவனத்தையும் இவர்களிடம் ஒப்படைப்பதற்கு அம்மாவின் பொற்கால ஆட்சியின் கீழ் இருந்த டிட்கோ நிறுவனம் முழு முயற்சிகளுடன் உழைத்தது. என்ன இருந்தாலும் ஜிண்டால் குடும்பத்தினர் பாசப் பிணைப்பும், தேசப் பற்றும் உடைய அற்புத மனிதர்கள். கவுத்தி வேடியப்பன் மலையைச் சார்ந்துள்ள 51 கிராமங்களைச் சேர்ந்த 3 லட்சம் மனிதர்கள் ஜெயலலிதாவுக்கு என்ன நிதி கொடுத்து விட முடியும். தேர்தல் வந்தால் தலைக்கு இத்தனை நூறு ரூபாய் என்று கொடுக்க வேண்டிய மக்கள் தொகைதான் அது, தரக் கூடியது அல்ல என்று ஜெயலலிதாவுக்கு நன்கு தெரியும்.

3.3.2006 அன்று கவுத்தி மலையில் 30 ஆண்டுகளுக்கு இரும்புத் தாது எடுக்க டிம்கோவுக்கு அனுமதி வழங்கும் படி தமிழ்நாடு அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை அனுப்புகிறது. அடுத்த 10 நாட்களில் 13.6.2006 அன்று மத்திய அரசின் சுரங்கத் துறை கவுத்தி வேடியப்பன் மலையில் இரும்புத் தாது எடுக்க அனுமதியை வழங்கி விடுகிறது. தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்கும் பிரச்சனைக்கோ, காவிரியில் நீர் விடச் சொல்லியோ தமிழகத்திலிருந்து எழுதும் கடிதங்களுக்கு ஆண்டுக் கணக்கில் நிவாரணம் கிடைக்காமல் இழுத்தடிக்கும் போது ஜிண்டாலுக்கு சென்னையில் அம்மா அடியாள் வேலை பார்க்க, மத்தியில் ஜிண்டால் குடும்பம் நேரடியாக செல்வாக்கு செலுத்த அனுமதிகள் மழையாக கொட்டியிருக்கின்றன.

கவுத்தி வேடியப்பனை மலைமேலும் கவுத்திமலை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் தாது எடுப்பதற்காக 325 ஹெக்டேரில் 2.22 லட்சம் இயற்கையாக வளர்ந்த மரங்களை வெட்டுவதற்கும் இரும்பு தாதுவை சுத்தம் செய்தல் மற்றும் அடர்ப்பித்தல் ஆலை அமைப்பதற்கும் வன பாதுகாப்பு சட்டத்தின் படி அனுமதி கேட்டு டிம்கோ விண்ணப்பத்தது.

27.12.2008 அன்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் எம் ராஜேந்திரன் மற்றும் வேலூர் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்  இளங்குமரன் மக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தினர். டிம்கோ பிரதிநிதி விஜய் சர்மாவும், 1000-க்கும் அதிகமான மக்களும் கலந்து கொண்டனர். 3 மணி நேரம் கூட்டம் நடந்தது.

டிம்கோ சார்பாக ஜிண்டால் குழுமத்தைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர் திட்டத்தினால் பகுதிக்கு வரப் போகும் வேலை வாய்ப்பு, சுற்றுச் சூழலை பாதுகாக்க நடவடிக்கைகள், மருத்துவமனை திறத்தல் என பட்டியலிட்டிருக்கிறார்.

கூடியிருந்த 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அனைவரும் தமது எதிர்ப்பை தெரிவித்தனர். “எங்களை கொன்று போட்டு விட்டு எங்கள் மலை மீது கை வையுங்கள்” என்று 80 வயதான மூதாட்டி ஒருவர் கூறியிருக்கிறார். திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த படூர் கே ரமேஷ் என்ற வழக்கறிஞரை சூழ்ந்து கொண்டு மக்கள் தமது எதிர்ப்பை தெரிவித்தனர். திட்டத்தை நிறைவேற்ற முயற்சித்தால் மாவட்டத்தில் கடுமையான சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் அறிக்கை அனுப்பியிருக்கிறார். இரண்டு கிராம பஞ்சாயத்துக்கள் திட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியிருக்கின்றன.

அத்தோடு திட்டம் தற்காலிகமாக முடக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் 2011-ம் ஆண்டு அம்மாவின் பொற்கால ஆட்சி மீண்டும் மலர்ந்த பிறகு ஜிண்டாலுக்கு மீண்டும் உயிர் துளிர்க்கிறது. 2014 பிப்ரவரி 7-ம் தேதி அதிகாரம் பெற்ற குழுவின் தலைவர் ஜெயகிருஷ்ணன் ஆய்வு செய்ய வருகிறார். அதைத் தொடர்ந்து  இனாம் காரியந்தல், பெரிய பாலியப்பட்டு, சின்ன பாலியப்பட்டு, அடி அண்ணாமலை உள்ளிட்டு 51 கிராம மக்கள் ஜிண்டால் திட்டத்தை எதிர்த்து போராட ஆரம்பித்தனர்.

சில இயக்கங்கள், தனிநபர்கள், உள்ளிட்ட பலரும் இந்த திட்டத்தை எதிர்த்து கிராமங்களில் பிரச்சாரம் செய்திருக்கின்றனர். கிராம மக்களில் பலர் ஜிண்டால் நிறுவனம் இயங்கும் குதிரேமுக் பகுதிக்கு சென்று வந்திருக்கின்றனர் அந்த பகுதிகளில் விவசாயம் முழுவதுமாக அழிக்கப்பட்டிருக்கிறது; குடிநீர் கூட 15 நாட்களுக்கு ஒருமுறைதான் விடப்படுகிறது; துங்கபத்ரா, நேத்ரா நதிகள் வறண்டு போயிருக்கின்றன என்ற அறிந்து தமது மலைகளை பாதுகாப்பதில் மேலும் உறுதியடைந்திருக்கின்றனர்.

ஜிண்டால் சாம்ராஜ்யம்
ஜிண்டால் சாம்ராஜ்யம்

கிராம இளைஞர்கள் ஆட்டோ வைத்து கிராமம் கிராமமாக ஜிண்டால் திட்டத்துக்கு எதிராக பிரச்சாரம் செய்திருக்கின்றனர். கனிமவளத் துறை வண்டி ஒன்று வந்து கல்லை ஜீப்பில் எடுத்துச் செல்ல முயற்சித்த போது மக்களை அதை சிறைப்பிடித்து வைத்து, விட மறுத்திருக்கின்றனர்.

ஜனவரி மாதம் கிராம மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த 3 நாள் பைக் பிரச்சாரம் நடத்தப்பட்டிருக்கிறது. தொடர்ச்சியாக பல்வேறு தரப்புகளால் அணிதிரட்டப்பட்டு 2014 மார்ச் 14 அன்று திருவண்ணாமலை உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்திருக்கிறது. இதில் ஆடையூர், வேடியப்பனூர், சின்னபாலியப்பட்டு, பெரியபாலியப்பட்டு, வெங்காயவேலூர், தேவனந்தல், வடமாத்தூர் உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் திட்டத்தை எதிர்த்து பேசியிருக்கின்றனர்.

அவர்களில் ஒருவரான இந்து முன்னணியைச் சேர்ந்த சங்கர் என்ற வழக்கறிஞர் மற்றவர்களை கலந்து ஆலோசிக்காமலேயே, “நாம் திருவண்ணாமலையின் கிரிவலப் பாதையை பாதுகாக்க, மார்ச் 17-ம் தேதி கிரிவலத்துக்கு வரும் பக்தர்களிடம் நோட்டீஸ் கொடுத்து பிரச்சாரம் நடத்துவோம்” என்று போராட்டத்தை இந்துத்துவ பாதையில் திருப்ப முயற்சித்திருக்கிறார்.

அதன்படி, மார்ச் 17-ம் தேதி ஆதி அண்ணாமலையார் கோயில் அருகே கிரிவலப் பாதுகாப்பு குழு மற்றும் இந்து முன்னணி சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சுமார் 600 பேர் கலந்து கொண்டிருக்கின்றனர். வேடியப்பன் சாமி அருள் வந்துவிட்டதாக கூறி 5 பெண்கள் ஆடியிருக்கின்றனர். உடனே வழக்கறிஞர் சங்கர் “அண்ணாமலை யாரை தவிர நமக்கு வேறு கதியில்லை. அதனால், அருள்மிகு அண்ணாமலையார் கோயிலில் நாளை (இன்று) அங்க பிரதட்சணம் செய்து ஜிண்டால் திட்டத்தை எதிர்ப்போம்” என்று அறிவித்திருக்கிறார். அடுத்த நாள் அங்க பிரதட்சண போராட்டத்துக்கு சுமார் 50 பேர் போயிருக்கின்றனர். “எல்லாம் வல்ல அண்ணாமலையார் உங்களை காப்பாற்றுவார்” என்று சொன்னால் வேலைக்காகாது என்று சங்கரையும் தொண்டு நிறுவனத்தின் பண உதவியையும் துரத்தி விட்டிருக்கின்றனர் போராடும் மக்கள்.

இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் ஆரம்பித்து விட ஓட்டுக் கட்சிகள் படையெடுத்திருக்கின்றன. தி.மு.கவின் ஸ்டாலின் போராட்டக் குழுவினரை சந்தித்திருக்கிறார். “எனக்கும் இதற்கும் தொடர்பில்லை” என்ற அவரிடம், “நீங்களும் பணம் வாங்கி விட்டீர்கள்” என்று சந்தேகமாக இருக்கிறது என பொதுமக்களில் ஒருவர் கேட்டிருக்கிறார். “நான் இதைப் பற்றி கேள்விப்படவேயில்லை, எ.வ.வேலு சொல்லித்தான் தெரியும். எங்கள் ஆட்சியில் சில அனுமதிகள் கொடுக்கப்பட்டிருக்கலாம். அ.தி.மு.க ஆட்சியில்தான் ஒப்பந்தம் போட்டிருக்கிறார்கள்” என்றும் “இதை தடுப்பதற்கு மாநில அரசு எதுவும் செய்ய முடியாது, மத்திய அரசில் நாங்கள் பங்கேற்கும்படி நிலை வந்தால் செய்ய முடியும்” என்ற அவர் தங்கள் கட்சிக்கு வாக்களிக்கும்படி கூறியிருக்கிறார்.

“இந்த புராஜக்ட் ரத்து ஆகவில்லை என்றால் தேர்தலை புறக்கணிப்போம்” என்ற மக்களிடம், “அது பலன் தராது, தேர்தலை புறக்கணித்தால் உங்களுக்கு கேள்வி கேட்க உரிமை இருக்காது. போன தேர்தலில் அ.தி.மு.கவின் அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு ஓட்டு போட்டீர்கள், அவர் என்ன செய்தார், இந்த தேர்தலில் அவரது கட்சியை தோற்கடிக்கும்படி பிரச்சாரம் செய்யுங்கள்” என்று தனது ஓட்டுப் பொறுக்கலில் குறியாக இருந்திருக்கிறார்.

கவுத்தி வேடியப்பன் மலைதொடர்ந்து நடந்த பொதுக்கூட்டத்தில் ஜிண்டாலும், ஜெயாவும் நிற்கும் போட்டோவை காட்டி பேசியிருக்கிறார்.

அ.தி.மு.க சார்பில் பண்ருட்டி ராமச்சந்திரன் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி பூமிக்கு கீழ் இருப்பவை பற்றி தீர்மானிக்கும் உரிமை மத்திய அரசுக்குத்தான் உள்ளது. எனவே மத்தியில் நாம் கட்டுப்படுத்தும் ஆட்சி அமைய உதவுங்கள் என்று கூறியிருக்கிறார்.

ஜெயா சேலத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்யும் போது கவுத்தி வேடியப்பன் மலையை ஜிண்டாலுக்கு கொடுப்பதை எதிர்த்து பேசியிருக்கிறார். தானே அனுமதிகளையும், ஏற்பாடுகளையும் செய்து கொடுத்து விட்டு இப்போது திட்டத்தை நிறைவேற்ற விட மாட்டோம் என்று முழங்கியிருக்கிறார்.

இந்த திட்டத்தை தடுத்து நிறுத்துவதற்கு அ.தி.மு.கவோ எதிர்க்கும் தி.மு.கவோ எதையும் செய்யப் போவதில்லை. மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் திட்டத்தை நிறைவேற்ற விட மாட்டோம் என்று தி.மு.க மாவட்டச் செயலாளரும் கல்வி கொள்ளையருமான எ.வ.வேலு அறிக்கை வெளியிட்டாலும் அவரும் அ.தி.மு.கவைச் சேர்ந்த சட்ட மன்ற உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, நகரசபைத் தலைவர் பாலச்சந்திரன் போன்றவர்களும் ஏற்கனவே மலையை உடைத்தும், கல்விக் கொள்ளை அடித்தும் சேர்க்கும் பணத்தை பெருக்கிக் கொள்ள புதிய காண்டிராக்ட் வாய்ப்புகளை அள்ளித்தரும் ஜிண்டால் திட்டத்தை தனிப்பட்ட முறையில் வரவேற்கவே செய்வார்கள்.

எது எப்படியோ ஜிண்டால் தரப்பில் அரசு தெளிவாக இருக்கிறது.

இது போன்ற இயற்களை வளங்கள் அடங்கிய இடத்தை கைப்பற்றுவதற்கு ஒரு காலில் வளர்ச்சி, இன்னொரு காலில் ஆயுதம் தரித்து போக வேண்டும் என்கிறார் சத்தீஸ்கர் மாநிலத்தில் நியமகிரி மலையை பாதுகாக்க போராடும் பழங்குடி மக்களை எதிர்த்து இறக்கப்பட்ட சி.ஆர்.பி.எஃப் இயக்குனர் விஜயகுமார்.

‘தேர்தல் ஆணையம் போல, ஆளும்/எதிர்க்கட்சி தலையீடுகள் இல்லாமல் தன்னிச்சையாக செயல்படும் அமைப்பாக காவல் துறை மாற்றப்பட்டால் இத்தகைய பிரச்சனைகளை எளிதில் முடித்து விடலாம்’ என்று இப்போது மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஆலோசகராக இருக்கும் விஜயகுமார் கூறியிருக்கிறார். இதுதான் இந்திய ஆளும் வர்க்கத்தின் கருத்து.

naveen-jindal‘கவுத்தி வேடியப்பன் மலைப் பகுதி மக்கள் ஜிண்டால் தரவிருக்கும் 180 வேலை வாய்ப்புகளை ஏற்றுக் கொண்டு தமது நிலங்களையும், நீராதாரங்களையும், மலையையும் விட்டுக் கொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை, அதை செய்தேதீர வேண்டும்’ என்பதுதான் அரசின் நோக்கம். அதை நிறைவேற்றுவதற்கு ஒரு காலில் வளர்ச்சியை தரித்துக் கொண்டு மாவட்ட ஆட்சியர் முதல், உள்ளூர் அரசியல்வாதிகள் வரை இறங்க, மறுகாலில் ஆயுதம் தரித்து ஆயுதப் படைகள் இறக்கப்படும். ஒரு கையில் பைபிள், இன்னொரு கையில் துப்பாக்கி கொண்டு போன காலனிய ஆட்சியாளர்கள் போல நம் மக்களின் நிலங்களையும், வாழ்க்கையையும் பிடுங்கும் மறுகாலனியாக்கத்தை செயல்படுத்துவதற்கான ஏஜெண்டாக இந்திய அரசு தயாராக இருக்கிறது.

இந்நிலையில் கேள்வி எளிமையானது : கவுத்தி – வேடியப்பன் மலையிலேயே இரும்புத் தாதுவை விட்டு வைப்பது, கிராம மக்களின் பொருளாதாரத்தை கட்டியமைப்பது என்ற அடிப்படையில் போராட யார் முன்வருவார்கள்?

தன்னார்வக் குழுக்களும், ஓட்டுக் கட்சிகளும் ஜிண்டாலுக்கு எதிராக போராடுவது போல போக்கு காட்டிவிட்டு துரோகம் செய்வார்கள். மக்களும், ஜனநாயக சக்திகளும், அறிஞர்களும் இந்த பிரச்சனையை கிராமங்களை சார்ந்த பெரும்பான்மை விவசாய மக்களின் விடுதலைக்காக போராடும் புரட்சிகர நக்சல்பாரி இயக்கங்களில் அணிதிரண்டு போராடுவது மட்டுமே ஒரே வழியாக இருக்கிறது.

ஜிண்டால் பிரச்சினையை வெறும் சுற்றுச் சூழல் பிரச்சினையாகவோ இல்லை திருவண்ணாமலை பகுதியின் உள்ளூர் பிரச்சினையாக பார்ப்பது தவறு. இது இந்தியாவை மறுகாலனியாக்கும் திட்டத்தின் ஓர் அங்கம். அதை புரிந்து கொண்டு மறுகாலனியாக்க எதிர்ப்பு போராட்டங்களோடு இதை சேர்ப்பதும், போர்க்குணமிக்க வழிகளில் போராடுவதும் மட்டுமே சரியாக இருக்கும்.

–    செழியன்

மேலும் படிக்க